Sunday, December 27, 2009

மனச்சுவடு - 1

அதிவேகமாக கழிந்து கொண்டிருந்த தினங்கள் அன்று ஆசுவாசமாக கழிந்து கொண்டிருந்தது.

வழக்கத்திற்கு மாறாக என் அலுவலக சீட்டுக்கு அருகில் வந்து வெறும் ஹலோ அளவில் இருந்த நண்பர்கள் எல்லாம் ஆருயிர் தோழர்களாக மாறிகொண்டிருந்தார்கள். என் தொலைபேசியும் மறுஉயிர் பெற்று அலுவலகத்தின் எல்லா தளங்களில் இருந்தும் நலம் விசாரிப்புடன் என் சுற்று வட்டாரத்தை பற்றியும் விசாரிப்பு தொடர்ந்தது.

அத்தனை நேரம் கேள்விகளை மட்டும் மனதிற்குள் ஓட்டி கொண்டிருந்த எனக்கு விடை அவள் எழுந்து நிற்கும் போது கிடைத்தது.

இத்தனை காலங்கள் போராடி பிரம்மன் இப்போது தான் தன் பணியை சரிவர செய்து இருக்கிறான். நளினமான நடை, பார்க்கும் அனைவரையும் வசீகரிக்கும் புன்னகை , எவரையும் சட்டை செயாத அந்த மிடுக்கு அத்தனையும் அவளை மேலும் அழகாக காட்டியது. அதுவரை அழகென்று பெருமை கொண்ட பெண்களை எல்லாம் தொலை தூரத்தில் ஒரே நாளில் தொலைய செய்தாள்.

அவள் வந்த ஒரே நாளில் அலுவலகத்தில் அணைத்து ஆடவர் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்தது , ஆனால் வழக்கம் போல அந்த பரபரப்பு ஒரு வாரத்தில் ஒரு நான்கைந்து பேரிடத்தில் மட்டும் விடாப்பிடியாக ஒட்டி கொண்டு மற்றவரிடத்தில் காற்றில் கரைந்து விட்டது. அடுத்த சில வாரங்களில் இவளை பற்றிய பேச்சுக்கள் அறவே குறைந்து போயின. ஆனால் இப்போது நான் என்னுடன் தினமும் பேச துவங்கியிருந்தேன் .

இரவுகள் நீளமாகி கொண்டிருந்தன. கவிதைகள் குவியதொடங்கின. கற்பனையில் நிறைவேற சாத்தியமில்லாத விடயங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன . அலுவலகத்தில் இல்லாத நேரங்கள் அலுவலகத்தை தேடின. அலுவலகத்தில் அவள் இல்லாத நாட்கள் அவளை தேடின. கண் எதிரில் தேவதை கற்பனைக்கா பஞ்சம், கவிதைகளால் கவிதையை தினமும் தினமும் துதி பாடி கொண்டிருந்தேன்.

அனைவருக்கும் பிடித்த கவிதை அவளுக்கு பிடித்திருக்கவில்லை போலும். நான் சொல்லாமல் அவளே உணரும் அந்த கற்பனை வட்டத்தில் சிக்கி கொண்டே நிஜத்தில் சிந்தித்து கொண்டிருந்தேன். நிஜம் விளங்க நாழியானது. நிஜம் உணர்ந்த போது நாட்கள் வேகமாக கழிந்து கொண்டிருந்தது. என் வார்த்தைகளுக்கு முட்டுகட்டையாய் கேள்விகளை நானே கேட்டுகொண்டிருந்தேன். கேள்விகள் தொலைந்த போது தைரியமும் தொலைந்து போயிருந்தது. முடிவில் எதிர்பார்த்தது எதிர்பாராமல் நிகழ்ந்தது.

(தொடரும்)

Saturday, December 19, 2009

உனக்கு மட்டும் ரகசியம் - 6 (நிறைவுப் பகுதி)


ராம் சங்கரை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை .

"என்ன ராம் எல்லாம் படிச்சு உண்மையெல்லாம் தெரிஞ்ச மாதிரி இருக்கா?" சங்கரின் தொனி ராமை எரிச்சலூட்டியது .

"சங்கர் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. நடந்த கொலைகளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம். இத்தனை நாளஉங்களுக்காக வேலை செஞ்ச என்னை கூட நம்பாம எல்லாத்தயும் எதுக்கு மறைச்சீங்க "

"பொறுமையா இரு ராம். மொத்தமா எல்லாத்தையும் சொல்லலாம்னு தான் இவளோ நாள் காத்திட்டு இருந்தேன். நீ ஆரம்பத்துலையே சொன்ன
மாதிரி இளமாறன் அவளோ நல்லவன் இல்ல. அது எனக்கும் தோணுச்சு, இருந்தாலும் அவன் என்ன தான் பண்ணப்போறான்னு பாக்க
ஒரு ஆர்வம். நம்ம கிட்ட அவன் கொடுத்த ஹிட்லிஸ்ட் மட்டும் தான் நிஜம், மத்தபடிக்கு அந்த துப்பாக்கி தொலைஞ்சு போனதெல்லாம்
கதை"

"என்ன பாஸ் சொல்றீங்க. அப்ப அந்த துப்பாக்கி நம்ம ஆபீஸ்குள்ள வந்ததுக்கும் அவன் தான் காரணமா"

"சந்தேகமே இல்லாம அவன் தான் காரணம். அது மட்டும் இல்ல அந்த ஹிட்லிஸ்ட் தயாரிச்சதே அவன் தான். அத வச்சு ஒரு பெரிய திட்டம்
போட்டிருந்தான். அந்த லிஸ்ட்ல இருக்கவங்க கிட்ட பேர தூக்குறதுக்கு பணம் தரணும்னு ப்ளாக்மெயில் பண்றதுக்கு பிளான். முதல் நாலு பேரு ஒத்து வரல, உடனே அவனே மத்தவங்களுக்கு பயம் வரணும்னு அவுங்கள க்ளோஸ் பண்ணிட்டான் "

"ஒ மை காட்.. என்னால நம்பவே முடியல . "

"அதுக்கப்புறம் தான் அவன் ஒரு திட்டம் போட்டு என்ன சிக்க வைக்க பார்த்தான். முதல் நாலு கொளைகல்ல நம்மல மாட்டி விட்டு மத்தவங்க கிட்ட பணம் வாங்கிட்டு ஹிட்லிஸ்ட மறைக்க திட்டம் போட்டான். மத்தவங்களும் அவன் கிட்ட பணத்த கொடுத்துட்டாங்க "

"ஆனா மத்தவங்களும் செத்துட்டாங்களே சங்கர்"

சங்கர் மெளனமாக ஒரு புன்னகை மட்டும் உதிர்த்தான். ராம் மீண்டும் வியர்க்க தொடங்கியிருந்தான்.

"ராம் மத்த கொலைகள் நடந்தது ஹிட்லிஸ்ட் கணக்க முடிக்க தான் ஆனா செஞ்சது இளமாறன் இல்ல" சங்கரின் சிரிப்பு சப்தம் அதிகமாகி கொண்டிருந்தது.

சங்கர் தொடர்ந்தான் "நீ அடுத்து என்ன கேக்க போறேன்னு எனக்கு தெரியும். மத்த கொளைகல செஞ்சது நானானு தான. அதுக்கு பதில் நானும் தான்"


ராம் தெளிவாக குழம்பியிருந்தான். ஆனால் வார்த்தைகளை உதிர்க்க திராணியில்லாமல் சங்கர் தொடர முகத்தை ஏறிட்டான்.

"ராம் மத்த கொளைகல செஞ்சது இளமாறனுக்கு ஒரு பயத்த உண்டு பண்ண , தவிர அவுங்க எல்லாரும் எப்படியும் சாக வேண்டியவங்க தான். சட்டத்து நால அவங்க கிட்ட கூட நெருங்க முடியாது. அதனால செஞ்ச கொளைகல்ல எனக்கு எந்த வருத்தமும் இல்ல. சாந்தாராம் துக்காராம் ரெண்டு பேரையும் கொலை பண்றதுக்கு முன்னால இளமாறன் போன் பண்ணி வர சொன்னான். அவனுக்கு நான் தான் இத பண்றேன்னு கண்டுபிடிக்கிறது ஒண்ணும் கஷ்டம் இல்ல ஆனா எங்க அவர் மாட்டிபாரோனு ஒரு பயம் வந்திடுச்சு. பணம் கொடுத்தவன்
எல்லாம் கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டானுங்க. அதனால இந்த பிரச்சனைல இருந்து அவர வெளில கொண்டு வர, அப்புறம் அவர் செஞ்ச பாவத்துக்கு அவர ..."

"கொலை பண்ணிடீங்களா சங்கர்"

"இல்ல தற்கொலை பண்ணிக்க வச்சிட்டேன்"

"சங்கர் நீங்க எவளோ நியாயம் சொன்னாலும் நீங்க செஞ்சது தப்பு தான். நான் இத போலீஸ்ல சொல்ல தான் போறேன் "

"தாரளமா சொல்லிக்கோ ராம். ஆனா கம்பி என்ன போறது நீயும் தான். ரெட்டை கொலைகள் எப்படி கிட்ட தட்ட ஒரே நேரத்துல நடந்துச்சுன்னு சொல்லனுமா "

"என்ன சொல்றீங்க சங்கர்"

"ரெண்டு கொலையையும் செஞ்சது ஒருத்தன் இல்ல . ரெண்டு பேர். ஒண்ணு நீ இன்னொன்னு நான் "

காற்று ராமின் நாசிகளில் அவசரகதியில் நுழைந்து வெளியேறி கொண்டிருந்தது .

"ஹிப்நாட்டிசம் பத்தி படிச்சியே ராம் அதுல செலக்டிவ் மெமரி எரேசிங் டெக்னிக் பத்தி பாத்தியா. நடந்த நிகழ்வுகல ஒருத்தர் மனசுல இருந்து தடயமே இல்லாம அழிக்கவும் முடியும் அதே மாதிரி நடக்காத ஒரு விஷயத்த நடந்த மாதிரி ஒருத்தர் மனசுல புகுத்தவும் முடியும். அதனால நீ கொளைகல பண்ணினது உனக்கு நிச்சயமா நினைவுல இருக்காது .இப்ப நம்ம பேசிட்டு இருந்தத கூட உன் நினைவுல இருந்த என்னால சுத்தமா அப்புறபடுத்த முடியும். அப்புறம் இளமாறன் மனசுக்குல தற்கொலை பணிகனும்ன்ற எண்ணத்த புகுத்தினேன் வேலை சுலபமா
முடிஞ்சுது. சாந்தாராம் துக்காராம் விஷயத்துல அவுங்க கிட்ட நெருங்கறது ரொம்ப கஷ்டமா இருந்ததுனால அவுங்களே ஒருத்தர் கார்ல இன்னொருத்தர் பாம் வச்சதா செட் பண்ணி ஒருத்தர் சாக இன்னொருத்தர் ஜெயில் போக பிளான் பண்ணிட்டேன். குடும்ப சண்டை காரணம்னு ஆனதுனால அவளோ சீக்கிரம் வெளில வர முடியாது. இப்போ எல்லாம் புரிஞ்சுதா ராம். என்ன முடிவு எடுத்திருக்க "

ராம் சற்று தெளிந்திருந்தான். " பாஸ் இப்ப நடந்தத என் மனசுல இருந்து எரேஸ் பண்ணிடுங்க. அடுத்ததடவை தயவு செஞ்சு என்கிட்டே முன்கூட்டியே சொல்லிடுங்க"

சங்கர் சிரித்தான் அதில் மன திருப்தியுடன் ஒரு திட்டத்தை தயார் செய்து நடத்தி காட்டிய வெற்றி தெரிந்தது.


(முற்றும்)

Saturday, December 5, 2009

அதே நேரம் அதே இடம் - முதல் முறை உன்னை பார்த்த போதே (Lyrics)

படம்: அதே நேரம் அதே இடம்
இசை: பிரேம்ஜி அமரன்
பாடியவர்கள் : ஹரிச்சரன், திப்பு, ஹரிணி
பாடலாசிரியர் : லலிதானந்த்
பாடலுக்கான சுட்டி:
முதல் முறை உன்னை பார்த்த போதே


முதல் முறை உன்னை பார்த்த போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே

கனவினில் உன்னை பார்க்கும் போதும்
அருகினில் என்னை காண வேண்டும்
உன் அருகே நான் இருந்தால் சிலிர்க்கிறதே

நீ விளையாட்டு பிள்ளை
உனக்கு நான் தலையாட்டும் பொம்மை
என்னை தாயை போலே தாங்க வேண்டும் மடியினிலே

முதல் முறை உன்னை பார்த்த போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே

நீ அருகில் தோன்றும் நேரமே
வான் நிலையும் மாறி போகுதே
நீயும் நினைத்தால் வானவில்
வந்து விடுமே

உன் மனதில் தோன்றும் வார்த்தையே
என் உதடும் போல வேண்டுமே
உன்னை நினைத்தால் வாழ்விலே
என்றும் சுகமே

உன்னுடன் இருப்பதால்
உயிருடன் இருக்கிறேன்
உனக்கென்ன வேண்டுமா
உயிரையும் தருகிறேன்

நான் உன் மூச்சில் வாழ்வேன்
வரம் அது எந்நாளும் போதும்
நீ சூடும் பூவும் வாடும் போது
வலித்திடுமே

முதல் முறை உன்னை பார்த்த போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே

நீ நடந்தும் போகும் வேலையில்
கால் வலிக்கும் என்றும் கலங்குவேன்
தோளில் சுமந்தே தாங்குவேன்
உன்னை தினமே

தோளிரண்டில் என்னை தூக்கினால்
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்
நானும் உனையே தாங்குவேன்
நெஞ்சில் தினமே

சூரியன் உதிப்பதே
உன்முகம் காணவே
பூமியில் பிறந்ததே
உன்னுடன் வாழவே

அது மழை மேகம் யாவும்
இறங்கியே உனை தீண்டி ஏங்கும்
இனி கோயில் தேடி போக மாட்டேன்
தெய்வமும் நீ

முதல் முறை உன்னை பார்த்த போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே

Wednesday, November 4, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 6

கண் மூடி விழித்திருந்து
கனவில் உறங்கி போனேன்
கட்டிலில் விழிக்கையில்
என் அருகில் நீ
நித்தமும் உன்னுடன்
நான் விழிக்க என்ன செய்ய
யோசித்த வேளையில்
உறங்கிப்போயிருந்தேன்


----------------------------------------------------------------------------------------பருவத்து மாற்றங்கள்
முகத்தினில் வெளிப்பட்டு
தழும்பாகி
மறைந்து போனது
மாற்றங்கள் விட்டுசென்ற
ஏக்கங்கள் மறையாமல்
தழும்ப செய்தது.

----------------------------------------------------------------------------------------தொலைக்க துடிக்கிறேன்
தொலைய மறுக்கிறாய்
தொலைக்க தவிக்கிறேன்
தொலைந்தே போகிறேன்

தொல்லைகளின் எல்லைமீறல்
தொலைகின்றன இரவுகள்
மிச்சமிருக்கும் கனவுகள்
எல்லாம் உன் நினைவுகள்

கண்ணீரின் ஈரங்கள்
காயாத நேரங்கள்
மீட்டெடுத்த சோகங்கள்
கரைத்தன காலங்கள்

Thursday, October 1, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 5

வடக்கே சூரியன்
உதித்த நாளில்
பூமி பிளந்து
விண்ணை நோக்கி
மழை பெய்த வேளை
நட்சத்திரங்கள்
வாசலில் திரண்ட நேரம்
கிணற்று நிலா பிம்பம்
வானில் ஒளிர்ந்த தருணம்
நான் உறங்கி கொண்டிருந்தேன்
கல்லறையில் உன் கண்ணீர் துளி
-------------------------------------------------------------

கண்களை தவிர்த்து
மறுபக்கம் திரும்பி
விலகி போக எத்தனித்து
வழியின்றி நெருங்கி
மனமெங்கும் கிலியோடு
கடக்கும் முன் மட்டும்
தவிர்த்தாலும் தவறாமல்
கண் பார்க்கும்
வேகம் கூடும்
ஒரு நாள் பார்க்காவிடினும்
கண்கள் தேடும்
பெருமூச்சு தொடரும்
மறுநாள் மறக்காமல்
தரிசனம் தரும்
மாதங்கள் ஆனாலும்
விட்டெறிந்த கல்லுக்கு
பழிவாங்க காத்திருக்கும்
பக்கத்து வீட்டு நாய்

-------------------------------------------------------------

எதிர்பாராத நிமிடத்தில்
எதேச்சையாய் எதிர்ப்பட்டு
மீளும் முன் மீட்டுவிட்டாள்
தவறினாலும் தவறில்லை
தொலைந்தாலும் பிழையில்லை
மண்ணிடம் விண்ணிடம் சாட்சியில்லை
இவ்விடம் அவ்விடம் பிரிவில்லை
எவ்விடம் உறைவிடம் புரியவில்லை
காதலிடம் காதலியிடம் விடையில்லை
இல்லைகள் தொல்லையில்லை
தொல்லைகள் வலிக்கவில்லை
இல்லைகள் தொலைந்தநேரம்
காதலி இல்லவேயில்லை

Wednesday, September 16, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 4

வெயிலில் உழைத்து
குடிக்காமல் சேமித்து
ஆசையாய் படம் பார்த்தேன்
உழைப்பின்றி படமெடுத்து
என் வார உழைப்பை
பிடுங்கி கொண்டார்கள்

---------------------------

வருமென்று எதிர்பார்த்து
தயாராய் புறப்பட்டு
பயந்தபடி சென்ற நேரம்
அது வரவில்லை
சுள்ளென வெயில் சுட
உள்பனியன் கூட போடாமல்
வெள்ளை சட்டை போட்ட நேரம்
எங்கிருந்தோ எட்டி பார்த்து
ஏளனம் செய்தது
என்னை அழுக்காக்க
வந்த அந்த மழை.

------------------------------

எங்கள் தெரு சாலையெல்லாம்
தார்க்கோலம் பூண்டது
அடுத்த வாரம்
மழை நிச்சயம்

---------------------------------

எட்டி பார்க்க
விட்டு சிரித்தாள்
கதறி அழுதாள்
தொட்டு துடைக்க
அழுகை நிறுத்த
மீண்டும் சிரிக்க
கைகள் நீட்டினேன்
எட்டவில்லை
கதறி அழுதேன்
சிரித்தாள்
பிடித்திருந்தது
தொடர்ந்து அழுதேன்
அம்மா உள்ளேசென்றாள்
கூடவே இடுப்பிலிருந்த நானும்

Monday, September 14, 2009

உனக்கு மட்டும் ரகசியம் - 5

மதிய நேரம். பசி வயிற்றை கிள்ளிகொண்டிருந்தது . ராம் இந்த இடத்தை விட்டு சிறிது நேரம் விலகி போய் சாப்பிட்டுவரலாம் என சங்கருக்கு போன் செய்தான். சுவிட்ச் ஆப் என்ற தகவலே வந்துகொண்டிருந்தது . வேறு வழியில்லாமல் வண்டியை பூட்டி விட்டு சாப்பிட கிளம்பினான்.

சாந்தாராமின் வீட்டு காவலாளியிடம் சொல்லி விட்டு கிளம்பலாம் என்ற கடைசி நேர யோசனையுடன் அவனிடம் சென்றான்.

"இந்தாப்பா அன்னைக்கு உன்கிட்ட வந்து ஒருத்தர் காசு கொடுத்து இந்த வீட்ல சந்தேகபடுற மாதிரி யாராவது வந்த சொல்ல சொன்னாருல அவரோட அசிஸ்டன்ட் நான். இப்ப சாப்பிட போறேன் அதுக்குள்ள யாராவது வந்தா இந்த நம்பர்க்கு போன் பண்ணு "

"சார் நானும் சாப்பிட போறேன். அய்யா சாப்பிட்டு வெளில கிளம்புவார் அதுக்குள்ள நான் சாப்பிட்டு வரணும் " ராம் வேறு வழியில்லாமல் சங்கரிடம் சமாளித்துக்கொள்ளலாம் என ஹோட்டலுக்கு புறப்பட்டான்.

புறப்பட்ட சில நொடிக்கெல்லாம் அந்த தெருமுனையில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. ஆள் அரவமற்ற அந்த மதிய வேலையில் அவன் இறங்கி நடந்து வருவதை யாரும் கவனித்திருக்க வில்லை. பழக்கப்பட்டது போல் சாந்தாராமின் வீட்டு கேட்டுக்குள் நுழைந்தான். சில நிமிடங்களில் வீட்டை விட்டு வெளியேறி மறைந்தான் .

ராம் அமிர்தம் உண்ட தேவர் போன்ற பெருமிதத்துடன் மீண்டும் வந்து காரில் அமர்ந்தான். எட்டி பார்த்தான் காவலாளியும் திரும்பியிருந்தான் . உண்ட களைப்பில் கண் சொருக ஆரம்பித்த நேரம் கார் சத்தம் கேட்டு விழித்தான். அந்த கார் உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் சாந்தாராமின் கார் வெளிப்பட்டது .

ராம் ஆர்வமாய் காவலாளியிடம் சென்றான். துக்காராம் நீண்ட தூர பயணம் செல்லும் போது சாந்தாராமின் இந்த காரை எடுத்து செல்வது வழக்கம் தான அந்நேரங்களில் அவர் துக்காராமின் காரை பயன்படுத்தி கொள்வார் என்ற தகவல் கிடைத்தது.

சங்கருக்கு மீண்டும் போன் செய்தான். இம்முறை ரிங் அடிததது ஆனால் சங்கர் தொடர்பை துண்டித்தான்.

ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்ற எண்ணம் ராமை அங்கு தொடர்ந்து காத்திருக்க அனுமதிக்கவில்லை. வண்டியை எடுத்து நேராக சங்கரின் ஆபீஸுக்கு சென்றான்.

சங்கர் அங்கு இல்லை. வெளியில் எட்டி பார்த்து சுரேஷிடம் ஒரு காபி சொல்லி சங்கரின் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தான். இந்த கம்ப்யூட்டரை சங்கரை தவிர யாரும் உபயோகித்ததில்லை அப்படி உபயோகிக்கவும் சங்கர் அனுமதித்ததில்லை .

அதியசமாக இன்று கம்ப்யூட்டர் ஷட்டவுன் செய்யப்படாமல் பயன்பாட்டுக்கிடையிலே அப்படியே விடப்பட்டு இருந்தது. அதில் திறந்திருக்க பட்டிருந்த இணையதளங்கள் மற்றும் அதிலிருந்த கோப்புகள் எல்லாம் ஹிப்னாடிசம் தொடர்புடயதாகவே இருந்தன .

திறந்திருந்த சங்கரின் இ-மெயில் பார்த்தவுடன் ராமிற்கு பகீர் என்றது. இளமாறன் கொடுத்த ஹிட்லிஸ்ட் அவரை சந்திப்பதற்கு ஒரு வாரம் முன்னரே சங்கருக்கு வந்திருந்தது.

ராம் முழுவதுமாக வியர்வையில் நனைந்திருந்தான். கிடைத்த தகவல்கள் நடந்து கொண்டிருக்கும் கொலைகளுடன் தொடர்பு படுத்தி பார்த்து தோற்றுகொண்டிருந்தான். அப்போது தான் டைம்பாம் சம்பந்தபட்ட அந்த கோப்பு அவன் கண்ணில் தென்பட்டது. அதை காரில் பொருத்தி இயக்குவது எப்படி என்ற தகவல்களும் இருந்தது.சாந்தாராம் மற்றும் துக்காராமின் கார்கள் மனதில் நிழலாடியது. எவ்வளவு பெரிய குற்றத்திற்கு தான் துணையாக இருந்திருக்கிறோம் என்ற எண்ணம் அவனை கலங்கடித்தது, ஆனாலும் இந்த தகவல்களை வைத்து சங்கர் தான் கொலைகாரன் என முடிவு கட்ட முடியாது. இளமாறனின் கடிதமும் ராமை குழப்பியது.

அவசரமாக எல்லாவற்றையும் தன்னுடய மெயிலுக்கு அனுப்பி விட்டு போலீஸை தொடர்பு கொண்டு இதை விளக்க வேண்டும் என தீர்மானித்தான். ஆனால் போலீஸ் தன்னையும் இதில் இணைத்து மாட்டிவிடுவார்கள் என தோன்றியதும் தற்போது கோப்புகளை இ-மெயில் மட்டும் அனுப்பிவிட்டு பின்னர் யோசிக்கலாம் என முடிவெடுத்தான்.

பாதி வேலை முடிந்த நிலையில் "சார் டீ" என்ற குரல் கேட்டது.

"அப்படி வச்சிட்டு போ" கணினியிடம் கூறினான்.

சங்கர் டீ கிளாஸை வைத்துவிட்டு ராமை நெருங்கினான்.

Friday, August 28, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 3தீராத முத்தங்கள்
-------------------------------
அர்த்தமற்ற சாமத்தில்
அழுகையோடு உறங்கியவனை
இமைக்காமல் பார்த்தவளை
மனதுக்குள் அறிந்தாலும்
கண்மூடி கிடந்தவனை
நெற்றியில் முத்தமிட்டு
வெளியேற நினைக்கையிலே
அழுகையோடு விழித்தான்
அவள் அழகு முகம் பார்க்க
நெற்றி முத்தம் கேட்க
முத்தம் வாங்கி உறங்குமுன்
அழைத்தான் அவளை
மழலை அழைப்பில்
மீண்டுமொரு முத்தம்

இல்லாத நினைவுகள்
-------------------------------------
சிந்திக்காமல் சிரித்த
பார்க்காமல் பழகிய
மண்ணோடு புரண்ட
மயிர் பிடித்தெரிந்த
பிரிவின்றி உண்ட
பிரியாமல் நின்ற
அடிவாங்கி அழுத
கால்முட்டி தேய்ந்த
மழையொடு ஆடிய
வெயிலோடு ஒடிய
தட்டானை பிடித்த
ஓணானை மயக்கிய
பத்துகாசு திருடிய
கண்பார்த்து பேசிய
மண்பார்த்து நடக்காத
பள்ளிக்கூட நாட்களை
நினைத்து திளைத்தேன்
பள்ளிக்கூடம் காணாத
பால்யனை பார்க்கும் வரை

முதல் துளி
-----------------------------------
விடியும் நேரம்
கஞ்சிகலயம் தூக்கி
தலப்பா கட்டி
வேட்டி மடிச்சு
ஏர் பூட்டி
கையில கொம்பெடுத்து
மாடு விரட்டி
வயலுக்கு போக
வானம் பார்த்து
காத்து நிக்கேன்
எப்ப வருமோ
அந்த மொத துளி

Monday, August 24, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 2


பள்ளிக்கூடம் பிடிக்கும்
படிக்க பிடிக்கும்
பக்கத்துக்கு பெஞ்ச் ராமு பிடிக்கும்
எப்போதும் முறைக்கும் சீதா பிடிக்கும்
அடித்தாலும் தமிழ் டீச்சர் ரொம்ப பிடிக்கும்
மைதானம் பிடிக்கும்
விளையாட பிடிக்கும்
பறக்காவெட்டி என ராமு சொன்னாலும்
பள்ளிகூட மதிய உணவு பிடிக்கும்
அதானால் பள்ளிக்கூடம் பிடிக்கும்
படிக்க பிடிக்கும்
......
......

இது கருவேலநிழல் பா. ராஜாராமின் தொடக்கபள்ளி இடுக்கைகாக
எழுதநினைத்து எழுத மறந்த கவிதை.

*******************************************************************************

வாழ்வாங்கு வாழென்று
வாழ்த்தியுனை நான் அனுப்ப
வாழாமல் வாழ்ந்துகொண்டு
வானத்தையே வெறித்து கொண்டு
வார்த்தைகளை வார்த்தெடுக்க
முற்பட்ட நேரத்தில்
வானம் மறைந்து
உன் முகமானது
தோட்டத்து பூக்கள்
பறந்து வந்த கிளி
புற்தரையில் பனித்துளி
எல்லாம் உன்னை
நினைவுப்படுத்த
வார்த்தைகள் ஊற்றெடுத்த
நேரத்தில்
பேனாவும் பேப்பரும்
காணாமல் போயிருக்க
அதை தேடி போராடும் நேரம்
பக்கத்துக்கு பைத்தியம்
போடா லூசு என
என் கால்சங்கலியை நினைவுபடுத்தியது

*******************************************************************************

மறக்க முடியாததை
மறைக்க முடியாது
மறைக்க முடியாததை
மறுக்க முடியாது

மறக்க நினைத்தாலும்
மறுக்க முடியாது
மறைக்க நினைத்தாலும்
மறக்க முடியாது

மறக்க முடியாத
மறுப்புகள் ஏராளம்
மறைக்க முடியாத
மறுப்புகள் ஏராளம்
மறுப்புகள் தந்த
மரணங்கள் ஏராளம்

மறக்காமல் என்னை
மறைக்காமல் காதலை
மறுக்காமல் ஏற்றுகொள்

Wednesday, August 19, 2009

உனக்கு மட்டும் ரகசியம் - 4


ராமின் குரல் சங்கருக்கு தூரத்தில் கேட்டுகொண்டிருந்தது. ராம் சங்கரின் தோளை உலுக்கி சகஜ நிலைக்கு கொண்டு வந்தான். அவன் கையில் ஒரு துப்பாக்கி பளிரிட்டது.

"பாஸ் இந்த துப்பாக்கி அந்த மூலையிலே உங்க பீரோக்கு பதுக்கி கீழ இருந்துச்சு"

"ராம் பெரிய சிக்கல்ல மாட்டிருக்கோம். இளமாறன கொலை பண்ணிட்டாங்க கேஸ நம்ம பக்கம் திருப்பி விட்டுட்டாங்க. இப்ப இந்த துப்பாக்கி அவங்க கைல சிக்கினா அவளோ தான். சுரேஷ் இத நீ வேற எங்கயாவது வச்சுக்க நான் அப்புறமா வாங்கிக்கிறேன் "

சுரேஷ் தலையசைத்து கவரில் மறைக்கப்பட்ட அந்த துப்பாக்கியை வாங்கி கொண்டு ஓடினான். சங்கர் அடுத்த நடவடிக்கைகளை ராமுக்கு தெரிவிக்க துவங்கினான் .

"ராம் போலீஸ் வந்தா நான் சமாளிச்சுகிறேன். நீ சாந்தாராம் வீட்டுக்கு பக்கத்துலையே சுத்திட்டிறு எதாவது சந்தேகப்படற மாதிரி நடந்தா ஒடனே எனக்கு கால் பண்ணு"

"பாஸ் என்னையும் சந்தேகத்துல விசாரிப்பாங்களா"

"நிச்சயமா விசாரிப்பாங்க அத நான் சமாளிச்சுக்கிறேன். நமக்கு அநேகமா இன்னும் 24 மணி நேரம் தான் டைம் இருக்கு. கொலைகாரன் நம்மல சிக்க வச்சிட்டு எஸ்கேப் ஆக பாக்கறான். அநேகமா எல்லா கொலையும் அவன் தான் செஞ்சிருக்கணும். அதுனால மிச்சம் இருக்கிறது சாந்தாராமும் துக்காராமும் தான். அதுனால அடுத்த அட்டாக் அங்க தான். நீ அங்க போய்டு நான் இவுங்க வந்தப்புறம் வரேன்"

"உங்கள அரஸ்ட் பண்ணிட்டா "

"மாட்டாங்கனு நெனைக்கிறேன். இந்த துப்பாக்கி பத்தி அவுங்களுக்கு தெரிஞ்சிருக்கும் அதுனால அத வச்சு அரஸ்ட் பண்ணலாம்னு வருவாங்க. அது இல்லாததால இப்போதைக்கு அரஸ்ட் பண்ண மாட்டாங்க. விசாரிக்க ஸ்டேசன் வேணா கூட்டிட்டு போவாங்க. நான் நம்ம வக்கீல் கிட்ட பேசி வந்திருவேன். நீ கெளம்பு.. தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் நமக்கு தான் ஆபத்து "

ராம் ஆம்னியை விரட்டி வாகன நெரிசலில் கலந்தான். முகம் பதட்டத்தை காட்டி கொண்டிருந்தது.

அதே நேரம் போலீஸ் சங்கரின் ஆபீசை எட்டியிருந்தது .

"சங்கர் நீங்க இளமாறனோட ஆபீசுக்கு ரெண்டு நாள் முன்னாடி வந்தீங்க இல்ல"

"ஆமா சார் வந்தேன். அவர எனக்கு ரொம்ப நாளா தெரியும் சும்மா ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு அது"

"அப்ப அவர் பாக்றதுக்கு டிஸ்டர்புடா தெரிஞ்சாரா"

"இல்ல சார் நார்மலா தான் இருந்தாரு "

"எதாவது பிரச்சனை, மனவருத்தம் எதையாவது உங்க கிட்ட சொன்னாரா "

"அந்த மாதிரி எல்லாம் சொல்லல "

"ஓகே நாங்க கிளம்புறோம். மறுபடியும் உங்க கிட்ட பேச வேண்டி இருந்தாலும் இருக்கும் "

வீட்டை அளசிபோடுவார்கள் என நினைத்திருந்த சங்கருக்கு இந்த மிகச்சாதரண விசாரணை வியப்பை ஏற்படுத்தியது. திடீரென்று ஏதோ தோன்ற
"சார் ஒரு நிமிஷம். இளமாறன் எப்படி கொலை செய்யபட்டாருனு
தெரிஞ்சுதா "

"கொலை இல்ல. தற்கொலை. ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டு துப்பாக்கியால சுட்டுட்டு செத்துட்டாரு. பாடி போஸ்ட்மார்டம் போயிருக்கு , துப்பாக்கி பாரன்சிக் லேப்க்கு அனுப்பிருக்கோம் "

முகத்தில் பெரிதாக தோன்றவிருந்த ஆச்சர்யத்தை கட்டுப்படுத்தி கொண்டான் சங்கர் .

"அப்ப அந்த ரெட்டை கொலை கேஸ் என்ன ஆகா போகுது சார் "

" தான் தான் அந்த 8 பேரையும் கொன்னேன்னு லெட்டெர்ல எழுதிருக்காரு அதுனால அந்த கேஸும் இளமாறனோட புதைக்கப்படும்" மிக சாதாரணமாக கூறிவிட்டு ஜீப்பை புழுதி பறக்க கிளப்பி கொண்டு பறந்தனர்.

தான் கேட்ட விஷயங்களை ஒரு துளி கூட நம்ப முடியாமல் சங்கர் திகைத்திருந்தான் . ஆனால் போலீஸுக்கு தங்கள் மேல் கவனம் இல்லை என்பது மட்டும் உறுதியாயிற்று .

அதே நேரம் கிரீன்வேஸ் சாலையில் சாந்தாராமின் பங்களா அருகே ராம் இன்னும் சங்கருக்காக காத்துகொண்டிருந்தான். நடக்கவிருக்கும் பயங்கரங்களை அறியாமல்.

(தொடரும்)

Sunday, August 16, 2009

உனக்கு மட்டும் ரகசியம் - 3


பதிவான உரையாடல் கேசட்டுடன் ராமும் சங்கரும் அந்த ஆம்னியில் ஆபீசை அடையும் போது இரவு 9 மணி ஆயிருந்தது.

"ராம் நீ கெளம்பு நாம காலைல பேசலாம். இளமாறன் கிட்டேர்ந்து அந்த லிஸ்டும் வந்திருக்கும் அத வச்சுக்கிட்டு நாளைக்கு விசாரிக்க வேண்டியது தான்" சங்கர் கூறியதிற்கு உதட்டால் மட்டும் உம் கொட்டி ராம் புறப்பட்டான்.

சங்கரும் பல விதமான கோணங்களில் கேஸை பற்றி யோசித்துக்கொண்டே உறங்கிப்போனான்.

டீக்கடை சுரேஷ் வந்து விடியலை நக்கலாய் அறிவித்தான்.

"என்ன சார் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டையர்டா தூங்கிட்டியா "

"என்கிட்டே நல்ல வாங்கி கட்டிக்க போற" ராம் தூக்க கலக்கத்திலேயே பேசினான் .

"ஆமா உன்கிட்ட வாங்கி தான் வீடு கட்டிக்க போறேன் . போ சார்"

"டேய் காலங்காத்தால மொக்க போடாதடா. ஒரு முக்கியமான கேஸ விசாரிச்சுகிட்டு இருக்கேன். இத மட்டும் கண்டு பிடிச்சிட்டனா அப்புறம் என் ரேஞ்சே வேற" ராம் உணர்ச்சிவசப்பட்டு கூறினான்.

"என்னமோ சார். அப்புறம் உங்கள பத்தி காலைல கட பக்கத்துல ரெண்டு பேரு கேட்டுட்டு இருந்தாங்க. இங்க இட்டாரலாம்னு பாத்தேன் அதுக்குள்ளே வேணாம்னு கெளம்பிட்டாங்க "

"எதாவது கல்யாண கேஸா இருக்கும்டா "

"ஆளுங்கள பாத்தா அந்த மாதிரி தெரில சார். கொஞ்சம் மொரட்டு ஆழ இருந்தாங்க "

"சரி சரி நீ போ நான் பாத்துகறேன்" சங்கர் கூறும்பொழுதே இந்த கேஸ் விஷயம் கசிய ஆரம்பித்ததை உணர்ந்தான் .

சரியாக 9 மணிக்கு இளமாறனின் பேக்ஸ் வருவதற்கும் ராம் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. பத்து பேர் அடங்கிய அந்த லிஸ்டை பார்த்து கொண்டிருக்கும் போது இளமாறனின் அழைப்பு வந்தது .

"சொல்லுங்க சார் லிஸ்ட் இப்ப தான் வந்துச்சு பாத்திட்டு இருக்கோம். அந்த இன்னும் கொலையாகாத நாலு பேர பத்தி விசாரிக்க கெளம்பனும் "

"நாலு இல்ல சங்கர் ரெண்டு " இளமாறன் குரலில் நம்பிக்கை குறைந்திருந்தது .


"மறுபடியும் ஒரு ரெட்டை கொலையா சார் "

"யெஸ். நேத்து ராத்திரி 1 டு 2 குள்ள நடந்திருக்கு "

"சார் நான் உங்க கிட்ட நைட் பேசுறேன் இத டிலே பண்ணா மிச்ச ரெண்டு பேரையும் அவன் கொலை பண்ணிடுவான் அப்புறம் கேஸ் கஷ்டமாயிடும் "

"ஓகே சங்கர் . ஆல் தி பெஸ்ட்" சுரத்தே இல்லாமல் வாழ்த்தி இளமாறன் இணைப்பை துண்டித்தார்.

ராம் பார்வையாலே கேள்விகளை தொடுத்தான். "கெளம்பு ராம் போற வழில எல்லாத்தையும் பேசிக்கலாம்" . சங்கர் அந்த லிஸ்டுடன் புறப்பட ஆயத்தமானான் .

வண்டி புறப்புட்டு கிண்டியை தாண்டி வாகன காட்டுக்குள் கலந்தது .

"ராம் இன்னும் ரெண்டு பேர் தான் இருக்காங்க நேத்திக்கு நடந்த அந்த ரெட்டை கொலை நம்ம வேலைய கொஞ்சம் ஈசியா ஆகிருச்சு. இன்னும் ரெண்டு பேர பாலோ பண்ணா
போதும் "

"பாஸ் அந்த பத்து பேருக்கும் தொழில் ரீதியா எதாவது போட்டி இருந்து ஏன் அவுங்களுக்கு உள்ளேயே கொலை பண்ணிருக்க கூடாது போலீஸ குழப்ப ரெட்டை கொலைனு ஒரு கான்செப்ட உள்ள கொண்டு வந்திருக்க கூடாது "

"நீ சொல்றதும் யோசிக்க வேண்டியது தான். என இவுங்க எல்லாரும் இல்லீகளா தொழில் பண்ரவுங்க எல்லாத்துக்கும் துணிஞ்சவுங்க "

கார் கிரீன்வேஸ் சாலையில் ஒரு காம்பௌண்டை ஒட்டி நின்றது.

தொழிலதிபர் சாந்தாராமின் வீடு. அளவுக்கு அதிகமான சொத்து. பத்து கார்கள் அணிவகுத்து நின்றன. அவற்றில் இரண்டு வெளிநாட்டு கார்கள். மொத்தமாக 5 கிரௌண்டில் பார்ப்பவர் அனைவரின் வாயையும் பிளக்க வைக்கும் தோற்றத்துடன் மிரட்டி கொண்டு நின்றது அந்த சொகுசு பங்களா. வீட்டை சுற்றி எப்படியும் பத்து அடி உயரத்தில் சுவர். அதன் மேலே எலெக்ட்ரிக் கம்பிகள். வெளியாள் யார் வந்தாலும் கேட்டை தவிர எப்படியும் உள்ளே நுழைய முடியாது.

"சார் இத கவனிச்சீங்களா அந்த இன்னொருத்தர் அடுத்த தெருவில தான் இருக்காரு"

"ராம் இவுங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பிங்க. போட்டி வாராத மாதிரி தொழில பிரிச்சு செய்றவங்க. மெட்ராஸ்ல ரொம்ப பிரபலம் "

ராமை காரிலேயே நிறுத்தி கேட்டை நோக்கி நடந்தான் சங்கர். அங்கு செக்யூரிடியிடம் ஏதோ பேசிவிட்டு வந்தான்.

"ராம் அந்த செக்யூரிட்டி கிட்ட காசு கொடுத்து சந்தேகப்ற மாதிரி யாரவது வந்தா ஒடனே போன் பண்ண சொல்லிருக்கேன். அடுத்து அவரு தம்பி துக்காராம் வீட்டுக்கு போவோம் "

சாந்தாராமின் வீட்டை அச்சில் வார்த்ததை போல் இருந்தது துக்காராமின் வீடு.அங்கும் செக்யூரிடியை கவனித்து விட்டு ஆபீசிற்கு வந்தார்கள். இவர்களை பார்த்து சுரேஷ் ஓடி வந்தான்.

"சார் உங்க கிட்ட ஏதோ கல்யாண கேஸ் கொடுக்கணும்னு ரெண்டு பேர் வந்தாங்க. நான் நீங்க வெளில போயருக்கீங்கனு சொன்னேன் வெயிட் பண்ணி பாக்றேன்னு உங்க ஆபீஸ்ல உக்காந்து டீ கொண்டு வர சொன்னாங்க. வந்து பாத்தா அவுங்கள காணோம் "

"காலைல சொன்னியே அதுல யாரவது வந்தாங்களா"

"அவுங்கள்ல ஒருத்தர் வந்தாரு சார்" சுரேஷ் முடிக்கவும் சங்கருக்கு பொறி தட்டியது.

"ராம் ஆபீஸ் புல்லா தேடு எதாவது புதுசா பொருள் இருக்கனு பாரு. கவிக் கவிக் ராமை துரிதப்படுத்தி கொண்டே இளமாறனை செல்பேசியில் அழைத்தான்.

"ஹலோ Mr.இளமாறன்"

"நீங்க யார் பேசுறது" மறுமுனையில் பழக்கப்படாத குரல் கேட்டது.

"அவரோட ப்ரெண்ட் பேசுறேன். என் பேரு சங்கர்"

"இளமாறன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மர்மமான முறையில கொலை செய்யபட்டுருக்கார். நீங்க உங்க அட்ரஸ் தரீங்களா கொஞ்சம் விசாரிக்கணும்" சங்கர் விக்கித்து நின்றான்.

தன்னை சுற்றி ஒரு சிலந்தி வலை பிண்ணப்படுவதை உணர்ந்தான் .

(தொடரும்)

Monday, August 3, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 1

தட்டு நிறைய காதலை வைத்து
நீ எடுக்க காத்திருக்கும்
நானும் பிச்சைக்காரன்

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

என்னவளின் கை பட்டு
வெட்கத்தில் சிவந்தது மருதாணி.

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

மலர்களின் கர்வம்
உன் கூந்தலேறியபின்
உச்சமடைகிறது

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

கடற்கரைக்கு சென்று
வானம் பார்த்து
கப்பல் பார்த்து
மக்கள் பார்த்து
நிலவு பார்த்து
மணல் நோண்டி
சிப்பிகள் தேடி
கால்கடுக்க காத்திருந்து
வானம் கறுத்து
மக்கள் கரைந்து
கப்பல் மறைந்து
நிலவை சாட்சியாக்கி
கடலுக்குள் ஓடினான்
காதலுக்குள் ஓடமுடியாததால் ...

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

நிலவின் காதலை மறுத்து
அது தேய்வதை நகைக்கிறாய்
அதாவது துக்கத்தை மறந்து வளர்ந்துவிடும்
நான் தூக்கத்தை மறந்து
தேய்ந்து கொண்டே இருக்கின்றேன்
உன் நினைவில் ..

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

கவிதைகளின் உற்பத்திக்கூடமே
காதலின் பிணக்கூடமே
பிரம்மன் செய்த சிறந்த தவறே
காலனிடம் சொல்லியிருக்கிறேன்
உன்னை கூட்டி செல்ல சொல்லி
நரகத்தில் காதல் பற்றாக்குறையாம்
சித்திரவதைகளின் கருவறையே
நீ சென்று விடு
இனிவரும் காதல்களும்
கவிதைகளுமாவது பயனுள்ளதாக இருக்கும்

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

Sunday, August 2, 2009

அஹிம்சை - குறும்படம்

என் நண்பன் இயக்கிய குறும்படம். இது ராஜ் மியூசிக்கில் போன வருடம் திரையிடப்பட்டது.குறும்படத்தை பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

Saturday, August 1, 2009

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

இன்பங்கள் மறந்த நேரங்களில்
துன்பங்கள் முளைத்த காலங்களில்
காதல் கனிந்து மறையும் தருணங்களில்

வார்த்தைகள் தொலைந்த நேரங்களில்
வாக்கியம் தேடிய காலங்களில்
மொழியை மறந்த தருணங்களில்

மகிழ்ச்சியில் திளைத்த நேரங்களில்
நெகிழ்ச்சியில் உறைந்த காலங்களில்
முயற்சியை கைவிடா தருணங்களில்

தேர்வுகள் தொடங்கிய நேரங்களில்
தேர்வுகள் முடிந்த காலங்களில்
தேர்வையே மறந்த தருணங்களில்

உயிர்கள் பிரிந்த நேரங்களில்
உறவுகள் துண்டிக்கப்பட்ட காலங்களில்
உணர்வுகள் மறுக்கப்பட்ட தருணங்களில்

முட்டு கொடுத்து
உடனிருந்த
உடனிருக்கும்
உடனிருக்கபோகும்
எல்லாருக்கும்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Monday, July 13, 2009

உனக்கு மட்டும் ரகசியம் - 2


"ராம் நான் ஏ.சி. பி இளமாறன பாக்க போறேன். நம்ம படிச்ச அந்த ரெட்டை கொலை விஷயமா பேசணுமாம். நீயும் வரியா" புறப்பட்டு கொண்டே கேட்ட சங்கரின் கேள்விக்கு எப்போதும் துடுக்காக இருக்கும் ராமிடம் சிறிது நேரத்திற்கு எந்த பதிலும் இல்லை.

"உன்ன தான் ராம் கேக்றேன். என்ன ஏதோ யோசனையில் இருக்க போல" மீண்டும் சங்கர் கேட்டபோது அரைமனதுடன் ராம் தலையசைத்து புறப்பட்டான்.

போகும் வழியெல்லாம் சங்கரின் மனது கொலை நடந்த நிகழ்வுகளை தொடர்பு படுத்தி துப்பை தேடி கொண்டிருந்தது.ராம் மௌனமாகவே வந்தான்.

"ஏன் ராம் ரொம்ப ஸைலன்டா இருக்க"

"இல்ல இந்த கேஸ நாம அவசியம் எடுத்துகணுமா? எனகென்னவோ முன்னாடி மாட்டின மாதிரி இளமாறன் மறுபடியும் ஏதாவது சிக்கல்ல மாட்டிவிட்டுருவாரோணு தோணுது"

"எனக்கும் அந்த பயம் இருக்கு இருந்தாலும் போன்ல அவர் பேசுன தொனி அப்படி தெரியல. தவிர அவர் இன்னும் போலிஸ் போர்ஸ் அதிகப்படுத்தி தேடாம நம்மல தொடர்பு கொண்டதனால கேஸ்ல ஏதொ ஒரு சொல்ல முடியாத சிக்கல் இருக்குனு நினைக்கிறேன். எதுக்கும் போய் பேசிட்டு முடிவு பண்ணலாம்"

"சரி பாஸ்"

ஏ.சி.பி அலுவலகம். சங்கரை எதிர்பார்த்துகொண்டிருந்த இளமாறன் ஒரு சிறு புன்முறுவலுடன் வரவேற்றார் பின்னாலிருந்த ராமை பார்த்து இவன் இங்கு அவசியம் தானா என்ற பார்வையை சங்கரிடம் வீசினார். சுதாரித்து கொண்ட சங்கர் "சார் இவன் என்னோட அஸிஸ்டன்ட் ரொம்ப நம்பகமானவன் துடிப்பானவன் ஸோ நீங்க பயப்படாம கேஸ் பத்திசொல்லலாம்" என சமாளித்தான்.

இளமாறனின் குளிரூட்டப்பட்ட அந்த அறையின் நிகழ்வுகள் வெளியே செல்லாதவாறு கதவை தாழிட்டு இருக்கையில் சங்கரையும் ராமையும் அமர்த்தி நடந்த கொலைகளை பற்றி விவரிக்க தொடங்கினார்.

"சங்கர் இந்த கேஸ்ல உங்கல இன்வால்வ் பண்ண வேண்டிய கட்டாயம் ஏன் வந்ததினா இதுல போலிஸ் டிபார்ட்மென்ட் ஆட்களே சம்பந்தப்பட்டிருப்பாங்கனு ஒரு சந்தேகம் இருக்கு"

"எத வச்சு சார் சொல்றீங்க" சங்கரின் விழிகள் விரிந்தது.

"இதுவரைக்கும் செத்து போன நாலு பேரும் நாங்க போன மாசம் ரகசியமா தயார் பண்ணின கேடிகள் மற்றும் பிரபலமான ஆனால் பேக்க்ரவுன்ட்ல இல்லீகல் பிசினஸ் பண்றவங்க லிஸ்ட்ல இருக்கவங்க. அந்த லிஸ்ட் எப்படி கொலைகாரன் கிட்ட கெடச்சதுன்னு தெரில, போலிஸ்ல யாரோ அவனுக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்ணி இருக்கனும்"

"வெரி இன்டரஸ்டிங் சார். அந்த லிஸ்ட் தயார் பண்ணும் போது யார்யாரெல்லாம் இருந்தாங்க"

"எனக்கு மேல இருக்ற அதிகாரிகள் நெறய பேர் இருந்தாங்க பட் அவுங்கல நான் கேள்வி கேக்க முடியாது. ஆதாரத்தோட போனா தான் முடியும்"

"ம்ம்.. சிக்கலான நிலைமை தான். கொலை பத்தின டிடைல்ஸ் ஏதாவது இருக்கா.. எனிதிங் இன்டரஸ்டிங் இன் தெம்? "

"இருக்கு. நாலுமே விசித்திர கொலைகள். ரெண்டு ரெட்டை கொலைலயும் முதல் கொலை நடந்து ஒரு மணி நேரம் கழிச்சு அடுத்த கொலை நடந்திருக்கு"

"ஒரே ஆள் இதை செஞ்சிருப்பானு நம்ப்ரீங்கலா" சங்கரின் கேள்விகளை கேட்க ராம் அதை குறிப்பெடுத்து கொண்டிருந்தான்.

"அதற்கான சாத்தியகூறுகள் இருக்கு.முதல் ரெட்டை கொலையில ஒருத்தர் தாம்பரத்தில இருந்தார் இன்னொருத்தர் சைதாபேட்டைல. அந்த இன்னொரு கொலைல ஒண்ணு ஆவடில இன்னொன்னு வில்லிவாக்கதுல."

"ரெண்டு ரெட்டை கொலைளையும் அந்த இடங்களுக்கு ஒரு மணி நேரத்துல போக முடியும். ஒரே ஆள் செஞ்சுருக்க சாத்தியம் தான். வேற ஏதாவது கொலைய பத்தின டீடைல்ஸ்"

"சங்கர் நாலு பேரும் நெத்தில துப்பாக்கில சுட்டதுனால செத்திருக்காங்க"

"எப்படியும் அவுங்கல நீங்க என்கவுன்டர்ல போட்டா அப்படி தான சுடப்போறீங்க" சங்கரின் நக்கல் இளமாறனை எரிச்சலூட்டியது.

"அந்த புல்லட்ஸ் என்னோட பெர்ஸனல் ரிவால்வரோட புல்லட்ஸ்"

சங்கர் திடுக்கிட்டான். "என்ன சார் சொல்றீங்க.அந்த ரிவால்வர் இப்ப எங்க இருக்கு"

"அத யாரோ திருடிட்டாங்க.தற்காப்புக்காக நான் சொந்தமா வச்சிருந்தது அது. லைசன்ஸ் வாங்குன ரிவால்வர். நிறைய புல்லட்ஸ் வச்சிருந்தேன் எப்படியும் ஒரு நாப்பது அம்பது இருக்கும். தொலைஞ்சதுக்கு அப்புறம் தான் இந்த புல்லெட் பத்தின ரிபோர்ட் வந்துச்சு. ஸோ இப்போ கம்ப்ளைன் பண்ணா கூட எம்பேர்ல தான் சந்தேகம் வரும். இப்ப புரியுதா உங்கள ஏன் கூப்பிட்டேனு? "

"புரியுது. நிச்சயம இது உங்கள சிக்க வக்க போட்ட ப்ளான் தான்.இந்த விஷயம் வெளில தெரியாதுல்ல?"

"தெரியாது. ஆன இன்வெஸ்டிகேசன் தொடர தொடர இத ஈஸியா கண்டுபிடிச்சுடுவாங்க. அந்த லிஸ்ட் மேட்டெர லிங்க் பண்ணா கதை முடிஞ்சுது"

"நீங்க கவலைபடாதீங்க நாங்க சைலன்டா இந்த கேஸ இன்வெஸ்டிகேட் பண்றோம். அப்புறம் அந்த லிஸ்ட் எனக்கு வேணும் அத வச்சு அடுத்த கொலை எங்க நடக்க போகுதுன்னு க்ளூ கிடைக்குதான்னு பாக்கணும்"

"நாளைக்கு காலைல வாங்க தரேன்" கூறிகொண்டே இவர்கள் வெளியேற கதவை திறந்து உதவினார். சங்கர் முகத்தின் தீவிரம் இந்த கேஸில் நிச்சயம் அவன் உதவுவான் என தோண்றிய நேரத்தில் ராமின்
முகத்திலிருந்த அந்த மெல்லிய சிறிப்பு இளமாறனை குழப்பியது.

அதே நேரம் ராமிடம் இருந்த ட்ரான்ஸ்மிட்டரின் மூலம் அங்கு நடந்த உரையாடல்கள் வெளியில் இருந்த அந்த மாருதி ஆம்னியில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

(தொடரும்)

Wednesday, July 1, 2009

உனக்கு மட்டும் ரகசியம் - 1

டிடக்டிவ் சங்கரின் ஆபீஸ்.

பேருக்குத்தான் அது டிடக்டிவ் ஆபீஸ் ஆனால் வருவதெல்லாம் கல்யாணத்துக்கு பையன் அல்லது பெண் பேக்ரவுண்ட் செக் பண்ற கேஸ்கள் தான். வருமானத்துக்கு அது போதும் என்றாலும் வேலையில் அவன் எதிர்பார்த்த த்ரில் இல்லாததால் தன்னை தானே அவன் நொந்து கொள்ளாத நாளில்லை.

இவனின் சோம்பலை மதிக்காமல் கடிகாரம் சுறுசுறுப்பாய் பத்து மணியை காட்டியது. கம்ப்யூட்டரில் முகம் புதைக்காத குறையாய் இருந்த சங்கரை டீக்கடை பையன் குரல் திருப்பியது.

"என்ன சார் வழக்கம் போல இன்னைக்கும் ஈயடிச்சிட்டு இருக்கீங்களா "

"வாய் ரொம்ப நீளுது உனக்கு" சங்கர் சற்று கோபமாக கூறியது அந்த டீக்கடை பையனை சற்று கூட பாதிக்காதது அவனுக்கு மனதிற்குள் சிர்ரிப்பை வரவழைத்தது .

"என்ன சார் டென்சன் ஆவுற சும்மா தமாசா தான் சொன்னேன்."

"டீ குடுதுட்டெல்ல நீ கெளம்பு. இரும்படிக்கிற எடத்துல ஈக்கென்ன வேல"

"சார் நீங்க எங்க இரும்படிசீங்க, ஈ தான் அடிக்கிறீங்க அப்ப நான் இருக்கிறது கரெக்ட் தான"

"நல்லா பேச கத்திருக்கடா சுரேசு " " எப்ப பாத்தாலும் கம்ப்யூட்டர்லயே இருக்கியே அப்படி என்ன தான் சார் பண்ணுவ நமக்கும் கொஞ்சம் சொல்லி கொடுத்த நானும் ஒரு டிடக்டிவ் ஏஜென்சி வச்சு பொழச்சுப்பேனே"

"நேரம் டா நேரம். ஒரு பெரிய கேஸ் புடிச்சு உங்க எல்லார் வாயையும் அடைக்கிறேன் பாரு" சங்கர் கூறிகொண்டிருக்கும்போதே ஒரு நமுட்டு சிரிப்புடன் சுரேஷ் காலி டம்ளருடன் வெளியேறினான்.

மீண்டும் கம்ப்யுட்டரில் மூழ்கலாம் என நினைத்த போது செல்போன் சிணுங்கியது. சங்கரின் அசிஸ்டன்ட் ராம் தான் அழைக்கிறான்.

"பாஸ் நான் அந்த மாப்பிள்ளை வெரிபிகேசன்காக வந்தேன். வேல சீக்கிரம் முடிஞ்சிடுச்சு நேரா ஆபீஸ் வந்திடவா இல்ல வேற எதாவது கேஸ் இருக்கா"
"இப்போதைக்கு ஒண்ணுமில்ல நீ ஆபீஸ்க்கு வா பாத்துக்கலாம் "

"சரி பாஸ்"

ராம். நல்ல துடிப்பான இளைஞன். எந்த வேலை என்றாலும் சலிக்காமல் செய்வான்.வேறு வேலை எதுவும் கிடைககாததால் சங்கரிடம் உதவியாளராய் சேர்ந்தான். பின்னர் சங்கரின் ஆர்வத்தை பார்த்து அவனுக்கும் இந்த துறையில் எதாவது பெரிதாய் சாதிக்க் வேண்டும் என்ற ஆர்வம் அவனை இதே பணியில் தொடர செய்தது.

மதிய நேரம் நெருங்கி கொண்டிருந்தது. சங்கரின் மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடி கொண்டிருந்தது. முக்கியமாக டீக்கடை பையனிடம் பெரிய கேஸ் புடிச்சு காட்றேன் என நடக்க சாத்தியமில்லாத சபதம் அடிக்கடி ஓடியது. இவனின் ஆரம்ப காலங்கள் கொஞ்சம் சுவாரசியம் கலந்த சோகங்கள் தான்.

டிடக்டிவ் ஏஜென்சி ஆரம்பித்த காலத்தில், தானே எல்லா கிரைம்சீனிலும் வலிய சென்று துப்பறிந்தான். போலீசுக்கு துப்புகள் கொடுத்து விசாரணைக்கு மறைமுகமாக பல உதவிகள் செய்திருந்தான். ஆனால் வெளிச்சத்துக்கு இவன் நிழல் கூட வந்ததில்லை. அப்போது நண்பரானவர் தான் இன்ஸ்பெக்டர் இளமாறன்.

பல கேஸ்களில் இவன் உதவியை நாடி பதவி உயர்வுகளை அள்ளி கொண்டவர். இப்போது ஏ.சி.பியாக பொறுப்பு வகிக்கிறார். சங்கரின் உதவிகள் அவருக்கு தொந்தரவாக தெரிய ஆரம்பித்தது அவருக்கடுத்து அவரது இடத்தில வந்த இன்ஸ்பெக்டருக்கும் அவன் உதவிய பொழுது தான்.

சங்கரையே அந்த கேஸில் சிக்க வைக்க இளமாறன் முயன்ற போது தான் சங்கர் தான் மாட்டியிருப்பது சிலந்தி வலையென உணர்ந்தான். பிரச்சனையில்லாமல் அதிலிருந்து விடுபட இனிமேல் போலீஸ் கூப்பிட்டாலலேலொழிய அவன் எந்த க்ரைம்சீனுக்கும் வரக்கூடாது என இளமாறனிடம் உறுதிமொழி எடுக்க வேண்டியிருந்தது.

டிடக்டிவ் வேலையை வெறுக்க தொடங்கிய அவனுக்கு பின்னர் தான் தெரிந்தது பல டிடக்டிவ் ஏஜென்சிக்கள் கல்யாண வெரிபிகேசனும் கம்பெனி செக்யுரிடிகள் காண்ட்ராக்டையும் நம்பி தான் இயங்கிகொண்டிருந்தது.

உணவின் மேல் வெறுப்பிருந்தாலும் பசிக்கு சாப்பிட்டுத்தானே ஆக வேண்டும். சங்கரின் நிலையும் அது தான். விருப்பப்பட்டு தொடங்கிய தொழிலை விருப்பமில்லாமல் செய்து கொண்டிருக்கிறான். அவனது அசிஸ்டன்ட் ராம் தான் வெளி வேலைகள் எல்லாம் கவனிப்பது இவன் ஆபீஸில் மட்டுமே அமர்ந்து வரும் சொற்ப வாடிக்கையாளர்களை கவனித்து கொள்வான். மற்ற நேரங்களில் கம்ப்யூட்டர் தான் அவனது உலகம். நாட்டு நடப்புகளை விட வெளிநாடுகளில் நடக்கும் வழக்குகள் விசாரணை அனைத்தையும் படித்து ஆராய்வது தான் வேலை. அந்நேரங்களில் காலத்தை மறந்து நடுநிசி வரை மூழ்கிக்கிடந்தது பலமுறை.

"பாஸ் என்ன பண்றீங்க.. மறுபடியும் கம்ப்யூட்டரா" ராம் கூவிக்கொண்டே வந்தான்.

சங்கர் நினைவலைகளிலிருந்து விடுபட்டு அவனிடம் சற்று முன் படித்த கேஸை பற்றி பேசினான்.

"ஆமாண்டா இங்க பாரு வெரி இன்டரஸ்டிங் கேஸ் ப்ளோரிடால நடந்திருக்கு. அப்பன கோவத்துல கொலை பண்ணி பசங்க ஒரு மாசம் பாடிய ப்ரீசர் பாக்ஸ்ல வச்சுருக்காணுங்க. அப்புறம் இன்சூரன்ஸ் பணம் கெடைக்கணும்னு அத ஆக்சிடண்டா மாத்த அவனுங்களே கார்ல கொண்டு போய் ஒரு மரத்துல மோதி பெட்ரோல் டேங்ல நெருப்பை கொளுத்தி விட்டு எஸ்கேப் ஆயிட்டாணுங்க. பசங்க தப்பிசோம்னு நெனைக்கும் போது போலீஸ் அவனுங்கள அரஸ்ட் பண்ணிச்சு. "

"எப்படி பாஸ். கேஸே வித்தியாசமா இருக்கே"

"அன்னைக்கு கார்ல ஆக்சிடன்ட் பண்ண போகும் போது ஒரு எடத்துல ஓவர் ஸ்பீடிங் அதுனால சிக்னல்ல கேமராவுல அந்த கார் பதிவாகிருக்கு அதுல கார்ல மூணு பேர் இருக்கிறது தெரிஞ்சிடுச்சு. தடயம் இல்லாம கொலை. ஆனா அதையும் சாமர்த்தியமா போலீஸ் கண்டு பிடிச்சுட்டாங்க "

"அது தான் என்ன தான் தடயம் இல்லாம பண்ணாலும் நம்மளையும் அறியாம தடயம் எதையாவது விட்டுடறது நடக்க கூடியது தான். பாஸ் இன்னைக்கு பேப்பர் படிச்சீங்களா? "

"எனிதிங் இன்ட்ரஸ்டிங்?"

" நம்மூர்ல ஒரு ரெட்டை கொலை. ஒரே மாதிரி ரெண்டு பேர கொன்னுருக்காங்க. கிட்டதட்ட ஒரே நேரத்துல ரெண்டு கொலையும் நடந்திருக்கு..ஆனா ரெண்டும் வேறவேற எடத்துல நடந்திருக்கு"

"வாட்.. ஷோ மீ தி பேப்பர்" சங்கரின் முகத்தில் திடீர் பிரகாசம். கொலையை பத்தி அதிகம் விபரங்கள் பேப்பரில் இல்லை. ஆனால் இந்த இரண்டு கொலையும் லிங்க் பண்ண போலீசுக்கு இரண்டு வாரங்கள் ஆயிருந்தன.வேறு எந்த தகவல்களும் இப்போது கூற முடியாதென்றும் கூறினால் கொலைகாரர்கள் உஷாராகக்கூடும் என்று செய்தி முடிக்கப்பட்டிருந்தது.

சங்கர் அதை படித்து முடிக்கவும் செல்போன் சிணுங்கவும் சரியாய் இருந்தது. அழைப்பை பார்த்தவனுக்கு குழப்பம் கலந்த ஆச்சர்ய ரேகைகள் முகமெங்கும் ஓடி படர்ந்தன. அழைத்தது ஏ.சி.பி இளமாறன்.

"ஹலோ சங்கர் எப்படி இருக்கீங்க. நான் இளமாறன் பேசறேன் "

"அதான் கைய கட்டி போட்டுட்டீங்கலே சார்"

"பழைய விஷயம் இப்ப வேண்டாம். உங்க ஹெல்ப் இப்ப அவசரமா வேணும்"

"சொல்லுங்க சார். இப்பல்லாம் நான் போலீஸ் விஷயத்துல தலையிடரதே இல்லயே "

"இந்த வாட்டி நானே உங்கள ரிக்வஸ்ட்ட் பண்றேன் பழச மனசுல வச்சிகிட்டு மாட்டேனு சொல்லிடாதீங்க"

"சரி சொல்லுங்க சார்"

"ரெண்டு வாரம் முன்னாடி நடந்த ரெட்டை கொலை பத்தி தெரியுமா"

"ம்.. இன்னைக்கு தான் பேப்பர்ல படிச்சேன் "

"அந்த இன்வெஸ்டிகேஷனுக்கு உங்க உதவி தேவைப்படுது.கொஞ்சம் என் ஆபீஸ் வரைக்கும் வர முடியுமா"

"நாளைக்கு காலைல வரேன் ஸார்" சங்கருக்கு தேவை இல்லமால் இதில் மாட்ட வேண்டுமா என்ற எண்ணங்கள் மேலோங்கி இருந்தது. அதை அவன் குரல் தெளிவாக இளமாறனுக்கு காட்டி கொடுத்திருக்கும்.

"இல்ல இது அவசரம். நீங்க உடனே வர முடியுமா?"

"சார் கொலை நடந்து ரெண்டு வாரம் ஆச்சு இப்ப தான் போலீஸ் ரெண்டு கொலையையும் லிங் பண்ணிருக்கு. நீங்க இவளோ நிதானமா விசாரணை பண்ணும்பொது என்ன மட்டும் ஏன் அவசரப்படுத்துறீங்க " சற்று கோபத்துடன் சொன்னான்.

"நீங்க இன்னும் பழச நெனச்சுகிட்டெ பேசறீங்க. இது அவசரம் தான். நேத்து நைட் இன்னொரு ரெட்டை கொலை நடந்திருச்சு"

"வாட்!!" கேட்டு கொண்டே சங்கர் வேட்டைக்கு தயாரானான்.
(தொடரும்)

Saturday, June 13, 2009

தேடுதல் வேட்டை - சிறுகதை

வீட்டில் ராகவன் நுழைந்து கதவை தாழிடும் போது மின்விசிறி ஓடிகொண்டிருந்தது டிவி அளவுக்கதிகமாக அலறி கொண்டிருந்தது. பால் தீயும் வாசனையை உணர முடிந்தது. ஸ்டவையும் டிவியையும் அணைத்த ராகவனுக்கு எல்லாம் புதிதாக பட்டது.

வீடு முழுவதும் தேடினான் ரேவதியை காணவில்லை. கதவை திறந்து போட்டுவிட்டு எங்கே போனாள். ஒருவேளை மாடியில் துணி எடுத்து கொண்டிருப்பாளோ?.

விறுவிறுவென வீட்டுக்குள் இருக்கும் படியில் ஏறும்போது மாடி கதவு தாழிடப்பட்டிருந்தது. எதற்கும் இருக்கட்டும் என திறந்து பார்த்தான். காரிருள் அவனை லேசாக அச்சுறுத்தியது.

கதவை சாத்திவிட்டு கீழிறங்கியபோது வீட்டின் படுக்கையறையில் சத்தம் கேட்டது. கோபம் தலைக்கேறியது. எங்கே இருந்தாள் இவ்வளவு நேரம்?

ரத்தம் கொதிக்க படுக்கையறைக்கு சென்றவன் ரத்தத்தில் கால்பட்டவுடன் திடுக்கிட்டான். குனிந்து பார்த்த போது தான் கவனித்தான் ரேவதி தலையில் ரத்துடன் கட்டிலின் கீழே கிடந்தாள். மயக்கத்தில் இருந்து மீண்டு மீண்டும் மயகதுக்குள் செல்லும் முன் ஏதோ முணுமுணுத்தாள்.

"ஏங்க அவன் இன்னும் இங்கே தான் இருக்கான் .. உடனே போலீஸ்கு போன் பண்ணுங்க "

"யாருமா யாரு உள்ள இருக்கா" . அவளிடம் பதில் இல்லை மீண்டும் மயங்கிவிட்டாள்.

ராகவனால் நடந்ததை யூகிக்க முடிந்தது. பீரோ திறந்திருப்பதும் ரேவதியின் வளையல்கள் நகைகள் காணமல் போயிருப்பதும் நிச்சயம் இது திர்ருட்டு தான் என ஊர்ஜிதபடுத்தியது . ஆனால் திருடன் இன்னும் உள்ளே தான் இருக்கிறான். படியிறங்கும் போது கேட்ட பீரோ சத்தம் அவனுடையது தான். ராகவன் இங்கே வருவதற்குள் எங்கேயோ பதுங்கியிருக்கிறான்.

பெட்ரூமில் இருந்த ரத்தம் தோய்ந்த கட்டையை எடுத்து கொண்டு ராகவன் வேட்டைக்கு தயாரானான். ஹாலுக்கு வந்து காதுகளை கூர்மையாக்கி கொண்டு நோட்டமிட்டான். அந்த அமைதியில் குண்டூசி விழுந்தாலும் குண்டு விழுந்த சப்தமாய் ராகவனுக்கு கேட்கும்.

ஒவ்வொரு அறையாக தேடி பின் அதை தாழிட வேண்டுமென தீர்மானித்து மெதுவாக ஸ்டோர் ரூம் பக்கம் சென்றான். தட்டுமுட்டு சாமான்களுடன் யாரோ பதுங்கியிருப்பது போல் தெரிந்தது. கட்டையை உயர்த்தி முழு பலத்துடன் அடித்த போது நங் என்ற சத்தத்துடன் ஏதோ உடைந்தது போல் இருந்தது. உடைந்த தேங்காய்களை பார்த்த பின்பு தான் மூட்டையை அங்கே வைத்தது ராகவன் நினைவுக்கு வந்தது. ஸ்டோர் ரூம் செக் பண்ணியாகிவிட்டது. தாழிட்டான்.

மீதமிருப்பது பூஜை ரூம், பெட்ரூம், கிச்சன் .

முதலில் பூஜை ரூமிற்கு சென்றான். சின்ன அறை தான் இருந்தாலும் ஆள் பதுங்கும் அளவிற்கு இடமிருக்கிறது. வெளியில் இருந்த லைட்டை போட்டு உள்ளே இருந்த போட்டோக்களை வெளியிலிருந்தே நோட்டமிட்டான். எந்த கன்னடியிலும் உள்ளே ஆள் இருப்பதாக பிரதிபலிப்பு இல்லை. தைரியமாக உள்ளே சென்று ஒரு நோட்டமிட்டான். தரையில் ரேவதியின் ஒற்றை கம்மலும் சில ருபாய் ணூட்டுகளும் கிடந்தது. அந்த அறையை தாழிட்டான்.

மீண்டும் பெட்ரூமிற்கு சென்றான். ரேவதி மயக்கம் தெளிந்து மீண்டும் முனகினாள். அவளை இழுத்து கட்டில் மேல் கிடத்தி அருகில் இருந்த துண்டை அடிபட்ட இடத்தில இழுத்து கட்டினான். ரத்தம் அதிகம் வீணாகவில்லை. கசிவும் இப்போது நின்றிருந்தது.

"இரும்மா இன்னும் ஒரே ஒரு ரூம் தான். அவன பிடிச்சு அடிச்சு போலீஸ் கிட்ட ஒப்படைக்கிறேன் "

"ஏங்க இருங்க எதுக்கும் போலீஸ் கிட்ட முதல போன் பண்ணி சொல்லிடுங்க "

"சரி இரு வரேன் "

நிச்சயம் கிச்சனில் தான் அவன் இருக்க வேண்டும். தைரியமாக உள்ளே போய் பிடித்து விடலாம் என ராகவன் எண்ணி கொண்டிருந்த வேலையில் மனதிற்குள் எச்சரிக்கை மணி அடித்தது.

கிச்சனில் கத்தி, அரிவாள்மனை என ஏகப்பட்ட ஆயுதங்கள் இருக்கின்றன. அவன் எதையாவது எடுத்து தாக்கினால் என்ன செய்வது. ராகவன் போலீசுக்கு சொல்வதே நல்லது என தீர்மானித்தான்.

மெதுவாக தொலைபேசியிடம் நடந்தான் .

பின்னால் கால்தடம் கேட்டது .

விரைந்து ஓடினான்.

கால்தடம் நெருங்கியது.

தொலைபேசியை எடுத்தான்.

தோளில் மூச்சு காற்று பட்டது .

ராகவன் போலீசுடன் பேசி கொண்டிருந்தான் .

தோளின் பின்னே குரல் கேட்டது .

"என்னங்க என்னங்க நான் காட்டுத்தனமா கத்திட்டுருக்கேன் இப்படி ஒரேயடியா புக்ல மூழ்கிட்டீங்களே .நேரமாச்சு தூங்க வாங்க அந்த ராஜேஷ்குமார் நாவல்ல அப்படி என்ன இருக்குதோ தெரில".Wednesday, May 27, 2009

எம்மனசு புரியலையா - கவிதை

எஞ்சோகம் கேக்குதாடி - யின் தொடர்ச்சி

தென்னங்கீத்து கட்டி வச்சு
குளிப்பாட்டி நான் இருக்க
நீ இடுக்கு வழி பாத்தபடி
என் மனசுக்குள்ள நுழஞ்சியே

புத்தம் புது சீலையிலே
தண்ணி கொண்டு போகயிலே
குறுக்காலே நீ மறிக்க
கொடமெல்லாம் உருண்டோடும்
மனசெல்லாம் தடம் மாறும்

மொத்தமா வேணுமுன்னு
நீ கேட்ட நேரமெல்லாம்
முத்தத்தோட நான் போனேன்
இப்ப மொத்தமா வந்திருக்கேன்
எடுத்துக்கன்னு நான் சொல்ல
எடுத்துக்கிற நீ இல்ல

நடக்காத கல்யாணத்துக்கு
நூறு தேதி குறிச்சோமே
பொறக்காத பிள்ளைக்கு
பேரு நூறு வச்சோமே
திருவிழா கூட்டத்திலே
மாமா நீ என் பக்கத்திலே
புள்ளையோடு போவோமுன்னு
கனவெல்லாம் கண்டோமே
வெறும் கனவாக போச்சுதே

மனசார உன்ன நெனச்சு
வேறொருத்தன் கை பிடிச்சு
காணாம போவேன்னு
காலனோட போயிட்டியா

கட்டான காவல் ஒடச்சு
காட்டுவழி ஓடிவந்தேன்
கனவோட ஓடிவந்தேன்
இப்ப கனவெல்லாம் மண்ணாச்சே
நெனப்பெல்லாம் வீணாச்சே
என் மனசு புரியாம
தப்புன்னு தெரியாம
சடுதியிலே செத்துட்டியே

அடங்காத ஆசையோட
அழியாத காதலோட
மண்ணுக்குள்ளே கெடக்கியே
இந்த பொண்ணுகுள்ளே நீயிருக்க
இந்த பொண்ணுக்கினி யாரிருக்கா

வத்தாத காதலோட
வக்கனயா வாழ்வோமுன்னு
கதை பேசி சிரிச்ச மச்சான்
ஆவியா நீ வந்து
பாவி என்ன தேடாத
உன் பக்கத்துக்கு குழியிலே தான்
பொணமாக கெடப்பேன் நான் .

Friday, May 22, 2009

பிரிதலை புரிதல் - சிறுகதை

சந்தோஷ் அந்த பள்ளிக்கு ஆறாம் வகுப்பில் சேர்ந்திருந்தான். தந்தையின் பணி மாற்றல்களால் பல பள்ளிகளில் படிக்க நேர்ந்தாலும் பல நண்பர்களை சம்பாதித்ததில் அவனுக்கு மகிழ்ச்சியே. அப்படி தான் அவன் புதிதாக சேர்ந்த அந்த பள்ளியை நினைத்து பலவித கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்திருந்தான்

முதல்நாள் வகுப்பில் இவன் நுழையும் முன்னமே மாணவர்கள் அவர்களின் தோழர்களுக்கு அருகில் இடம் பிடித்து கதை பேச தொடங்கியிருந்தார்கள். சந்தோஷிற்கு முதல் பெஞ்சில் தான் இடம் கிடைத்தது. ஆசிரியர் வந்து அனைவரின் பெயரையும் கேட்டு பின் அவரவரை பற்றி சொல்ல சொன்னார். சந்தோஷ் எல்லோருடய பெயரையும் நோட்புக்கில் குறித்து வைத்து கொண்டான். இன்டெர்வெல்லில் வலிய போய் பேச தொடங்கினான்.


இப்படியாக ஒரே வாரத்தில் எல்லோருடனும் பேசி நண்பன் ஆனான். பள்ளி நேரம் தவிர அருகில் இருக்கும் மைதானத்தில் விளையாடியும் எல்லா மாணவர்களுக்கும்மிக நெருக்கமானான். வகுப்பில் பெண்கள் மாணவர்களிடம் அதிகம் பேசுவதை தவிர்த்து கொண்டிருந்ததும் இவன் வந்த பிறகு மாறியது. காலாண்டு தேர்வு நெருங்கி கொண்டிருந்த்தது. விளையாட்டுகளுக்கு ஒய்வு கொடுத்து விட்டு அனைவரும் படிப்பதில் தீவிரமாயினர். சந்தோஷ் முதல் முறையாக அவன் வகுப்பு மாணவர்களுக்கு குரூப் ஸ்டடியை பழக்கினான். பெரும்பாலான நேரங்களில் சந்தோஷின் வீட்டிலேயே அது நிகழ்ந்தது. அப்போது அவனின் தாயார் தரும் பலகாரங்களும், பழரசமும் மேலும் பல மாணவர்களை குரூப் ஸ்டடிக்கு ஈர்த்தது.

தேர்வு தொடங்கியது.தேர்வில் இவனிடம் பென்சில் கடன் கேட நண்பனை காபி அடித்தானென ஆசிரியர் அடிக்க போக இவன் அதை தெளிவு படுத்தி அவனை விடுவிக்க பிரயத்தனபட்டது அனைவருக்கும் பிடித்திருந்தது. விடுமுறையின் எண்ணங்கள் தேர்வுகளை வேகமாக துரத்தியது. சந்தோஷ் தன் சொந்த ஊருக்கு ஒரு வாரம் போய் வருவதாக கூறி கிளம்பினான். மற்றவர்கள் ஒரு வார விடுமுறையில் எங்கே வெளியூர் செல்வது என்று உள்ளூரிலிலேயே விளையாடி பொழுதை கழிக்க தீர்மானித்தனர்.

விடுமுறை முடிந்து மறுபடியும் பள்ளிக்கூடம் திறந்த போது எல்லோர் மனதிலும் மற்றவர் விடுமுறையை கழித்த விதம் பற்றி கேட்கும் ஆர்வம் தளும்பியிருந்தது. குறிப்பாக வெளியூர் சென்ற சந்தோஷின் கதைகளை கேட்பதில் குறியாய் இருந்தார்கள். சந்தோஷ் கொஞ்சம் தாமதமாக தான் வந்தான். இம்முறை வலிய வந்து பேசியவர்களிடம் கூட அவன் பேசவில்லை. நண்பர்களின் ஆர்வம் இப்போது குழப்பமாக மாறியிருந்தது. அதற்குள் வகுப்பாசிரியர் வந்து பாடத்தை துவங்கியதால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் பாடத்தில் லயிக்க தொடங்கினர். மதிய உணவு இடைவேளையின் போது சந்தோஷ் நெருங்கி வந்தவர்களிடம் எரிந்து விழுந்தது எல்லோரின் குழப்பத்தையும் வெறுப்பாக மாற்றிகொண்டிருந்தது. காரணமில்லாமல் சண்டை போடும் அளவுக்கு என்ன நடந்தது. குரூப்பாக சென்று அவனிடம் கேட்க சென்றவர்களுக்கு சந்தோஷின் நடவடிக்கைகள் வியப்பு கலந்த ஆத்திரத்தை வரவைத்தன. என்ன தான் பிரச்சனை என அவனிடம் கேட்க வகுப்பில் ஒரு பெண்ணை தேர்வு செய்து கேட்டு வா என அனுப்பினர். அடி வாங்காத குறையாக அழுது கொண்டே திரும்ப வந்தாள் அவள்.

சந்தோஷின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் இவன் ஏன் இந்த பள்ளிக்கு வந்தான் என அந்த வகுப்பு முழுவதும் மனதுக்குள் கேள்வி கேட்டு கொண்டிருந்தது. அரையாண்டு தேர்வு வந்து கொண்டிருந்த நேரத்தில் சந்தோஷ் மொட்டை தலையோடு வந்தான். என்னடா மொட்டை என நக்கல் செய்தவனுக்கு கன்னத்தில் விழுந்தது. குரூப் ஸ்டடி செய்த கூட்டம் இப்போது சந்தோஷை எதிர்பார்க்காமல் வேறொர் இடத்தில் படித்தனர்.


தேர்வு நேரத்தில் சந்தோஷ் தன் அருகில் யாரவது அசைந்தால் கூட ஆசிரியரை கூப்பிட்டு இவன் காபி அடிக்கிறான் என கூறினான். ஆரம்பத்தில் இவன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அவன் கைகாட்டியவர்களை அடித்த ஆசிர்யர்கள் தினமும் இவன் அதை செய்யவே அவனை கண்டித்தனர். தேர்வு முடிவதற்குள் அங்கு அநேகமானவர்களின் எதிரியாக மாறிவிட்டிருந்தான் அவன். மறுபடியும் விடுமுறை நாட்கள். இப்போது சற்று நீளமான விடுமுறை. சந்தோஷ் இம்முறை சென்னைக்கு போவதாக செய்தி வந்தது. மற்றவர்கள் அவனை பற்றி அக்கரையின்றி விளையாட்டையும் விடுமுறையையும் எண்ணி இருந்தனர்.

நாட்கள் நகர்ந்து பள்ளிக்கூடம் தொடங்கியது. இம்முறை சந்தோஷ் ஒரு வாரம் ஆகியும் வரவில்லை. பள்ளியை விட்டு சென்றுவிட்டதாக ஆசிரியர் கூற அனைவர் முகத்திலும் ஆச்சர்யம் கலந்த ஒரு மகிழ்ச்சி.

மொட்டை தலை சந்தோஷ் சென்னை கேன்சர் இன்ஸ்டியூடுட்டில் ஒரு நர்ஸிடம் உரையாடிகொண்டிருந்தான்.

"உன் ஃப்ரெண்ட்ஸ்லாம் நீ ஸ்கூலுக்கு வரலனு தேட மாட்டாங்களா"

"தேட மாட்டாங்க.. கண்டிப்பா தேட மட்டாங்க " .

நர்ஸுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. சந்தோஷின் கண்களில் நீர் வடிந்து கொண்டிருந்தது.Thursday, May 14, 2009

எஞ்சோகம் கேக்குதாடி

நித்தம் நித்தம் நாம் படிச்ச
புத்தம்புது ராகமெல்லாம்
சத்தம் கித்தம் போடாம
சடுதியில சாகுதடி

மிச்சம் கிச்சம் இல்லாம
நாம் கொடுத்த முத்தமெல்லாம்
எச்சி கூட காயாம
கன்னத்துல கரையுதடி

நேத்து வச்ச மீன் கொழம்பும்
பதுக்கி வச்ச பழயசோறும்
நீ கொண்டு வருகயிலே
உன பாக்கயிலே பசி தீரும்
நீ ஊட்டயிலே ருசி மாறும்

மோட்டுவளை நீ குத்த
மறுபடியும் நான் முந்த
வேணா வேணான்னு
நீ சொன்ன கதையெல்லாம்
அந்த கருவைக்கு தெரியுமடி

கம்மாகரையிலே
நீ குளிக்கும் அழகெல்லாம்
கண்குளிர நான் பாக்க
கல்லெல்லாம் போதையானு
அத மறந்து உன பிடிக்க
கம்மாகரை காமகரையானதெல்லாம்
சடுதியிலே மறந்துடுச்சா


பத்திரமா நா வரஞ்ச
சித்திரமா நீ இருந்த
கடல் முழுங்கி துப்பும் சூரியனா நீ தெரிஞ்ச
கடன்கார பாவி என்ன கவிதையெல்லாம் எழுத வச்ச
இப்ப கவிதையெல்லாம் நெறய இருக்கு
பாவிமக நீ இல்லயே

சந்தையிலே அப்பனோட
நீ வந்த நேரமெல்லாம்
வேசம் போட்டு வளவிஎல்லாம்
தொட்டு தொட்டு போட்டு விட்ட
அந்த சுகம் தேடுதடி
மனசு கெடந்து நோகுதடி

வண்டிக்கார முருகேசன்
கருவயிலே நம பாத்து
சவுக்கால என மாத்தி
பிரிச்சி உன்னை இழுக்கையிலே
மண்டையிலே அடிச்ச அடி
நினைவு தப்பி போச்சுதடி
உன் நெனைப்பு மட்டும் மாறலடி

மழை பெஞ்சி நான் முழிக்க
கண்ணுமூடி ஓடினதெல்லாம்
உன் வீட்டு சந்தியிலே
திண்ணையிலே ஊர்கூடி
என ஒதுக்கிவச்ச சேதியெல்லாம்
தெரியாம போச்சுதாடி

காத்துவாக்குல வந்த கல்யாண சங்கதிய
அழுது சிருச்சு கொழம்பி தவிச்சேன் எங்கதிய
சத்தியமா உனக்கு மட்டும் தான்னு
நீ செஞ்ச சத்தியமெல்லாம்
நம்பி தொலச்ச வெள்ளந்தி என்ன
கழுத்தறுத்து கழுத்துதாலி வாங்கப்போக
மனசுனக்கு வந்துசசாடி

நீ சொல்லி நான் விட்ட சாராயம்
வெசம் கலந்து அத குடிச்சு
நா வெட்டுன குழியில போய் விழுந்து
காத்து வந்து மணல் மூடி
சவமாக கெடக்குதேன் நா
நீ கட்டுனவன் கைபிடிச்சு
சந்தோஷமா வாழ்ந்துக்கோடி ....