Thursday, April 16, 2009

கெட்டு வாழ்ந்தவன் - சிறுகதை

எப்படியாவது அரசியல் கத்துக்கனும்ன்றது தான் என்னோட லட்சியம். அதுக்கு தான் என் அக்கா புருஷன் மூலமா எப்படியோ இந்த கட்சில சேந்துட்டேன். தெனமும் பத்து பேரோட சுமோல சுத்தறது தான் வேல. எதுக்கு சுத்றோம் எங்க போறோம்னுல்லாம் யாரும் கேக்கிறது இல்ல. கத்துகுட்டியான நான் மூச்சே விடறதில்லை. செல நேரம் போயிட்டு இருக்கும் போது அவசரமா ஒன்னுக்கு முட்டும் அப்ப கூட வெளில சொன்னதில்ல. சுத்தி இருக்றவனுங்கள பாத்தா எனக்கே பயமா இருக்கும், ஒவ்வொருத்தனும் ஒடம்ப கண்ணா பின்னானு ஏத்தி வச்சுக்கிட்டு அருவாகம்போட தான் சுத்துவானுங்க. என் கிட்டயும் ஒரு அருவா குடுத்தானுங்க ஆனா எதாவது பிரச்சனைனா எல்லாரையும் முன்னாடி வுட்டுட்டு நான் சுமோகுள்ளேயே பதுங்கிடுவேன். அந்த கூட்டத்திலையும் ஒரு நல்லவர் இருந்தாரு, அவரு பேரு பக்கிரி. ஆளு நெறைய பேர வேட்டிருக்காருனு பேசிகிட்டிருந்தோ சொல்லோ கேட்டேன். ஏதோ நம்ம மேல ஒரு சின்ன கரிசனம் அவருக்கு நானும் அத யூஸ் பண்ணி கொஞ்சம் க்ளோஸ் ஆயிட்டேன்.

அவர் தான் எனக்கு அரசியல் குரு. என்னனே தெரியாத அரசியல எனக்கு கத்து கொடுத்தது அவரு தான். அதுனால அவர நான் குருன்னு தான் கூப்டுவேன். அதிலயும் தொண்டனாவும் குண்டனாவும் இருக்கிறது எப்படின்னு அவர் சொல்லும்போது எனக்கு ஏன்டா இங்க வந்தோம்னு இருந்துச்சு. உயிர் மேல ஆச இருந்தாலும் அத காட்டிக்ககூடாதுன்னு சொன்னாரு. எல்லாம் புரிஞ்ச மாதிரி மண்டைய மண்டைய ஆட்னேன். எங்க நெருக்கத்த பாத்து குரூப்குள்ள கசமுசனு பேசிகிட்டாங்க. ஆனா நான் அத பத்திலாம் கவலைப்படாத மாதிரி நடிச்சேன். பின்னே குரு சொல்லிருக்காருல்லா பயம் இருந்தாலும் காட்டிக்க கூடாதுன்னு. எனக்கு எங்க குரூப்ல இருக்கறவங்களே என்ன போட்டு தள்ளிடுவாங்கலோனு எப்பவுமே கொஞ்சம் பயம் இருந்துச்சு. காரணம் என் குருவுக்கு கட்சில ஏதோ பதவி தர போறதா கேள்வி. எங்க நேத்து வந்த பய நான் இந்த நெருக்கத்த யூஸ் பண்ணி கட்சில சீக்கிரம் முன்னுக்கு வந்துடுவனோனு பயபுள்ளங்களுக்கு ஒரு பயம்.

கொஞ்ச நாள் வெறும் பிர்யாணி சரக்கு தூக்கம் அப்படினே போச்சு. பெரிய சோலி எதுவும் தலிவருகிட்டேந்து வரல. எனக்கு குரு அவரோட கதைய சொல்ல சொல்ல யாரையாவது குத்தனும் போல இருந்துச்சு. இத குரு கிட்ட சொன்ன சொல்லோ சிரிச்சாரு. வேணும்னா என்ன குத்துனாரு. அவர் சொன்னவொடனே என் கண்ணுலே தண்ணி நின்னுடுச்சு. சும்மா தாண்ட சொன்னேன்னு சிரிச்சாரு. ஆனா அதுக்கப்புறம் குரு என்ன அவர் தம்பி மாதிரி நடத்தினாரு.

அன்னைக்கொருநாள் எல்லாரும் செம காண்டா சுமோல கிளம்பினாங்க . என்னனு போமோது தான் சொன்னனுங்க. தலிவர கூட்டதிலேர்ந்து எதிர்கட்சிகாரன் யாரோ திட்டிடானாம் அதுனால அவன தூக்க போரோம்னானுங்க. மனசுக்குள்ளே சந்தோசம் கலந்த பயம் இருந்துச்சு. அதுக்கென்ன தூக்கிடுவோம்னு சொல்லிட்டு சிரிச்சேன். ஏதோ கிறுக்குபயல பாக்றமாதிரியே பாத்தனுங்க.

ஒரு எடத்துல வண்டி திடீர்னு நின்னுச்சு. பாத்தா அவனுங்களும் தயாரா தான் இருந்திருக்கானுங்க. எல்லாரும் ஆளுகொரு அருவாவோட இறங்கினோம்.நான் குருவுக்கு பின்னாடியே போனேன். குரு பாக்றவன் கையிலே கழுதுலேல்லாம் வெட்டினாரு. நான் விழுந்தவனுங்கலல்லாம் வெட்டிட்டே போயிட்டுருந்தேன். திடீர்னு ஒருத்தன் சைட்ல இருந்து குருவ வெட்ட வந்தான். எனக்கு என்ன தோனுச்சுனே தெரில அருவாளோட அவன் மேல பாஞ்சு கழுத்துல வெட்னேன். இப்ப அந்த எதிர்கூட்டத்த காணோம். அப்புறம் தான் தெரிஞ்சுது நான் வெட்னவன் தான் அந்த கூட்டத்துக்கே தலிவனாம். குரு என்ன அப்படியே கட்டி பிடிச்சு நான் சீக்கிரம் முன்னுக்கு வந்துடுவேன்னு சொன்னாரு. எல்லார் முன்னாலையும் அத கேட்க ரொம்ப பெருமையா இருந்துச்சு.

குரு தலிவர் கிட்ட கூட கூட்டிட்டு போய் இவன் தான் வெட்னான். ரொம்ப தைரியசாலி நமக்காக எத வேணாலும் செய்வான்னு என்ன கேட்காமலே என் உசிர உயில் எழுதி குடுத்தாரு. ஆனா இவளவு சீக்கிரம் இந்த அளவுக்கு பேரு கெடைக்கும்னு சத்தியமா நெனைக்கல. இந்த சம்பவத்துக்கப்புறம் எங்க குரூப்ல எனக்கு தனி மரியாதை. இப்ப யாரும் என்ன முன்ன விட்டு பின்னாடி பேசுறதில்ல. வணக்கம்லாம் கேக்காமலே கெடச்சுது. இந்த நேரத்துல தான் எனக்கு கட்சி யூனிபார்ம் கெடச்சுது. யூனிபார்ம்னா வெள்ள வேட்டி சட்டை தாங்க. அதுவரைக்கும் லுங்கியோட சுத்திட்டிருந்த எனக்கு இந்த வேஷ்டி கொஞ்சம் மண்டகனத்த குடுத்துச்சு .

அடுத்த வாரம் நடக்குற கட்சி மீடிங்க்ள குருவுக்கு ஏதோ பெரிய பதவி தர போறதா பேசிகிட்டாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அன்னைக்கு தண்ணி அடிக்கும்போது குரு ரொம்ப பீல் பண்ணி சொன்னாரு. இந்த மாதிரி ஒரு பதவிக்கு தான் இத்தன வருஷமா காத்துகெடந்ததாவும் அதுக்காக எத்தனை பேர் கை கால் தலைய வெட்டினார்னும் சொல்லசொல்லோ நெஞ்சு அடச்சுது. குரு அழுது நான் மொத மொறயா பாக்குறேன். குருவ சமாதான படுத்தும்போது நான் தான் இனிமே இந்த குரூப்கு தலிவனு சொன்னாரு. சத்தியமா சரக்குனால இல்லீங்க நெஜமாலுமே வானத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு.

மீடிங்க்கு இன்னும் ஒருவாரம் இருந்துச்சு. நானும் குருவும் கடைக்கு போய் நல்ல வேட்டி சட்டைலாம் எடுத்துகிட்டோம். பின்ன இந்த கட்சி மீடிங்க்கு எல்லா பெரிய தலைங்களும் வரும். அவுனுங்களுக்கு நாம மனசுல நிக்கற மாதிரி தெரிஞ்சா தான் பின்னாடி எதாவது செய்வானுங்க . கட்சில எவளவு பெரிய ரவுடியா இருந்தாலும் அந்த மீடிங்க்கு வரவனுங்க கிட்ட ரொம்ப பவ்யமா நடந்துக்கணும். எல்லார் கிட்டயும் நம்மள மாதிரி ஒரு குரூப் இருக்கும் அதுனால எதாவது எகிறன உன்ன தூக்கிட்டு போய்ட்டே இருப்பானுங்க. அவர் பெரியாள வந்தா எனக்கு பாத்து எதாவது செய்றேன்னு சொன்னார். குரு அன்னைக்கு நெறைய கத்துகொடுத்தார். குருவ விட எனக்கு அவர் பொறுப்பேக்றத பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு.

அடுத்த ஒரு வாரம் தண்ணி அடிச்சே கழிஞ்சுச்சு. குருவும் நானும் இன்னும் நெருக்கமானோம். அன்னைக்கும் தண்ணி அடிச்சிட்டு பீச் பக்கம் போலாம்னு கெளம்பினோம். இன்னும் ரெண்டு நாள்ல கட்சி மீட்டிங். குரு ரொம்ப சந்தோஷமா இருந்தார்.

நான் தான் வண்டிய ஓட்டினேன். நேரா நான் மொத மொத குருவ காப்பாத்துன அந்த எடத்துக்கே போனேன். பின்ன என் அரசியல் வாழ்க்க தொடங்குன எடமாச்சே. எங்கடா வந்த்ருகோம்னு குரு கேட்டார். அவர கைத்தாங்கலா எறக்கி கீழ கூட்டியாந்து அருவாளால ஒரே போடா போட்டேன். மன்னிச்சுருங்க குரு உங்களுக்கடுத்து அந்த பதவி எனக்கு தாணு நிச்சயமா தெரியும். ஆனா அதுக்காக இன்னும் வருசக்கணக்கா கஷ்டப்ற அளவுக்கு எனக்கு பொறுமை இல்ல. என் தோள்பட்டை பக்கத்துல அருவாவால கீரிவுட்டேன். சட்டை மொத்தமும் ரத்தம்.

உள்ளயும் வெள்ளயும் பயம் இல்லாம தலிவர் கிட்ட சொல்லவேண்டியத ஒரு தடவை சொல்லிபாத்துகிட்டேன்.

5 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா எழுதி இருக்கீங்க நண்பா.. வாழ்த்துக்கள்.. இன்றைய அரசியலை அப்படியே கொண்டு வந்திருக்கீங்க.. முடிச்சது கொஞ்சம் சடார்னு முடிஞ்சா மாதிரி இருந்தது.. மத்தபடி நல்ல முயற்சி..

மனுநீதி said...

ஊக்கத்துக்கு நன்றி கார்த்திகைப்பாண்டியன்.

கதைய இன்னும் நீளமா கொண்டு போலாம்னு தான் நெனச்சேன். ஏற்கனவே ரொம்ப பெருசா இருக்குற மாதிரி தோணுச்சு. அதுனால அப்படியே முடிச்சுட்டேன்.

VISA said...

என்னை ஆச்சரியப்பட வைத்துவிட்டீர்கள். உங்களிடமிருந்து இத்தனை விரைவில் இப்படி ஒரு எழுத்தை நான் எதிர்பார்க்கவில்லை. பாருங்கள் வாசிப்பு அனுபவம் உங்கள் எழுத்தை எவ்வாறெல்லாம் மேன்மை பெற செய்துள்ளது. மேலும் உங்கள் எழுத்திலிருந்த அந்த இறுக்கத்தன்மை நீங்கிவிட்டதை இந்த கதையில் காண முடிகிறது. மேலும் ஒரு ஆச்சரியம். பொதுவாக உங்கள் கதைகளை படிக்கிற பொழுது நீங்கள் பின்னால் நின்று கொண்டு கதை சொல்வது போல் ஒரு உணர்வு ஏற்படும். இந்த கதையில் அது ஏற்படவில்லை. கதையின் ஓட்டத்தில் நீந்தி வெளியேற முடிகிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து இது போன்ற எழுத்தை எதிர்ப்பார்ப்பேன்.

dhatshaini said...

arasiyal vaalkai ippadi pattatha .?atcharyaamaaga irukku..

மனுநீதி said...

நன்றி விசா.

தாட்சாயினி, இந்த கதைக்களம் ஒன்றும் புதிதல்ல. எல்லோருக்கும் பழக்கப்பட்ட ஒரு களத்தை ஒரு வித்தியாசமான நடையில் எழுத வேண்டும் என்பதற்காக எழுதியது இது.

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)