வழக்கத்திற்கு மாறாக என் அலுவலக சீட்டுக்கு அருகில் வந்து வெறும் ஹலோ அளவில் இருந்த நண்பர்கள் எல்லாம் ஆருயிர் தோழர்களாக மாறிகொண்டிருந்தார்கள். என் தொலைபேசியும் மறுஉயிர் பெற்று அலுவலகத்தின் எல்லா தளங்களில் இருந்தும் நலம் விசாரிப்புடன் என் சுற்று வட்டாரத்தை பற்றியும் விசாரிப்பு தொடர்ந்தது.
அத்தனை நேரம் கேள்விகளை மட்டும் மனதிற்குள் ஓட்டி கொண்டிருந்த எனக்கு விடை அவள் எழுந்து நிற்கும் போது கிடைத்தது.
இத்தனை காலங்கள் போராடி பிரம்மன் இப்போது தான் தன் பணியை சரிவர செய்து இருக்கிறான். நளினமான நடை, பார்க்கும் அனைவரையும் வசீகரிக்கும் புன்னகை , எவரையும் சட்டை செயாத அந்த மிடுக்கு அத்தனையும் அவளை மேலும் அழகாக காட்டியது. அதுவரை அழகென்று பெருமை கொண்ட பெண்களை எல்லாம் தொலை தூரத்தில் ஒரே நாளில் தொலைய செய்தாள்.
அவள் வந்த ஒரே நாளில் அலுவலகத்தில் அணைத்து ஆடவர் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்தது , ஆனால் வழக்கம் போல அந்த பரபரப்பு ஒரு வாரத்தில் ஒரு நான்கைந்து பேரிடத்தில் மட்டும் விடாப்பிடியாக ஒட்டி கொண்டு மற்றவரிடத்தில் காற்றில் கரைந்து விட்டது. அடுத்த சில வாரங்களில் இவளை பற்றிய பேச்சுக்கள் அறவே குறைந்து போயின. ஆனால் இப்போது நான் என்னுடன் தினமும் பேச துவங்கியிருந்தேன் .
இரவுகள் நீளமாகி கொண்டிருந்தன. கவிதைகள் குவியதொடங்கின. கற்பனையில் நிறைவேற சாத்தியமில்லாத விடயங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன . அலுவலகத்தில் இல்லாத நேரங்கள் அலுவலகத்தை தேடின. அலுவலகத்தில் அவள் இல்லாத நாட்கள் அவளை தேடின. கண் எதிரில் தேவதை கற்பனைக்கா பஞ்சம், கவிதைகளால் கவிதையை தினமும் தினமும் துதி பாடி கொண்டிருந்தேன்.
அனைவருக்கும் பிடித்த கவிதை அவளுக்கு பிடித்திருக்கவில்லை போலும். நான் சொல்லாமல் அவளே உணரும் அந்த கற்பனை வட்டத்தில் சிக்கி கொண்டே நிஜத்தில் சிந்தித்து கொண்டிருந்தேன். நிஜம் விளங்க நாழியானது. நிஜம் உணர்ந்த போது நாட்கள் வேகமாக கழிந்து கொண்டிருந்தது. என் வார்த்தைகளுக்கு முட்டுகட்டையாய் கேள்விகளை நானே கேட்டுகொண்டிருந்தேன். கேள்விகள் தொலைந்த போது தைரியமும் தொலைந்து போயிருந்தது. முடிவில் எதிர்பார்த்தது எதிர்பாராமல் நிகழ்ந்தது.
(தொடரும்)
2 comments:
ஒரு கவிதை மாதிரி ஓ.....இது தான் பின் நவீனத்துவமா? இந்த ஸ்டைல் நல்லா இருக்கு. இதிலே கன்டினியூ செய்யண்டி. சூப்பர். வெயிட்டிங் பார் நெக்ஸ்ட்.
அடுத்த பகுதி இந்த வாரக்கடைசில தான் எழுத முடியும்னு நினைக்கிறேன்.
Post a Comment
நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)