Tuesday, March 24, 2009

திருநள்ளாரில் முக்கால் நாத்திகன்

சனீஸ்வரனின் நலனுக்காக ஒரு ஜோசியர் என்னை திருநள்ளாறு செல்ல சொன்னார். சரி அப்படி என்ன தான் திருநள்ளாரில் விசேஷம் என பார்ப்பதற்காக வெள்ளி இரவு காரில் பயணித்தேன். பாண்டிச்சேரியில் கார் பஞ்சர். அடக்கடவுளே ஆரம்பமே இப்படியா என்று நினைத்த போது தான் மற்ற கடவுள்களுக்கு தடங்கல் வந்தால் தான் கெட்ட சகுனம் சனீஸ்வரன் தடங்கலுக்குரிய கடவுள் என்பதால் இதை நல்ல சகுனம் என் மனதை தேற்றி கொண்டு கிளம்பினேன். சீர்காழி வரை சாலைகள் பரவாயில்லை அதற்கு பிறகு சாலைகள் இருந்திருந்தால் பரவாயில்லை. காரைக்கால் வரை பெயரளவில் மட்டுமே சாலை இருந்தது அதுவும் ஒரு பஸ் செல்ல கூடிய அளவே. இதில் வேடிக்கை என்னவென்றால் சீர்காழியில் ரெண்டு நபர்கள் நின்று கொண்டிருந்தார்கள் அவர்களிடம் காரைக்கால் போவதற்கு வழி கேட்டேன். ஒருவன் சார் நேரா போய் லெப்ட் போங்க என்றன் இன்னொருவன் ரைட் என்றான். சரி ரைட்! தண்ணியில உளறியதை நிராகரித்து கொஞ்ச தூரம் சென்று ஒரு காவலரிடம் கேட்டு சென்றேன். ஒரு வழியாக பத்திருபது பேரிடமாவது வழி கேட்டு திருநள்ளாறு வரும்போது மணி 2:30AM.


திருநள்ளாரில் நுழையும் போதே ஒருவன் அறை (தங்குவதற்கு) வேண்டுமா என்றான் . அவன் காண்பித்த ஹோட்டல் நல்லா இல்லையென்று ஒரு கெஸ்ட் ஹவுஸ் கூட்டி போனான். அது கெஸ்ட் ஹவுஸ் இல்லை ஒரு சாதரண ரெண்டு பெட்ரூம் வீடு தான். வெள்ளி இரவு மட்டும் அது வாடகைக்கு விடப்படும் என புரிந்தது. வீட்டுகாரர்கள் ஹாலில் தூங்குவார்கள். எப்படில்லாம் யோசிக்குறாங்க பாருங்க. ஒரு நாளைக்கு வாடகை ஐநூறு ரூபாய். அந்த நேரத்தில் அவனிடம் பேரம் பேச திராணியில்லாததால் உடனே சென்று தூங்கி விட்டேன். சூரிய உதயத்திற்கு முன் எழுந்து அந்த குளத்தில் ஜோசியர் முழுக்கு போட சொல்லியிருந்தார் (அவருகென்ன கூறிவிட்டார் அகப்பட்டவன் நானல்லவா) . 5 மணிக்கு அலாரம் மட்டும் விழித்து கொள்ள நான் நன்றாக தூங்கி ஐந்தே முக்காலுக்கு எழுந்தேன். சூரியன் வெளியே வரலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்தி கொண்டிருக்கும் போது வெளியில் ஓடி வந்து கொஞ்சம் நல்லெண்ணெய் சீயக்காய் , ஷாம்பூ, ஒரு கருப்பு துணி (இது எதற்கு என எனக்கு தெரியாது) வாங்கி கொண்டு குளத்திற்கு ஓடினேன். கூட்டத்திற்கிடையில் எண்ணையை தேய்த்து எட்டி பார்த்த போது வெறும் ஜட்டியுடன் ஆண்கள் குளித்து கொண்டிருந்தார்கள் பக்கத்திலேயே பெண்களும் நின்று கொண்டிருந்தார்கள். அதெப்படி இந்த மாதிரி இடத்துல மட்டும் எந்த அருவெருப்பும் காமிக்க மாட்டேங்கிறீங்க. கோயிலுக்கு வந்தா ஆபாச காட்சிகளெல்லாம் கண்ணுக்கு தெரியாதா. ஒரு சராசரி மனுஷனான என்னால் அப்படி பார்க்க முடியவில்லை. எல்லாம் ஆபாசமாக தான் தெரிந்தது.

குளத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் இங்கு முழுக்கு போட்டா தான் எல்லா கெட்டதும் வரும், அப்பேர்பட்ட சாக்கடை அந்த குளம். இதுல வேற குளிக்கிற எல்லாரும் குளிச்ச துணிய அப்படியே தண்ணில வேற விடறாங்க. நான் முதலில் சொன்ன அந்த கருப்பு துணிய அதுல விட்டுட்டு மானத்தோடு வெளியில் வந்தேன். இந்த குளத்தில் குளித்துவிட்டு மறக்காமல் ஒரு ரெண்டு தடையாவது நல்ல தண்ணிரில் குளித்து விடுங்கள்.

அடுத்து கோவிலுக்குள் சென்று அர்ச்சனை. அந்த நேரத்திலேயே கூடம் அதிகமாக தான் இருந்தது. பெரும்பான்மையான கோவில்களை போல் வலது கையில் அர்ச்சனை தட்டை குடுத்து விட்டு இடது கையை நீட்டும் பூசாரிகளுக்கு பணத்தை கொடுத்துவிட்டு அந்த எண்ணத்தோடேயே சனி பகவானை பார்த்துவிட்டு வெளியில் வரும்போது மணி 7:31AM. ஒரு வழியா ஏழரை முடிஞ்சதுனு நினைத்து சிரித்தேன்.

அடுத்து பத்து பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். யாரிடம் கேட்டலும் அருணாச்சலா ஹோட்டல் தான் நல்ல ஹோட்டல் என்று சொல்லியதால் அங்கு சென்று பத்து பொங்கல் வாங்கி வெளியில் இருந்த பிச்சைகாரர்கள் பத்து பேருக்கு கொடுத்தேன். இத்தனை திடகாத்திரமான பிச்சைகாரர்களை நான் பார்த்ததே இல்லை. இவர்கள் யாரும் நிச்சயமாக விளிம்புநிலை மனிதர்கள் அல்ல. திருநள்ளாரில் அன்னதானத்தை ஒரு பரிகாரமாக எல்லாரும் செய்வதால் அங்கே பிச்சைகாரர்களுக்கு சாப்பாட்டு பஞ்சம் இல்லை. ஆனால் இது சனிக்கிழமை மட்டும் தான். மற்ற நாட்களில் அங்கு ஈக்காக்கை இருக்காது. இங்கு இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அதில் ஒரு பிச்சைகாரர் ஏன் தம்பி சாப்பாடு மட்டும் தரீங்களே தட்சணை குடுக்க கூடாதா என கேட்டார். என்ன கொடுமை சார் இது, எல்லாரும் சாப்பாட்டுக்கு தான் பிச்சை எடுப்பாங்க. இவருக்கு சாப்பாட்டுக்கு மேல காசும் குடுக்கணுமாம்.

மறுபடியும் மதியம் ஒரு அன்னதானம் செய்யவேண்டும். ஓட்டலில் ஒருவர் ஒரு பிச்சைகாரருக்கு டோக்கன் வாங்கி தந்து அவரை ஓட்டலுக்குள்ளே அமர்ந்து சாப்பிட சொல்லலாமா என்று கேட்டார். ஓட்டல்காரர் அதற்கு மறுத்து காரணத்தையும் சொன்னார். அவர்கள் எப்போதும் தண்ணி அடித்து கொண்டிருப்பார்கள் என்றும் போன முறை ஒருவரை உள்ளே அனுமதித்து அவர் செய்த கலாட்டாவில் சாப்பிட வந்த மற்ற எல்லோரும் வெளியேறிவிட்டனர் என்றும் சொன்னார். அட கடவுளே இது வேறயா . மீண்டும் ஒரு பத்து பேருக்கு (அதே ஆட்கள் தான் உணவு வாங்கி கொடுத்துவிட்டு வந்தேன். என்ன தம்பி தட்சணை இல்லையா என்று மீண்டு அதே ஆள் கேட்டார். வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு நடந்தேன்.

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஒரு அபிஷேகம் செய்ய வேண்டி இருந்ததால் ஒரு ஐந்து மணிக்கு கோவிலுக்கு சென்று அபிஷேக டிக்கெட்(Rs.250) வாங்கி சென்றமர்ந்தேன். பல காட்சிகள் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருந்தன. காசை வாங்கி கொண்டு முன் வரிசையில் நேரே அனுமதிக்கும் காவலாளி , கரை வேட்டிகள் அதிகாரத்தால் உள்ளே நுழைவது , அய்யர்களுக்கு தெரிந்தவர்கள் உள்ளே நுழைவது இதில் எதிலும் சேராத என்னை போன்று அமைதியாய் அமர்ந்திருக்கும் மக்கள். காசே தான் கடவுளடா அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா. ஒரு வழியாக அபிஷேகம் ஆரம்பித்தது. உட்கார இடமில்லாமல் கால்கள் மரத்து முட்டி இடித்து அதை பற்றி நினைத்து கொண்டே சனீஸ்வரன் நிர்வாணபடுத்தபட்டு குளிப்பாட்டபடுவதை பார்த்து கொண்டிருந்தேன். பக்தியால் கோவிலுக்கு கூட்டம் சேர்வதை தான் இது வரை பார்த்திருக்கிறேன் இங்கு பயத்தால் பெருங்கூட்டம் சேர்ந்திருப்பதை பார்க்க வியப்பாக இருந்தது. வெளியில் வரும் போது மணி 6:30PM.

இன்னும் பத்து பேருக்கு அன்னதானம் செய்து விட்டு கிளம்ப வேண்டியது தான் என்று நினைத்த எனக்கு ஒரே திகைப்பு. நடக்க கூட இடமில்லாத அந்த கோவில் தெரு இப்போது வெறிச்சோடி இருந்தது. ஒரு கடை, ஒரு பிச்சைகாரர் கூட இல்லை. இருந்த ஒரே ஓட்டலும் மூடி கிடந்தது. அப்போது தான் புரிந்தது சனீஸ்வரனின் நிலைமை, வாரத்தில் ஒரு நாள் மட்டுமே அவன் ராஜா மத்த நாட்களில் அவனை கண்டு கொள்ள நாதியில்லை. அன்னதானம் குடுத்தே ஆக வேண்டுமென்பதால் அங்கிருந்த காவலரிடம் எங்கேயாவது பிச்சைகாரர்கள் இருப்பார்களா என்று கேட்டேன் .அதற்கு அவர் உணவாக நீங்க வாங்கி கொடுத்தால் அதை அவர்கள் பெரும்பாலான நேரம் குப்பை தொட்டியில் தான் போடுவார்கள் கொடுப்பதானால் காசாக குடுங்கள் என்றார். தேடி பார்த்தும் எங்கும் பிச்சைக்காரர்கள் இல்லை.

கடமைக்கு செய்யும் இந்த அன்னதானத்தை ஒரு மறுவாழ்வு மையத்தில் சென்னையிலே செய்திருக்கலாமென நினைத்தேன்.

இந்த பயணம் என் பெற்றோர்களின் வற்புறுத்தலால் மட்டுமே. எனக்கு இதில் நம்பிக்கை கொஞ்சமும் இல்லை. பெரும்பாலோனரை போல வெறும் 'Oh my god' 'அடக்கடவுளே' என சொல்லும் போது மட்டும் கடவுளை கூப்பிடும் ஒரு சராசரி முக்கால் நாத்திகன் நான் . அந்த கால்வாசி ஆத்திகம் முழு நாத்திகனாக மாற முடியாத காரணத்தால் மட்டுமே ஒட்டிக்கொண்டிருக்கிறது.

Friday, March 20, 2009

குறுங்கவிதை - காதல்

எதிர்பாராமல் எதிரினில் வந்தாய்
என் எதிர்காலம் எதிர்படாமல் போனது
நிகழ் காலம் நிகழாமல் போனது
உன் கண்களை நான் கடந்த காலம்
மட்டுமே நினைவில்.

------------------------------------------------------------------------

ஓர விழி பார்வையால் என்னை பார்த்தாய்
உன்னை பிடிக்கும் என்றேன்
மௌனம் உதிர்த்தாய்

என்னை கடக்கும் போது உன் உதட்டுபுன்னகை
மீண்டும் உன்னை பிடிக்கும் என்றேன்
மௌனம் உதிர்த்தாய்

நீ நடக்கும் போது, கடக்கும் போதும்
என் கண்கள் உன்னில்

நீயும் அப்படிதான்
மறுக்காமல் மனதை கேட்டுப்பார்

உன்னை பிடிக்கும் என ஓராயிரம் தடவை மனம் சொன்னாலும்
நான் மௌனம் பழகிவிட்டேன்

நீ பேச பழகி கொள்.
காத்திருக்கிறது என் ஊமை காதல்.

Monday, March 16, 2009

இட்லியும் இருவல்லவர்களும்

"டேய் லண்டன் வந்து ஒரு வாரம் ஆச்சு இன்னும் ஊர் சுத்தி பாக்க கூட போகல ரொம்ப போர் அடிக்குது டா "

"அது சரி தான் ஆனா இன்னைக்கு நம்ப ஹவுஸ் ஓனர் வெளில போறாங்களாம் அதனால நாம தான் இன்னைக்கு வீட்டுக்கு காவல்(நாய்) "

"இது வேறயா.. நம்ம ஊர்ல இருக்கும் பொது கண்டபடி வீக் எண்ட்ல ஊர் சுத்தினதுக்கு இது தான் தண்டனை"

"ஏதோ ஹவுஸ் ஓனர் குஜராத்தியா இருக்கிறது நாள இந்திய சாப்பாடாவது கெடைக்குது அதுக்க்காகவாது இந்த ஹெல்ப் பண்ணி தான் ஆகணும். இது தவிர அவுங்க நமக்கு இட்லி மாவு எடுத்து வச்சுருக்காங்க , நம்மள டிபன் செஞ்சு சாப்ட சொல்லிருகாங்க "

"ரொம்ப நல்லவங்களா இருக்கங்கடா ... நெனச்சாலே கண்ணு கலங்குது .."

"ஓவரா நக்கல் பண்ற "

"பின்ன என்னடா வாரத்துக்கு 100 பவுண்ட் வாங்குறாங்க .. நீ ஏதோ எல்லாத்தையும் ப்ரீயா செய்ற மாதிரி சொல்ற "

"என்னடா இப்படி சொல்ற .. இங்கே ஆன்சைட் வரவனுங்க நம்மூர் சாப்பாட்டுக்கு எவளோ கஷ்டப்படறாங்கனு தெரியுமா"

"ரைட் விடு.. உட்டா கதகாலேட்சபமே பண்ணிடுவ.. எனக்கு பசிக்குது வா இட்லிய வச்சுட்டு எதாவது சட்னி வைப்போம் "

"டேய் நீ சட்னில்லாம் வைப்பியா "

"ஹி..ஹி.. ஹி.. ஒரு ஆர்வத்துல சொல்லிட்டேன். நீ வை நான் பாத்து கத்துகிறேன் "

"அதான பாத்தேன். பண்ணைக்கு போகுமாம் நாயி அத வேடிக்கை பாக்குமாம் பேயி "

"அப்படின்னா!!! "

"பழமொழி சொன்னா அனுபவிக்கணும் ஆராய கூடாது.. ஹா...ஹா "

"நேரம் டா.. உனக்கு கல்யாணம் ஆகணும்ன்ற ஒரே நல்லெண்ணத்துல உன்ன உடறேன் இல்ல இந்நேரம் பறக்கற காக்காவ புடிச்சு மூஞ்சில உட்ருப்பேன் "

"சரி சரி அந்த இட்லி தட்ட எடுத்து மாவ ஊத்து "

"சரிங்க ஆபீசர் .. அந்த மாவு ஊத்துரதுல எதாவது ஸ்பெஷல் டெக்னிக் இருக்குதா "

"பேசாம ஊத்துடா .. கொஞ்சம் கொஞ்சமா சொல்லி தரேன் ..எல்லாத்தயும் இன்னைக்கே சொல்லி தர முடியாது "

"நீ மீண்டும் மீண்டும் என்ன டென்ஷன் பண்ற "

"தட்டெல்லாம் அப்படியே இட்லி பாத்துரத்துல வச்சு அத ஸ்டவ்ல வை "

"இவளோ பண்ண என்னக்கு அத பண்ண தெரியாதா .."

"சரி இப்ப சட்னி செய்றது எப்படின்னு நான் சொல்லி தரேன்.. சத்தம் போடாம கேக்கணும் "

"கேக்றேன் டா கேக்றேன் ..ஆனா இந்த பணிவு நாளிக்கு ஆபீசுல கோடிங் ஹெல்ப் நீ கேக்கும் போது இருக்கணும்.. ஞாபகம் வச்சுக்கோ "

"கோவிச்சுக்காதே டா .. தெரியாததை தெரிஞ்சவன் கிட்ட கேக்கிறது தான முறை "

"இப்படியே நைசா ஜகா வாங்கிடு டா "

"சரி .. மொதல்ல சட்னி செய்றதுக்கு ப்ரிட்ஜ் தொறந்து வேண்டிய பொருட்கள எடுக்கணும்.. நீ ப்ரிட்ஜ் தொற நான் சொல்றேன் "

" இதுல தேங்காய் இருக்கு.. பச்சைமிளகாய் இருக்கு.. வருத்த வேர்கடலை இருக்கு.. இஞ்சி..பூண்டு..முட்டை ..இதுல எதெத எடுக்கணும் "

"எல்லாம் ரைட் அது எதுக்கு சட்னி வைக்க முட்டைய சொல்ற.."

"ஒ ..முட்டைய வச்சு சட்னி வைக்க முடியாதா "

"முடியாது....."

"ஆனா எவனையாவது திட்டும் போது மட்டும்.. அடிச்சு சட்னி ஆக்கிடுவேனு திட்ற "

"ரொம்ப நியாயமான ஒரு கேள்வி.. நீ இன்னைக்கு சாப்டாம இருக்கறதா பத்தி என்ன நெனைக்கிற "

"டேய் ..டேய் ..சும்மா வெளயாடுனேன் டா "

"சரி ப்ரிட்ஜ்ல ரெண்டாவது ட்ரேல ஒரு பாத்திரம் இருக்கு பார் அத வெளில எடு"

"இந்தா பிடி..இதுல என்னடா இருக்கு.. உண்மையா எனக்கு இப்ப சட்னி எப்படி வைக்றதுனு தெரிஞ்சுக்கணும் போல இருக்கு "

"இதுல நேத்து ஹவுஸ் ஓனர் வச்ச சட்னி இருக்கு ..அத சூடு பண்ணா இன்னைக்கு சட்னி ரெடி "

"உன் கூட உக்காந்து சாப்பிடறதுக்கு போய் நாலு தெருவுல பிச்சை எடுத்து சாப்பிடலாம் .. லண்டனா இருக்கிறது நாள உன் மொக்கையெல்லாம் கேட்டு உன் மூஞ்சிய பாத்துகிட்டே சாப்பிடனும்ற தலவிதி "

"தல விதி தான் சரி இல்லையே டா.. எல்லா படமும் ப்ளாப்பாமே ? "

"இப்ப ஏன்டா தல பிரச்சனைய கிளப்புற .. பசிக்குது டா ..சாப்டலாமே "

"சாப்டலாம் டா .. கஷ்டப்பட்டு சட்னி ரெடி பண்ணியாச்சு .. ஆனா இன்னும் இட்லி குக்கர் விசில் வரலையே "

"வச்சு 10 நிமிஷம் ஆச்சுடா .."

"இன்னும் ஒரு 5 நிமஷம் வெயிட் பண்ணுவோம் "

"சரி நீ சமைக்க எப்படி டா கத்துகிட்ட.. நானெல்லாம் தனியா இருந்திருந்தா ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பேன்..வந்த ஒரு வாரத்துல ஹவுஸ் ஓனர் புண்ணியத்துல நல்ல சாப்பாடு .. இன்னைக்கு தான் உன் சமையல் கை பக்குவம் தெரியும் .நீ மத்யானம் நல்ல சமைச்சா நாம தனியா வீடெடுத்து போலாம் டா.. சீப்பா இருக்கும் "

"டேய் மெட்ராஸ்ல இருக்கும் போது எங்க ரூம்ல நான் தாண்டா சமைப்பேன் ..அவன் அவன் நாக்க தொங்க போட்டுட்டு வந்து நிப்பான் தெரியுமா "

"i am very lucky to have you as my room mate da."

"சரி ஏதோ தீயற வாசனை வருதே..என்னனு பாரு"

"இட்லி குக்கர்ல இருந்து வருது டா "

"ஸ்டவ் ஆப் பண்ணி ...மூடிய தொற "

"டேய்..இட்லி செய்யும் போது இட்லி கருகுமா டா "

"நான் அந்த மாதிரி பாத்ததே இல்லையே "

"சரி எனக்கு ஒரு டவுட்.. இட்லி எப்படிடா வேகும் .. "

"ஆவியிலே "

"எதிலேர்ந்து டா ஆவி வரும் "

"சுடுகாட்ல இருந்து "

"அப்ப நாம இட்லி குக்கர சுடுகாட்ல கொண்டு போகணுமா.. மவனே நீ ஏதோ சொதப்பி இருக்கே ,..கேக்றதுக்கு மட்டும் பதில் சொல்லு "

"ஆவி, தண்ணி கொதிக்கும் போது வரும் டா "


"அப்ப ஏன்டா இட்லி குக்கர்ல தண்ணி வைக்கணும்னு நீ சொல்லல "

"அது.. அது..அது .."

"டேய்.. என்னடா தல டயலாக்லாம் சொல்ற.... மவனே உன் ரூம்ல நாக்க தொங்க போட்டு வந்து நின்னது பக்கத்துக்கு வீட்டு நாய் தான்னு உண்மை தெரிஞ்சு போச்சு.. மேனகா காந்தி கிட்ட சொல்லி உன்னல்லாம் மிருக வதை சட்டத்துல உள்ள போடணும் டா.... எத வேணா தாங்கிப்பேன் ஆனா எதுவுமே தெரியாம எல்லாம் தெரிஞ்ச மாதிரி எனக்கு சொல்லி கொடுத்தியே..அத மட்டும் என்னால மன்னிக்க முடியாது "

"டேய் ..டேய் .. வேணாம் டா.. இந்த டெக்னிக்க வச்சு தான் இவளோ நாள் IT ல தாக்கு பிடிச்சுருக்கேன்.. நீயும் பாலோ பண்ணு யூஸ்புல்லா இருக்கும்"

Thursday, March 12, 2009

பிங்கி

பிங்கி பிறந்து கண்கள் திறந்த போது கார்மேக போர்வைகள் தானே விலகி நட்சத்திரம் வெளிப்பட்டது போல் இருந்தது. அந்த நொடி வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியில் நானும் என் மனைவியும் களித்திருந்தோம். அவள் வளர்ந்த நாட்கள் நொடிகளை பறந்து போயின. அவளுக்கு சிறு நோயானாலும் நான்கு கண்களும் கலங்கின. உண்மையில் சொல்ல போனால் எங்கள் இருவர் மீது நாங்கள் வைத்த அன்பை விட பிங்கியின் மீது நாங்கள் வைத்த அன்பு தான் பெரியது. ஆனால் இன்று என் கண்முன்னே என் பிங்கி உயிரற்று கிடக்கிறாள். வாயில் ரத்தம் கசிந்து உறைந்து போயிருந்தது. அதன் மேல் ஈக்கள் இரங்கல் கூட்டம் போட்டு கொண்டிருந்தன.

சாலையில் விளையாடி கொண்டிருந்த என் பிங்கியை வேகமாக வந்த கார் இடித்து நிற்க்காமல் சென்று விட்டதாக கூட்டம் கதைத்து கொண்டிருந்தது. ஐயோ! நீ இடித்த உடனே இறந்திருப்பாயா இல்லை வேதனையில் துடித்தாயா. உனக்கு உதவ கூட முடியாத நிலையில் இருந்துவிட்டேனே .

தவிர்க்க முடியாத ஒரு உறவினர் திருமணத்திற்காக ஊருக்கு சென்ற என் மனைவியிடம் இதை எப்படி கூறுவது. அழ கூட தோள்கள் இல்லாமல் உடைந்து போவாளே. ஊருக்கு போக மறுத்த அவளை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்த நான் குற்றவாளியை போல் நின்று கொண்டிருந்தேன். நாங்கள் பார்த்து கொள்கிறோம் என அவளை சமாதானபடுத்திய பக்கத்துக்கு வீட்டுகாரர்கள் விரோதிகளை விட விரோதமாய் தெரிந்தார்கள். உங்களால் முடியாது என்று சொல்லியிருந்தால் நான் லீவ் போட்டாவது பார்த்து கொண்டிருந்திருப்பேனே இப்போது என் பிங்கியின் சாவிற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் என மனதிற்குள் அவர்கள் சட்டையை பிடித்து உலுக்கி கொண்டிருந்தேன்.

பிங்கி பிறந்த சில நாட்களில் தன் சிறு கண்களை உருட்டி உருட்டி எங்களை பார்த்தது இன்றும் நினைவில் இருக்கிறது. பிங்கியை கொஞ்சதவர்கள் எங்கள் சுத்துவட்டாரத்திலேயே இல்லை என்ற அளவிற்கு எல்லாருடைய செல்லமாக திகழ்ந்தாள். அதன் சாட்சியே இன்று அவள் உடலை சுற்றி நிற்கும் இந்த கூட்டம் .

பிங்கி ஒரு வயது ஆன பிறகு நல்ல துடிப்புடன் காணப்பட்டாள். தினமும் தோட்டத்தில் என் மனைவி அவளிடம் விளையாடுவதை ஒரு அத்தியாவசிய கடமையை போல் செய்து கொண்டிருந்தாள். தெருவில் விளையாடும் போதும் என் மனைவியின் கண்காணிப்பில் தான் இருப்பாள். ஆனால் சில சமயம் தெருவில் விளையாடும் சிறுவர்களோடு கொஞ்ச தூரம் சென்றாலும் என் மனைவியின் குரலுக்கு உடனே திரும்பி விடுவாள். இன்று கூப்பிட குரல் இல்லையென்று கூப்பிட்டாலும் வரமுடியாத தூரத்திற்கு சென்று விட்டால். சோகத்தை சேகரித்து கொண்டிருந்தேன்.

இனி வேலைக்கு செல்லும் போது வாசல் வரை வந்து என்னை யார் வழியனுப்புவார்கள்? மாலை பணி முடிந்து வரும்போது யார் என்னை வரவேற்பார்கள் ? அந்த ஒளிரும் கண்கள், எந்த சத்தத்தையும் உணரும் காதுகள், இரவில் உறங்காமல் நீ செய்யும் சேட்டைகள், உன் நான்கு கால் பாய்ச்சல், என்னை பார்த்தவுடன் வாலாட்டி குழையும் அந்த அழகு. அனைத்தையும் தொலைத்து உள்ளத்தில் தேம்பி கொண்டிருந்தேன்.


இருண்ட வானம் என் பிங்கிக்காக கண்ணீர் துளிகளை சிந்த தொடங்கியது.

Sunday, March 8, 2009

ஓராயிரம் பார்வையிலே - வல்லவனுக்கு வல்லவன்

பழைய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தவைகளில் இது நிச்சயம் முதல் இடம் பிடிக்கும். கண்ணதாசனின் வரிகளும் TMS-ன் குரலும் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனதை என்னவோ செய்யும். அந்த உணர்வுகளை வார்த்தைகளால் விளக்க முடியாது.


பாடல்: ஓராயிரம் பார்வையிலே 
படம் : வல்லவனுக்கு வல்லவன்
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்

ஓராயிரம் பார்வையிலே   
உன் பார்வையை நானறிவேன்
இந்த மானிடர் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நானறிவேன்
இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களைத் தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்


Wednesday, March 4, 2009

திரிசங்கு சொர்க்கம்

ரம்யாவை நான் முதல் முதல் பார்த்தது எங்கள் கல்லூரி வளாகத்தில். சினிமா காதலை போல எங்கள் காதல் மோதலில் தொடங்காமல் காதலிலேயே தொடங்கியது. அவளை பார்த்த அந்த நொடியில் என் இதயம் களவாடப்பட்டது. அவள் கண்களில் என்னை பார்த்து கொண்டிருந்தேன், உதடுகல் வார்த்தைகளை தேடி தோற்று கொண்டிருந்தன. வார்த்தைகள் பரிமாறும் முன்னே இதயங்கள் இடம் மாறிவிட்டன. அந்த நொடி வரை இது தான் காதல் என்று எங்கள் இருவருக்கும் தெரியாது ஆனால் இருவருமே அதில் விழுந்து விட்டோம். கல்லூரி மரத்தடிகள் எங்களுக்கு காதல் ஞானம் புகட்டி பழகின. கல்லூரி கான்டீன் எங்களுக்கு அமிர்தம் பரிமாற தொடங்கியது. நண்பர்கள் அன்னியமாகினர். விடுமுறை நாட்கள் எங்களை வதைக்க தொடங்கின. இப்படியே காதல் உலகத்தில் பயணித்து கொண்டே இருக்கும்போது கல்லூரி பயணம் முடியும் நேரம் வந்தது. எனக்கு கேம்பஸில் ஒரு நல்ல IT கம்பெனியில் வேலை கிடைத்தது .

நல்ல வேலை கிடைத்தால் அவள் வீட்டில் சென்று பெண் கேட்கலாம் என முடிவெடுத்தோம். மிக தவறான முடிவு. காதல் கேட்காத ஜாதியை அவள் தந்தை கேட்டுகொண்டிருந்தார். மௌனம் மட்டுமே உதிர்த்து கொண்டிருந்த நான் அவளை காதலிப்பதாகவும் நல்ல நிலையில் வைத்து வாழ்வேன் என்றும் கூறியதை அவர் விவாதத்திற்கு எடுத்து கொள்ள தயாராகஇல்லை. அடுத்து நடந்தவை எல்லாம் எனக்கு சரியாக நினைவில்லை. நினைவு திரும்பிய போது தெரு நாய்கள் என் ரத்தத்தை நக்கி கொண்டிருந்தன. அது எனக்கு ஆறுதலாக இருந்தது. எழ நினைத்தாலும் கால்கள் ஒத்துழைக்க மறுத்தன. யாரோ சோடா தெளித்து என் உளறலில் வீட்டை கண்டுபிடுத்து கொண்டு சேர்த்தார்கள். மீண்டும் எழுந்து நடக்க ஒருவாரம் ஆகியது. ரம்யா விலகி கொண்டிருந்தாள்.

கடைசியாக அமெரிக்காவில் உள்ள பெரியப்பாவின் வீட்டுக்கு போகும் முன் போன் செய்தாள் . காதலுக்கும் உங்களுக்கும் நடந்த கொடுமையை பார்த்து உங்களை காப்பாற்ற காதலை கொலை செய்து விட்டேன் என்று சொல்லி பதிலுக்கு கூட காத்திராமல் கடல் தாண்டி சென்று விட்டாள். இதயம் வலித்தது கண்கள் ரத்தம் உதிர்த்தன. என் தாடியும் வாராத தலையும் ஒரு சைண்டிஸ்டை போன்ற தோற்றத்தை உலகுக்கு ஏற்படுத்தி கொண்டிருந்ததன. காதல் மடிந்த கதையை காற்றோடு கரைத்துவிட்டு வாழக்கை சக்கரத்தில் நான் பணியில் நல்ல நிலையில் வந்துவிட்டேன். அடுத்த மாத திருமணமும் என் அழகிய தேவதை காவ்யாவும் தான் இப்போது என் நெஞ்சம் முழுதும். அவப்போது என் பழைய காதல் ஞாபகங்கள் தொல்லை தந்தாலும் காவ்யாவின் முகம் என்னை ஆசுவாசப்படுத்தியது. முதல் காதல் மடிந்தாலும் அது பீனிக்ஸ் பறவையாய் மனதில் முளைத்து கொண்டே தான் இருக்கும். இதை மறுப்பவன் மனிதனில்லை .

கல்யாண பத்திரிக்கை கொடுத்துவிட்டு சூரியனிடம் போராட முடியாமல் ஒரு ஜூஸ் கடைக்குள் தஞ்சமடைந்தேன். திடீரென்று ஒரே அலறல் சத்தம் யாரோ வேகமாக வந்த காரில் அடிபட்டு விட்டார். அடிபட்டவருக்கு காற்றை தடை செய்யும் முயற்சியில் கூட்டம் நின்று கொண்டிருக்க நானும் சென்று அவர்களுக்கு உதவினேன். அடிபட்டவருக்கு எப்படியும் 60 வயது இருக்கும், கொஞ்சம் பலமான அடிதான்; பாவம் தனியாக வந்திருக்கிறார் . முகம் பரிச்சயமானதை போல் இருந்தாலும் சட்டென்று ஞாபகத்துக்கு வரவில்லை , சில நிமிட போராட்டதுக்கு பிறகு என் முகம் மலர தொடங்கியது. இவர்.. இவர்.. ரம்யாவின் தந்தை. சென்று விடலாம் என்று நினைக்கும் போது பாவம் ரம்யா தாய் இறந்த பிறகு இவர் ஒருவர் தான் அவளுக்கு துணை அவளுக்காக இதை செய்வோம் என்று தோணியது. ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். ரத்தம் அதிகமாக வீணாகி கொண்டிருந்தது. நிஜ கடவுள்கள் நிழல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டுமென கையை விரித்து விட்டார்கள். ரம்யா வருவதற்குள் எப்படியாவது கழன்று விட வேண்டும் என தீர்மானித்து நடந்து கொண்டிருந்த போது மறுபடியும் என்னுள் பீனிக்ஸ் . அதே அழகுடன் ஆனால் உணர்ச்சிகளற்று வந்து கொண்டிருந்தாள் ரம்யா. என்னை பார்த்து லேசாக அழுதபடி புன்னகைத்தாள். நடந்த விபத்தை பற்றி கூறி அவளின் தந்தையின் நிலையை பற்றி கூறிவிட்டு போகலாம் என் நினைத்தேன். அவளுக்கு இங்கு வேறு யாரும் உதவிக்கு இல்லையென்றும் அமெரிக்காவில் இருந்து இப்போது தான் வந்தாள் என்றும் தெரிந்து விதியை நொந்தபடி ஒரு நீண்ட போராட்டத்திற்கு தாயாரனேன் . மனசு விட்டு பேசி கொள்ள பல மணி நேரம் இருந்தாலும் வார்த்தைகள் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து தொண்டையிலே மடிந்து கொண்டிருததன.

ரம்யாவின் தந்தை இறந்து ஒரு வாரம் ஆயிற்று. அவளுடன் இருந்து எல்லா காரியமும் நான் செய்து முடித்தேன். ஏனோ இறந்தவர் மீது எனக்கு பரிதாபம் வரவில்லை. நம் காதலுக்கு தடையாக இருந்த உன் தந்தை இறந்து விட்டார் வா நாம் இனி புது வாழ்க்கை தொடங்குவோம் என கூறி அவளை கட்டியணைத்து முத்தமிட துடித்தது என் மனது. திட்டமிட்டு உன் தந்தையிடம் காதலை கூறியபோது அது எடுபடவில்லை ஆனால் இப்போது திட்டமிடாமலே எல்லாம் நமக்கு சாதகமாக இருக்கிறது. வா எங்காவது சென்று நம் எண்ணம் போல் வாழலாம். நீ எனக்கு உணவாகவும் நான் உனக்கு உணவாகவும் மாறி இந்த உலகில் இச்சைக்கு புது அர்த்தம் உருவாக்குவோம். மனம் காதலிலும் காமத்திலும் இமயமலையை கடந்து பாய்ந்து கொண்டிருந்தது. ரம்யா என் உணர்வுகளை பிரதிபலிப்பதை போல் என்னை பார்த்தாள். அவள் முகம் காதலில் மலர்ந்திருந்தது. இது நிச்சயமாக காதல் தான் நாங்கள் முதல் நாள் சந்தித்த போது இருந்த அதே மலர்ச்சி அதே மிரட்சி அவள் முகத்தில் கண்டேன்.

தன் கைகளை என் தோளின் மேல் போட்டு என்னை இறுக கட்டிகொண்டாள். இருவரின் உதடுகளும் முத்தத்திற்கு ஏங்கி கொண்டிருந்தன. என் தலைமயிரை கொத்தாக தன் விரல்களால் பின்னி கொண்டிருந்தாள். கண்கள் காமத்தில் சொருக ஆரம்பித்திருந்தன. இருவரின் உதடுகளும் இன்னும் சமீபித்து இருந்தன. என்னை கேட்காமலே என் கைகள் அவள் இடையை கட்டிகொண்டிருந்தன. உடல்கள் உரசிக்கொண்டு உணர்ச்சிகளை சூடேற்றி கொண்டிருந்தது. அடுத்த நொடி இருவரும் சல்லாப உலகில் இருப்போம் என நினைக்கும் போது சனியன் போல் என் செல்பேசி அழைத்தது. காவ்யா.. அதை பார்த்த மாத்திரமே குப்பென்று வியர்த்தது.

பேச தைரியமில்லை. லைனை துண்டித்தேன். வெளியில் சென்று ஒரு சிகரட்டை பற்ற வைத்து கொண்டு சிந்தித்தேன். தாராசில் காவ்யாவும் ரம்யாவும் கரி நிகராக தெரிந்தார்கள். ரம்யாவை இழக்க மனமில்லை காவ்யாவை ஏமாற்றவும் மனமில்லை.திரிசங்கு சொர்க்கத்தில் நிற்பது போல் இருந்தது. தன் காதல் நினைவுகள் மனதில் வந்து அசைபோட தொடங்கியது, ரம்யாவின் பக்கம் தராசு சாய்ந்து கொண்டிருந்தது.

பின்னால் ரம்யா வரும் சப்தம் கேட்டு சிகரட்டை கீழே போட்டு மிதித்தேன். காலையில் வருகிறேன் என்று சொல்லி கிளம்பினேன். ரம்யாவின் முகம் வெளிறி இருந்தது , ஒரு வேளை காவ்யாவிடம் தான் பேசியதை கேட்டிருப்பாளோ என்று தோன்றியது. நாளை காலை இனிப்புகளுடன் வந்து அவளை திருமணம் செய்யும் சந்தோஷமான சங்கதியை கூறி இறுக அணைக்க வேண்டும். அப்போது எல்லா சந்தேகங்களுக்கும் அவளுக்கு விடை கிடைக்கும் என்ற என்னையே சமாதானப்படுத்தி கொண்டு நடந்தேன். ரம்யாவின் நினைவுகள் இரவை வேகமாக விரட்டியது.
காலையில் திட்டமிட்டபடி இனிப்புகளுடன் ரம்யா வீட்டுக்கு சென்றேன். கதவு தாழிட்டு இருந்தது. பக்கத்துக்கு வீட்டு சிறுமி வந்து அக்கா அதிகாலைலையே அமெரிக்க செல்வதற்காக ஏர்போர்ட் சென்று விட்டதாக சொன்னாள். எனக்கு தலைசுற்றியது.

காவ்யாவிடம் எனக்கு ஆண்மையில்லை என பொய் சொன்னதை எண்ணி நொந்தேன்.

Tuesday, March 3, 2009

காதலி துதி

அழகு தேவதை உன்னை பாட
வார்த்தை இன்றி நானும் வாட
உன் முத்துச்சிரிப்பினில் மின்னல் தெறிக்க
ஒவ்வொரு முறையும் என் இதயம் மறிக்க
உன் பவள உதடுகள் சொற்கள் உதிர்க்க
அதை அள்ளி திருட என் உள்ளம் துடிக்க
இச்சை தீர கட்டி தழுவ
கச்சை கட்டி அலையும் மனது

பிரம்மன் செய்த அழகு சிலை நீ
ரவிவர்மன் வரைந்த அற்புத கலை நீ
உன் நிழலை கேட்டுப்பார் சொல்லும்
சத்தம் இல்லாமல் ஒரு முத்தம்
நான் தந்து செல்வதை நித்தம்
சொர்க்கம் அது பக்கம் தான்
அது உன்னிடத்தில் மட்டும் தான்



உன்னை வழிபடும் கூட்டம் அறிந்தான்
கடவுள் கூட வெட்கி குனிந்தான்
பூவுக்கே பூக்கள் தூவும்
அந்த சாலையோர மஞ்சள் மரம்
மீன்களெல்லாம் தரைக்கு வந்து சாகும்
உன் கண்களை காண ஏங்கும்
பூமிக்கு தவறி வந்த மங்கை
நீ நிச்சயம் தேவலோக ரம்பை

நட்சத்திர பூக்கள் தவிக்கிறது
உன் கூந்தலை அடைய துடிக்கிறது
உன்னை பாடாத கவிஞர்கள்
அவர் கவிகளுக்குள் வீணர்கள்
உன் அழகை பாட ஏங்கும் நெஞ்சம்
தமிழிலில் சொற்களுக்கோ பஞ்சம்
நீ கோவிலுக்கு செல்வதில்லை
கடவுள் கடவுளை வணங்குவதில்லை