Tuesday, February 17, 2009

மரண வியூகம் - பகுதி 2

இன்ஸ்பெக்டர் இளமாறன் கயல்விழியின் பிணத்தை நோட்டமிட்டு கொண்டிருந்தார்.

கைரேகை நிபுணர்கள் தங்கள் பணியை செய்து கொண்டிருக்க கதிரவனுக்கு லேசாக நினைவு திரும்பி கொண்டிருந்தது. கைகளில் விலங்குகள் பூட்டபட்டதை உணர்ந்த பின்பு தான நிலைமையின் விபரீதம் அவனுக்கு விளங்க துவங்கியது. "நான் அவளை கொல்லவில்லை நான் அவளை கொல்லவில்லை " என அலறினான், இன்ஸ்பெக்டர் இளமாறன் அவனை காவல்நிலையத்துக்கு கூட்டிசெல்லுமபடி கான்ஸ்டபிள்களை பணித்தார்.

கயல்விழ்யின் தந்தை நீலமேகம் கண்ணீருடன் இன்ஸ்பெக்டரை ஏறிட்டு "என் குழந்தைய இந்த நிலைமைக்கு ஆளாக்கின அவனுக்கு எப்படியாவது தூக்கு தண்டனை வாங்கித்தரனும்" என்றார். "சட்டம் தன் கடமையை செய்யும் நீலமேகம் நீங்க கொஞ்சம் தைரியமா இருங்க" சாந்தப்படுத்த முயன்று தோற்றார் இளமாறன்.


போலீஸ் ஸ்டேஷன்...


"ஏன் கதிரவன் இந்த கொலையை செஞ்சீங்க"

"சார் சத்தியமா நான் இந்த கொலைய பண்ணல சார்"

"பின்ன அந்த நேரத்துல கயல்விழியோட ரூம்ல என்ன பண்ணிட்டு இருந்தீங்க"

"நானும் அவளும் லவ் பண்ணோம் சர்.. நேத்து நைட் ஓடி போலாம்னு பிளான்.. அவ வெளில வராததுனால என்ன ஆச்சுன்னு பாக்க உள்ளே போனேன்.. அங்க என்னோட கயலோட பொணத்த பார்த்து மயங்கிட்டேன்"

"இன்னும் கொஞ்சம் நம்புற மாதிரி சொல்லிருக்கலாம் கதிரவன்"

"சார் நான் சொன்னது அத்தனையும் உண்மை"

"அங்க இருந்த எடுக்கப்பட்ட தடயங்கள் உங்களுக்கு சாதகமா இல்லையே கதிரவன்"

"தடயங்களா.."

"அந்த ரூம்ல நீங்க ரொம்ப நேரம் இருந்ததுக்கு அடையாளமா பெட்ல உங்க தலைமுடி பெட்ரூம் முழுதும் உங்க சேறு பதிந்த ஷூ தடங்கள் பல இடங்களில் உங்க கைரேகைகள் ..."

"சார் அது வந்து.. அவ பாத்ரூம்ல இருக்கானு நெனைச்சு வெயிட் பண்ணேன் அப்ப என்னோட முடி கால்த்தடம் எல்லாம் பதிஞ்சிருக்கும் "

"பொய் மேல பொய் சொல்லாதீங்க கதிரவன்.. அந்த பாத்ரூம்ல சேரோட இருக்கிற உங்கள் ஷூ தடமும் ரத்தத்தோட இருக்கிற தடமும் இருக்கு.. நீங்க இதிலேர்ந்து தப்பிக்க வழி இல்லை.. மேற்கொண்டு நீங்க எதாவது பண்ணனும்னு நினைச்சிங்கனா உங்க வக்கீல் மூலமா பண்ணுங்க"

கயல்விழியின் வீடு...

"இன்ஸ்பெக்டர் சார், என் பொண்ணோட பாடி எப்ப தான் கிடைக்கும்" நடுக்கத்துடன் கேட்டார் நீலமேகம்.


"போஸ்ட் மார்டம் முடிஞ்சு எப்படியும் ரெண்டு நாள்ல கிடைக்கும் சார்"

"ம்ம்"

"உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா நீலமேகம்"

"இல்ல சார்.. ரொம்ப அமைதியான பொண்ணு சார் .. இப்படி பண்ணிட்டானே சார்"

"உங்களுக்கு கதிரவன முன்னாடியே தெரியுமா"

"இல்ல சார்.. நான் அவன பாத்ததே இல்ல"

"உங்க ஒத்துழைப்புக்கு நன்றி.. வேற எதாவது வேணும்னா நான் உங்கள
காண்டாக்ட் பண்றேன்"

மறுநாள்..

"இன்ஸ்பெக்டர் சார் .. என் பேர் குலசேகரன் .. இவரு எங்க லாயெர்.. கதிரவன பெயில்ல எடுக்க வந்திருக்கோம்"

"நான் உங்ககிட்ட சொல்ல வேண்டியதில்லை இருந்தாலும் சொல்றேன் .. தினமும் காலைல பத்து மணிக்கு இங்க வந்து கையெழுத்து போடணும்"

"கண்டிப்பா சார்.. மிக்க நன்றி"

"குலசேகரன் நீங்க கதிரவனோட நெருங்கிய நண்பரா"

"ஆமா சார்"

"உங்க மொபைல் நம்பர் குடுத்திட்டு போங்க.. விசாரணை பண்ண வேண்டி இருந்த நான் கால் பண்றேன்"

"இந்தாங்க சார்.. என்னோட ஒத்தழைப்பு உங்களுக்கு கண்டிப்பா உண்டு "

"நன்றி"

புழுதியை கிளப்பி கொண்டு கார் கிளம்பியது. வழிநெடுக கதிரவன் நடந்த சம்பவங்களை நினைத்து அழுது கொண்டே இருந்தான். குலசேகரனுக்கு அது நெருடலாக இருந்தாலும் இப்போது பேசுவது உசிதமல்ல என அமைதியாக இருந்தான். கார் கதிரவனின் வீட்டில் நின்றது, இருவரும் வக்கீலிடம் விடைபெற்று கொண்டனர்.

"கதிரவா இப்படி அழுதுகிட்டே இருந்தா ஒண்ணும் நடக்க போறதில்ல. நடந்தது நடந்து போச்சு இனிமே என்ன பண்ணனும்னு பாருடா"

"இந்த கேஸ்ல இருந்த நான் தப்பிக்க வழியே இல்லடா.. கயலே இல்லாத போது நான் மட்டும் ஏன் வாழணும் பேசாம தற்கொலை பண்ணிகலாமானு கூட தோணுது"


"பைத்தியகாரத்தனமா
பேசாத டா.."

"இன்ஸ்பெக்டர் நடந்தத சொன்னா கூட நம்ப மாட்டேன் என்கிறார். எங்களோட லவ் எங்க ரெண்டு பேர தவிர உனக்கு மட்டும் தான் தெரியும்"

"கரெக்ட் .. அப்ப என்னோட சாட்சி எடுபடும் . நாம நாளைக்கே இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுவோம்"

கதிரவனின் முகத்தில் லேசான ஒரு நம்பிக்கை பிறந்தது.

"சரி நீ ரெஸ்ட் எடு நான் கெளம்பறேன்.. நாளைக்கு சைன் பண்ண போகும்போது இன்ஸ்பெக்டர் கிட்ட இத பத்தி பேசுவோம்"

"சரி .. குட் நைட் "

மறுநாள்..

செல்போன் சினுங்கியது..

"நீலமேகம் நான் இன்ஸ்பெக்டர் இளமாறன பேசுறேன்..உங்க பொண்ணோட போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்துடுச்சு"

"..."

"மனச திடபடுத்திகோங்க சார். உங்க பொண்ணு கற்பழிக்கப்பட்டு கொலை செய்ய பட்டிருக்கா"

"எ..ன்..ன...து" நீலமேகத்தின் குரல் தழுதழுக்க தொடங்கியது

"சாரி சார். இன்னொரு விஷயம் உங்க பொண்ணு ஒடம்பில இருந்த நகக்கீறல்கள் ... அதிலிருந்த ரத்தம்.. கதிரவனோடது இல்ல"

"...."

"விசாரணைக்கு அப்புறம் நானே கால் பண்றேன் சார்"

இணைப்பு துண்டிக்கப்பட்டது. நீலமேகம் லேசாக வியர்த்திருந்தார்.


செல்போன் சினுங்கியது..

"குலசேகரன் நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன் "

"சொல்லுங்க சார்"

"கதிரவன் மொபைல் எடுக்க மாட்டேங்குறார் .. நான் அவர்கிட்ட பேசணும் நீங்க கொஞ்சம் அவர கால் பண்ண சொல்ல முடியுமா"

"யு ஆர் லக்கி சார்.. இப்ப நான் அவன் வீட்டுக்கு வெளில தான இருக்கேன்..
கையெழுத்து போட கூட்டிட்டு போகணுமே அதான்"

"ஒ வெரி குட்.. சரி நான் லைன்லேயே இருக்கேன்.. கொஞ்சம் அவர பேச சொல்லுங்க.. கேஸ்ல ஒரு சின்ன ட்விஸ்ட்.. அவருக்கு சாதகமானது தான்"

"அப்படியா .. சரி ஒரு நிமிஷம் இருங்க"

குலசேகரன் கதவை திறந்து அலறினான்.

"குலசேகரன் என்னாச்சு என்னாச்சு"

"சார்.. கதிரவன யாரோ கொலை பண்ணிட்டாங்க "

(தொடரும்)

1 comments:

Anonymous said...

I would say you have improved a lot on your narration.....this episode is good. carry on

Frank.

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)