Thursday, April 2, 2009

தார்மீக காதல்

நான் இளமாறன்.வயது 30. பார்ப்பதற்கு சுமாரை விட சற்று அழகான தோற்றம். புரசைவாக்கத்தில் நண்பர்களோடு வாடகை குடித்தனம். தேனாம்பேட்டை AGS ஆபீசில் கிளார்க் வேலை. சம்பளம் சொற்பம் தான். ஆனால் அதை வைத்து வாழக்கற்றுக்கொண்ட நிறைவான வாழ்க்கை. சொந்த ஊர் திருச்சிக்கு பக்கத்தில் டால்மியாபுரம். வறண்ட பூமியை பார்த்து கொண்டே நான் அனுப்பும் பணத்தில் சொந்த வீட்டில் என் பெற்றோர். இந்த சென்னை நகரில் அவர்களை கூட்டி வந்து குடியிருக்க என் சம்பளம் போதாது, தவிர அவர்களுக்கும் இந்த நகர வாழ்க்கை பிடிக்காது. இப்போது நான் அலுவலகத்துக்கு தயாராகி கொண்டிருக்கிறேன் .

காலை நேரத்தில் அந்த 23C பிடித்து தேனாம்பேட்டை வருவதற்குள் எல்லாவிதமான மயக்கங்களும் வந்துவிடும். பல கல்லூரிகளை கடக்கும் பேருந்து ஆயிற்றே. சொல்லவே வேண்டாம். அப்படிதான் ஒருநாள் அதில் மேரியை பார்த்தேன். தினமும் பிரயாணிக்கும் அந்த பேருந்து அன்று மட்டும் வித்தியாசப்பட்டது. கூட்டத்தை நானும் கூட்டம் என்னையும் பொருட்படுத்தாது போல் இருந்தது. அவள் கண்களில் மயங்கி இருந்த நான் அவளுடன் SIET பஸ் ஸ்டாப்பில் இறங்கினேன். வசியம் செய்தது போல கல்லூரிவாசல் வரை பின்தொடர்ந்தேன். பின் அவளை சிந்தித்து கொண்டே என் ஆபீசுக்கு நடந்து சென்றேன். அவள் அழகு என்று சொல்லமாட்டேன். ஆனால் அவளிடம் ஏதோ ஒன்று என்னை ஈர்த்தது. பார்த்து முழுதாக ஒரு மணி நேரம் கூட ஆகாத பொண்ணுக்காக இப்படி உருகுகிறோமே என நினைக்கும் போது என் பலவீனம் மீது பயம் வந்தது. அவளை நினைக்க கூடாதென தீர்மானித்து ஒரு வழியாக ஆபீஸில் நுழையும் போது மணி 9:15. மக்கள் சிதறல்களாய் உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர். இருக்கையில் அமர்ந்து மின்விசரியை ஓட விட்ட பிறகு தான் ஜீவனே வந்தது. முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்ததால் நான் பைல்களுக்குள் மூழ்கினேன். அவ்வப்போது அருகில் வந்து அரட்டையை ஆரம்பிக்க துடிக்கும் நண்பர்களை பைலை பார்த்தபடியே தவிர்த்து இடையில் மேசைக்கு வந்த காப்பியை குடித்துவிட்டு தொடர்ந்தேன். பசி வயிற்றை கிள்ளியது, நிமிர்ந்து பார்த்தால் நான் மட்டுமே யாருமில்லாத சுடுகாட்டில் காவல்காக்கும் வெட்டியான் போல் இருந்தேன் .

கேன்டீனுக்கு சென்று என் டிபன் பாக்சை திறந்தேன். எல்லாரையும் சகட்டுமேனிக்கு கிண்டல் பண்ணி புறம்பேசி கொண்டிருந்தனர் என் ஆபீஸ் மேதாவிகள். என் எண்ணமெல்லாம் காலையில் பேருந்தில் கண்டவளை பற்றியே. தினமும் கதயடிப்பதற்கு இவர்களுக்கு மட்டும் எப்படி தான் செய்தி கிடைக்கிறதோ. உள்ளூர் அரசியலிலிருந்து அமெரிக்காகாரன் தாக்குதல் நடத்துவது வரைக்கும் இந்த கேன்டீனில் தான் முடிவு செய்யபடுவதை போல் இருந்தது அவர்கள் பேச்சு. மத்த நாட்களென்றால் காதை மூடிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு போயிருப்பேன் இன்று அவளை நினைத்துகொண்டிருக்கும் வேளையில் இவர்களது சத்தம் எரிச்சலூட்டியது. வெளியில் சென்று காற்றோட்டமாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு சீட்டுக்கு வரும்போது இரண்டு மணி. எல்லோருக்கும் கண்கள் சொருகி கொண்டிருந்தது மிகவும் பிரயத்தனப்பட்டு விழித்து கொண்டிருந்தார்கள். நான் பைல்களை பார்ப்பது போல ஒரு குட்டி தூக்கம் போட முயற்சித்து அதில் வெற்றியும்..கொர்ர்ர்..கொர்ர் ..

கனவில் என் பலவீனம் வெற்றி கண்டது. விழித்து பார்த்த போது நேரம் 3. நேரே SIET பஸ் ஸ்டாப்புக்கு நடந்தேன். அங்கு கண்களால் காத்திருந்தேன். அவள் வந்தாள். அருகிலேயே நின்றாள். சுற்றும் முற்றும் பார்ப்பதுபோல அவள் கையிலிருந்த புத்தகத்தில் அவள் பெயரை பார்த்தேன். மேரி.

காலையில் அவளை தொடர்வது, மாலையில் பேருந்து நிறுத்தத்தில் நிற்பதும் கிட்ட தட்ட ஒரு வாரம் தொடர்ந்தது. அவளும் நான் தொடர்வதை கவனிக்க தொடங்கினாள். ஆனால் இப்போது பேருந்தில் என்னை பார்ப்பதை தவிர்ப்பதை நிறுத்திவிட்டாள். புன்னகையால் பேச தொடங்கிவிட்டோம். அன்று அவளிடம் பேச தீர்மானித்து பேருந்தில் இருந்து இறங்கியவுடன் அவளை நிறுத்தி என் காதலை சொன்னேன். சலனமில்லாமல் மாலை இதே இடத்தில சந்திப்போம் என கூறிவிட்டு சென்றுவிட்டாள். பெண்களால் மட்டும் எப்படி உள்ளுக்குள் ஆயிரம் போராட்டம் நடந்தாலும் சாந்தமான முகத்துடன் நடமாட முடிகிறது. என் மனம் மாலையை எண்ணி சிந்திக்க தொடங்கியது.

சொன்ன நேரத்தில் அங்கு வந்தாள் மேரி. அவள் விருப்பப்படி அருகில் இருந்த ஹோட்டலில் தேநீர் சாப்பிட சென்றோம். அவளுக்கும் என்னை பிடித்திருக்கிறதென்றும் ஆனால் காதல் தோணவில்லை என்றும் குழப்பினாள். தேநீர் ஆறி கொண்டிருந்தது. நாம் பழகுவோம் பிடித்திருந்தால் தொடருவோம் இல்லையென்றால் விட்டுவிடுவோம் என வழக்கமான சினிமா டயலாக்கை சொன்னேன்.எப்படியும் அவளை காதலிக்க வைத்துவிடலாம் என ஒரு நம்பிக்கை.அவளும் சம்மதித்தாள்.

செல்போனில் பேசுவதும் அவ்வபோது சந்திப்பதும் ரெண்டு மாதங்களுக்கு தொடர்ந்தது. ஒவ்வொரு நாள் இரவும் அன்று நடந்ததை அலசுவோம். அவள் என் டயரியாகவும் நான் அவள் டயரியாகவும் மாறிப்போனோம். இதற்கிடையில் காதல் பற்றி நாங்கள் பேசிக்கொள்ளவே இல்லை. ஆனால் மனதில் காதல் நிறைந்து இருந்தது.

Feb 14 2007.அந்த நாளின் முக்கியத்துவம் தெரியாதது போல் இருவரும் சந்திப்பதாய் முடிவெடுத்தோம். பரிசு கொடுத்தால் எங்கே என்னை தவறாக நினைப்பாளோ என வாங்காமல் சென்ற எனக்கு அவள் கையிலிருந்த அந்த பரிசு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரு அழாகன வாழ்த்துஅட்டை.
"காதல் இல்லையென்ற நாடகத்தை இன்றோடு முடிக்கிறேன். என் உள்ளம்கவர்ந்த கள்வனுக்கு இந்த காதலர் தினத்தில் என் காதலே பரிசாய் - மேரி"

பூரித்து போனேன். அவளை அள்ளி அணைத்து முத்தமிட வேண்டும் போல் இருந்தது. சபை நாகரீகம் கருதி அதை மனதிற்குள் நிகழ்த்திகொண்டேன் .
அதன் பின் உரிமையோடு அவளை அழைத்து எல்லா இடங்களும் சுற்றினேன். எங்கள் காதல் தீவிரமடைந்து கொண்டிருந்தது. திருமணம் பற்றி விவாதிக்க ஆரம்பித்திருந்தோம் .

April 3 2007. அவள் தன் பெற்றோர்களிடம் அன்று காதலை சொல்லி சம்மதம் கேட்பதாய் கூறினாள். மறுக்கபடாது என தைரியமூட்டிவிட்டு சென்றாள் .

5 மணிக்கு ஆபீசை விட்டு கிளம்பினேன். மனசெல்லாம் மேரி நிறைந்திருந்தாள்.

அவளிடம் ஒரு நாள் பேசாவிட்டாலும் கூட மனசு பாரமாயிருக்கும். மேரி வழக்கம் போல் எனக்காக காத்திருந்தாள். ஒற்றை ரோஜாவை மறக்காமல் வாங்கி வந்திருந்தேன்.

ரோஜாவை அவளிடம் தந்தேன். வாடிய ரோஜாக்களுடன் அதையும் பெற்று கொண்டாள் என் மேரி . தோற்றம் 4-10-1984. மறைவு 3-4-2007.

"மேரி உனக்கு தெரியுமா இன்று ஆபீசில் என்ன நடந்ததென்று ........... "

அந்த சாலை விபத்தில் மேரி இறக்காமல் இருந்திருந்தால் இன்று Mrs.இளமாறன் ஆக இருந்திருப்பாள். காதலி இறந்தாலும் என் காதலை நான் இறக்க விடபோவதில்லை .

"நாளை வருகிறேன் மேரி " விடைபெற்றேன்.

5 comments:

VISA said...

thalaivarea....vaalthukal.

dhatshaini said...

thaarmeegam endraal enna?

மனுநீதி said...

நன்றி விசா.

//dhatshaini said..
thaarmeegam endraal enna? //

தார்மீகம் என்றால் 'கடமை தவற முடியாத' அல்லது 'மனசாட்சிப்படி நீங்கள் விலக முடியாத' என்பது தான் எனக்கு தெரிந்த பொருள். ஒரு செயலில் நீங்கள் தார்மீக பொறுப்பு எடுக்கிறீர்கள் என்றால் அதை நியாயமான முறையில் நீங்க செயல்படுத்திட வேண்டும். அதிலிரிந்து விலக முற்பட கூடாது. இந்த பொருளில் தான் தலைப்பு வைத்தேன்

Macguy said...

your short stories are really good..my best wishes..

மனுநீதி said...

Thank you Macguy. Keep coming back.

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)