Sunday, May 12, 2013

சில நேரங்களில் சில காதல்கள்


வழக்கமான அந்த காலை. வழக்கமான கூட்டத்தில் அவசர பயணங்கள். வியர்வையின் துளிகளை உதறிவிட்டு அந்த குளிரூட்டப்பட்ட ரயில் நிலையத்தைஅடைய பறக்கும் மனிதர்கள்.


பொழுது விடிவதை போல இவற்றில் எதுவுமே மாறவில்லை. மாற்றங்கள் நிகழவில்லை. மாற்றங்கள் நிகழ்த்துபவர்களை காணவில்லை. மாற்றங்களை எதிர்பார்த்து நித்தம் நித்தம் தோற்றுப்போகும் இதயங்கள். தொழிலின் காதலில் குடும்பத்தின் பொருளாதார நிலையின் முன்னேற்றதிற்காக  இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் மாற்றத்தை எதிர்பார்த்து தோற்றுக்கொண்டிருக்கின்றார்கள். 

ராமன் வெட்ஸ் ரம்யா. 

பளபளவென அந்த இருட்டை வெளிச்சமாக்கி கொண்டிருந்தது வரவேற்பில் இருந்த அந்த பலகை. வழக்கமான திருமண கூட்டத்தில் ரம்யா அழகாக தனியே தெரிந்தாள். எல்லோரும் அவரவர் காரியங்களில் ஆழ்ந்திருந்தனர். நானும் தெரிந்த முகங்கள் இருக்குமா என தேடிக் கொண்டிருந்தேன்.அதோ கல்லூரி கூட்டம் அங்கே தான் அமர்ந்திருக்கிறது.பல வருடங்களுக்கு பிறகு பார்த்து கொள்வதால் பணியை பற்றியே பேச்சுகள் இருந்தது.

அவ்வப்போது உனக்கெப்போ கல்யாணம் என்ற சம்பிரதாய கேள்விகள். சற்று எரிச்சலாகத்தான் இருந்தது. நல்ல வேளை என்னை யாரும் அப்படி கேட்கவில்லை. கேட்காதது நல்லதா கெட்டதா என்றும் தெரியவில்லை.

ரம்யா எங்களோடு கல்லூரியில் ஒன்றாக படித்தவள். பலரால் படிக்க முயற்சிக்கப்பட்டு யாருக்கும் புரியாமல் போனவள்.எனக்கும் தான். 

அழகென்றால் அப்படி ஒரு அழகு. திமிரில்லாத அழகு.
பெருமையாக நினைக்க வைக்காத அழகு.
அவள் கடந்து போகயில்  அனைத்து கண்களையும் ஈர்க்கும் அழகு.
எல்லா மலர்களின் மகரந்ததையும் வாசமாக கொண்டிருப்பாள்.
சிந்தித்து கொண்டிருக்கும் நெஞ்சங்கள் அனைத்தயும் நொடிப்பொழுதில் 
சிதைத்து விடும் அவல் சிரிப்பு.
அவள் கண்க்ள் கவிஞர்களின் கற்பனை வறட்சியை நொடி பொழுதில் தீர்த்து விடும்.
இத்தனை அழகையும் மொத்தமாக கொண்டாலும் அதை சற்று கூட சட்டை செய்யாமல் சகஜமாக பேசுவாள்.
அதனால் தான் என்னவோ எல்லோருக்கும் அவளை பிடிக்கும்.
அழகாக இல்லாமல் இருந்தால் பிடித்திருக்குமா என்று தெரியவில்லை.

ஆனால் நட்பு வட்டாரத்தில் ஒவ்வொருவராக அவளுடன் பேசுவதை நிறுத்திகொள்ளும் போது தான் புரிந்தது ஒவ்வொருவரும் முயன்று தோற்று கொண்டிருந்தார்கள் என்று. நானும் அவசரப்பட்டிருப்பேன். ஆனால் காதலில் கூட புத்திசாலித்தனம் வேண்டும் என காத்திருந்தேன்.

வட்டாரமும் ஒவ்வொன்றாக குறைந்து நாங்கள் இருவர் மட்டும் தான் கல்லூரியின் கடைசி வரை பேசிக்கொண்டிருந்தோம். சினிமா கிசிசுவில் தொடங்கி காலேஜ் கிசு கிசு வரை. தப்பி தவறி கூட காதல் எட்டிப்பார்த்து விடாமல் பார்த்து கொண்டேன்.அவளும் பேசவில்லை. ஒரு வேளை நான் பேச எதிர்பார்த்தாளோ என்னவோ. ஆனால் நான் அந்த விபரீத பரீட்சையை எடுக்க துணியவில்லை. நாட்கள் ஓடிக்கொண்டிருக்க காதலின் வீரியம் கூடிக்கொண்டே போனது. 

அதை மறைத்து மற்ற விஷயங்களை பேச மிகவும் சிரமப்பட்டேன்.காதலின் வலியை விட காதலோடு நட்பையும் இழக்கும் வலி மிக கொடுமை. கவனமாக இருந்தேன். நாங்கள் இருவரும் காதலிப்பதாக ஏறக்குறைய அனைவருமே பேசிக்கொண்டார்கள். ஆனால் அவள் சட்டை செய்யவில்லை. அழகான பெண்களுக்கு இது மிக சாதரணம். பள்ளியில் இருந்தே இந்த பேச்சுகள் பழகியிருக்கும். ஆனால் அந்த பேச்சுகள் எனது மனதின் வலியை குறைத்தது. என்றாவது அவளே இது பற்றி கேட்பாள், அப்போது ஜாடைமாடையாய் இதை உடைத்துவிடலாம் என காத்திருந்து ஏமாந்தேன்.

கல்லூரியும் முடிந்தது.பேச்சுக்கள் குறைந்து.அவ்வப்போது ஒரு மெசெஜ். எப்போதாவது ஒரு போன் கால். இப்படி பணியில் நேரத்தையும் கவனத்தையும் நிறையவே செலவிட்டு நட்பின்
விரிசலை அதிகப்படுத்தி கொண்டிருந்தோம்.

திடீரென்று ஒரு மெசெஜ். வெறும் குட் மார்னிங் தான். இருந்தாலும் அந்த நொடியில் பல எண்ணங்கள் தோன்றின.இந்த காலை நேரத்தில் எதற்கு என்னை பற்றி திடீரென்று நினைக்க வேண்டும். ரசாயன மாற்றங்கள் வேலையை காட்ட துவங்கின. பதிலுக்கு குட் மார்னிங் டார்லிங் என டைப் செய்ய மனது துடித்தாலும் டார்லிங் மறைந்து வெறும் குட் மார்னிங் மட்டும் விரல் டைப் செய்தது.நாங்கெல்லாம் ரொம்ப கவனம்ல என விரல் மார் தட்டியது.

இது பின்பு பல நாட்கள் தொடர்ந்தது. எங்கே மனதில் உள்ளதை சொல்லி விட்டால் தவறாக போய்விடுமோ என்ற பயமாக இருக்கலாம். இல்லை கௌரவ பிரச்சினையாக கூட
இருக்கலாம். ஆனால் இருவருமே அதை சொல்லி கொள்ளவில்லை.சில நாட்களில் மெசெஜ்கள் நின்று மெயில்கள் தொடங்கியது.

மெயில்கள் சில நாட்கள் தொடர்ந்தன. பல விஷயஙள் பேசி கொண்டிருந்தாலும் ஏதோ பெரிய விஷயத்தை துவங்க அடிக்கோடிடுவதை போலவே தோண்றியது.திடீரென்று ஒரு நாள் ஒரு புகைப்படம் அனுப்பினாள்.

இவனை தான் வீட்டில் பார்த்திருப்பதாக கூறினாள். நான் என்ன நினைக்கின்றேன் என தெரிய வேண்டுமென கூறினாள்.

மாப்பிள்ளை ஒகேவா என கேட்கிறாளா, இல்லை நானே உன்னை கல்யாணம் பண்ணிகிறேன், இவன வேண்டாம்னு சொல்லிடு என்ற பதிலை எதிர்பார்க்கிறாளா. மீண்டும் குழப்பம்.

நட்பை தொடர்வது என முடிவெடுத்தேன். அதனால் ஒரு வேளை காதல் இலவசமாக வருமென மனதின் ஒரம் ஆசை. 

மாப்பிள்ளை நல்லா தான் இருக்கார். பேசாம இவனையே கட்டிக்கோ என கூறினேன். அதில் இருந்த நகைச்சுவை எனக்கு மட்டும் தான் புரிந்தது என எனக்கு தாமதமாக தெரிந்தது.

ராமன் வெட்ஸ் ரம்யா. இதோ ரம்யாவின் கழுத்தில் தாலி கட்டப்படுகிறது.

சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது. தூரத்தில் பாடல் ஒலித்து கொண்டிருந்தது.

நான் பந்திக்கு செல்ல எழுந்தேன்.