Wednesday, May 27, 2009

எம்மனசு புரியலையா - கவிதை

எஞ்சோகம் கேக்குதாடி - யின் தொடர்ச்சி

தென்னங்கீத்து கட்டி வச்சு
குளிப்பாட்டி நான் இருக்க
நீ இடுக்கு வழி பாத்தபடி
என் மனசுக்குள்ள நுழஞ்சியே

புத்தம் புது சீலையிலே
தண்ணி கொண்டு போகயிலே
குறுக்காலே நீ மறிக்க
கொடமெல்லாம் உருண்டோடும்
மனசெல்லாம் தடம் மாறும்

மொத்தமா வேணுமுன்னு
நீ கேட்ட நேரமெல்லாம்
முத்தத்தோட நான் போனேன்
இப்ப மொத்தமா வந்திருக்கேன்
எடுத்துக்கன்னு நான் சொல்ல
எடுத்துக்கிற நீ இல்ல

நடக்காத கல்யாணத்துக்கு
நூறு தேதி குறிச்சோமே
பொறக்காத பிள்ளைக்கு
பேரு நூறு வச்சோமே
திருவிழா கூட்டத்திலே
மாமா நீ என் பக்கத்திலே
புள்ளையோடு போவோமுன்னு
கனவெல்லாம் கண்டோமே
வெறும் கனவாக போச்சுதே

மனசார உன்ன நெனச்சு
வேறொருத்தன் கை பிடிச்சு
காணாம போவேன்னு
காலனோட போயிட்டியா

கட்டான காவல் ஒடச்சு
காட்டுவழி ஓடிவந்தேன்
கனவோட ஓடிவந்தேன்
இப்ப கனவெல்லாம் மண்ணாச்சே
நெனப்பெல்லாம் வீணாச்சே
என் மனசு புரியாம
தப்புன்னு தெரியாம
சடுதியிலே செத்துட்டியே

அடங்காத ஆசையோட
அழியாத காதலோட
மண்ணுக்குள்ளே கெடக்கியே
இந்த பொண்ணுகுள்ளே நீயிருக்க
இந்த பொண்ணுக்கினி யாரிருக்கா

வத்தாத காதலோட
வக்கனயா வாழ்வோமுன்னு
கதை பேசி சிரிச்ச மச்சான்
ஆவியா நீ வந்து
பாவி என்ன தேடாத
உன் பக்கத்துக்கு குழியிலே தான்
பொணமாக கெடப்பேன் நான் .

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)