Wednesday, February 18, 2009

மரண வியூகம் - பகுதி 3

"நான் ஸ்பாட்டுக்கு வரேன் குலசேகரன் நீங்க அங்கேயே வெயிட் பண்ணுங்க"

"சரி சார்.. "
.....
"குலசேகரன் நீங்க தான பாடிய முதல பாத்தது"

"ஆமா சார்"

"நீங்க வேற எங்கயும் கை வைக்கலையே.. "

"இல்ல சார்"

"சரி நீங்க கெளம்புங்க குலசேகரன் வேற எதாவது வேணும்னா நான் கால் பண்றேன்"

"சரி சார்"

குலசேகரனின் குரலில் ஒரு செயற்கை பதட்டம் தெரிந்ததை இளமாறன் கவனித்து கொண்டிருந்தார். கதிரவன் கொலை அவரது யூகங்களை நிச்சயமாக்கி கொண்டிருந்தது. கதிரவன் அபபாவி, அவனை இதில் சிக்க வைக்க முயற்சித்து அது தோற்றதால் கொலை செய்திருக்கிறார்கள் என மனதிற்குள் நினைத்தார்.

மறுநாள்.. போலீஸ் ஸ்டேஷன்..

இன்ஸ்பெக்டர் இளமாறன் கைரேகை நிபுணர்களுடன் உரையாடி கொண்டிருந்தார்.

"இன்ஸ்பெக்டர் சார் கயல்விழியோட மர்டர் ஸ்பாட்ல எடுத்த கைரேகை ரிப்போர்ட் புல்லா வந்துடுச்சு"

"எதாவது புதுசா அதுல தகவல் இருக்கா"

"இருக்கு சார்.. நாங்க முன்னாடியே சொன்ன மாதிரி ரெண்டு கைரேகை பதிவாயிருக்கு.. ஒன்னு கதிரவனோடது இன்னொன்னு யாரோடதுன்னு தெரில"

"ம்ம்ம்.."

"நேத்து கதிரவனோட மர்டர் ஸ்பாட்ல எடுத்த கைரேகையும் அதுவும் மேட்ச் ஆகுது சார்"

"வாட்.. "

"ஆமா சார்.. ஆனா அந்த ரேகை நம்ம ரெகார்ட்ல இருக்கிற எந்த கிரிமினல்ஸ்யோடையும் மேட்ச் ஆகல"

இளமாறனுக்கு லேசாக பொறி தட்டியது. குலசேகரன் கொடுத்த விசிடிங் கார்டை டேபிள் மேலிருந்து எடுத்தார்.

"இந்த பிங்கர் ப்ரிண்ட்ஸ் அதோட மேட்ச் ஆகுதானு பாருங்க"

"ஒரு நிமிஷம் சார்"

கைரேகை நிபுணர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பூதக்கண்ணாடி மற்றும் சில பவுடர்களை கொண்டு அந்த கார்டை அலசி கொண்டிருந்தார்கள். அவர்கள் முகம் லேசாக மலர்ந்ததை கண்டார் இளமாறன்.

"சொல்லுங்க என்ன ஆச்சு"

"சார் இந்த கைரேகையும் அந்த மர்டர் ஸ்பாட்ஸ்ல எடுத்த கைரேகையும் மேட்ச் ஆகுது சார்"

இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆடிப்போனார். இவ்வளவு நாள் குற்றவாளி கூட இருந்தும் அவன் மேல சந்தேகம் வரலையே என்று தன்னை தானே நொந்து கொண்டார். ஜீப்பை எடுத்து கொண்டு குலசேகரன் வீட்டை நோக்கி புறப்பட்டார்.

குலசேகரன் வீடு..

"குலசேகரன்.. குலசேகரன்.. நான் இன்ஸ்பெக்டர் இளமாறன் வந்திருக்கேன் கொஞ்சம் கதவ திறங்க"

உள்ளிருந்து பதில் இல்லை. கதவை எட்டி உதைக்க முற்படும் போது தான் கதவின் கீழ்பகுதியில் ரத்தம் கசிந்து கொண்டிருப்பதை கவனித்தார்.

உள்ளே குலசேகரன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான்.

இளமாறனுக்கு வேர்த்து வழிந்து கொண்டிருந்தது. கேஸை முடித்து விட்டோமென்று நினைக்கும் போது இது என்ன புது குழப்பம். அடுத்தடுத்து மூன்று கொலைகள், மோடிவ் என்னவென்ற விளங்காத கொலைகள் இளமாறனுக்கு லேசாக தலைசுற்றியது. கல்லூரியில் விசாரித்த போது கதிரவனும் குலசேகரனும் நெருங்கிய நண்பர்கள் என்றே அனைவரும் சொன்னார்கள் ஆனால் கதிரவன் கயல்விழி காதலை பற்றி யாருக்கும் தெரியவில்லை தனக்குள்ளே நடந்தவற்றை அலசிகொண்டிருந்தார் இளமாறன்.

செல்போன் சிணுங்கியது..

"சார் நான் ஸ்டேஷன்ல இருந்து பேசுறேன்"

"சொல்லுங்க"

"நீலமேகம் வீட்லேர்ந்து அவரு வேலைக்காரன் போன் பண்ணான் சார்"

"அதான் பாடிய ஹாண்டோவெர் பண்ணியாச்சுல்ல அப்புறம் என்ன வேணுமாம் அவருக்கு"

"நீலமேகம் தூக்கிலே தொங்கி தற்கொலை பண்ணிகிட்டராம் சார்"

"வாட்.. .. நானே உடனே அங்க போறேன்.. " இன்ஸ்பெக்டர் குழப்பத்தின் உச்சியில் இருந்தார்.

நீலமேகத்தின் வீடு. நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் , வேடிக்கை பார்ப்பவர்கள் என வீட்டை மொய்த்து கொண்டு இருந்த கூட்டம் போலீஸ் ஜீப்பை பார்த்தவுடன் வழிவிட்டு ஒதுங்கியது. பயத்தில் யாருமே நீலமேகத்தின் அறைக்கு செல்லவில்லை. பயம் என்பதை விட எங்கே இந்த வில்லங்கத்தில் நாமும் சிக்கி விடுவோமா என்ற எண்ணமே அதற்கு காரணம். இளமாறன் கதவை திறந்து கண்களை விட்டத்துக்கு செலுத்தினார். நாக்கு வெளியில் தொங்கியபடி நீலமேகம் பானில் தொங்கி கொண்டிருந்தார். அறையில் ஏதேனும் தடயம் கிடைக்கிறதா என நோட்டம் விட்டு கொண்டிருந்த இளமாறனின் கவனத்தை காற்றில் அசைந்தபடி மேஜையின் மேலிருந்த அந்த கடிதம் ஈர்த்தது. அதை எடுத்து படிக்க தொடங்கினார்.இன்ஸ்பெக்டர் இளமாறனுக்கு,

வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது என்பது போல நான் படிக்க வைத்த என் வீட்டு வேலைக்காரியின் மகன் குலசேகரன் எனக்கே துரோகம் செய்து விட்டான். என் வீட்டு குழந்தைய அவன் சீரழித்து கொலை செய்து விட்டான். என் மகளின் காதலை பற்றி அவன் என்னிடம் சொன்ன போது எனக்கு வேறு வழி தெரியமால் அவனின் சொல்படி கதிரவனை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். அதை அவனே யார்க்கும் சந்தேகம் வராதபடி செய்வதாக சொன்னபோது அவனை நம்பினேன். ஆனால் இந்த எல்லா திட்டமும் கயல்விழியை அடைய அவன் போட்டது என்று எனக்கு விளங்காமல் போய் விட்டது. நானே வேறு அவனுக்கு கதவை திறந்து அந்த ரூமிற்குள் அனுப்பி இந்த பாவத்துக்கு துணை போய் விட்டேன். நீங்கள் எனக்கு அன்னைக்கு என் பொண்ணோட உடலிலிருந்த ப்ளட் குரூப் கதிரவனோடது இல்லைன்னு சொல்லும்போது இது நிச்சயம் குலசேகரன் தான்னு எனக்கு தெரிஞ்சுது , ஆனா சட்டத்தின் மூலம் அவன தண்டிக்க ரொம்ப நாள் ஆகும்னு நானே அவன தீர்த்து கட்ட முடிவு செஞ்சேன். கொலைவெறி புடிச்ச அவன் நான் அவனை கொலை பண்றதுக்குள்ளே எங்கே கதிரவன் மூலம் தான் மாட்டிகொள்வோமோனு அவனையும் கொலை பண்ணிட்டான். குலசேகரன கொலை பண்ணின போது எனக்கு ஒரு மன நிம்மதி கெடைச்சுது. அந்த நிம்மதியோட என் பொண்ணு கிட்ட சேர முடிவு பண்ணினேன். தயவு செஞ்சு என்னை என் பொண்ணு பக்கத்துல புதைக்க ஏற்பாடு பண்ணுங்க ....ப்ளீஸ் ..


(முற்றும்)

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)