சனீஸ்வரனின் நலனுக்காக ஒரு ஜோசியர் என்னை திருநள்ளாறு செல்ல சொன்னார். சரி அப்படி என்ன தான் திருநள்ளாரில் விசேஷம் என பார்ப்பதற்காக வெள்ளி இரவு காரில் பயணித்தேன். பாண்டிச்சேரியில் கார் பஞ்சர். அடக்கடவுளே ஆரம்பமே இப்படியா என்று நினைத்த போது தான் மற்ற கடவுள்களுக்கு தடங்கல் வந்தால் தான் கெட்ட சகுனம் சனீஸ்வரன் தடங்கலுக்குரிய கடவுள் என்பதால் இதை நல்ல சகுனம் என் மனதை தேற்றி கொண்டு கிளம்பினேன். சீர்காழி வரை சாலைகள் பரவாயில்லை அதற்கு பிறகு சாலைகள் இருந்திருந்தால் பரவாயில்லை. காரைக்கால் வரை பெயரளவில் மட்டுமே சாலை இருந்தது அதுவும் ஒரு பஸ் செல்ல கூடிய அளவே. இதில் வேடிக்கை என்னவென்றால் சீர்காழியில் ரெண்டு நபர்கள் நின்று கொண்டிருந்தார்கள் அவர்களிடம் காரைக்கால் போவதற்கு வழி கேட்டேன். ஒருவன் சார் நேரா போய் லெப்ட் போங்க என்றன் இன்னொருவன் ரைட் என்றான். சரி ரைட்! தண்ணியில உளறியதை நிராகரித்து கொஞ்ச தூரம் சென்று ஒரு காவலரிடம் கேட்டு சென்றேன். ஒரு வழியாக பத்திருபது பேரிடமாவது வழி கேட்டு திருநள்ளாறு வரும்போது மணி 2:30AM.
திருநள்ளாரில் நுழையும் போதே ஒருவன் அறை (தங்குவதற்கு) வேண்டுமா என்றான் . அவன் காண்பித்த ஹோட்டல் நல்லா இல்லையென்று ஒரு கெஸ்ட் ஹவுஸ் கூட்டி போனான். அது கெஸ்ட் ஹவுஸ் இல்லை ஒரு சாதரண ரெண்டு பெட்ரூம் வீடு தான். வெள்ளி இரவு மட்டும் அது வாடகைக்கு விடப்படும் என புரிந்தது. வீட்டுகாரர்கள் ஹாலில் தூங்குவார்கள். எப்படில்லாம் யோசிக்குறாங்க பாருங்க. ஒரு நாளைக்கு வாடகை ஐநூறு ரூபாய். அந்த நேரத்தில் அவனிடம் பேரம் பேச திராணியில்லாததால் உடனே சென்று தூங்கி விட்டேன். சூரிய உதயத்திற்கு முன் எழுந்து அந்த குளத்தில் ஜோசியர் முழுக்கு போட சொல்லியிருந்தார் (அவருகென்ன கூறிவிட்டார் அகப்பட்டவன் நானல்லவா) . 5 மணிக்கு அலாரம் மட்டும் விழித்து கொள்ள நான் நன்றாக தூங்கி ஐந்தே முக்காலுக்கு எழுந்தேன். சூரியன் வெளியே வரலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்தி கொண்டிருக்கும் போது வெளியில் ஓடி வந்து கொஞ்சம் நல்லெண்ணெய் சீயக்காய் , ஷாம்பூ, ஒரு கருப்பு துணி (இது எதற்கு என எனக்கு தெரியாது) வாங்கி கொண்டு குளத்திற்கு ஓடினேன். கூட்டத்திற்கிடையில் எண்ணையை தேய்த்து எட்டி பார்த்த போது வெறும் ஜட்டியுடன் ஆண்கள் குளித்து கொண்டிருந்தார்கள் பக்கத்திலேயே பெண்களும் நின்று கொண்டிருந்தார்கள். அதெப்படி இந்த மாதிரி இடத்துல மட்டும் எந்த அருவெருப்பும் காமிக்க மாட்டேங்கிறீங்க. கோயிலுக்கு வந்தா ஆபாச காட்சிகளெல்லாம் கண்ணுக்கு தெரியாதா. ஒரு சராசரி மனுஷனான என்னால் அப்படி பார்க்க முடியவில்லை. எல்லாம் ஆபாசமாக தான் தெரிந்தது.
குளத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் இங்கு முழுக்கு போட்டா தான் எல்லா கெட்டதும் வரும், அப்பேர்பட்ட சாக்கடை அந்த குளம். இதுல வேற குளிக்கிற எல்லாரும் குளிச்ச துணிய அப்படியே தண்ணில வேற விடறாங்க. நான் முதலில் சொன்ன அந்த கருப்பு துணிய அதுல விட்டுட்டு மானத்தோடு வெளியில் வந்தேன். இந்த குளத்தில் குளித்துவிட்டு மறக்காமல் ஒரு ரெண்டு தடையாவது நல்ல தண்ணிரில் குளித்து விடுங்கள்.
அடுத்து கோவிலுக்குள் சென்று அர்ச்சனை. அந்த நேரத்திலேயே கூடம் அதிகமாக தான் இருந்தது. பெரும்பான்மையான கோவில்களை போல் வலது கையில் அர்ச்சனை தட்டை குடுத்து விட்டு இடது கையை நீட்டும் பூசாரிகளுக்கு பணத்தை கொடுத்துவிட்டு அந்த எண்ணத்தோடேயே சனி பகவானை பார்த்துவிட்டு வெளியில் வரும்போது மணி 7:31AM. ஒரு வழியா ஏழரை முடிஞ்சதுனு நினைத்து சிரித்தேன்.
அடுத்து பத்து பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். யாரிடம் கேட்டலும் அருணாச்சலா ஹோட்டல் தான் நல்ல ஹோட்டல் என்று சொல்லியதால் அங்கு சென்று பத்து பொங்கல் வாங்கி வெளியில் இருந்த பிச்சைகாரர்கள் பத்து பேருக்கு கொடுத்தேன். இத்தனை திடகாத்திரமான பிச்சைகாரர்களை நான் பார்த்ததே இல்லை. இவர்கள் யாரும் நிச்சயமாக விளிம்புநிலை மனிதர்கள் அல்ல. திருநள்ளாரில் அன்னதானத்தை ஒரு பரிகாரமாக எல்லாரும் செய்வதால் அங்கே பிச்சைகாரர்களுக்கு சாப்பாட்டு பஞ்சம் இல்லை. ஆனால் இது சனிக்கிழமை மட்டும் தான். மற்ற நாட்களில் அங்கு ஈக்காக்கை இருக்காது. இங்கு இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அதில் ஒரு பிச்சைகாரர் ஏன் தம்பி சாப்பாடு மட்டும் தரீங்களே தட்சணை குடுக்க கூடாதா என கேட்டார். என்ன கொடுமை சார் இது, எல்லாரும் சாப்பாட்டுக்கு தான் பிச்சை எடுப்பாங்க. இவருக்கு சாப்பாட்டுக்கு மேல காசும் குடுக்கணுமாம்.
மறுபடியும் மதியம் ஒரு அன்னதானம் செய்யவேண்டும். ஓட்டலில் ஒருவர் ஒரு பிச்சைகாரருக்கு டோக்கன் வாங்கி தந்து அவரை ஓட்டலுக்குள்ளே அமர்ந்து சாப்பிட சொல்லலாமா என்று கேட்டார். ஓட்டல்காரர் அதற்கு மறுத்து காரணத்தையும் சொன்னார். அவர்கள் எப்போதும் தண்ணி அடித்து கொண்டிருப்பார்கள் என்றும் போன முறை ஒருவரை உள்ளே அனுமதித்து அவர் செய்த கலாட்டாவில் சாப்பிட வந்த மற்ற எல்லோரும் வெளியேறிவிட்டனர் என்றும் சொன்னார். அட கடவுளே இது வேறயா . மீண்டும் ஒரு பத்து பேருக்கு (அதே ஆட்கள் தான் உணவு வாங்கி கொடுத்துவிட்டு வந்தேன். என்ன தம்பி தட்சணை இல்லையா என்று மீண்டு அதே ஆள் கேட்டார். வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு நடந்தேன்.
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஒரு அபிஷேகம் செய்ய வேண்டி இருந்ததால் ஒரு ஐந்து மணிக்கு கோவிலுக்கு சென்று அபிஷேக டிக்கெட்(Rs.250) வாங்கி சென்றமர்ந்தேன். பல காட்சிகள் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருந்தன. காசை வாங்கி கொண்டு முன் வரிசையில் நேரே அனுமதிக்கும் காவலாளி , கரை வேட்டிகள் அதிகாரத்தால் உள்ளே நுழைவது , அய்யர்களுக்கு தெரிந்தவர்கள் உள்ளே நுழைவது இதில் எதிலும் சேராத என்னை போன்று அமைதியாய் அமர்ந்திருக்கும் மக்கள். காசே தான் கடவுளடா அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா. ஒரு வழியாக அபிஷேகம் ஆரம்பித்தது. உட்கார இடமில்லாமல் கால்கள் மரத்து முட்டி இடித்து அதை பற்றி நினைத்து கொண்டே சனீஸ்வரன் நிர்வாணபடுத்தபட்டு குளிப்பாட்டபடுவதை பார்த்து கொண்டிருந்தேன். பக்தியால் கோவிலுக்கு கூட்டம் சேர்வதை தான் இது வரை பார்த்திருக்கிறேன் இங்கு பயத்தால் பெருங்கூட்டம் சேர்ந்திருப்பதை பார்க்க வியப்பாக இருந்தது. வெளியில் வரும் போது மணி 6:30PM.
இன்னும் பத்து பேருக்கு அன்னதானம் செய்து விட்டு கிளம்ப வேண்டியது தான் என்று நினைத்த எனக்கு ஒரே திகைப்பு. நடக்க கூட இடமில்லாத அந்த கோவில் தெரு இப்போது வெறிச்சோடி இருந்தது. ஒரு கடை, ஒரு பிச்சைகாரர் கூட இல்லை. இருந்த ஒரே ஓட்டலும் மூடி கிடந்தது. அப்போது தான் புரிந்தது சனீஸ்வரனின் நிலைமை, வாரத்தில் ஒரு நாள் மட்டுமே அவன் ராஜா மத்த நாட்களில் அவனை கண்டு கொள்ள நாதியில்லை. அன்னதானம் குடுத்தே ஆக வேண்டுமென்பதால் அங்கிருந்த காவலரிடம் எங்கேயாவது பிச்சைகாரர்கள் இருப்பார்களா என்று கேட்டேன் .அதற்கு அவர் உணவாக நீங்க வாங்கி கொடுத்தால் அதை அவர்கள் பெரும்பாலான நேரம் குப்பை தொட்டியில் தான் போடுவார்கள் கொடுப்பதானால் காசாக குடுங்கள் என்றார். தேடி பார்த்தும் எங்கும் பிச்சைக்காரர்கள் இல்லை.
கடமைக்கு செய்யும் இந்த அன்னதானத்தை ஒரு மறுவாழ்வு மையத்தில் சென்னையிலே செய்திருக்கலாமென நினைத்தேன்.
இந்த பயணம் என் பெற்றோர்களின் வற்புறுத்தலால் மட்டுமே. எனக்கு இதில் நம்பிக்கை கொஞ்சமும் இல்லை. பெரும்பாலோனரை போல வெறும் 'Oh my god' 'அடக்கடவுளே' என சொல்லும் போது மட்டும் கடவுளை கூப்பிடும் ஒரு சராசரி முக்கால் நாத்திகன் நான் . அந்த கால்வாசி ஆத்திகம் முழு நாத்திகனாக மாற முடியாத காரணத்தால் மட்டுமே ஒட்டிக்கொண்டிருக்கிறது.
15 comments:
என்னிடம் சொல்லி இருந்தால் நான் உன்கலுக்கு உதவி இருப்பேன்...என்னுடைய வீடு கொவிலில் இருந்து 2 மைல் தூரம்...அது சரி...இவ்வலவு புத்திசாலி...எதுக்கு 250 டிக்கட்?சாமிகிட்ட சும்மா சொன்னா கேட்காதா?
அப்புரம் முக்கியமான விடயம்...எங்கள் ஊரில் "சரக்கு" ஊத்திகிட்டீங்கலா?
கோ.பதி
காரைக்கால்
\\இந்த பயணம் என் பெற்றோர்களின் வற்புறுத்தலால் மட்டுமே. எனக்கு இதில் நம்பிக்கை கொஞ்சமும் இல்லை. பெரும்பாலோனரை போல வெறும் 'Oh my god' 'அடக்கடவுளே' என சொல்லும் போது மட்டும் கடவுளை கூப்பிடும் ஒரு சராசரி முக்கால் நாத்திகன் நான் . அந்த கால்வாசி ஆத்திகம் முழு நாத்திகனாக மாற முடியாத காரணத்தால் மட்டுமே ஒட்டிக்கொண்டிருக்கிறது.//
ஒரு அடிமுட்டாளின் சுய வாக்குமூலமாகத்தான் உங்கள் பதிவை பார்க்க முடிகிறது.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி திரு.பதி.
//அது சரி...இவ்வலவு புத்திசாலி...எதுக்கு 250 டிக்கட்?சாமிகிட்ட சும்மா சொன்னா கேட்காதா?//
இந்த பயணமே என் பெற்றோரின் வற்புறுத்தலால் தான் என கூறியிருந்தேன். அதனால் அவர்கள் கோவிலில் செய்ய கூறிய அனைத்தையும் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம். தங்களுடைய இந்த நக்கல் எதற்கு என எனக்கு விளங்க வில்லை.
//அப்புரம் முக்கியமான விடயம்...எங்கள் ஊரில் "சரக்கு" ஊத்திகிட்டீங்கலா?//
நமக்கு அந்த பழக்கம் இல்லீங்கோ!!
அய்யா... தாங்கள் எப்படி அரை நாத்திகன் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்.. ஜோசியம் பார்க்கிறீர்கள்.. கோவில், விளக்கு, அன்னாதானம் என்று சகலமும் செய்து விட்டு பாதி நாத்திகன் முக்கால் நாத்திகன் என்றால் ஏற்க முடியவில்லை..
கந்தசாமி
//ஒரு அடிமுட்டாளின் சுய வாக்குமூலமாகத்தான் உங்கள் பதிவை பார்க்க முடிகிறது.//
வருகைக்கு நன்றி ராஜாராமன்.
இதில் முட்டாள்தனம் என்ன இருக்கிறது என எனக்கு புரியவில்லை. இது கற்பனையில் எழுதிய கதை அல்ல, என்னை பற்றி நான் எதற்கு பொய் சொல்ல வேண்டும். எனக்கு கடவுள் நம்பிக்கை குறைவு அதற்காக அதிலிருந்து விடுபட்டு முழு நாத்திகனாக இருக்க முடியாது. எனென்றால் என் குடும்பத்துக்கும் அதில் நம்பிக்கை இருக்கிறது அவர்களுக்காக சில விஷயங்கள் நான் ஒத்துபோக தான் வேண்டும். இதை நிச்சயம் நீங்கள் ஒத்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.
PS: I was not prepared for the brickbats for this post. If i had a feeling that the contents in this post may offend people i might have worded it differently.
//அய்யா... தாங்கள் எப்படி அரை நாத்திகன் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்.. ஜோசியம் பார்க்கிறீர்கள்.. கோவில், விளக்கு, அன்னாதானம் என்று சகலமும் செய்து விட்டு பாதி நாத்திகன் முக்கால் நாத்திகன் என்றால் ஏற்க முடியவில்லை..
கந்தசாமி
//
வருகைக்கு நன்றி கந்தசாமி.
மீண்டும் அதையே தான் கூறபோகிறேன் . என் குடும்பத்திற்காக அங்கு சென்றேனே தவிர அதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் கோவிலுக்கு போவதில்லை என் சொல்லவில்லை ஆனால் கோவிலுக்கு போய் மனமுருகி கடவுளை வேண்டும் பக்குவம் எனக்கு இல்லை அந்த பக்குவத்தை வளர்த்துகொள்ளவும் நான் விரும்பவில்லை. ஜோசியரிடம் நான் செல்லவில்லை என் பெற்றோர் தான் சென்றனர். அதை பதிவில் குரிபிடுருந்தால் இந்த கேள்வி வந்திருக்காது. என் தவறு. மன்னிக்கவும்.
ராஜாராமனிடம் கூறியதையே உங்களுக்கும் கூறுகிறேன்.
எனக்கு கடவுள் நம்பிக்கை குறைவு அதற்காக அதிலிருந்து விடுபட்டு முழு நாத்திகனாக இருக்க முடியாது. ஏனென்றால் என் குடும்பத்திற்கு அதில் நம்பிக்கை இருக்கிறது அவர்களுக்காக சில விஷயங்கள் நான் ஒத்துபோக தான் வேண்டும். இதை நிச்சயம் நீங்கள் ஒத்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.
Worth reading. Good writing. Made it very well. Best of all your posts. Its your blog you have shared your own experience. Nothing offensive doesnt attract any further discussions. Cool one.
//வெளியில் வரும்போது மணி 7:31AM. ஒரு வழியா ஏழரை முடிஞ்சதுனு நினைத்து சிரித்தேன்.//
நல்ல டைமிங்.
சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.
நன்றி விசா.
//நல்ல டைமிங்.
சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.//
மிக்க நன்றி கோவி.கண்ணன்
nalla eluthirukeenga...
sence of humour rasikkum padi irunthathu... enakku kadavul nambikai irukku ..naan aathigavaathi thaan.. anbae sivam , sivamae anbu enbaval..
வருகைக்கும் பிநூததிற்கும் நன்றி தாட்சாயினி .
நான் ஆத்திகத்தை குறை கூறுபவன் அல்ல. நம்புரவங்களுக்கு சிவமே அன்பு. நம்பாதவங்களுக்கு அன்பே சிவம்.
இதுதான் பலபேரின் மனநிலை, நானும் கூட கோவிலுக்கு செல்வேன் சாமி கும்பிடுகிறேன்.அங்குள்ள அமைதி பிடிக்கும். ஆனால் என் பக்தி உண்மையானதா என்ற கேள்வி எப்போதும் எனக்குண்டு.
இதில் ஒரு பிரதி எடுத்து தங்கள் பெற்றோருக்குக் கொடுத்தீர்களானால்; அடுத்த தடவை வேறு ஒரு கோவிலுக்கு அனுப்பாமல் இருப்பார்கள்.
உங்கள் பரிதாப நிலையைப் பார்த்து ஆண்டவனுக்கு இரக்கம் வந்ததா??
அதாவது மாற்றம் வாழ்வில் உண்டா???
குடுகுடுப்பை said
//இதுதான் பலபேரின் மனநிலை, நானும் கூட கோவிலுக்கு செல்வேன் சாமி கும்பிடுகிறேன்.அங்குள்ள அமைதி பிடிக்கும். ஆனால் என் பக்தி உண்மையானதா என்ற கேள்வி எப்போதும் எனக்குண்டு.//
வருகைக்கும் பின்னூடத்திற்கும் நன்றி குடுகுடுப்பை.
இந்த உண்மையை பலர் ஒத்துகொள்ளாமல் தங்களையே ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.
யோகன் said
//இதில் ஒரு பிரதி எடுத்து தங்கள் பெற்றோருக்குக் கொடுத்தீர்களானால்; அடுத்த தடவை வேறு ஒரு கோவிலுக்கு அனுப்பாமல் இருப்பார்கள்.
உங்கள் பரிதாப நிலையைப் பார்த்து ஆண்டவனுக்கு இரக்கம் வந்ததா??
அதாவது மாற்றம் வாழ்வில் உண்டா???//
வருகைக்கு நன்றி யோகன்.
என் நிலை பரிதாபத்திற்கு உரியது என நீங்கள் முடிவு செய்தது ஏன் ? என்னுடைய நிலைமையில் நிறைய பேர் இருக்கிறார்கள். என்ன நான் சொல்லி விட்டேன் அவர்கள் சொல்ல மறுக்கிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.
என் நம்பிக்கை பற்றி என் பெற்றோர்களுக்கு தெரியும். உங்கள் போல் கேலி செய்யும் நண்பர்களுக்கு நான் கேட்க நினைக்கும் கேள்வியை குடுகுடுப்பை அவர்களே கேட்டு விட்டார். உங்கள் ஆத்திகத்தின் நம்பிக்கையை நான் நக்கல் செய்யவில்லை. என் நாத்திகத்தின் நம்பிக்கையை நான் உங்களிடம் திணிக்கவும் இல்லை. அப்படி இருக்க இந்த இலவச ஆலோசனைகளும் பச்சாதாபமும் எதற்கு?
நீங்கள் முக்கால் நாத்திகன் அல்ல .முழு நாத்திகன்.பெரியாருடைய புத்தகங்களை படிக்க முடிந்தால் படிங்கள்.அந்த கால் percent ஆத்திகமும் அழிந்துவிடும்.பெரியார் எழுதிய புத்தகம் வேண்டுமென்றால் சொல்லுங்கள் அனுப்பிவிடுகிறேன்.
Post a Comment
நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)