Wednesday, March 4, 2009

திரிசங்கு சொர்க்கம்

ரம்யாவை நான் முதல் முதல் பார்த்தது எங்கள் கல்லூரி வளாகத்தில். சினிமா காதலை போல எங்கள் காதல் மோதலில் தொடங்காமல் காதலிலேயே தொடங்கியது. அவளை பார்த்த அந்த நொடியில் என் இதயம் களவாடப்பட்டது. அவள் கண்களில் என்னை பார்த்து கொண்டிருந்தேன், உதடுகல் வார்த்தைகளை தேடி தோற்று கொண்டிருந்தன. வார்த்தைகள் பரிமாறும் முன்னே இதயங்கள் இடம் மாறிவிட்டன. அந்த நொடி வரை இது தான் காதல் என்று எங்கள் இருவருக்கும் தெரியாது ஆனால் இருவருமே அதில் விழுந்து விட்டோம். கல்லூரி மரத்தடிகள் எங்களுக்கு காதல் ஞானம் புகட்டி பழகின. கல்லூரி கான்டீன் எங்களுக்கு அமிர்தம் பரிமாற தொடங்கியது. நண்பர்கள் அன்னியமாகினர். விடுமுறை நாட்கள் எங்களை வதைக்க தொடங்கின. இப்படியே காதல் உலகத்தில் பயணித்து கொண்டே இருக்கும்போது கல்லூரி பயணம் முடியும் நேரம் வந்தது. எனக்கு கேம்பஸில் ஒரு நல்ல IT கம்பெனியில் வேலை கிடைத்தது .

நல்ல வேலை கிடைத்தால் அவள் வீட்டில் சென்று பெண் கேட்கலாம் என முடிவெடுத்தோம். மிக தவறான முடிவு. காதல் கேட்காத ஜாதியை அவள் தந்தை கேட்டுகொண்டிருந்தார். மௌனம் மட்டுமே உதிர்த்து கொண்டிருந்த நான் அவளை காதலிப்பதாகவும் நல்ல நிலையில் வைத்து வாழ்வேன் என்றும் கூறியதை அவர் விவாதத்திற்கு எடுத்து கொள்ள தயாராகஇல்லை. அடுத்து நடந்தவை எல்லாம் எனக்கு சரியாக நினைவில்லை. நினைவு திரும்பிய போது தெரு நாய்கள் என் ரத்தத்தை நக்கி கொண்டிருந்தன. அது எனக்கு ஆறுதலாக இருந்தது. எழ நினைத்தாலும் கால்கள் ஒத்துழைக்க மறுத்தன. யாரோ சோடா தெளித்து என் உளறலில் வீட்டை கண்டுபிடுத்து கொண்டு சேர்த்தார்கள். மீண்டும் எழுந்து நடக்க ஒருவாரம் ஆகியது. ரம்யா விலகி கொண்டிருந்தாள்.

கடைசியாக அமெரிக்காவில் உள்ள பெரியப்பாவின் வீட்டுக்கு போகும் முன் போன் செய்தாள் . காதலுக்கும் உங்களுக்கும் நடந்த கொடுமையை பார்த்து உங்களை காப்பாற்ற காதலை கொலை செய்து விட்டேன் என்று சொல்லி பதிலுக்கு கூட காத்திராமல் கடல் தாண்டி சென்று விட்டாள். இதயம் வலித்தது கண்கள் ரத்தம் உதிர்த்தன. என் தாடியும் வாராத தலையும் ஒரு சைண்டிஸ்டை போன்ற தோற்றத்தை உலகுக்கு ஏற்படுத்தி கொண்டிருந்ததன. காதல் மடிந்த கதையை காற்றோடு கரைத்துவிட்டு வாழக்கை சக்கரத்தில் நான் பணியில் நல்ல நிலையில் வந்துவிட்டேன். அடுத்த மாத திருமணமும் என் அழகிய தேவதை காவ்யாவும் தான் இப்போது என் நெஞ்சம் முழுதும். அவப்போது என் பழைய காதல் ஞாபகங்கள் தொல்லை தந்தாலும் காவ்யாவின் முகம் என்னை ஆசுவாசப்படுத்தியது. முதல் காதல் மடிந்தாலும் அது பீனிக்ஸ் பறவையாய் மனதில் முளைத்து கொண்டே தான் இருக்கும். இதை மறுப்பவன் மனிதனில்லை .

கல்யாண பத்திரிக்கை கொடுத்துவிட்டு சூரியனிடம் போராட முடியாமல் ஒரு ஜூஸ் கடைக்குள் தஞ்சமடைந்தேன். திடீரென்று ஒரே அலறல் சத்தம் யாரோ வேகமாக வந்த காரில் அடிபட்டு விட்டார். அடிபட்டவருக்கு காற்றை தடை செய்யும் முயற்சியில் கூட்டம் நின்று கொண்டிருக்க நானும் சென்று அவர்களுக்கு உதவினேன். அடிபட்டவருக்கு எப்படியும் 60 வயது இருக்கும், கொஞ்சம் பலமான அடிதான்; பாவம் தனியாக வந்திருக்கிறார் . முகம் பரிச்சயமானதை போல் இருந்தாலும் சட்டென்று ஞாபகத்துக்கு வரவில்லை , சில நிமிட போராட்டதுக்கு பிறகு என் முகம் மலர தொடங்கியது. இவர்.. இவர்.. ரம்யாவின் தந்தை. சென்று விடலாம் என்று நினைக்கும் போது பாவம் ரம்யா தாய் இறந்த பிறகு இவர் ஒருவர் தான் அவளுக்கு துணை அவளுக்காக இதை செய்வோம் என்று தோணியது. ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். ரத்தம் அதிகமாக வீணாகி கொண்டிருந்தது. நிஜ கடவுள்கள் நிழல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டுமென கையை விரித்து விட்டார்கள். ரம்யா வருவதற்குள் எப்படியாவது கழன்று விட வேண்டும் என தீர்மானித்து நடந்து கொண்டிருந்த போது மறுபடியும் என்னுள் பீனிக்ஸ் . அதே அழகுடன் ஆனால் உணர்ச்சிகளற்று வந்து கொண்டிருந்தாள் ரம்யா. என்னை பார்த்து லேசாக அழுதபடி புன்னகைத்தாள். நடந்த விபத்தை பற்றி கூறி அவளின் தந்தையின் நிலையை பற்றி கூறிவிட்டு போகலாம் என் நினைத்தேன். அவளுக்கு இங்கு வேறு யாரும் உதவிக்கு இல்லையென்றும் அமெரிக்காவில் இருந்து இப்போது தான் வந்தாள் என்றும் தெரிந்து விதியை நொந்தபடி ஒரு நீண்ட போராட்டத்திற்கு தாயாரனேன் . மனசு விட்டு பேசி கொள்ள பல மணி நேரம் இருந்தாலும் வார்த்தைகள் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து தொண்டையிலே மடிந்து கொண்டிருததன.

ரம்யாவின் தந்தை இறந்து ஒரு வாரம் ஆயிற்று. அவளுடன் இருந்து எல்லா காரியமும் நான் செய்து முடித்தேன். ஏனோ இறந்தவர் மீது எனக்கு பரிதாபம் வரவில்லை. நம் காதலுக்கு தடையாக இருந்த உன் தந்தை இறந்து விட்டார் வா நாம் இனி புது வாழ்க்கை தொடங்குவோம் என கூறி அவளை கட்டியணைத்து முத்தமிட துடித்தது என் மனது. திட்டமிட்டு உன் தந்தையிடம் காதலை கூறியபோது அது எடுபடவில்லை ஆனால் இப்போது திட்டமிடாமலே எல்லாம் நமக்கு சாதகமாக இருக்கிறது. வா எங்காவது சென்று நம் எண்ணம் போல் வாழலாம். நீ எனக்கு உணவாகவும் நான் உனக்கு உணவாகவும் மாறி இந்த உலகில் இச்சைக்கு புது அர்த்தம் உருவாக்குவோம். மனம் காதலிலும் காமத்திலும் இமயமலையை கடந்து பாய்ந்து கொண்டிருந்தது. ரம்யா என் உணர்வுகளை பிரதிபலிப்பதை போல் என்னை பார்த்தாள். அவள் முகம் காதலில் மலர்ந்திருந்தது. இது நிச்சயமாக காதல் தான் நாங்கள் முதல் நாள் சந்தித்த போது இருந்த அதே மலர்ச்சி அதே மிரட்சி அவள் முகத்தில் கண்டேன்.

தன் கைகளை என் தோளின் மேல் போட்டு என்னை இறுக கட்டிகொண்டாள். இருவரின் உதடுகளும் முத்தத்திற்கு ஏங்கி கொண்டிருந்தன. என் தலைமயிரை கொத்தாக தன் விரல்களால் பின்னி கொண்டிருந்தாள். கண்கள் காமத்தில் சொருக ஆரம்பித்திருந்தன. இருவரின் உதடுகளும் இன்னும் சமீபித்து இருந்தன. என்னை கேட்காமலே என் கைகள் அவள் இடையை கட்டிகொண்டிருந்தன. உடல்கள் உரசிக்கொண்டு உணர்ச்சிகளை சூடேற்றி கொண்டிருந்தது. அடுத்த நொடி இருவரும் சல்லாப உலகில் இருப்போம் என நினைக்கும் போது சனியன் போல் என் செல்பேசி அழைத்தது. காவ்யா.. அதை பார்த்த மாத்திரமே குப்பென்று வியர்த்தது.

பேச தைரியமில்லை. லைனை துண்டித்தேன். வெளியில் சென்று ஒரு சிகரட்டை பற்ற வைத்து கொண்டு சிந்தித்தேன். தாராசில் காவ்யாவும் ரம்யாவும் கரி நிகராக தெரிந்தார்கள். ரம்யாவை இழக்க மனமில்லை காவ்யாவை ஏமாற்றவும் மனமில்லை.திரிசங்கு சொர்க்கத்தில் நிற்பது போல் இருந்தது. தன் காதல் நினைவுகள் மனதில் வந்து அசைபோட தொடங்கியது, ரம்யாவின் பக்கம் தராசு சாய்ந்து கொண்டிருந்தது.

பின்னால் ரம்யா வரும் சப்தம் கேட்டு சிகரட்டை கீழே போட்டு மிதித்தேன். காலையில் வருகிறேன் என்று சொல்லி கிளம்பினேன். ரம்யாவின் முகம் வெளிறி இருந்தது , ஒரு வேளை காவ்யாவிடம் தான் பேசியதை கேட்டிருப்பாளோ என்று தோன்றியது. நாளை காலை இனிப்புகளுடன் வந்து அவளை திருமணம் செய்யும் சந்தோஷமான சங்கதியை கூறி இறுக அணைக்க வேண்டும். அப்போது எல்லா சந்தேகங்களுக்கும் அவளுக்கு விடை கிடைக்கும் என்ற என்னையே சமாதானப்படுத்தி கொண்டு நடந்தேன். ரம்யாவின் நினைவுகள் இரவை வேகமாக விரட்டியது.
காலையில் திட்டமிட்டபடி இனிப்புகளுடன் ரம்யா வீட்டுக்கு சென்றேன். கதவு தாழிட்டு இருந்தது. பக்கத்துக்கு வீட்டு சிறுமி வந்து அக்கா அதிகாலைலையே அமெரிக்க செல்வதற்காக ஏர்போர்ட் சென்று விட்டதாக சொன்னாள். எனக்கு தலைசுற்றியது.

காவ்யாவிடம் எனக்கு ஆண்மையில்லை என பொய் சொன்னதை எண்ணி நொந்தேன்.

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)