Saturday, July 17, 2010

கண் மணியே பேசு - 1


அகலமான அந்த சாலையின் இருபுறமும் வளர்ந்து நிறைந்து கிடந்தன விஸ்தாலமான பங்களாக்கள். பணம் காய்க்கும் மரங்கள் என்று சொல்லிவிடலாம் போல இருந்தன அவை. சைக்கிளில் அந்த ரோட்டில் பயணிப்பவன் ரோட்டை பார்த்து ஓட்டுவது கடினம்.

அத்தனை பங்களாக்களிலும் தனித்து தெரிவது அந்த பிரம்மாண்ட பங்களா. தொழிலதிபர் கணேஷிற்கு சொந்தமானது. ரகம் ரகமாக பத்துக்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்து நின்றன. வாசலில் முரட்டு மீசையுடன் தெருவில் போவோரை எல்லாம் மிரட்டும் தோரணையில் காவல்காரன். உள்ளே கணேஷ் பேப்பர் படித்து கொண்டிருந்தார். அவரின் அன்பு மனைவி சாவித்திரி அளவான புன்னகையுடன் காபி கொண்டு வந்துகொண்டிருந்தாள்.


"ஏம்மா நீயே எல்லா வேலையும் செஞ்சிட்டு இருக்கியே வேலைக்கு ஆள் வச்சுக்கண்ணு சொன்னாலும் கேக்க மாட்டேங்கிற "


"என்னங்க வீட்ல இருக்கிறது நாம ரெண்டு பேரு தான. இதுக்கு எதுக்கு வேலைக்காரங்க "


"என்னமோ இவளோ வசதி இருந்தும் நீ கஷ்டப்படுறத பாக்க முடியாம தான் சொன்னேன்"


"புருஷனுக்கு வேல செய்றது கஷ்டம்னு யாரு சொன்னா"


"ஏதோ நீ சந்தோஷமா இருந்தா போதும் "


"நீங்க என்ன பத்தி கவலைபடாம உங்க உடம்ப பாத்துக்கங்க. நேத்து நைட் முதுகுபிடிப்புன்னு சொன்னீங்களே. இப்ப எப்படி இருக்கு "


"இப்ப கொஞ்சம் பரவால்லம்மா "


"எதுக்கும் சாயந்திரம் டாக்டர் கிட்ட போவோம். எனக்கும் பாக்கணும் . ஒரு வாரமா நைட்ல தலைவலி அதிகமா இருக்கு "


"கண்டிப்பா போவோம் . சரியா ஆறு மணிக்கு ரெடியா இரு "


"சரிங்க" . அழுத்தமான முத்தம் வைத்து கணேஷ் அலுவலகத்துக்கு தயாராக சென்றான்.


அலுவலகத்துக்கு சென்று வழக்கமான குட் மார்னிங்களுக்கு பதில் கூறி அமர்ந்த பத்தாவது நிமிடம் தொலைபேசி அழைத்தது.


"பாஸ் நீங்க சொன்ன மாதிரியே அவள கொண்டு வந்துட்டோம்" கரகர குரலில் மறுமுனை ஒலித்துகொண்டிருந்தது.


"வெரி குட். அங்கேயே வெயிட் பண்ணுங்க இதோ கொஞ்ச நேரத்துல வந்திடுறேன்"


காற்றை கிழித்து அவசரமாக புறப்பட்ட கணேஷின் காரை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தன நான்கு கண்கள். கணேஷ் சத்தியமாய் அதை கவனித்திருக்கவில்லை. அவர் எண்ணம் எல்லாம் அந்த பெண் மேல் தான் இருந்தது. எப்படி இந்த பிரச்சனையை அணுகுவது, விஷயத்தை வெளியே சொல்லியிருப்பாளோ .


அந்த பெண்ணின் பெயர் நிர்மலா. கணேஷின் முன்னாள் செக்ரட்டரி. கணேஷிடம் கருப்பாக வந்த பணம் வெள்ளையாக மாற்றப்பட்டு கொண்டிருந்த அந்த இரண்டு நாட்களுக்குள் வருமானவரி அதிகாரிகளிடம் தகவல் கூறி சன்மானதிற்காக முதலாளியை விற்றவள் என்ற பெயருடன் வெளியேற்றபட்டவள். பெரிய அளவில் கணேஷ் அவளை ஏதும் செய்யவில்லை. தலைப்பு செய்திகளில் தன் பெயர் வருவதை அவர் விரும்பியதில்லை. தொலைத்த பணமும் பெரிதாக இல்லாததால் அவரும் கண்டுகொள்ளவில்லை. நிர்மலா அவரை தொடர்பு கொண்டு மிரட்டும் வரை.

கார் நிர்மலா கட்டி வைத்த இடத்தை சென்றடைந்தது. நிர்மலா மயங்கி கிடந்தாள்.


"டேய் அவள எழுப்புங்கடா " அதிகார தொனியில் கணேஷின் குரல் ஒலித்தது.


"பாஸ் ரொம்ப நேரமா முயற்சி பண்ணோம். எழுந்திருக்கல. செத்துட்டானு நினைக்கிறன் "


"அட பாவிங்களா. விஷயத்த அவ கிட்ட கேக்கணும்னு தான கொண்டு வர சொன்னேன். அதுக்குள்ள கொன்னுட்டீங்களே"


"பாஸ் பாஸ் . நாங்க கொல்லல. கொண்டு வரும் போதே செத்துட்டான்னு நெனைக்றேன். நீங்க குடுத்த அந்த மயக்க மருந்துல கர்ச்சிப்ப நனைச்சு மட்டும் தான் மூக்கில வச்சோம். வேற எதுவும் செய்யல"


"சரி உடம்ப இங்க வச்சுக்க முடியாது. உங்க வண்டில கொண்டு போய் திண்டிவனம் தாண்டி போய் எதாவது எடத்துல புதைச்சிடுங்க. நகை எல்லாம் எடுத்துகோங்க. பொணத்த கனுபிடிச்ச கூட நகைக்காக கொன்ன மாதிரி இருக்கும். எதுக்கும் கொஞ்ச நாளைக்கு வெளியூர் எங்கயாவது போய்டுங்க"


"சரி பாஸ். ஆனா பிரச்சன எதாவது வந்த எங்கள கை விட்ராதீங்க "


"நிச்சயமா மாட்டேன். நம்புங்க" . கணேஷின் உதடு மட்டும் பதில் கூறியது.


அந்த நான்கு கண்கள் அவரை பின்தொடர்ந்து அங்கு நடந்தவைகளை தூரத்தில் இருந்து பார்த்துகொண்டிருந்தன.


கணேஷ் அலுவலகம் வந்து எதுவும் நடக்காதது போல் தன் குளுகுளு அறைக்கு சென்றார். ஒரு கொலை நடந்ததற்கான அறிகுறி அவரிடம் இல்லை.


சாயந்திரம் வீட்டுக்கு சென்று மனைவியுடன் டாக்டரை பார்த்து ஆசுவாசமாய் சோபாவில் அமர்ந்தார். உடை மாற்றி காபி கொண்டு வர சாவித்திரி கிளம்பினாள். சற்று நேரத்திற்கெல்லாம் வீல் என்ற அலறல் சத்தம் அத வீட்டை உலுக்கியது.


உடை மாற்ற சென்ற மனைவியின் அலறல் கேட்டு திடுக்கிட்டு எழுந்து போன கணேஷ் அங்கு கண்ட காட்சி அவரின் தொண்டை குழியை வற்ற செய்தது. தரையில் அசைவில்லாமல் கிடந்த சாவித்ரியின் கண்கள் திறந்திருந்தன கண் மணிகள் அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தன. தண்ணீர் கொண்டு வந்து தெளிக்க முற்படும் பொது சாவித்திரி கட்டிலில் அமர்ந்திருந்தாள்.


"ஏம்மா என்னமா ஆச்சு "


"தெரியலீங்க. இத்தனை நாள் வர தலைவலின்னு நெனச்சேன். ஆனா தலைக்குள்ள என்னென்னமோ ஒடுச்சுங்க.ஒண்ணுமே புரில "


"என்னம்மா சொல்ற"


"ஆமாங்க. யாரோ நாலு பேரு வண்டில ஒரு பொண்ண கூட்டிட்டு போய்ட்டு இருகாங்க. பொண்ணு அசைவில்லாம கெடக்குறா. வண்டி பாண்டிச்சேரினு ஒரு போர்டு தாண்டி போய் நிக்குது. அப்புறம் அவள கீழ எறக்கி ஒரு எடத்துல மண்ணு தோண்டி புதைக்றாங்க. புதைச்சிட்டு போன அஞ்சாவது நிமிஷத்துல அந்த பொண்ணு முழிப்பு வந்து அங்கேயே மூச்சு தெணறி சாவுறா. "


"இது மயக்கத்துல இருக்கும் போது நீயே எதோ நெனச்ச மாதிரி இருக்கு . ரெஸ்ட் எடு சரியாய்டும் "


"இல்லைங்க எனக்கு பயமா இருக்கு"


"காலைல பேசிக்கலாம் நீ ரெஸ்ட் எடும்மா" . சொல்லி முடிக்க கணேஷ் முழுவதுமாக வேர்த்திருந்தார். அவசரமாக செல்போனை தேடினார்.


"பாஸ் சொல்லுங்க பாஸ் .. வேல முடிஞ்சிடுச்சு "


"டேய் எங்க இருக்கீங்க" . கணேஷின் குரலில் கலக்கம் மேலோங்கி இருந்தது.


"திண்டிவனத்துல எடம் சரியா அமையல. எனக்கு தெரிஞ்சு இன்னொரு எடம் இருந்துச்சு. அதான் அங்க போய் புதைச்சிட்டோம் "


"எந்த ஏரியால டா .."


"பாண்டிச்சேரில "


"பா..ண்..டி..ச்..சே..ரி.. லயா " .


கணேஷின் மனதில் திகில் பரவ ஆரம்பித்தது.


(திகில் தொடரும்.. )



6 comments:

Venu said...

உங்களின் மற்றப் பதிவுகளுக்கும் ஒரே பின்னூட்டமாக இதை பதிவு செய்கிறேன் :

தெளிந்த நீரோடைப் போன்ற உங்கள் நடை,அனைத்துப் பதிவுகளிலும் மிளிர்கிறது.

பள்ளிகூடப் பயணங்கள்,உவமானங்களின் தோல்வி- மிக நன்று

கையளவு ஆசை,கடலளவு காதல்-உரை நடைகளில் பின்னி இருக்கிறீர்கள்

திருநள்ளாரில் முக்கால் நாத்திகன்-பல பேருடைய உண்மை நிலை(என்னுடையது உட்பட)

தொடரட்டும் உங்களப் பயணம்.மாதத்தில் ஒரு ஐந்து பதிவாவது போட்டு விடுங்கள்.

மனுநீதி said...

தங்கள் ஊக்கத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி . அடிக்கடி எழுத முயற்சி செய்கிறேன்.

VISA said...

rocking

A Recluse said...

A very good start!! Oru bayangaramaana thriller kadhaiyai edhir nokki inga pala per kathukittu irukaanga... Next part innum thrilling ah irukkumnu nambaren!! Keep Writing..!!

மனுநீதி said...

Thanks Visa and Stranger

Karthik said...

Excellent Manu...........2nd part seekiram release pannunga.

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)