Friday, August 28, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 3



தீராத முத்தங்கள்
-------------------------------
அர்த்தமற்ற சாமத்தில்
அழுகையோடு உறங்கியவனை
இமைக்காமல் பார்த்தவளை
மனதுக்குள் அறிந்தாலும்
கண்மூடி கிடந்தவனை
நெற்றியில் முத்தமிட்டு
வெளியேற நினைக்கையிலே
அழுகையோடு விழித்தான்
அவள் அழகு முகம் பார்க்க
நெற்றி முத்தம் கேட்க
முத்தம் வாங்கி உறங்குமுன்
அழைத்தான் அவளை
மழலை அழைப்பில்
மீண்டுமொரு முத்தம்

இல்லாத நினைவுகள்
-------------------------------------
சிந்திக்காமல் சிரித்த
பார்க்காமல் பழகிய
மண்ணோடு புரண்ட
மயிர் பிடித்தெரிந்த
பிரிவின்றி உண்ட
பிரியாமல் நின்ற
அடிவாங்கி அழுத
கால்முட்டி தேய்ந்த
மழையொடு ஆடிய
வெயிலோடு ஒடிய
தட்டானை பிடித்த
ஓணானை மயக்கிய
பத்துகாசு திருடிய
கண்பார்த்து பேசிய
மண்பார்த்து நடக்காத
பள்ளிக்கூட நாட்களை
நினைத்து திளைத்தேன்
பள்ளிக்கூடம் காணாத
பால்யனை பார்க்கும் வரை

முதல் துளி
-----------------------------------
விடியும் நேரம்
கஞ்சிகலயம் தூக்கி
தலப்பா கட்டி
வேட்டி மடிச்சு
ஏர் பூட்டி
கையில கொம்பெடுத்து
மாடு விரட்டி
வயலுக்கு போக
வானம் பார்த்து
காத்து நிக்கேன்
எப்ப வருமோ
அந்த மொத துளி

Monday, August 24, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 2


பள்ளிக்கூடம் பிடிக்கும்
படிக்க பிடிக்கும்
பக்கத்துக்கு பெஞ்ச் ராமு பிடிக்கும்
எப்போதும் முறைக்கும் சீதா பிடிக்கும்
அடித்தாலும் தமிழ் டீச்சர் ரொம்ப பிடிக்கும்
மைதானம் பிடிக்கும்
விளையாட பிடிக்கும்
பறக்காவெட்டி என ராமு சொன்னாலும்
பள்ளிகூட மதிய உணவு பிடிக்கும்
அதானால் பள்ளிக்கூடம் பிடிக்கும்
படிக்க பிடிக்கும்
......
......

இது கருவேலநிழல் பா. ராஜாராமின் தொடக்கபள்ளி இடுக்கைகாக
எழுதநினைத்து எழுத மறந்த கவிதை.

*******************************************************************************

வாழ்வாங்கு வாழென்று
வாழ்த்தியுனை நான் அனுப்ப
வாழாமல் வாழ்ந்துகொண்டு
வானத்தையே வெறித்து கொண்டு
வார்த்தைகளை வார்த்தெடுக்க
முற்பட்ட நேரத்தில்
வானம் மறைந்து
உன் முகமானது
தோட்டத்து பூக்கள்
பறந்து வந்த கிளி
புற்தரையில் பனித்துளி
எல்லாம் உன்னை
நினைவுப்படுத்த
வார்த்தைகள் ஊற்றெடுத்த
நேரத்தில்
பேனாவும் பேப்பரும்
காணாமல் போயிருக்க
அதை தேடி போராடும் நேரம்
பக்கத்துக்கு பைத்தியம்
போடா லூசு என
என் கால்சங்கலியை நினைவுபடுத்தியது

*******************************************************************************

மறக்க முடியாததை
மறைக்க முடியாது
மறைக்க முடியாததை
மறுக்க முடியாது

மறக்க நினைத்தாலும்
மறுக்க முடியாது
மறைக்க நினைத்தாலும்
மறக்க முடியாது

மறக்க முடியாத
மறுப்புகள் ஏராளம்
மறைக்க முடியாத
மறுப்புகள் ஏராளம்
மறுப்புகள் தந்த
மரணங்கள் ஏராளம்

மறக்காமல் என்னை
மறைக்காமல் காதலை
மறுக்காமல் ஏற்றுகொள்

Wednesday, August 19, 2009

உனக்கு மட்டும் ரகசியம் - 4


ராமின் குரல் சங்கருக்கு தூரத்தில் கேட்டுகொண்டிருந்தது. ராம் சங்கரின் தோளை உலுக்கி சகஜ நிலைக்கு கொண்டு வந்தான். அவன் கையில் ஒரு துப்பாக்கி பளிரிட்டது.

"பாஸ் இந்த துப்பாக்கி அந்த மூலையிலே உங்க பீரோக்கு பதுக்கி கீழ இருந்துச்சு"

"ராம் பெரிய சிக்கல்ல மாட்டிருக்கோம். இளமாறன கொலை பண்ணிட்டாங்க கேஸ நம்ம பக்கம் திருப்பி விட்டுட்டாங்க. இப்ப இந்த துப்பாக்கி அவங்க கைல சிக்கினா அவளோ தான். சுரேஷ் இத நீ வேற எங்கயாவது வச்சுக்க நான் அப்புறமா வாங்கிக்கிறேன் "

சுரேஷ் தலையசைத்து கவரில் மறைக்கப்பட்ட அந்த துப்பாக்கியை வாங்கி கொண்டு ஓடினான். சங்கர் அடுத்த நடவடிக்கைகளை ராமுக்கு தெரிவிக்க துவங்கினான் .

"ராம் போலீஸ் வந்தா நான் சமாளிச்சுகிறேன். நீ சாந்தாராம் வீட்டுக்கு பக்கத்துலையே சுத்திட்டிறு எதாவது சந்தேகப்படற மாதிரி நடந்தா ஒடனே எனக்கு கால் பண்ணு"

"பாஸ் என்னையும் சந்தேகத்துல விசாரிப்பாங்களா"

"நிச்சயமா விசாரிப்பாங்க அத நான் சமாளிச்சுக்கிறேன். நமக்கு அநேகமா இன்னும் 24 மணி நேரம் தான் டைம் இருக்கு. கொலைகாரன் நம்மல சிக்க வச்சிட்டு எஸ்கேப் ஆக பாக்கறான். அநேகமா எல்லா கொலையும் அவன் தான் செஞ்சிருக்கணும். அதுனால மிச்சம் இருக்கிறது சாந்தாராமும் துக்காராமும் தான். அதுனால அடுத்த அட்டாக் அங்க தான். நீ அங்க போய்டு நான் இவுங்க வந்தப்புறம் வரேன்"

"உங்கள அரஸ்ட் பண்ணிட்டா "

"மாட்டாங்கனு நெனைக்கிறேன். இந்த துப்பாக்கி பத்தி அவுங்களுக்கு தெரிஞ்சிருக்கும் அதுனால அத வச்சு அரஸ்ட் பண்ணலாம்னு வருவாங்க. அது இல்லாததால இப்போதைக்கு அரஸ்ட் பண்ண மாட்டாங்க. விசாரிக்க ஸ்டேசன் வேணா கூட்டிட்டு போவாங்க. நான் நம்ம வக்கீல் கிட்ட பேசி வந்திருவேன். நீ கெளம்பு.. தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் நமக்கு தான் ஆபத்து "

ராம் ஆம்னியை விரட்டி வாகன நெரிசலில் கலந்தான். முகம் பதட்டத்தை காட்டி கொண்டிருந்தது.

அதே நேரம் போலீஸ் சங்கரின் ஆபீசை எட்டியிருந்தது .

"சங்கர் நீங்க இளமாறனோட ஆபீசுக்கு ரெண்டு நாள் முன்னாடி வந்தீங்க இல்ல"

"ஆமா சார் வந்தேன். அவர எனக்கு ரொம்ப நாளா தெரியும் சும்மா ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு அது"

"அப்ப அவர் பாக்றதுக்கு டிஸ்டர்புடா தெரிஞ்சாரா"

"இல்ல சார் நார்மலா தான் இருந்தாரு "

"எதாவது பிரச்சனை, மனவருத்தம் எதையாவது உங்க கிட்ட சொன்னாரா "

"அந்த மாதிரி எல்லாம் சொல்லல "

"ஓகே நாங்க கிளம்புறோம். மறுபடியும் உங்க கிட்ட பேச வேண்டி இருந்தாலும் இருக்கும் "

வீட்டை அளசிபோடுவார்கள் என நினைத்திருந்த சங்கருக்கு இந்த மிகச்சாதரண விசாரணை வியப்பை ஏற்படுத்தியது. திடீரென்று ஏதோ தோன்ற
"சார் ஒரு நிமிஷம். இளமாறன் எப்படி கொலை செய்யபட்டாருனு
தெரிஞ்சுதா "

"கொலை இல்ல. தற்கொலை. ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டு துப்பாக்கியால சுட்டுட்டு செத்துட்டாரு. பாடி போஸ்ட்மார்டம் போயிருக்கு , துப்பாக்கி பாரன்சிக் லேப்க்கு அனுப்பிருக்கோம் "

முகத்தில் பெரிதாக தோன்றவிருந்த ஆச்சர்யத்தை கட்டுப்படுத்தி கொண்டான் சங்கர் .

"அப்ப அந்த ரெட்டை கொலை கேஸ் என்ன ஆகா போகுது சார் "

" தான் தான் அந்த 8 பேரையும் கொன்னேன்னு லெட்டெர்ல எழுதிருக்காரு அதுனால அந்த கேஸும் இளமாறனோட புதைக்கப்படும்" மிக சாதாரணமாக கூறிவிட்டு ஜீப்பை புழுதி பறக்க கிளப்பி கொண்டு பறந்தனர்.

தான் கேட்ட விஷயங்களை ஒரு துளி கூட நம்ப முடியாமல் சங்கர் திகைத்திருந்தான் . ஆனால் போலீஸுக்கு தங்கள் மேல் கவனம் இல்லை என்பது மட்டும் உறுதியாயிற்று .

அதே நேரம் கிரீன்வேஸ் சாலையில் சாந்தாராமின் பங்களா அருகே ராம் இன்னும் சங்கருக்காக காத்துகொண்டிருந்தான். நடக்கவிருக்கும் பயங்கரங்களை அறியாமல்.

(தொடரும்)

Sunday, August 16, 2009

உனக்கு மட்டும் ரகசியம் - 3


பதிவான உரையாடல் கேசட்டுடன் ராமும் சங்கரும் அந்த ஆம்னியில் ஆபீசை அடையும் போது இரவு 9 மணி ஆயிருந்தது.

"ராம் நீ கெளம்பு நாம காலைல பேசலாம். இளமாறன் கிட்டேர்ந்து அந்த லிஸ்டும் வந்திருக்கும் அத வச்சுக்கிட்டு நாளைக்கு விசாரிக்க வேண்டியது தான்" சங்கர் கூறியதிற்கு உதட்டால் மட்டும் உம் கொட்டி ராம் புறப்பட்டான்.

சங்கரும் பல விதமான கோணங்களில் கேஸை பற்றி யோசித்துக்கொண்டே உறங்கிப்போனான்.

டீக்கடை சுரேஷ் வந்து விடியலை நக்கலாய் அறிவித்தான்.

"என்ன சார் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டையர்டா தூங்கிட்டியா "

"என்கிட்டே நல்ல வாங்கி கட்டிக்க போற" ராம் தூக்க கலக்கத்திலேயே பேசினான் .

"ஆமா உன்கிட்ட வாங்கி தான் வீடு கட்டிக்க போறேன் . போ சார்"

"டேய் காலங்காத்தால மொக்க போடாதடா. ஒரு முக்கியமான கேஸ விசாரிச்சுகிட்டு இருக்கேன். இத மட்டும் கண்டு பிடிச்சிட்டனா அப்புறம் என் ரேஞ்சே வேற" ராம் உணர்ச்சிவசப்பட்டு கூறினான்.

"என்னமோ சார். அப்புறம் உங்கள பத்தி காலைல கட பக்கத்துல ரெண்டு பேரு கேட்டுட்டு இருந்தாங்க. இங்க இட்டாரலாம்னு பாத்தேன் அதுக்குள்ளே வேணாம்னு கெளம்பிட்டாங்க "

"எதாவது கல்யாண கேஸா இருக்கும்டா "

"ஆளுங்கள பாத்தா அந்த மாதிரி தெரில சார். கொஞ்சம் மொரட்டு ஆழ இருந்தாங்க "

"சரி சரி நீ போ நான் பாத்துகறேன்" சங்கர் கூறும்பொழுதே இந்த கேஸ் விஷயம் கசிய ஆரம்பித்ததை உணர்ந்தான் .

சரியாக 9 மணிக்கு இளமாறனின் பேக்ஸ் வருவதற்கும் ராம் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. பத்து பேர் அடங்கிய அந்த லிஸ்டை பார்த்து கொண்டிருக்கும் போது இளமாறனின் அழைப்பு வந்தது .

"சொல்லுங்க சார் லிஸ்ட் இப்ப தான் வந்துச்சு பாத்திட்டு இருக்கோம். அந்த இன்னும் கொலையாகாத நாலு பேர பத்தி விசாரிக்க கெளம்பனும் "

"நாலு இல்ல சங்கர் ரெண்டு " இளமாறன் குரலில் நம்பிக்கை குறைந்திருந்தது .


"மறுபடியும் ஒரு ரெட்டை கொலையா சார் "

"யெஸ். நேத்து ராத்திரி 1 டு 2 குள்ள நடந்திருக்கு "

"சார் நான் உங்க கிட்ட நைட் பேசுறேன் இத டிலே பண்ணா மிச்ச ரெண்டு பேரையும் அவன் கொலை பண்ணிடுவான் அப்புறம் கேஸ் கஷ்டமாயிடும் "

"ஓகே சங்கர் . ஆல் தி பெஸ்ட்" சுரத்தே இல்லாமல் வாழ்த்தி இளமாறன் இணைப்பை துண்டித்தார்.

ராம் பார்வையாலே கேள்விகளை தொடுத்தான். "கெளம்பு ராம் போற வழில எல்லாத்தையும் பேசிக்கலாம்" . சங்கர் அந்த லிஸ்டுடன் புறப்பட ஆயத்தமானான் .

வண்டி புறப்புட்டு கிண்டியை தாண்டி வாகன காட்டுக்குள் கலந்தது .

"ராம் இன்னும் ரெண்டு பேர் தான் இருக்காங்க நேத்திக்கு நடந்த அந்த ரெட்டை கொலை நம்ம வேலைய கொஞ்சம் ஈசியா ஆகிருச்சு. இன்னும் ரெண்டு பேர பாலோ பண்ணா
போதும் "

"பாஸ் அந்த பத்து பேருக்கும் தொழில் ரீதியா எதாவது போட்டி இருந்து ஏன் அவுங்களுக்கு உள்ளேயே கொலை பண்ணிருக்க கூடாது போலீஸ குழப்ப ரெட்டை கொலைனு ஒரு கான்செப்ட உள்ள கொண்டு வந்திருக்க கூடாது "

"நீ சொல்றதும் யோசிக்க வேண்டியது தான். என இவுங்க எல்லாரும் இல்லீகளா தொழில் பண்ரவுங்க எல்லாத்துக்கும் துணிஞ்சவுங்க "

கார் கிரீன்வேஸ் சாலையில் ஒரு காம்பௌண்டை ஒட்டி நின்றது.

தொழிலதிபர் சாந்தாராமின் வீடு. அளவுக்கு அதிகமான சொத்து. பத்து கார்கள் அணிவகுத்து நின்றன. அவற்றில் இரண்டு வெளிநாட்டு கார்கள். மொத்தமாக 5 கிரௌண்டில் பார்ப்பவர் அனைவரின் வாயையும் பிளக்க வைக்கும் தோற்றத்துடன் மிரட்டி கொண்டு நின்றது அந்த சொகுசு பங்களா. வீட்டை சுற்றி எப்படியும் பத்து அடி உயரத்தில் சுவர். அதன் மேலே எலெக்ட்ரிக் கம்பிகள். வெளியாள் யார் வந்தாலும் கேட்டை தவிர எப்படியும் உள்ளே நுழைய முடியாது.

"சார் இத கவனிச்சீங்களா அந்த இன்னொருத்தர் அடுத்த தெருவில தான் இருக்காரு"

"ராம் இவுங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பிங்க. போட்டி வாராத மாதிரி தொழில பிரிச்சு செய்றவங்க. மெட்ராஸ்ல ரொம்ப பிரபலம் "

ராமை காரிலேயே நிறுத்தி கேட்டை நோக்கி நடந்தான் சங்கர். அங்கு செக்யூரிடியிடம் ஏதோ பேசிவிட்டு வந்தான்.

"ராம் அந்த செக்யூரிட்டி கிட்ட காசு கொடுத்து சந்தேகப்ற மாதிரி யாரவது வந்தா ஒடனே போன் பண்ண சொல்லிருக்கேன். அடுத்து அவரு தம்பி துக்காராம் வீட்டுக்கு போவோம் "

சாந்தாராமின் வீட்டை அச்சில் வார்த்ததை போல் இருந்தது துக்காராமின் வீடு.அங்கும் செக்யூரிடியை கவனித்து விட்டு ஆபீசிற்கு வந்தார்கள். இவர்களை பார்த்து சுரேஷ் ஓடி வந்தான்.

"சார் உங்க கிட்ட ஏதோ கல்யாண கேஸ் கொடுக்கணும்னு ரெண்டு பேர் வந்தாங்க. நான் நீங்க வெளில போயருக்கீங்கனு சொன்னேன் வெயிட் பண்ணி பாக்றேன்னு உங்க ஆபீஸ்ல உக்காந்து டீ கொண்டு வர சொன்னாங்க. வந்து பாத்தா அவுங்கள காணோம் "

"காலைல சொன்னியே அதுல யாரவது வந்தாங்களா"

"அவுங்கள்ல ஒருத்தர் வந்தாரு சார்" சுரேஷ் முடிக்கவும் சங்கருக்கு பொறி தட்டியது.

"ராம் ஆபீஸ் புல்லா தேடு எதாவது புதுசா பொருள் இருக்கனு பாரு. கவிக் கவிக் ராமை துரிதப்படுத்தி கொண்டே இளமாறனை செல்பேசியில் அழைத்தான்.

"ஹலோ Mr.இளமாறன்"

"நீங்க யார் பேசுறது" மறுமுனையில் பழக்கப்படாத குரல் கேட்டது.

"அவரோட ப்ரெண்ட் பேசுறேன். என் பேரு சங்கர்"

"இளமாறன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மர்மமான முறையில கொலை செய்யபட்டுருக்கார். நீங்க உங்க அட்ரஸ் தரீங்களா கொஞ்சம் விசாரிக்கணும்" சங்கர் விக்கித்து நின்றான்.

தன்னை சுற்றி ஒரு சிலந்தி வலை பிண்ணப்படுவதை உணர்ந்தான் .

(தொடரும்)

Monday, August 3, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 1

தட்டு நிறைய காதலை வைத்து
நீ எடுக்க காத்திருக்கும்
நானும் பிச்சைக்காரன்

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

என்னவளின் கை பட்டு
வெட்கத்தில் சிவந்தது மருதாணி.

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

மலர்களின் கர்வம்
உன் கூந்தலேறியபின்
உச்சமடைகிறது

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

கடற்கரைக்கு சென்று
வானம் பார்த்து
கப்பல் பார்த்து
மக்கள் பார்த்து
நிலவு பார்த்து
மணல் நோண்டி
சிப்பிகள் தேடி
கால்கடுக்க காத்திருந்து
வானம் கறுத்து
மக்கள் கரைந்து
கப்பல் மறைந்து
நிலவை சாட்சியாக்கி
கடலுக்குள் ஓடினான்
காதலுக்குள் ஓடமுடியாததால் ...

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

நிலவின் காதலை மறுத்து
அது தேய்வதை நகைக்கிறாய்
அதாவது துக்கத்தை மறந்து வளர்ந்துவிடும்
நான் தூக்கத்தை மறந்து
தேய்ந்து கொண்டே இருக்கின்றேன்
உன் நினைவில் ..

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

கவிதைகளின் உற்பத்திக்கூடமே
காதலின் பிணக்கூடமே
பிரம்மன் செய்த சிறந்த தவறே
காலனிடம் சொல்லியிருக்கிறேன்
உன்னை கூட்டி செல்ல சொல்லி
நரகத்தில் காதல் பற்றாக்குறையாம்
சித்திரவதைகளின் கருவறையே
நீ சென்று விடு
இனிவரும் காதல்களும்
கவிதைகளுமாவது பயனுள்ளதாக இருக்கும்

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

Sunday, August 2, 2009

அஹிம்சை - குறும்படம்

என் நண்பன் இயக்கிய குறும்படம். இது ராஜ் மியூசிக்கில் போன வருடம் திரையிடப்பட்டது.



குறும்படத்தை பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

Saturday, August 1, 2009

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

இன்பங்கள் மறந்த நேரங்களில்
துன்பங்கள் முளைத்த காலங்களில்
காதல் கனிந்து மறையும் தருணங்களில்

வார்த்தைகள் தொலைந்த நேரங்களில்
வாக்கியம் தேடிய காலங்களில்
மொழியை மறந்த தருணங்களில்

மகிழ்ச்சியில் திளைத்த நேரங்களில்
நெகிழ்ச்சியில் உறைந்த காலங்களில்
முயற்சியை கைவிடா தருணங்களில்

தேர்வுகள் தொடங்கிய நேரங்களில்
தேர்வுகள் முடிந்த காலங்களில்
தேர்வையே மறந்த தருணங்களில்

உயிர்கள் பிரிந்த நேரங்களில்
உறவுகள் துண்டிக்கப்பட்ட காலங்களில்
உணர்வுகள் மறுக்கப்பட்ட தருணங்களில்

முட்டு கொடுத்து
உடனிருந்த
உடனிருக்கும்
உடனிருக்கபோகும்
எல்லாருக்கும்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்