Friday, August 28, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 3



தீராத முத்தங்கள்
-------------------------------
அர்த்தமற்ற சாமத்தில்
அழுகையோடு உறங்கியவனை
இமைக்காமல் பார்த்தவளை
மனதுக்குள் அறிந்தாலும்
கண்மூடி கிடந்தவனை
நெற்றியில் முத்தமிட்டு
வெளியேற நினைக்கையிலே
அழுகையோடு விழித்தான்
அவள் அழகு முகம் பார்க்க
நெற்றி முத்தம் கேட்க
முத்தம் வாங்கி உறங்குமுன்
அழைத்தான் அவளை
மழலை அழைப்பில்
மீண்டுமொரு முத்தம்

இல்லாத நினைவுகள்
-------------------------------------
சிந்திக்காமல் சிரித்த
பார்க்காமல் பழகிய
மண்ணோடு புரண்ட
மயிர் பிடித்தெரிந்த
பிரிவின்றி உண்ட
பிரியாமல் நின்ற
அடிவாங்கி அழுத
கால்முட்டி தேய்ந்த
மழையொடு ஆடிய
வெயிலோடு ஒடிய
தட்டானை பிடித்த
ஓணானை மயக்கிய
பத்துகாசு திருடிய
கண்பார்த்து பேசிய
மண்பார்த்து நடக்காத
பள்ளிக்கூட நாட்களை
நினைத்து திளைத்தேன்
பள்ளிக்கூடம் காணாத
பால்யனை பார்க்கும் வரை

முதல் துளி
-----------------------------------
விடியும் நேரம்
கஞ்சிகலயம் தூக்கி
தலப்பா கட்டி
வேட்டி மடிச்சு
ஏர் பூட்டி
கையில கொம்பெடுத்து
மாடு விரட்டி
வயலுக்கு போக
வானம் பார்த்து
காத்து நிக்கேன்
எப்ப வருமோ
அந்த மொத துளி

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)