Thursday, April 29, 2010

வாக்குமூலம் - சிறுகதை


" இன்ஸ்பெக்டர்! இன்ஸ்பெக்டர்! "

"பதட்டப்படாம சொல்லுங்க. என்ன விஷயம்"

"என் பெயர் சுந்தர். என் மனைவிய ஒருத்தன் கொலை பண்ணிட்டான். இப்ப என்ன கொல்ல துரத்திட்டு வரான். நீங்க தான் என்ன காப்பாத்தணும்"

"பயப்படாதீங்க மிஸ்டர் சுந்தர். அதான் என்கிட்டே வந்துடீங்கல்ல. நடந்தத சொல்லுங்க. நான் ரிப்போர்ட் எழுதிக்கிறேன்"

"அது இன்ஸ்பெக்டர் என் மனைவி பேரு காவ்யா. சாப்டுட்டு ரெண்டு பெரும் தூங்க போனோம். திடீர்னு கதவு தட்டுற சத்தம் கேக்குதுன்னு எந்திருச்சு போனா. ரொம்ப நேரம் ஆகியும் வரல. என்னனு நான் போய் பாத்தா ரத்தவெள்ளத்துல கிடந்தா. நான் பயந்து போய் சுத்திமுத்தி பாத்தேன் அப்ப ஒரு உருவம் கத்தியோட என் பின்னாடி வந்துச்சு. நான் உடனே ஓடி வெளில வந்து நேரா இங்க தான் வரேன்"

"சுந்தர், செத்துப்போனது உங்க மனைவி தான"

"ஆமா இன்ஸ்பெக்டர்"

"உங்க முகத்த பாத்தா நீங்க அழுத மாதிரியே தெரியலையே"

"அது.. அது.. பதட்டத்துல என்ன பண்றதுனே புரியல .. அதுனால .. அதுனால... அழ தோணல "

" கரெக்ட் தான். அந்த ஷாக்ல நீங்க அழல "

"ஆமா இன்ஸ்பெக்டர் அப்படி தான் "

"உங்க டிரஸ் பாத்தா நீங்க ஓடி வந்த மாதிரி தெரிலையே. வேர்வையே இல்ல. உங்க முகமும் வேர்க்கல"

"இன்ஸ்பெக்டர் நீங்க என்ன சந்தேகப்படற மாதிரி தெரியுது. என் ட்ரெஸ்ல ரத்தம் இருந்துச்சு அதுனால நான் இந்த டிரஸ் மாத்திட்டேன்"

"நல்லாருக்கு சுந்தர். இப்ப தான் ஒரு உருவம் கத்தியோட என் பின்னாடி வந்துச்சு. நான் உடனே ஓடி வெளில வந்து நேரா இங்க தான் வரேன்னு சொன்னீங்க. ஆனா இப்ப டிரஸ் மாத்தினேனு சொல்றீங்க. "

"அது.. வந்து.. நான் என் பொண்டாட்டிய கட்டி பிடிச்சு அழுதபோது ரத்தம் என்மேல பட்டுச்சு. எங்க வெளில வரும்போது எல்லாரும் என்ன கொலைகாரனு சொல்லிடுவாங்களோனு மாத்திட்டேன்."

" நீங்க சொல்றது எல்லாமே முன்னுக்கு பின் முரணா இருக்கே சுந்தர். கவனிச்சீங்களா? "

"நீங்க இன்னும் என்ன சந்தேகப்படுறீங்கனு நினைக்கிறேன்" .

"இல்ல சுந்தர். நீங்க சொல்லுங்க "

"நானும் என் மனைவியும் என்னல்லாமோ திட்டம் போட்டுருந்தோம். ஆனா இப்படி ஆய்டுச்சு. ஆனா இன்ஸ்பெக்டர் கொலை பண்ணுனவன் கதவ உடைச்சிட்டு உள்ள வரல. அதுனால கண்டிப்பா தெரிஞ்சவனா தான் இருக்கணும்"

"உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா "

"இருக்கு. நிச்சயமா இருக்கு. காவ்யவோட காலேஜ்ல கூட படிச்ச ஒருத்தன் இருக்கான். அடிக்கடி வீட்டுக்கு வருவான். நான் பிரெண்ட்ஸ் தான அப்படின்னு கண்டுக்காம விட்டுட்டேன். ஆனா மனசுக்குள்ள உறுத்தல் இருந்துட்டே இருந்துச்சு. ஒரு நாள் காவ்யா கிட்ட நேராவே கேட்டுட்டேன். அவ ஒண்ணும் இல்லன்னு சொன்னா. அவன் வரது எனக்கு பிடிக்கலன்னு சொன்னேன்"

"இதுனால வீட்டுல சண்டை எதாவது போட்டீங்களா"

"இல்ல. காவ்யாவே உங்களுக்கு பிடிக்கலனா அவன வர வேணாம்னு சொல்லிடறேனு சொல்லிட்டா. அப்புறம் ஒரு வாரம் அவன் வரல. எனக்கு சந்தோஷமா இருந்துச்சு. ஆனா ஒரு நாள் மத்தியானம் வீட்டுக்கு வந்து பாத்தா அவன் கூட பேசிட்டு இருந்தா. எனக்கு கோபம் வந்துச்சு ஆனா எதுவும் பேசாம நான் உள்ள போகாம வந்துட்டேன். நான் இவளோ சொல்லியும் என்ன மதிக்காம அவன் கூட பேசிட்டு இருந்தான்னு உள்ளுக்குள்ள அடக்க முடியாத கோபம் வந்துச்சு"

"இது என்னைக்கு நடந்துச்சு சுந்தர் "

"இன்னிக்கு தான். என்ன மதிக்காதவ இனி உயிரோட இருக்கா கூடாதுன்னு முடிவு பண்ணுனேன். அதுனால கத்திய எடுத்து குத்தி கொன்னுட்டேன்"

"அப்ப கொலையா நீங்க தான் செஞ்சீங்கனு ஒத்துக்கறீங்களா"

"இல்ல இல்ல. நான் பண்ணல. அவள கொன்னது அவளோட காலேஜ் பிரெண்ட்ணு சொல்லிட்டு வந்தவன் தான்"

"அது தான் நடந்துச்சா இல்ல அப்படி நடந்ததா நான் நம்பணுமா"

"இன்ஸ்பெக்டர்........ எனக்கு ஒரே குழப்பமா இருக்கு இன்ஸ்பெக்டர். கொஞ்சம் தண்ணி கெடைக்குமா"

"இதோ கொண்டு வர சொல்றேன்"

"இன்ஸ்பெக்டர்.. நீங்க ஏன் வெள்ளை கோட் போட்டுருக்கீங்க?" . சுந்தரின் கேள்வியில் பதில் இருந்தது.

Tuesday, April 13, 2010

பள்ளிக்கூட பயணங்கள் - சிறுகதை

"அம்மா சீக்கிரம்மா பள்ளியோடத்துக்கு நேரம் ஆச்சு. அங்க பாரு பக்கத்துக்கு வீட்டு ராமு எனக்காக ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கான். " செல்வத்தின் குரலில் பசியை விட அவசரம் மேலோங்கி இருந்தது.

"இருப்பா ராசா இதோ ரெண்டு நிமிஷம்"

"அம்மா இன்னிக்கு ஒரு நாள் சாப்பிடாம போறேன்மா. ராமு ரொம்ப நேரமா நிக்கிறான்மா . பள்ளியோடதுக்கு வேற நேரமாச்சு"

"இதோ ஆச்சு பாரு. அவனையும் கூப்பிடு ரெண்டு பேரும் சேந்து சாப்டுட்டு கெளம்புங்க"

"ஏலே ராமு வாடா. சாப்டு கெளம்புவோம். அம்புட்டு தூரம் நடக்க தெம்பு வேணும்ல"

பத்து நிமிடத்தில் சாப்பிட்டு விட்டு இருவரும் நடக்க தொடங்கியிருந்தார்கள். தினமும் இருவரும் ஒன்றாக சென்றுகொண்டிருந்தாலும் ஒவ்வொரு நாளும் பேசுவதற்கு புதிதாக ஏதாவது கிடைத்து கொண்டே இருக்கும்.

"டேய் செல்வம் என்னடா கை எல்லாம் காச்சு கெடக்கு"

"பை ரொம்ப கணம்டா. பிடி கைல அறுத்து அறுத்து கை காச்சு போயிடுச்சு"

"நீயும் என்ன மாதிரி முதுகுல மாட்ற பை வச்சுக்கிட்டா வசதியா இருக்கும்ல "

"அது சரி. இவளவையும் அந்த பைல வைக்க முடியுமா"

"சரி விடு.ஒரு பைய எங்கிட்ட குடு நான் செத்த தூரம் தூக்கிட்டு வரேன்"

"பரவால்லடா. நானே தூக்கறேன். அப்புறம் உன் கை காச்சு போன உங்க ஆத்தா என்ன வையும்"

"அதுவும் சரி தான். அப்புறம் கேக்கணும்னு நெனச்சேன். நாளைக்கு என்ன உங்க வீட்ல விசேசமா. உங்க ஆத்தா ரவைக்கு சாப்பிட
வர சொன்னுச்சு "

"அதாடா ராமு. என் அப்பன் செத்து ஒரு வருஷம் ஆச்சாம் அதுக்கு எதோ பலகாரம் எல்லாம் செய்வாங்களாம். அதுக்கு வர சொல்லிருக்கும்"

"அப்படியா. கேட்டதுமே எச்சி ஊருது டா. நீ பள்ளியோடத்துக்கு கொண்டு வருவியே முறுக்கு, அதிரசம் எல்லாம். அது மாதிரி செஞ்சு குடுன்னு என் ஆத்தா கிட்ட கேட்டேன்டா , செஞ்சே தர மாட்டேங்குறாங்க. நீ கொண்டு வர பலகாரம் எல்லாம் அவளவு ருசிடா. தெனமும் அத வீட்ல சாப்ட நீ குடுத்து வச்சுருக்கணும்டா "

"அட போடா. நான் எங்க தெனமும் சாப்டறேன். நீ நாளைக்கு வா எல்லா பலகாரமும் இருக்கும். வயறு முட்ட சாப்டலாம்"

" சரிடா. இதோ பள்ளியோடம் வந்திடுச்சு பாரு. சாயந்திரம் இங்கயே இருடா நான் வந்திர்றேன்"

"சரிடா ராமு. நான் என் வேலைய பாக்றேன். முறுக்கு முறுக்கே! முறுக்கு முறுக்கே! முறுக்கு முறுக்கே"

Wednesday, April 7, 2010

நிலையில்லா நிதர்சனங்கள் - சிறுகதை


மதிய நேரம். ராயப்பேட்டை. மணிகூண்டு. சென்னை வெயில் சுட்டெரித்து கொண்டிருந்தது. இதில் டிராபிக் ஜாம் வேறு. வெயிலில் பேருந்தில் அமர்ந்திருப்பதே எரிச்சல் இதில் ஒரே இடத்தில பதினைந்து நிமிடமாக நிற்பது மகா எரிச்சல். பேருந்தில் ஒரு நோட்டம் விட்டால் கூட்டம்மில்லாத பேருந்தில் இருக்கும் சொற்பமானவர்களும் செல்போனில் ஐக்கியமாயிருந்தார்கள்.

வெளியில் எட்டிப்பார்த்தால் அனைவருமே கிட்டத்தட்ட என் மனநிலையிலேயே இருந்தார்கள். பேருந்துக்கு அருகில் பைக்கில் இருந்தவரிடம் என்ன பிரச்சனை என வினவிய போது தான் தெரிந்தது ஏதோ காலேஜ் பையன் பைக் ஆக்சிடென்ட். பையன் அங்கேயே இறந்துவிட்டான் என்று. மேற்கொண்டு அவரே தொடர்ந்தார்

"இந்த காலத்து பசங்க பைக் எடுத்துகிட்டு வேகமா போறதுல தான் குறியா இருக்காங்க. பொறுப்பா வண்டி ஓட்றத பத்தி எல்லாம் எங்க யோசிக்கிறாங்க. அவுங்க பெத்தவங்கள சொல்லணும். கேட்ட உடனே வண்டி வாங்கி கொடுத்துடறது. அவன் அத ஒழுங்கா ஓட்டுறானா இல்லையானு அப்புறம் கேட்டுக்றதே இல்ல" . அவர் இன்னும் தொடரும் முன் நான் ஆமாம் போட்டு விட்டு இருக்கை மாறி அமர்ந்தேன் .

பேருந்து லேசாக நகர தொடங்கியது. இறந்த உடலின் மேல் துணி போத்தி விட்டிருந்தார்கள். அதை கடந்து பேருந்து கிளம்பும் போது ராமன் கல்லூரியில் சேர்ந்த உடன் வண்டி வாங்க வேண்டுமென்று கேட்டது நினைவுக்கு வந்தது.

ராமன் என் மகன். இப்போது ஈரோட்டில் ஒரு கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துகொண்டு இருக்கிறான். கல்லூரியில் சேர்ந்த உடன் வெளியில் செல்ல ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருக்கிறது என கூறி வண்டி வேண்டுமென்று நின்றான். அவன் கேட்டு இது வரை நான் எதையும் மறுத்ததில்லை அதனால் உடனே வாங்கி கொடுத்துவிட்டேன். அந்த நிமிடத்தில் அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சியில் என் மனது நிறைந்து போனது. ஒரே மகன் கேட்டதை வாங்கி குடுக்க மாட்டேன் என்று சொல்ல எந்த அப்பாவிற்கு தான் மனமிருக்கும்.

மனதில் பைக் ஆக்சிடென்ட் நிழாடிக்கொண்டே இருந்தது. வீட்டுக்கு சென்று முதல் வேலையாக ராமனுக்கு போன் செய்து கவனமாக வண்டி ஓட்ட சொல்ல வேண்டும். முக்கியமாக ஹெல்மெட் இல்லாம ஓட்ட கூடாது என்று சொல்ல வேண்டும். யோசித்து கொண்டிருக்கும் போதே கண்டக்டர் விசில் இறங்க வேண்டிய இடத்தை நினைவூட்டியது.

வீட்டிற்குள் மனைவியை கூப்பிட்டு கொண்டே நுழைந்த போது சோபாவில் இருந்த பைகள் கவனத்தை ஈர்த்தன. அவை ராமனின் பைகள்.

"என்னங்க பைய பாத்துட்டு இருக்கீங்க? " மனதின் ஓட்டத்தை மனைவியின் குரல் நிறுத்தியது.

"ராமன் வந்திருக்கானா? "

"ஆமாங்க வந்திருக்கான். ஏதோ ஹாஸ்டல் பிரச்சனைனு ஒரு வாரம் லீவ் விட்டுட்டாங்களாம்"

"இப்ப எங்க உள்ள தூங்குறானா? "

"இல்ல ஏதோ பிரெண்ட் கூட ராயபேட்டை வரைக்கும் போயிட்டு வரேன்னு போனான். உடனே வரேன்னு சொன்னான் ஆனா இன்னும் காணும் "

எனக்கு வியர்க்க தொடங்கியிருந்தது. கைகள் செல்போனை தேடியது. படபடப்பின் காரணம் அவளிடம் விளக்க திராணியில்லை. கண்முன்னே பார்த்த அந்த போத்தி வைக்க பட்டிருந்த உடல் மனதிற்குள் வலியை உண்டாகியது. குழப்பங்கள் மட்டும் விடைகளாய் வெளிப்பட்டு கொண்டிருந்தது. ஒரே மகன் வேறு. உடலை எங்கு கொண்டு சென்றிருப்பார்கள். பெரும்பாலும் ஜி. எச் தான். அடுத்து என்ன செய்ய வேண்டும். இவளிடம் இதை எப்படி சொல்வது. அவள் இதை தாங்கி கொள்வாளா.

காபியுடன் கண்முன்னே மனைவி வந்தாள். சொல்லி விட வேண்டியது தான் என நினைத்த பொது அவளே பேசினாள்.

"இதோ ராமனே வந்துட்டானே"

திரும்பி கூட பார்க்கவில்லை ஆனால் கண்களில் கண்ணீர் வழிந்தது. பேச வார்த்தை எழவில்லை.

"என்னடா சட்டையில இரத்தம்" மனைவியின் குரலில் இருந்த நடுக்கம் திரும்ப வைத்தது.

"இல்லம்மா . பிரெண்ட் ஒருத்தன் பைக் ஆக்சிடெண்ட்ல செத்துட்டான். நான் போற வரைக்கும் உயிரோட தான் இருந்தான். என் கண் முன்னாடியே உயிரை விட்டுட்டான்" ராமன் பேச முடியாமல் உடைந்தான்.

என் தோள்களில் அவனை தாங்கினேன். இருவரும் அழுது கொண்டிருந்தோம். அவன் சோகத்திலும் நான் சந்தோஷத்திலும்.

Friday, March 19, 2010

கையளவு ஆசை கடலளவு காதல் - சிறுகதை


ஜன்னலிடுக்கில் என் கண்பார்க்கும் அவள் கண்கள்.

அடுத்த
ஐந்தாவது நிமிடத்தில் காபியுடன் என் முன்னால் வருவாள் என்று தெரிந்தும் திருட்டுதனமாக அவள் பார்த்தது வேடிக்கையாய் இருந்தது. ஆனால் பிடித்திருந்தது. அவளையும் தான். சம்பிரதாய பேச்சுக்கள் துவங்கிய சில நிமிடத்தில் காபியுடன் அவள் வந்தாள். உடன் பேச்சுக்கள் நிறுத்தப்பட்டு அமைதியில் அனைத்து கண்களும் அவள் முகம் நோக்கின. எல்லோர் முகத்திலும் ஒரு மெல்லிய புன்னகை. எல்லோரும் அருகிலிருப்பவர் முகத்தை பார்த்து கண்ணசைவு காட்டினர்.

நான் அவள் முகம் பார்த்தேன். பார்த்தேன். பார்த்து கொண்டே இருந்தேன். கூட்டத்தில் ஒரு தொண்டை கரகரப்பு கேட்கும் வரை. கூட்டத்தில் என் பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவள் பதிலையும் கேட்ட மாதிரி தெரியவில்லை. ஆனால் நிச்சயதார்த்த நாள் குறிப்பு பற்றி பேச துவங்கினர். கல்யாண நாள் குறித்து பேச துவங்கும் போதும் பாழாய் போன அந்த பால்காரன் வந்து எழுப்பிவிட்டான்.

தலையணை அடியில் இருந்த அந்த புகைப்படத்தை ஆயிரமாவது முறையாய் எடுத்து பார்த்து கொண்டேன். வீட்டில் பெண்பார்க்க ஆரம்பித்து இது வரை ஜாதகம் , பொருத்தம் என எல்லாம் தட்டிகழிக்கப்பட்டு வெறுத்து நிறுத்த நினைத்த வேளையில் இத்தனை நாள் நீ காத்துக்கிடந்தது இதற்கு தான் என நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் வந்தது அவள் புகைப்படம். பார்த்த நிமிடமே இவள் தான் என்னவள் என முடிவெடுத்தேன். அதற்கேற்றார்போல் ஜாதகம் எந்த கிரகத்தின் குறுக்கீடும் இல்லாமல் பொருத்தமாக இருந்தது.

பெண்
பார்க்க இன்னும் இரண்டு நாட்களில் போகலாம் என அம்மா நேற்று சொன்ன அந்த நிமிடத்தில் இருந்து அந்த ஒத்திகை தான் மனதில் நிகழ்ந்து கொண்டே இருந்தது. மணி ஏழு.

இன்னும் முழுசாக முப்பத்தாறு மணி நேரம் இருக்கிறது அவளை பார்க்க போக. ஆனால் மனதின் வேகத்திற்கு கடிகாரத்தால் ஈடு கொடுக்க முடியவில்லை. அன்று சாயந்திரமே அவளை பார்க்க முடிவெடுத்தேன். ஆராய்ந்து திட்டமிட்டு எடுத்த முடிவு அல்ல. மனது சொல்லி மூளை எடுத்த முடிவு. எதற்கு பார்க்கவேண்டும் என்ன பேச வேண்டும் யோசிக்க தோன்றவில்லை. ஆனால் பார்க்கவேண்டும். பார்த்தே தீர வேண்டும். எப்படியாவது. பெண் பார்க்க சென்று பிறகு பெண்ணை பிடிக்கவில்லை என சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. இவளை பிடிக்காமல் இருக்க போவதில்லை என தோன்றியது. அதனால் தான் என்னவோ நேரில் பார்க்கும் ஆவல் ஒவ்வொரு நிமிடமும் கூடிக்கொண்டே போனது.

அந்த
அந்தி வேளையில் முகம் தேடிக்கொண்டு அவள் அலுவலகத்திற்கு வெளியெ காத்திருந்தேன். புகைப்படத்தில் பார்த்த முகம் மனதிற்குள் பதிந்திருந்த காரணத்தால் புகைப்படத்தை கொண்டு வரவில்லை.

கண்மணியை கண்மணியால் தேடி கொண்டிருந்த நேரத்தில் கடந்து போன முகங்கள் எல்லாம் அற்பபதரை பார்ப்பது போல போவது என்னை சற்றும் பாதித்திருக்கவில்லை.

திடீரென முகங்கள் குறைந்து போக தொடங்கின.என் கண்ணில். தூரத்தில் அவள். அவளுக்கு மிக அருகில் என் மனது. புகைப்படத்தில் பார்த்ததை விட நேரில் இன்னும் அழகாக தான் இருந்தாள்.

மாலை சூரியன் மீண்டும் மேலெழுந்து அவள் முகம் பார்த்தது
சந்திரன் அவசரமாக வெளிவந்து அவள் முகம் பார்த்து நாணி மறைந்தது
தேனீக்கள் கூட்டம் பூவென நினைத்து அவளை நெருங்கியது
கடவுளென நினைத்து பக்தர்கள் கூட்டம் குவிய துவங்கியது
இத்தனையும் நடந்தது அந்த ஒரு நிமிடத்தில்
நான் என்னுள் உன் நினைவுகளில் தொலைந்திருந்த அந்த ஒரு நிமிடத்தில்
நிதர்சனம் சுட்ட போது நீ என் கண்ணதெரில்
என்னுள்ளும் என்முன்னும் நீ
நீ மட்டும் .


அந்த நொடியில் என்னுள் பல பட்டாம்பூச்சிகளை பறக்கவிடும் அளவிற்கு அழகாய் இருந்தாள். நேராக என்னை நோக்கி வருவது போலிருந்தது. வார்த்தைகளை கூட தயார் படுத்தவில்லை. வியர்வையின் வேகத்திற்கு எண்ணங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இப்போது பேசினால் கேட்கும் தூரத்தில் அவள். நேராக என்னருகில் வந்தாள். பின் என்னை கடந்து போனாள். பின்னர் தான் என் மயங்கி கிடந்த மூளைக்கு புரிந்தது. அவளுக்கு என் வீட்டார் என் புகைப்படம் அனுப்பியிருக்கவில்லை. என் பெயரும் பயோடேட்டாவும் தான் அனுப்பியிருந்தார்கள்.

உள்ளத்தில் எழுந்த அந்த பூரிப்பு. அவளை கண்டவுடன் நொடிப்பொழுதில் என்னுள் நிகழ்ந்த அந்த ஆயிரமாயிரம் மாற்றங்கள். அத்தனையும் வாழ்ந்தால் இவளோடு தான் என அடித்து கூறின.

தாமதிக்க நேரமில்லை. தாமதிக்கவும் தோன்றவில்லை. நேராக அவளிடம் சென்றேன். பெயரை சொல்லி அறிமுகப்படுத்தியவுடன் அவள் கண்கள் அகலமாவதை கண்டேன். கண்டு பிடித்து விட்டாள். என் ஆர்வத்தை கண்டுபிடித்துவிட்டாள். பேசாமல் போய்விடுவாளோ என யோசித்த வேளையில் பேச தொடங்கினாள்.

"நீங்க வருவீங்கனு அம்மா ஒண்ணும் சொல்லலயே"

"நான் வருவேனு எனக்கே காலைல தான் தெரியும்"

"அப்படினா"

"அப்படினா நான் இங்க வந்தது யாருக்கும் தெரியாது"

"ஓ.. எதுக்காக வந்தீங்க"

"பாக்றதுக்காக"

"பாக்றதுக்காகவா"

"ஆமா ரெண்டு நாளா என்ன கனவுல தொந்தரவு செஞ்சிட்டு இருக்க உன்னை நேர்ல பாத்து கேக்க தான்"

"என்ன கேக்கணும்"

"இத்தன நாளா எங்க இருந்தணு"

" .... "

"வரணும்னு தோணுச்சு வந்துட்டேன். ஆனா என்ன பேசுரதுனு தெரியல. சுருக்கமா சொல்லிடுறேன்.எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு.மேற்கொண்டு பேச எங்க வீட்ல சொல்லிட்டேன். உங்க வீட்ல எதுவும் சொன்னாங்களா"

"இல்ல"

"சனிக்கிழமை அன்னிக்கு பொண்ணு பாக்க வரேன்"

"ம் "

"வாய்ப்பு கொடுத்தா டெய்லி உன்ன பாக்க வருவேன்"

புன்னகை மட்டும் பதிலாய் வந்தது. ஆனால் புன்னகை பதிலாய் வந்தது. புரிந்து போனது எனக்கு. வரம் கிடைத்தாயிற்று எனக்கு. அன்று அதற்கு பிறகு ஒரு மணி நேரம் பேசினோம். என்ன பேசுகிறோம் என கவனிக்கவில்லை. ஆனால் பேசுவது சுகமாயிருந்தது. பிடித்திருந்தது. அவளுக்கு என்னை பிடித்திருந்தது. அது எனக்கு பிடித்திருந்தது.

சனிக்கிழமை.

ஜன்னலிடுக்கில் என் கண்பார்க்கும் அவள் கண்கள்.