Saturday, June 13, 2009

தேடுதல் வேட்டை - சிறுகதை

வீட்டில் ராகவன் நுழைந்து கதவை தாழிடும் போது மின்விசிறி ஓடிகொண்டிருந்தது டிவி அளவுக்கதிகமாக அலறி கொண்டிருந்தது. பால் தீயும் வாசனையை உணர முடிந்தது. ஸ்டவையும் டிவியையும் அணைத்த ராகவனுக்கு எல்லாம் புதிதாக பட்டது.

வீடு முழுவதும் தேடினான் ரேவதியை காணவில்லை. கதவை திறந்து போட்டுவிட்டு எங்கே போனாள். ஒருவேளை மாடியில் துணி எடுத்து கொண்டிருப்பாளோ?.

விறுவிறுவென வீட்டுக்குள் இருக்கும் படியில் ஏறும்போது மாடி கதவு தாழிடப்பட்டிருந்தது. எதற்கும் இருக்கட்டும் என திறந்து பார்த்தான். காரிருள் அவனை லேசாக அச்சுறுத்தியது.

கதவை சாத்திவிட்டு கீழிறங்கியபோது வீட்டின் படுக்கையறையில் சத்தம் கேட்டது. கோபம் தலைக்கேறியது. எங்கே இருந்தாள் இவ்வளவு நேரம்?

ரத்தம் கொதிக்க படுக்கையறைக்கு சென்றவன் ரத்தத்தில் கால்பட்டவுடன் திடுக்கிட்டான். குனிந்து பார்த்த போது தான் கவனித்தான் ரேவதி தலையில் ரத்துடன் கட்டிலின் கீழே கிடந்தாள். மயக்கத்தில் இருந்து மீண்டு மீண்டும் மயகதுக்குள் செல்லும் முன் ஏதோ முணுமுணுத்தாள்.

"ஏங்க அவன் இன்னும் இங்கே தான் இருக்கான் .. உடனே போலீஸ்கு போன் பண்ணுங்க "

"யாருமா யாரு உள்ள இருக்கா" . அவளிடம் பதில் இல்லை மீண்டும் மயங்கிவிட்டாள்.

ராகவனால் நடந்ததை யூகிக்க முடிந்தது. பீரோ திறந்திருப்பதும் ரேவதியின் வளையல்கள் நகைகள் காணமல் போயிருப்பதும் நிச்சயம் இது திர்ருட்டு தான் என ஊர்ஜிதபடுத்தியது . ஆனால் திருடன் இன்னும் உள்ளே தான் இருக்கிறான். படியிறங்கும் போது கேட்ட பீரோ சத்தம் அவனுடையது தான். ராகவன் இங்கே வருவதற்குள் எங்கேயோ பதுங்கியிருக்கிறான்.

பெட்ரூமில் இருந்த ரத்தம் தோய்ந்த கட்டையை எடுத்து கொண்டு ராகவன் வேட்டைக்கு தயாரானான். ஹாலுக்கு வந்து காதுகளை கூர்மையாக்கி கொண்டு நோட்டமிட்டான். அந்த அமைதியில் குண்டூசி விழுந்தாலும் குண்டு விழுந்த சப்தமாய் ராகவனுக்கு கேட்கும்.

ஒவ்வொரு அறையாக தேடி பின் அதை தாழிட வேண்டுமென தீர்மானித்து மெதுவாக ஸ்டோர் ரூம் பக்கம் சென்றான். தட்டுமுட்டு சாமான்களுடன் யாரோ பதுங்கியிருப்பது போல் தெரிந்தது. கட்டையை உயர்த்தி முழு பலத்துடன் அடித்த போது நங் என்ற சத்தத்துடன் ஏதோ உடைந்தது போல் இருந்தது. உடைந்த தேங்காய்களை பார்த்த பின்பு தான் மூட்டையை அங்கே வைத்தது ராகவன் நினைவுக்கு வந்தது. ஸ்டோர் ரூம் செக் பண்ணியாகிவிட்டது. தாழிட்டான்.

மீதமிருப்பது பூஜை ரூம், பெட்ரூம், கிச்சன் .

முதலில் பூஜை ரூமிற்கு சென்றான். சின்ன அறை தான் இருந்தாலும் ஆள் பதுங்கும் அளவிற்கு இடமிருக்கிறது. வெளியில் இருந்த லைட்டை போட்டு உள்ளே இருந்த போட்டோக்களை வெளியிலிருந்தே நோட்டமிட்டான். எந்த கன்னடியிலும் உள்ளே ஆள் இருப்பதாக பிரதிபலிப்பு இல்லை. தைரியமாக உள்ளே சென்று ஒரு நோட்டமிட்டான். தரையில் ரேவதியின் ஒற்றை கம்மலும் சில ருபாய் ணூட்டுகளும் கிடந்தது. அந்த அறையை தாழிட்டான்.

மீண்டும் பெட்ரூமிற்கு சென்றான். ரேவதி மயக்கம் தெளிந்து மீண்டும் முனகினாள். அவளை இழுத்து கட்டில் மேல் கிடத்தி அருகில் இருந்த துண்டை அடிபட்ட இடத்தில இழுத்து கட்டினான். ரத்தம் அதிகம் வீணாகவில்லை. கசிவும் இப்போது நின்றிருந்தது.

"இரும்மா இன்னும் ஒரே ஒரு ரூம் தான். அவன பிடிச்சு அடிச்சு போலீஸ் கிட்ட ஒப்படைக்கிறேன் "

"ஏங்க இருங்க எதுக்கும் போலீஸ் கிட்ட முதல போன் பண்ணி சொல்லிடுங்க "

"சரி இரு வரேன் "

நிச்சயம் கிச்சனில் தான் அவன் இருக்க வேண்டும். தைரியமாக உள்ளே போய் பிடித்து விடலாம் என ராகவன் எண்ணி கொண்டிருந்த வேலையில் மனதிற்குள் எச்சரிக்கை மணி அடித்தது.

கிச்சனில் கத்தி, அரிவாள்மனை என ஏகப்பட்ட ஆயுதங்கள் இருக்கின்றன. அவன் எதையாவது எடுத்து தாக்கினால் என்ன செய்வது. ராகவன் போலீசுக்கு சொல்வதே நல்லது என தீர்மானித்தான்.

மெதுவாக தொலைபேசியிடம் நடந்தான் .

பின்னால் கால்தடம் கேட்டது .

விரைந்து ஓடினான்.

கால்தடம் நெருங்கியது.

தொலைபேசியை எடுத்தான்.

தோளில் மூச்சு காற்று பட்டது .

ராகவன் போலீசுடன் பேசி கொண்டிருந்தான் .

தோளின் பின்னே குரல் கேட்டது .

"என்னங்க என்னங்க நான் காட்டுத்தனமா கத்திட்டுருக்கேன் இப்படி ஒரேயடியா புக்ல மூழ்கிட்டீங்களே .நேரமாச்சு தூங்க வாங்க அந்த ராஜேஷ்குமார் நாவல்ல அப்படி என்ன இருக்குதோ தெரில".