Saturday, April 4, 2009

ஒரு சாக்கடை நீரோடையாகிறது

வழக்கம் போல் ராகவன் கணேஷை வசைபாடி கொண்டிருந்தார். திருட்டுத்தனமாக அவர் பையில் இருந்து பணம் எடுத்துவிட்டு இப்போது இல்லையென்று சாதிக்கும் கணேஷ் அதை கவனித்ததாக காட்டிகொள்ளாமல் அம்மா காமாட்சி கையால் டிபன் சாப்பிட்டு கொண்டிருந்தான்.  

"சம்பாதிக்க நான் இருக்கிறதுனால தான இவளோ ஆட்டம் போடற. என்னைக்காவது நான் செத்து போனா தான் உனக்கெல்லாம் பொறுப்பு வரும்" ராகவன் கோபமாக அலுவலகம் செல்வதற்காக வெளியேறினார்.  
"அம்மா அந்த சட்னிய கொஞ்சம் போடு" கணேஷ் கேட்கும் போது காமாட்சி இன்னும் ராகவன் கூறிய வார்த்தைகளில் இருந்து மீளவில்லை.  
"உன்னை தான கேட்கிறேன்" கணேஷ் சற்று கோபமாக கேட்ட போது நினைவு கலைந்து இப்படி பொறுப்பில்லாமல் இருக்கும் அவனை நினைத்து கவலைப்பட்டு கொண்டே சட்னியை வைத்தாள்.  
ராகவன் இன்னும் ஆறு மாதத்தில் ரிடையர் ஆக போகும் கவர்ன்மென்ட் சர்வன்ட். குறளகத்தில் தான் வேலை. தன் வாழ்நாள் முழுக்க சம்பாதித்ததை சேமித்து ஊருக்கு வெளியில் இந்த வீட்டை கட்டுவதற்குள் அவருக்கு பாதி உயிர் போய்விட்டது. சேமிப்பெல்லாம் வீட்டில் கரைத்திருந்த அவர் ரிடைர்மன்ட் பணத்தை வைத்து வீட்டை நடத்தி கொள்ளலாம் பின்னர் கணேஷ் வேலைக்கு சென்று சம்பாதித்தால் நிம்மதியான வாழ்க்கை என் திட்டம் போட்டிருந்தார். அவனோ கல்லூரி கடைசி வருடம் படிக்கிறான் என்று தான் பெயர் அத்தனை அரியர்கள் வைத்து அதை முடிக்கும் எண்ணமே இல்லாத மாதிரி சுற்றிக்கொண்டு திரிகிறான். தன் பேச்சையும் கேட்காமல் எந்த கவலையுமில்லாமல் அலையும் அவனை பார்க்கும் போது நம் வளர்ப்பு சரியில்லையோ என் குற்ற உணர்வில் தினமும் காமாட்சியிடம் புலம்புவார்.  

கணேஷ். கல்லூரி படிப்பதே வாழ்கையை என்ஜாய் பண்ணுவதற்கு தான் என்ற கொள்கையோடு வாழ்பவன். நம்மூர் அரசியல்வியாதிகள் மாதிரி என்றால் அந்த கொள்கையில் இருந்து எப்போதோ விலகி இருப்பான். ஆனால் அதை விடாப்பிடியாக பிடித்திருக்கும் இவன் யார் சொல்லியும் திருந்துவதாக தெரிவதில்லை. அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டான். எப்படியோ தட்டு தடுமாறி ஓரிரு சப்ஜெக்டில் பாஸ் செய்து மொத்தம் இருபது அரியர்களுடன் கடைசி செமஸ்டரை எதிர்நோக்கி இருந்தான். தவறு. கடைசி செமஸ்டர் அவனை எதிர்நோக்கி வந்து கொண்டிருந்தது. நண்பர் வட்டாரம் எல்லா கெட்ட பழக்கங்களையும் அக்கறையுடன் கற்றுகொடுத்திருந்தது. ஆனால் வழக்கம் போல் அந்த வட்டாரம் பரிட்சைகளில் பேப்பர் சேஸ் செய்தாவது பாஸ் செய்து விடுவார்கள். அந்த சாமர்த்தியத்தை மட்டும் கணேஷுக்கு கற்றுகொடுக்க மறந்துவிட்டார்கள் போலும். காரணம் கணேஷ் அவர்களிடம் விலக ஆரம்பித்தது தான். அதற்கு காரணம் காதல். இவனுக்கு அது ஒன்று தான் குறைச்சல் என் நீங்கள் கேட்பது புரிகிறது . அதெப்படி தான் இந்த மாதிரி கேரக்டர் உள்ளவர்களுக்கெல்லாம் காதலி கிடைக்கிறார்கள் என்று தெரியவில்லை.  

கல்லூரி அட்டண்டன்சை விட சினிமா தியேட்டர் அட்டண்டன்சுக்கு முக்கியத்துவம் கொடுத்தான். கூட்டம் இல்லாத படங்களுக்கு தான் இவன் ஆதரவு. மொழித்தடையும் அடிக்கடி உடைத்தெறிந்தான். காரண விளக்கம் தேவையில்லையென நினைக்கிறேன். 
நாளொரு படமும் பொழுதொரு பார்க்கும் சுற்றி திரிந்து அவன் மாதந்திர செலவுகள் கன்னாபின்னாவென்று ஏறி விட்டது. இதில் செல்போன் செலவுகளும் அடங்கும். அதற்காக தான் அப்பா மாதாமாதம் தரும் பணம் பத்தாமல் அவர் பாக்கெட்டிலேயே நேரடியாக கைவைக்க ஆரம்பித்தான்.  

அன்றும் அப்படிதான் ஈகா தியேட்டரில் பெயர் கூட தெரியாத ஏதோ ஒரு ஹிந்தி படத்திற்கு அவளை கூட்டிப்போயிருந்தான். படம் ஆரம்பித்ததை கவனிக்க விருப்பமில்லாமல் இருளில் சில்மிஷங்களில் ஆர்வாமாயிருந்தான். அவள் அதை எதிர்பார்த்தது போல் மறுப்பது போல் அதை அனுமதித்தாள். கணேஷின் செல்போன் அதற்கு இடையூறாக முகம் தெரியாத நம்பருக்காக சிணுங்கியது. இரு முறை அதை அணைத்து அவளை அணைத்தான். மூன்றாம் முறை . ..ங்கோத்... எவன்டா என அத்தனை காமத்தையும் கோபாமாய் மாற்றி அந்த அழைப்பை எடுத்தான்.

அந்த முனையில் .. "தம்பி.. இங்க குறளகம் பக்கத்துல ஹோட்டல்ல சாப்பிட வந்த ஒருத்தர் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அவர் பாக்கெட்ல இருந்த பேப்பர்ல உங்க நம்பர் இருந்துச்சு. அதனால போன் பண்ணேன். நீங்க வரீங்களா "
"இ... தோ... உ..ட..னே... வ.. ரே..ன் .. " . கணேஷ் உடைந்தான். இதயத்துடிப்பு ராக்கெட் வேகத்தில் ஏறிகொண்டிருந்தது. அந்த ஏசி குளிரிலும் தொப்பலாக வியர்க்க தொடங்கினான். காதலி அன்னியமானாள். பல ஆண்டுகளுக்கு பிறகு அவன் கண்ணில் எட்டி பார்த்தது. அனைவரும வேடிக்கை பார்க்க தன் வண்டியை நோக்கி ஓடினான். வண்டியை கிளப்பி வெளியில் வரும்போது தன் தந்தை தவிர அனைத்துமே மறந்து போயிருந்தான்.  

தன் தவறான நியாங்கள் எல்லாம் இப்போது தவறாக தெரிந்துகொண்டிருந்தன. தன் தந்தை தனக்காக செய்த தியாகங்கள் மனுதுக்குள் படமாக ஓடிகொண்டிருந்தது.  

எனக்கு வண்டி வேண்டும் என்பதற்காக உன் வண்டியை விற்று தினமும் பேருந்தில் கூட்டத்தில் நசுங்கி செல்வது, இஞ்சியனிரிங் காலேஜில் என்னை படிக்க வசதி இல்லையென அம்மாவிடம் நீ வருத்தப்பட்ட நாட்கள், உன் வாழ்நாளின் சாதனையாக வீட்டை கட்டிமுடித்த பின் பையனுக்காக வீடு ரெடி என நீ அம்மாவிடம் பெருமிதம் கொண்ட அந்த நாள், அன்று நான் வீடு ரொம்ப சிறியது என நய்யாண்டி செய்த போது உன் முகம் சுருங்கிய அந்த நிமிடம், என்னை பற்றி வருத்தப்பட்டு அம்மாவிடம் நீ அழுத நாட்கள். இது வரை நினைத்து பார்க்காத நிகழ்ச்சிகள் மனத்திரையில் ஓடி அவன் மனதை இன்னும் பாரமாக்கியது கண்களை இன்னும் ஈரமாக்கியது.  

இதோ கணேஷ் குறளகம் வந்தாயிற்று. அருகிலுருந்த ஹோட்டலில் கொஞ்சம் வேறுபட்ட சலசலப்புகளும் கூட்டமும் இருந்தது. கூட்டத்தை நோக்கி ஓடினான். மொத்த கூடத்தின் கவனமும் இவன் பக்கம் திரும்பியது. அதை பொருட்படுத்தாது ஓடினான். ஓட்டம் அங்கே கிடத்தி வைத்திருந்த உடலை பார்த்து நின்றது. அங்கே வேறொருவன் தனக்கு சுத்தமாக பரிச்சயமில்லாத ஒருவன் அந்த உடலை பார்த்து முகத்தை மறைத்துக்கொண்டு கதறிகொண்டிருந்தான். பின்னாலிருந்து ஒரு குரல் அவனை அழைத்தது.  

ஒரு பேப்பரை நீட்டி "தம்பி இந்த நம்பர் உங்களுதா" "ஆமா" இது கணேஷ். "சாரி தம்பி பதட்டத்துல தப்பான நம்பருக்கு பண்ணிட்டேன். அப்புறம் உங்க நம்பர இந்த பேப்பர்ல எழுது வச்சு ரொம்ப நேரமா உண்மைய சொல்லனும்னு முயற்சி பண்ணேன் தம்பி. ஆனா நீங்க போஃனை எடுக்கவே இல்ல. "  

"பரவயில்லைங்க. வண்டில வந்துட்டு இருந்ததால எடுக்க முடியல"  

சொல்லிவிட்டு குறலகத்துக்குள் ஓடினான்.  

ராகவன் அவனை பார்த்து ஒரு ஆச்சர்ய பார்வையுடன் " என்னடா எதாவது அவசரமா பணம் வேணுமா" "அப்பா என்ன மன்னிச்சுருங்கப்பா. இனிமே நீங்க சொல்றபடி கேட்கிறேன்பா. எப்பாடு பட்டாவது இந்த வாட்டி எல்லா அரியர்சையும் க்ளியர் பண்ணிடுறேன். அப்புறம் ஒரு நல்ல வேலைக்கு முயற்சி பண்றேன்" .  

ராகவனுக்கு கணேஷின் முகத்தில் ஒரு அசாத்திய தெளிவு இருப்பது தெரிந்தது. ஆபீசென்றும் பாராமல் அவனை அப்படியே கட்டி தழுவினார்.  

கணேஷின் கண்ணில் இருந்த கண்ணீர் இப்பொழுது ராகவனின் கண்களுக்கு மாறிவிட்டிருந்தது.

1 comments:

dhatshaini said...

kathaikku thaguntha thalaippu...
arumai..

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)