அவளின் நம்பர் வாங்கி மொபைலில் ஸ்டோர் செய்து உறங்கியது தான் தெரியும். காலையில் வராத அந்த குட் மார்னிங் மெசேஜுக்கு டான் என எழுந்து மொபைல் பார்த்தேன்.சினிமா காதல்கள் சினிமா திருமணங்கள் நிஜ வாழ்வில் நடக்காதென உறைத்தது. ஆனால் மீண்டும் மனம் அந்த கனவுகளை காணாமல் போவதில்லை என்று தோன்றியது. சில யாதர்த்த எண்ணங்கள் கனவுகளோடு தான் இருக்கும் போல்.
முந்தைய இரவில் சேமித்த அந்த 20 டிராப்ட் மெசேஜ்களை அழித்துக்கொண்டே இன்று அவள் அனுப்புகிறாளோ இல்லையோ நான் கண்டிப்பாக அனுப்ப வேண்டுமென முடிவெடுத்தேன்.
வழக்கமான அந்த பொழுதில் வாழ்க்கையின் அவசியங்களுக்கு அவசரமாக பயணித்து கொண்டிருக்கும் மக்கள் வெள்ளத்திற்கு இடையில் சிக்கி கொண்டிருந்தாலும் நொடிக்கொரு
தடவை மொபைல் பார்க்க தவறவில்லை. மெசேஜ் அல்லது அழைப்பு வந்தால் என்ன செய்வது வராவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணங்கள் மட்டுமே மனதில்
ஓடி கொண்டிருந்தது .
நேற்று தான் அவள் அறிமுகமானாள் .
மன்னிக்கவும் .
அறிமுகபடுத்தபட்டாள் .
பார்த்த உடன் பிடித்து போகும் வசீகரம் நிறைந்திருந்தாள் .
பள்ளி. கல்லூரி. வேலை. இத்தனை கட்டத்தையும் கடந்து பெற்றோர் பார்க்கும் ஒருவனை பார்க்கும் அளவிற்கு அவள் வந்திருக்கிறாள் என்றால் நம்பமுடியவில்லை.
ஒரு வேலை காதல் தோல்வியாய் இருக்குமோ இல்லை பெற்றோர் வற்புறுத்தலால் வந்திருப்பாளோ. எண்ணமெல்லாம் எதிர்வாதம் போட்டுகொண்டிருக்க கண்கள் ஏனோ இவள் தான்
இனி என காட்டி கொடுத்து கொண்டிருந்தது. அது கவனிக்கபட்டும் கொண்டிருந்தது.
பட்டிகாட்டான் பார்த்த மிட்டாய் கடை போலில்லை, கடவுள் பார்த்த பக்தன் போல.
இந்த உலகில் இது வரை பூத்த பூத்திராத பூக்களை விட அவள் அழகு.
நான் பார்த்த பார்த்திராத பூக்களையெல்லாம் விட அவள் அழகு.
நான் பிறந்த புண்ணியம் அவள் பிறந்த அன்றே பூர்த்தியானது.
அர்த்தமற்ற வாழ்வை ஒரு நொடி பொழுதில் அர்த்தமாக்கினாள்
கண்கள் பார்க்கும் காட்சிகள் அனைத்திலும் நிறைந்திருந்தாள்
இனி இவள் தான் என பார்த்த நொடியில் மனதின் அதனை குழப்பங்களுக்கும்
முடிவு கட்டினாள் .
பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தது. எனக்கோ ஒரிருவர்த்தை பேசினால் போதும் போல் இருந்தது அவளிடம். இத்தனை வருடம் உபயோகபடுத்தபடாத தைரியம் அனைத்தையும் வரவேற்று பெண்ணிடம் பேச வேண்டும் என்றேன். சலசலப்புகள் அமைதியாகி மீண்டும் சலசலப்புகள் துவங்கியது. சந்தேகத்துடன் அனுமதிக்கப்பட்டேன் .
என் கண்கள் அவளை பார்க்க அவள் கண்களோ தொலையாத ஒன்றின் தேடலில் ஈடுபட்டு கொண்டிருந்தன. என் கேள்விகள் அனைத்தும் மீண்டும் எழ, அவளிடம் பதில்கள் எழ சிரமப்பட்டன .
"பிடிச்சிருக்கா "
"எதா இருந்தாலும் வீட்ல பேசிக்கோங்க "
"நான் உன் வீட்டோட வாழ போறதில்ல. நீ சொல்லு "
"எனக்கு இப்படியெல்லாம் பேசத்தெரியாது . நீங்க வீட்லயே பேசிக்கோங்க "
"வீட்ல வற்புறுத்துறாங்களா ?"
"இல்ல "
"அப்ப பிடிச்சிருக்கா? "
" ......"
மனது லேசானது. சூழல் அவளை பேச விடாமல் தடுத்துகொண்டிருப்பது புரிந்தது. மீண்டும் தைரியத்தை வரவழைத்து கெஞ்சி கூத்தாடி நம்பர் பரிமாற்றம் நடந்தது .
நிச்சயம் அவளிடம் பேச வேண்டும். இவள் தான் இனி என முடிவெடுத்திருந்தாலும் பேசினால் நல்லது என உள்ளுணர்வு அடம்பிடித்து கொண்டிருந்தது.
நிகழ்காலம். அவளின் அழைப்பிற்காக காத்திருந்து காத்திருந்து காய்ந்து போனது தான் மிச்சம்.
மொபைலில் அத்தனை அவசரமாக மெசேஜ் டைப் செய்யும் விரல்களுக்கு அதை அனுப்ப மட்டும் தைரியமில்லாமல் அன்றைய பொழுதும் அர்த்தமில்லாமலே கழிந்தது. தலையணையும் மொபைலின் நெருக்கமும் கூடிகொண்டே போனது.
நாளைய பொழுது நல்லது நடக்கும் என அன்றும் நம்பிகையுடன் உறங்கினேன். கனவுகள் எல்லாம் அவள்.
விடிந்தது.
அன்றைய விடியல் விசேஷமானது. போன் எஸ்எம்எஸ் ஒலி அடித்தது . குட் மார்னிங். அவளின் மெசேஜ்.
அதை பார்க்கும் முன்னே அம்மாவின் அலறல் .
"டேய்! எழுந்திருடா. இன்னைக்கு பொண்ணு பாக்கபோணும்ல " .