Saturday, May 2, 2009

பேருந்தில் ஒரு பாடம்

சென்னை பேருந்து நிலையத்திலிருந்து அந்த திருச்சி சொகுசு பேருந்து கிளம்பும் போது என்னையும் சேர்த்து பத்து பேர் இருந்தனர். ஆனால் தாம்பரம் எட்டும் போது பேருந்து நிரம்பியிருந்தது. ஜன்னலோர இருக்கையை எடுத்து கொண்ட நண்பணோடு பேசிக்கொண்டும் பேருந்தில் விடியோவை அவ்வபோது பார்த்து கொண்டும் இருந்ததால் சகபயணிகளை அவர்கள் ஏறும்போது கவனிக்க தவறினேன்.  

பேருந்தை இப்போது கண்களால் அளந்ததில் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு யாரும் இல்லையென நினைத்த போது தான் ஒரு வினோத சிரிப்பு எனது இடப்புற இருக்கையில் இருந்து எழுந்தது. அருகிலிருந்த அனைவருக்கும் இப்போது அந்த சிரிப்பின் சொந்தக்காரன் காட்சிபொருளாக மாறிவிட்டிருந்தான். ஆனால் இது சில நிமிடங்களுக்கு தான். பின்னர் தத்தம் கடமைகளுக்குள் சிரமப்பட்டு ஈடுபடுட்டு கொண்டனர். எனக்கும் எங்கே அவனை பார்த்தால் நம்மை ஏதாவது செய்து விடுவானோ என்ற சராசரி பயம் இருந்தது. விடியோவில் படம் பார்ப்பதை போல் ஓரகண்ணால் அவனை பார்த்தேன். வாயில் புன்னகை தவிர எதையும் அறியாமல் இருந்தான். மனது சற்று கனத்திருந்தது.  

திடீரென்று அவன் எழுந்து அம்மா கிட்ட போணும் அம்மா கிட்ட போணும் என சிணுங்க ஆரம்பித்தான். பின்னிருக்கையிலிருந்து அவனது தந்தை சிரமப்பட்டு இதோ கொஞ்ச நேரத்துல போயிடலாம் என சமாதானப்படுத்த அவன் திரும்பி அமர்ந்த போது சாந்தமில்லாத அவன் முகம் அத்தனை பேர் பார்த்ததிலும் சங்கடப்படாமல் இருந்தது .  

இந்த சலசலப்பில் அருகில் இருப்பவர்கள் உறங்காமல் இருப்பதே உசிதம் என முடிவெடுத்து படத்தில் கண்களையும் இவனில் காதுகளையும் பதித்து கொண்டார்கள். அப்போது தான் கவனித்தேன். அவன் நல்ல உயரம் வயது எப்படியும் 25 இருக்கும் ஆனால் அந்த வயதிற்கேற்ற முறுக்கு உடலில் இல்லை. தங்கை, அண்ணன் மற்றும் தந்தையுடன் பயணம் செய்கிறான். எப்போதும் ஏதோ சிந்தனையிலே இருந்தான். தாயை தேடுகிறானா இல்லை தன்னையே தேடுகிறானா தெரியவில்லை. இப்போது செங்கல்பட்டு தாண்டி பேருந்து விரைந்து கொண்டிருந்தது. கண்டக்டர் டிக்கெட் கொடுக்க தொடங்கினார். எனக்குள் இவனிடம் அவர் வரும்போது என்ன நடக்கும் என்ற ஒரு உள்ளகுறுகுறுப்பு.  

"தம்பி டிக்கெட் " கண்டக்டர் முடிப்பதற்குள் ஹிஹிஹி என அவன் சிரித்தான். எதிர்பார்த்தபடி அவர் முகம் மாறியிருந்தது. அதற்குள் அவனது தந்தை திருச்சிக்கு நாலு டிக்கெட் வாங்கினார். கண்டக்டர் வாய் வரை வந்த கேள்வியை கேட்கமாலே அடுத்த இருக்கைக்கு தாவினார். அவனை பற்றி கண்டக்டர் ஏதாவது சொல்வார் என எண்ணியிருந்த கூட்டம் ஏமாற்றத்தில் மீண்டும் விட்டவற்றை தொடர திரும்பியது .  

மதிய சாப்பாட்டுக்கு வழக்கம் போல ஓட்டுனர் நடத்துனரின் நண்பன் பயணிகளின் எதிரியான அந்த விழுப்புரம் அருகிலுள்ள ஹைவே உணவகத்தில் பேருந்து நின்றது. நான் இரண்டு பிஸ்கட் பாக்கெட்டும் தண்ணியும் வாங்கிக்கொண்டு அவனை பார்க்காத மாதிரி பார்த்துக்கொண்டே வந்தமர்ந்தேன். அவனது குடும்பம் இப்போது கட்டி வந்திருந்த சாப்பாட்டை பங்கு போட்டு சாப்பிட்டு கொண்டிருந்தது .அண்ணன் தங்கை தந்தை என மாறி மாறி அவனுக்கு ஊட்டி கொண்டிருந்தனர். எனக்கு வயிறும் மனதும் நிறைந்தது . அவன் அண்ணனை அப்போது தான் கவனித்தேன் இவனை போலவே இருந்தான். பின்னர் அவனை கை கழுவ இறக்கி விட்டு கூட்டி வரும்போது தான் தெரிந்தது இருவரும் இரட்டையர்கள். விதியின் விளையாட்டு. அவனை போலவே அச்சு அசலா இருக்கும் ஒரு சராசரி மனிதன் இவனோ இப்படி புத்தி சுவாதீனம் இல்லாமல்.ச்சே.என்ன படைப்புடா.  

இடையில் அவன் சிறுநீர் கழிக்க வேண்டுமென கூற அவன் தந்தை பேருந்தை நிறுத்த சொன்னார். அவர்கள் இறங்கி மீண்டும் ஏறுவதற்குள் பேருந்தில் சலசலப்பு . திருந்தாத ஜென்மங்கள். வாயிருந்தும் வாய்விட்டு வருகிறதென்று கூறாமல் அடக்கி கொண்டு அமர்ந்திருக்கும் இவர்களிடம் எல்லாவற்றையும் வெளிப்படையாய் கூறிய அவன் மிக உயரத்தில் இருந்தான்.

முன்னிருக்கையில் தலைசாய்த்து உறங்க முயற்சித்த போது அங்கு மெல்லிய குரலில் இருவர் பேசிகொண்டிருந்தனர்.  

"இந்த மாதிரி மூளை வளர்ச்சி இல்லாதவங்கள இப்படி பஸ்ல கூட்டிட்டு சுத்தலாமா? எல்லாருக்கும் எடஞ்சல் பாருங்க. பேசாம வீட்லயே கட்டி வச்சுருக்க வேண்டியது தான" . உறக்கம் முற்றிலுமாக தெளிந்து கோபம் தலைக்கேறிகொண்டிருந்தது. இது வரை பேருந்தில் அவன் யாரையும் தொந்தரவு செய்யவில்லை அவன் சிரிப்பதை, பேச முற்படுவதை தொந்தரவாக கருதவில்லை. அப்படியிருக்க இவர்கள் பேச்சு இவர்களை விட அவன் பரவாயில்லை என தோன்ற வைத்தது .


அடுத்து அவன் என்ன செய்வான் என்ற சிந்தனை மனது முழுவதும் நிறைந்திருக்க அவன் எழுந்து அவன் முன்னிருந்த காலி இருக்கையில் அமர முற்பட்டான். பக்கத்துக்கு இருக்கையில் இருந்தவன் "ஏய் இங்கெல்லாம் உட்கார கூடாது போய் உன் அப்பாகிட்ட உட்காரு" என்றான். இவன் முகம் குழம்பியது. அதில் வருத்தத்தை தேடி தோற்றேன். அவர்களது வாழக்கையில் சந்தோசம் துக்கம் இரண்டையும் அதிக வேறுபாடின்றி பார்க்கும் பக்குவம் இருப்பதாக தோன்றியது. பிச்சைகாரர்களையும் பணக்காரர்களையும் வேறுபடுத்தி பார்க்க தெரியாத அந்த அறியாமை எல்லோருக்கும் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்போது மீண்டும் அம்மாவிடம் போகணும் என்றான். எந்த மனநிலையில் இருந்தாலும் தாய்பாசம் ஒன்று தான். அன்று எனக்கு பல ஞானோதயங்கள் கற்றுகொடுத்து போதி மரமாக அவன் தெரிந்தான் .

பேருந்து இப்போது திருச்சியை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது அவனின் தந்தை "தம்பி சேலம் போறதுக்கு எங்க எறங்கனும். இங்க வழியில இறங்கின மாறி போலாம்னு சொன்னாங்க" என்றார் .

எனக்கு தெரியாததால் கண்டக்டரை கேட்க சொன்னேன். கண்டக்டரை கேட்ட போது வழக்கம் போல் அருகில் இருந்த அனைவரும் வழி சொல்ல ஆரம்பித்தனர். இவர் சற்றே குழிம்பினார்.  

கண்டக்டர் "நீங்க எங்க தான் போகணும் சொல்லுங்க" .  

"குணசீலம்"  

இப்போது வழிசொன்ன அனைவரும் அமைதியை மட்டுமே உதிர்த்தார்கள் . சந்தேகத்திற்கிடமில்லாமல் அனைவர் மனதும் இப்போது கலங்கியிருக்கும் .  

கண்டக்டர் அடுத்த 5 நிமிடத்தில் ஒரு இடத்தில அவர்களிடம் வழி சொல்லி இறக்கிவிட்டார்.  

"ஏன் சார் அவன் அம்மாவையும் கூட்டிட்டு வந்திருந்தா உதவியா இருக்கும் இல்ல "  

"இருந்திருந்தா கூட்டிட்டு வந்திருப்பேன் சார் ". மகனின் கையை பிடிப்பதில் கவனத்துடன் இருந்த அவர் கண்டக்டர் உட்பட அனைவரையும் ஊமையாக்கி விட்டு சென்றார்.

அவனிருந்த வெற்றிருக்கையை ஏக்கத்துடன் ஏறிட்டேன். கண்ணில் நீர் என்னையறியாமல் எட்டிப்பார்த்தது.



15 comments:

ஆ.சுதா said...

கதை பிரமாதமா இருக்குங்க.
என்னையும் கலங்க வச்சுட்டு.

Anonymous said...

ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கு..

மனுநீதி said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
கதை பிரமாதமா இருக்குங்க.
என்னையும் கலங்க வச்சுட்டு//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி முத்துராமலிங்கம் சார்

//Anonymous said...
ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கு..//

பின்னூட்டத்திற்கு நன்றி அனானி அவர்களே. ஒவ்வொரு முறை இம்மாதிரியானவர்களை பார்க்கும் போதும் கஷ்டமா தான் இருக்கு :(

Venkatesh Kumaravel said...

பிரமாதமான கதை. காட்சிகள் கண்முன் விரியும் தன்மை கூடுதல் பலம். பத்திகளை இன்னும் கொஞ்சம் கவனமெடுத்து ஒழுங்குபடுத்தியிருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. போட்டியில் வெற்றி பெற உள்ளம் கனிந்த வாழ்த்துகள்!

மனுநீதி said...

வாழ்த்துக்கு நன்றி வெங்கிராஜா.

பத்திகளை ஒழுங்குபடுத்த பல முறை முயற்சித்தும் சரியாகவராததால் இப்படியே விட்டுவிட்டேன். நான் ஆங்கிலத்தில் கதையை டைப் செய்து பின்னர் கூகிள் http://www.google.co.in/transliterate/indic/Tamil உதவியுடன் தமிழுக்கு மாற்றுவேன். இதுவரை எந்த பிரச்சனையும் இருந்ததில்லை இம்முறை ஏனோ இப்படியாகிவிட்டது.

லோகு said...

ரொம்ப நல்லா இருக்கு...

வெற்றி பெற வாழ்த்துக்கள்..

மனுநீதி said...

வாழ்த்துக்கு நன்றி லோகு.

உங்கள் நகைச்சுவை துணுக்குகளும் ரசிக்கும்படி உள்ளது. வெற்றி பெற என் வாழ்த்துக்கள்,

கார்த்தி said...

Romba nalla irukku sir... Vaazthukkal...

மனுநீதி said...

வாழ்த்துகளுக்கு நன்றி கார்த்தி.

Nithi said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

மனுநீதி said...

வாழ்த்துக்கு நன்றி Nithi

ஜோசப் பால்ராஜ் said...

வெற்றிக்கு வாழ்த்துக்கள். சங்கமத்தில் என் வோட்டை பதிவு செய்துவிட்டேன்.

மனுநீதி said...

மிக்க நன்றி ஜோசப்.

KRTY said...

வாழ்த்துக்கள் மனு.

மனுநீதி said...

Thanks Keerthi

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)