Saturday, February 13, 2010

மனச்சுவடு - 4

அதன் பிறகு நாட்கள் கழிய மறுக்க நான் நாட்களை கடக்க பழகியிருந்தேன். அவளின் பார்வைகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் கற்பனையில் உருவாக்கவில்லை. அவள் பிறந்ததே என்னை நோகடிக்க மட்டும் தான் என முடிவெடுத்து மீண்டும் அவளை வெறுக்கும், ஒதுக்கும் முயற்சியில் இறங்கியிருந்தேன்.

அவளும் அடிக்கடி விடுப்பில் செல்ல துவங்கயிருந்தாள். கல்யாணத்திற்கு முன் எனக்கு தெரிந்து பெரும்பாலான பெண்கள் புடவை, நகை என ஒரு மெகா ஷாப்பிங் செய்வதற்கு இம்மாதிரி விடுப்பில் செல்வது பழக்கமான ஒன்று தான். அவள் வராத நாட்களில் தைரியமாக அவள் இடத்தை பார்க்க முடிந்தது. அவள் வந்த நாட்கள் நான் பார்க்காத பொது அவள் பார்த்தது தெரிந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் அந்த ரசாயன மாற்றங்கள் நிகழ்வது இல்லை.

அன்று வியாழக்கிழமை. அவள் ஒவ்வொரு மேசையாக சென்று பத்திரிக்கை கொடுத்து கொண்டிருந்தாள். நிச்சயமாக எனக்கு வைக்கமாட்டாள் என தெரியும். இருந்தாலும் ஒருவேளை எனக்கு வைக்க வந்திவிட்டால் என்ன பேசுவது என குழம்பி போயிருந்தேன்.

"அழைப்புக்கு தானே காத்திருந்தேன்
அழைப்பிதழோடு ஏனடி வந்தாய் "

மனதிற்குள் கடைசி முறையை அவளை பற்றிய கற்பனை ஓடியது. எதிர்பார்த்த மாதிரி என் மேஜையை தவிர்த்து மற்றவர்களுக்கெல்லாம் பத்திரிக்கை கொடுத்து முடித்தாள்.

அன்று இரவு கனவுகள் வெறுமை அடைந்திருந்தது. விடியல் உறங்கும் முன்னரே வந்துவிட்டது. ஒரு வழியாக அலுவலகம் சென்றடைந்து கணினியை உயிர்ப்பித்து அன்றாட முதல் கடமையான இமெயிலை செக் செய்து காபிக்கு கிளம்பும் போது சாட்டில் ஒரு புது தகவல் ஓரத்தில் எட்டி பார்த்தது. முதல் முறையாக அவள் என்னிடம் பேசமுற்பட்டாள்.

"ஹாய். உன் மேஜை ட்ராயர்ல கல்யாண பத்திரிக்க வச்சுருக்கேன். நேர்ல குடுக்க ஒரு மாதிரி இருந்துச்சு அதான் காலைல வந்த உடனே உன் டெஸ்க்ல வச்சுட்டேன்"

வார்த்தைகள் விரல் வழியே வெளியேற துடித்து கொண்டிருந்தன. என்ன ஒரு சாடிஸ்டா இருந்தா கல்யாண பத்திரிக்கைய வச்சதுமில்லாம அத சாட்ல வேற வந்து சொல்லுவா. கோபம் கண்களில் ஏறி அது சோகமாக மாறி நீர் வெளியேற துடித்துகொண்டிருந்தது.

"ஹே என்ன பேச்சே காணும் " .

இத்தனை நான் மௌனம் பழகிய உனக்கு ஒரு நிமிட மௌனம் கூட பொறுக்க முடியவில்லையா.

பத்திரிகையை திறந்து மெதுவாக பார்வையை மேய விட்டேன். ஏனோ என்னுள் ரசாயன மாற்றங்கள் மீண்டும் ஏற்பட்டு கொண்டிருந்தன. கல்யாண பெண் பெயரில் அவள் பெயர் இல்லை. பத்திரிகையின் பின்புறம் மணமகனின் சகோதரி இடத்தில அவள் பெயர் இருந்தது.

"ஹலோ" . இது நான்.

(தொடரும்)

2 comments:

VISA said...

hei super

A Recluse said...

Viru Viruppa pogudhu! Climax enna nnu romba ve edhir paaka vaikudhu! :)

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)