Tuesday, February 23, 2010

மனச்சுவடு - 5

"ஒரு ஹலோ சொல்ல இவளோ நேரமா"

"நீ பேசுறதுக்கு இத்தனை மாசம் நான் வெயிட் பண்ணேன். உன்னால ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ண முடியாதா "

"பழசெல்லாம் இப்ப எதுக்கு. எங்க அண்ணன் கல்யாணம் நீ கண்டிப்பா வந்திடு "

"நீ முதல்ல எதுக்கு என்ன இவளோ நாள் ஒதுக்குன இப்ப ஏன் பேசுற , காரணத சொல்லு"

"நான் ஒதுக்குனேனா? . அப்படின்னு உனக்கு யாரு சொன்னது "

"நான் அனுப்பின மெய்லுக்கு நீ பதில் சொல்லவே இல்ல"

"தெரியாத ஒரு பொண்ணுக்கு மெயில் அனுப்பிட்டு அவ பதில் சொல்லுவான்னு நீ எப்படி நெனைக்கலாம். அதுக்கப்புறம் நீயே வந்து பேசுவேன்னு நான் வெயிட் பண்ணிபாத்தேன். நீ பேசுற மாதிரி தெரில அதான் நானே கல்யாண பத்திரிகை சாக்கா வச்சு பேசுவோம்னு ஆரம்பிச்சேன். இப்பவும் நான் பேசலனா நீ நிச்சயமா பேசிருக்க மாட்ட"

தெளிவாக குழம்பியிருந்தேன்.

"வேற எதுவும் சொல்றதுக்கு இல்லயா? இவளோ தானா? "

"நீ கல்யாணத்துக்கு முதல்ல வரேன்னு சொல்லு. மத்தத அப்புறம் பேசுவோம்."

"ஐ லவ் யூ"

கணினி திரை மௌனத்தை உதிர்த்தது. அவளிடம் பதிலில்லை.

ஒரு குழப்பத்தில் இருந்து இன்னொரு குழப்பத்திற்கு தாவியிருந்தேன்.

"சரி நான் கண்டிப்பா வரேன்"

பேச்சை முடித்த போது நடந்தது கனவா நினைவ என கிள்ளி பார்க்க கூட மறந்திருந்தேன். இதுவரை நடந்தவற்றை மறுமுறை ஒருமுறை மனதில் ஒட்டி பார்த்த போது சில விஷயங்கள் அப்போதிருந்த மனக்குழப்பத்தில் நான் பார்த்திருந்த கோணம் தவறென உணர முடிந்தது. நடப்பவை எல்லாம் எனக்கு எதிரானவையே என்று நான் பார்த்த பார்வை தவறென புரிந்தது. நேரில் பேச முயற்சிக்காமல் என்னையே நான் ஒரு கற்பனை வட்டத்திற்குள் கட்டிபோட்டு கொண்டது தவறென புரிந்தது. இபோதைய நிதர்சனத்தை தவிர மற்றவை எல்லாமே தவறு தான். அந்த தவற்றால் ஒரு சாத்தியமாகக்கூடிய காதலை இழந்திருக்ககூடும் அவள் பேச முற்பட்டிருக்காவிடில்.

"சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது". சத்தியமான வரிகள்.

ஆனால் அவளின் பேச்சில் தெளிவான காதல் இல்லை என்பது உறுதியாக தெரிந்திருந்தது. அதை காதலாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.

இம்முறை கற்பனைக்கு விடுமுறை கொடுத்துவிட்டு நிஜத்தை நிலையானதாக ஆக்க முயற்சித்தேன்.

கல்யாண நாள். இன்றே அவளிடம் காதலை தெரிவித்து விட முடிவு செய்திருந்தேன்.அவள் மறுக்க முடியாதவாறு காதலை சொல்லவேண்டுமென யோசித்த வேளையில் அவள் எதிரினில் வந்தாள்.
அந்த திறந்த வெளியில் நிலவொளியில் அத்தனை கூட்டமும் அந்த நொடியில் காணாமல் போயிருக்க அவள் மட்டும் தேவதையாய் ஜொலித்துக்கொண்டிருந்தாள்.

அவள் கண்கள் எதையோ எதிர்பார்ப்பதை என்னால் உணர முடிந்தது. அந்த பார்வை என்னை மட்டுமே பார்த்துகொண்டிருந்தது. திட்டமிட்ட பேச்சுகள் அந்த கணநொடியில் காணாமற்போக அந்த நொடியில் தோன்றிய வார்த்தைகளின் காரணங்களை ஆராயும் முன் வார்தைகள் விழத்தொடங்கியிருந்தன.

"கூட்டத்துல எல்லாரும் உன்னையே பாக்குறாங்க கவனிச்சியா"

"அப்படியா.. சரி நீ சொல்ல வந்தத சொல்லு"

இதை நான் எதிர்பாத்திருக்க வில்லை அதேநேரம் கூறவேண்டிய விஷயத்தை தாமதபடுத்தும் எண்ணமும் இல்லை.

"உன்ன முதல் முறை பாத்த உடனே நீ தான் எனக்குன்னு முடிவு பண்ணி அதுக்காக பைத்தியம் மாதிரி நான் அலையல, ஆனா அன்னியிலிருந்து என் மனசு முழுக்க நீ தான். நீ மட்டும் தான். இதனால நாள் காத்திருந்தது தப்புன்னு நேத்து நீ பேசும்போது புரிஞ்சிச்சு. ஆனா இத்தனை நாள் காத்திருந்ததுனால என் காதல் இன்னும் ஆழமாயிருக்குனு அப்ப தான் எனக்கு புரிஞ்சிச்சு.அதுனால தான் இன்னிக்கு எப்படியும் இத பத்தி பேசிடறதுன்னு ஒரு முடிவோட இங்க வந்தேன். எனக்கு உன்னை எவளோ பிடிக்கும்னு சொல்ல தெரில. ஆனா இந்த உலகத்துலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது எங்க அம்மா அப்பா . அவுங்கள எவளோ பிடிக்குமோ அதே அளவு உன்ன பிடிக்கும். நீ என் மனைவியா வந்தா அவுங்கள எந்த அளவுக்கு நான் பாசமா பாத்துபனோ அத விட ஒரு படி அதிகமாவே உன்ன பாத்துப்பேன்.. காதல் வநத நிமிஷம் ஏன் வந்துச்சு எதுக்கு வந்துச்சுன்னு அதுகிட்ட யாரும் கேள்வி கேக்க முடியாது , அதே மாதிரி அந்த பொண்ணுக்கு ஏன் நம்ம மேல தோணலன்னு கேட்பதும் முட்டாள்தனம். அதுனால என்னோட காதல நான் சொல்லிட்டேன். அத ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் உன் இஷ்டம். ஒத்துகிட்ட சந்தோஷப்படுவேன். ஒத்துகலனா வருத்த படமாட்டேன். இன்னும் கொஞ்சம் கம்மியா சந்தோஷப்படுவேன். காதல் தோத்தாலும் உன்கிட்ட பேச கெடச்ச இந்த வாய்ப்ப நெனச்சே நாள ஓட்டிடுவேன். நான் முடிச்சுட்டேன். இப்போ நீ பேசு அது பதிலோ கேள்வியோ நான் காத்திருக்கேன் "

நிமிர்ந்து அவள் கண்ணை பார்த்தேன். அதில் காதல் தெரிந்தது.

அவள் உதடுகள் வார்த்தைகளை உரைக்க அசைய துவங்கியது.

(முற்றும்)


கொசுறு கவிதை:

தோற்றுகொண்டே இருக்கின்றேன்
ஒவ்வொரு முறை
உன் கண்பார்க்கும் போதும்
ஒவ்வொரு முறையும்
மீண்டும் எழுகிறேன்.
மீண்டும்
தோற்று கொண்டே இருப்பதற்கு

2 comments:

venu said...

பிரமாதம் மனு,கலக்கிடீங்க

மனுநீதி said...

Thanks Balaji

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)