டிடக்டிவ் சங்கரின் ஆபீஸ்.
பேருக்குத்தான் அது டிடக்டிவ் ஆபீஸ் ஆனால் வருவதெல்லாம் கல்யாணத்துக்கு பையன் அல்லது பெண் பேக்ரவுண்ட் செக் பண்ற கேஸ்கள் தான். வருமானத்துக்கு அது போதும் என்றாலும் வேலையில் அவன் எதிர்பார்த்த த்ரில் இல்லாததால் தன்னை தானே அவன் நொந்து கொள்ளாத நாளில்லை.
இவனின் சோம்பலை மதிக்காமல் கடிகாரம் சுறுசுறுப்பாய் பத்து மணியை காட்டியது. கம்ப்யூட்டரில் முகம் புதைக்காத குறையாய் இருந்த சங்கரை டீக்கடை பையன் குரல் திருப்பியது.
"என்ன சார் வழக்கம் போல இன்னைக்கும் ஈயடிச்சிட்டு இருக்கீங்களா "
"வாய் ரொம்ப நீளுது உனக்கு" சங்கர் சற்று கோபமாக கூறியது அந்த டீக்கடை பையனை சற்று கூட பாதிக்காதது அவனுக்கு மனதிற்குள் சிர்ரிப்பை வரவழைத்தது .
"என்ன சார் டென்சன் ஆவுற சும்மா தமாசா தான் சொன்னேன்."
"டீ குடுதுட்டெல்ல நீ கெளம்பு. இரும்படிக்கிற எடத்துல ஈக்கென்ன வேல"
"சார் நீங்க எங்க இரும்படிசீங்க, ஈ தான் அடிக்கிறீங்க அப்ப நான் இருக்கிறது கரெக்ட் தான"
"நல்லா பேச கத்திருக்கடா சுரேசு " " எப்ப பாத்தாலும் கம்ப்யூட்டர்லயே இருக்கியே அப்படி என்ன தான் சார் பண்ணுவ நமக்கும் கொஞ்சம் சொல்லி கொடுத்த நானும் ஒரு டிடக்டிவ் ஏஜென்சி வச்சு பொழச்சுப்பேனே"
"நேரம் டா நேரம். ஒரு பெரிய கேஸ் புடிச்சு உங்க எல்லார் வாயையும் அடைக்கிறேன் பாரு" சங்கர் கூறிகொண்டிருக்கும்போதே ஒரு நமுட்டு சிரிப்புடன் சுரேஷ் காலி டம்ளருடன் வெளியேறினான்.
மீண்டும் கம்ப்யுட்டரில் மூழ்கலாம் என நினைத்த போது செல்போன் சிணுங்கியது. சங்கரின் அசிஸ்டன்ட் ராம் தான் அழைக்கிறான்.
"பாஸ் நான் அந்த மாப்பிள்ளை வெரிபிகேசன்காக வந்தேன். வேல சீக்கிரம் முடிஞ்சிடுச்சு நேரா ஆபீஸ் வந்திடவா இல்ல வேற எதாவது கேஸ் இருக்கா"
"இப்போதைக்கு ஒண்ணுமில்ல நீ ஆபீஸ்க்கு வா பாத்துக்கலாம் "
"சரி பாஸ்"
ராம். நல்ல துடிப்பான இளைஞன். எந்த வேலை என்றாலும் சலிக்காமல் செய்வான்.வேறு வேலை எதுவும் கிடைககாததால் சங்கரிடம் உதவியாளராய் சேர்ந்தான். பின்னர் சங்கரின் ஆர்வத்தை பார்த்து அவனுக்கும் இந்த துறையில் எதாவது பெரிதாய் சாதிக்க் வேண்டும் என்ற ஆர்வம் அவனை இதே பணியில் தொடர செய்தது.
மதிய நேரம் நெருங்கி கொண்டிருந்தது. சங்கரின் மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடி கொண்டிருந்தது. முக்கியமாக டீக்கடை பையனிடம் பெரிய கேஸ் புடிச்சு காட்றேன் என நடக்க சாத்தியமில்லாத சபதம் அடிக்கடி ஓடியது. இவனின் ஆரம்ப காலங்கள் கொஞ்சம் சுவாரசியம் கலந்த சோகங்கள் தான்.
டிடக்டிவ் ஏஜென்சி ஆரம்பித்த காலத்தில், தானே எல்லா கிரைம்சீனிலும் வலிய சென்று துப்பறிந்தான். போலீசுக்கு துப்புகள் கொடுத்து விசாரணைக்கு மறைமுகமாக பல உதவிகள் செய்திருந்தான். ஆனால் வெளிச்சத்துக்கு இவன் நிழல் கூட வந்ததில்லை. அப்போது நண்பரானவர் தான் இன்ஸ்பெக்டர் இளமாறன்.
பல கேஸ்களில் இவன் உதவியை நாடி பதவி உயர்வுகளை அள்ளி கொண்டவர். இப்போது ஏ.சி.பியாக பொறுப்பு வகிக்கிறார். சங்கரின் உதவிகள் அவருக்கு தொந்தரவாக தெரிய ஆரம்பித்தது அவருக்கடுத்து அவரது இடத்தில வந்த இன்ஸ்பெக்டருக்கும் அவன் உதவிய பொழுது தான்.
சங்கரையே அந்த கேஸில் சிக்க வைக்க இளமாறன் முயன்ற போது தான் சங்கர் தான் மாட்டியிருப்பது சிலந்தி வலையென உணர்ந்தான். பிரச்சனையில்லாமல் அதிலிருந்து விடுபட இனிமேல் போலீஸ் கூப்பிட்டாலலேலொழிய அவன் எந்த க்ரைம்சீனுக்கும் வரக்கூடாது என இளமாறனிடம் உறுதிமொழி எடுக்க வேண்டியிருந்தது.
டிடக்டிவ் வேலையை வெறுக்க தொடங்கிய அவனுக்கு பின்னர் தான் தெரிந்தது பல டிடக்டிவ் ஏஜென்சிக்கள் கல்யாண வெரிபிகேசனும் கம்பெனி செக்யுரிடிகள் காண்ட்ராக்டையும் நம்பி தான் இயங்கிகொண்டிருந்தது.
உணவின் மேல் வெறுப்பிருந்தாலும் பசிக்கு சாப்பிட்டுத்தானே ஆக வேண்டும். சங்கரின் நிலையும் அது தான். விருப்பப்பட்டு தொடங்கிய தொழிலை விருப்பமில்லாமல் செய்து கொண்டிருக்கிறான். அவனது அசிஸ்டன்ட் ராம் தான் வெளி வேலைகள் எல்லாம் கவனிப்பது இவன் ஆபீஸில் மட்டுமே அமர்ந்து வரும் சொற்ப வாடிக்கையாளர்களை கவனித்து கொள்வான். மற்ற நேரங்களில் கம்ப்யூட்டர் தான் அவனது உலகம். நாட்டு நடப்புகளை விட வெளிநாடுகளில் நடக்கும் வழக்குகள் விசாரணை அனைத்தையும் படித்து ஆராய்வது தான் வேலை. அந்நேரங்களில் காலத்தை மறந்து நடுநிசி வரை மூழ்கிக்கிடந்தது பலமுறை.
"பாஸ் என்ன பண்றீங்க.. மறுபடியும் கம்ப்யூட்டரா" ராம் கூவிக்கொண்டே வந்தான்.
சங்கர் நினைவலைகளிலிருந்து விடுபட்டு அவனிடம் சற்று முன் படித்த கேஸை பற்றி பேசினான்.
"ஆமாண்டா இங்க பாரு வெரி இன்டரஸ்டிங் கேஸ் ப்ளோரிடால நடந்திருக்கு. அப்பன கோவத்துல கொலை பண்ணி பசங்க ஒரு மாசம் பாடிய ப்ரீசர் பாக்ஸ்ல வச்சுருக்காணுங்க. அப்புறம் இன்சூரன்ஸ் பணம் கெடைக்கணும்னு அத ஆக்சிடண்டா மாத்த அவனுங்களே கார்ல கொண்டு போய் ஒரு மரத்துல மோதி பெட்ரோல் டேங்ல நெருப்பை கொளுத்தி விட்டு எஸ்கேப் ஆயிட்டாணுங்க. பசங்க தப்பிசோம்னு நெனைக்கும் போது போலீஸ் அவனுங்கள அரஸ்ட் பண்ணிச்சு. "
"எப்படி பாஸ். கேஸே வித்தியாசமா இருக்கே"
"அன்னைக்கு கார்ல ஆக்சிடன்ட் பண்ண போகும் போது ஒரு எடத்துல ஓவர் ஸ்பீடிங் அதுனால சிக்னல்ல கேமராவுல அந்த கார் பதிவாகிருக்கு அதுல கார்ல மூணு பேர் இருக்கிறது தெரிஞ்சிடுச்சு. தடயம் இல்லாம கொலை. ஆனா அதையும் சாமர்த்தியமா போலீஸ் கண்டு பிடிச்சுட்டாங்க "
"அது தான் என்ன தான் தடயம் இல்லாம பண்ணாலும் நம்மளையும் அறியாம தடயம் எதையாவது விட்டுடறது நடக்க கூடியது தான். பாஸ் இன்னைக்கு பேப்பர் படிச்சீங்களா? "
"எனிதிங் இன்ட்ரஸ்டிங்?"
" நம்மூர்ல ஒரு ரெட்டை கொலை. ஒரே மாதிரி ரெண்டு பேர கொன்னுருக்காங்க. கிட்டதட்ட ஒரே நேரத்துல ரெண்டு கொலையும் நடந்திருக்கு..ஆனா ரெண்டும் வேறவேற எடத்துல நடந்திருக்கு"
"வாட்.. ஷோ மீ தி பேப்பர்" சங்கரின் முகத்தில் திடீர் பிரகாசம். கொலையை பத்தி அதிகம் விபரங்கள் பேப்பரில் இல்லை. ஆனால் இந்த இரண்டு கொலையும் லிங்க் பண்ண போலீசுக்கு இரண்டு வாரங்கள் ஆயிருந்தன.வேறு எந்த தகவல்களும் இப்போது கூற முடியாதென்றும் கூறினால் கொலைகாரர்கள் உஷாராகக்கூடும் என்று செய்தி முடிக்கப்பட்டிருந்தது.
சங்கர் அதை படித்து முடிக்கவும் செல்போன் சிணுங்கவும் சரியாய் இருந்தது. அழைப்பை பார்த்தவனுக்கு குழப்பம் கலந்த ஆச்சர்ய ரேகைகள் முகமெங்கும் ஓடி படர்ந்தன. அழைத்தது ஏ.சி.பி இளமாறன்.
"ஹலோ சங்கர் எப்படி இருக்கீங்க. நான் இளமாறன் பேசறேன் "
"அதான் கைய கட்டி போட்டுட்டீங்கலே சார்"
"பழைய விஷயம் இப்ப வேண்டாம். உங்க ஹெல்ப் இப்ப அவசரமா வேணும்"
"சொல்லுங்க சார். இப்பல்லாம் நான் போலீஸ் விஷயத்துல தலையிடரதே இல்லயே "
"இந்த வாட்டி நானே உங்கள ரிக்வஸ்ட்ட் பண்றேன் பழச மனசுல வச்சிகிட்டு மாட்டேனு சொல்லிடாதீங்க"
"சரி சொல்லுங்க சார்"
"ரெண்டு வாரம் முன்னாடி நடந்த ரெட்டை கொலை பத்தி தெரியுமா"
"ம்.. இன்னைக்கு தான் பேப்பர்ல படிச்சேன் "
"அந்த இன்வெஸ்டிகேஷனுக்கு உங்க உதவி தேவைப்படுது.கொஞ்சம் என் ஆபீஸ் வரைக்கும் வர முடியுமா"
"நாளைக்கு காலைல வரேன் ஸார்" சங்கருக்கு தேவை இல்லமால் இதில் மாட்ட வேண்டுமா என்ற எண்ணங்கள் மேலோங்கி இருந்தது. அதை அவன் குரல் தெளிவாக இளமாறனுக்கு காட்டி கொடுத்திருக்கும்.
"இல்ல இது அவசரம். நீங்க உடனே வர முடியுமா?"
"சார் கொலை நடந்து ரெண்டு வாரம் ஆச்சு இப்ப தான் போலீஸ் ரெண்டு கொலையையும் லிங் பண்ணிருக்கு. நீங்க இவளோ நிதானமா விசாரணை பண்ணும்பொது என்ன மட்டும் ஏன் அவசரப்படுத்துறீங்க " சற்று கோபத்துடன் சொன்னான்.
"நீங்க இன்னும் பழச நெனச்சுகிட்டெ பேசறீங்க. இது அவசரம் தான். நேத்து நைட் இன்னொரு ரெட்டை கொலை நடந்திருச்சு"
"வாட்!!" கேட்டு கொண்டே சங்கர் வேட்டைக்கு தயாரானான்.
(தொடரும்)
Wednesday, July 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)