Saturday, October 16, 2010

இரப்பு - சிறுகதை


தினமும் கடந்து போகும் அந்த சாலையில் அன்று மட்டும் புதிதாக ஒரு பிச்சைகாரர் முளைத்திருந்தார். அங்கிருந்த பிச்சைகாரர்களில் பத்தோடு பதினொன்றாக இருந்தாலும் அவர்களை விட இவர் சற்றே மாறுபட்டிருந்தார். கண்களில் இந்த நிலைக்கு தான் வந்துவிட்டோமே என்ற வருத்தம் நிறைந்து இருந்தது. ஆனாலும் அங்கிருந்த மற்ற பிச்சைகாரர்களின் செயல்களை நேரிடையாக பார்த்ததால் இவரின் மேல் உடனடியாக பரிதாபம் வந்துவிடவில்லை.


மற்ற பிச்சைகாரர்களை பற்றி முதலில் பாப்போம். அந்த சாலையில் வழியே நான் அடிக்கடி போவதுண்டு. அப்படி ஒரு நாள் அந்த வழியே போகும் போது தான் முதல் முறை அதை கண்டேன். அருகில் இருந்த ஒரு சந்தில் கஞ்சா புகைத்து கொண்டிருந்தனர் அதில் சிலர். மற்றொரு நாளை காலையில் டாஸ்மாக் திறக்க அங்கு காத்திருந்தனர். பசிக்கு பிச்சை எடுப்பதே தவறென நினைப்பவன் நான். இதில் தன் சுகத்திற்காக பிச்சை எடுக்கும் இந்த இழிவு மனிதர்களை பார்த்த மாத்திரத்தில் முடிவெடுத்தேன் இனி எக்காரணம் கொண்டும் யாருக்கும் பிச்சை போட கூடாதென.


அந்த அந்த புதியவரை கண்ட போது அவர் என்னை நோக்கி கை ஏந்தி பிச்சை கேட்டார். ஆயிரம் பேர் அவரை கடந்து சென்று கொண்டிருந்தாலும் அவர் நான் பார்க்கையில் முதல் முறையாய் என்னிடம் தான் கை ஏந்தினார். நான் அவரை பார்த்ததை அவர் நான் உதவ போகிறேன் என்று புரிந்திருக்க வேண்டும். ஆனால் மற்றவர்களை போல் நானும் முகத்தை மறுபக்கம் பார்த்து கொண்டு கடந்த போது அவர் முகம் சுருங்கியிருக்க வேண்டும்.


அன்றைய அலுவலக பொழுது மிக மெதுவாக நகர நினைவெல்லாம் அந்த பிச்சைகாரர் மேல் தான் இருந்தது. வெளியூரில் இருந்து வந்து பணமில்லாமல் பிச்சை எடுக்க துணிந்திருப்பாரோ இல்லை பிள்ளைகள் ஒதுக்கி வைத்து வேறு வழி இல்லாமல் வந்திருப்பாரோ. ச்சே ஒரு ரெண்டு ருபாய் கொடுத்திருக்கலாமோ? இப்படி மனவருத்தம் ஏற்பட்டிருக்காதே. மற்ற பிச்சைகாரர்கள் ஏதோ தொழில் செய்வதை போல அங்கு அமர்ந்திருக்க இவர் மட்டும் உடல் கூசி கூனி அமர்ந்திருந்தது மனதை பிசைந்தது. மற்றவர்களின் குரலில் இருந்த சோகம் முகத்தில் இல்லை. இவரிடமோ முகத்தில் இருந்த சோகம் குரலில் இல்லை.

சாயந்திரம் கண்டிப்பாக அவரிடம் ஒரு பத்து ருபாய் குடுக்க வேண்டும். முடிவு எடுத்ததே மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

அந்த ஆறுதல் நாளை வேகமாக ஓடியது. என்றுமில்லாத ஒரு விதமான புதிய மனநிலையில் இருந்தேன். அது வருத்தமா இல்ல சந்தோஷமா என்று சொல்ல தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக உதவிக்காக ஏங்கும் ஒரு பிச்சைகாரனின் தட்டில் விழும் பத்து ரூபாய்க்கு அவன் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியில்லை. அதற்கு ஈடான ஒரு உணர்வு கையில் பணமிருக்கும் போது தோன்றது போலும்.

அவசரமாக அந்த பிச்சைகாரர்களை கடந்த அந்த பெரியவரை நெருங்கும் போது அவர் உறங்கி கொண்டிருந்தார். நின்று எழுப்பி காசு போட தோன்றவில்லை. அங்கு நடந்து பொய் கொண்டிருக்கும் அனைவரும் நான் அவரை எழுப்பி காசு கொடுப்பதை பார்ப்பார்கள் என தோன்றியது. அந்த பத்து பிச்சைகாரர்களை விட்டு அவருக்கு மட்டும் தேடி பிடித்து பிச்சை போடுவதை மற்ற பிச்சைகாரர்கள் எப்படி எடுத்து கொள்வார்கள். மன குழப்பத்தோடு நிற்காமலே சிந்தித்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். காலையில் கண்டிப்பாக அவருக்கு காசு போட வேண்டும். உறங்கி கொண்டிருந்தாலும் எழுப்பியாவது போட வேண்டும். முடிவெடுத்தேன்.

இரவு அன்று மட்டும் கழிவேணா என முரண்டு பிடித்தது. எப்போது உறங்கினேன் என தெரியாது ஆனால் விடிந்த உடன் மறக்க வாய்ப்பில்லாமல் முதலில் தோன்றியது அவருக்கு போட வேண்டிய அந்த பத்து ரூபாய் தான். மெதுவாக சாலையை அடைந்தேன். பத்து ருபாய் தாளை மேல் பையில் எடுத்து வைத்தேன். நிச்சயம் அவர் நான் பத்து ருபாய் கொடுத்தவுடன் வாழ்த்துவார். இன்றைய நாள் ஒரு நல்ல காரியத்துடன் துவங்க போகிறது. மனது பெருமிதப்பட்டது.

ஆனால். காணவில்லை. அந்த பெரியவரை காணவில்லை. அவசரமாக பக்கத்தில் இருந்த பிச்சைகாரரை விசாரித்தேன். அவரின் பதில் அத்தனை சப்தத்தையும் மௌனமாகியது அத்தனை கூட்டத்திலும் என்னை தனிமையாக்கியது .

"அவரா தம்பி. நேத்து முழுக்க இங்க இருந்தாரு. கெஞ்சி கேட்டாலே பிச்சை கெடைக்க மாட்டேங்குது. அவரு கேக்றதுக்கு யோசிச்சிட்டு இருந்தா எங்க பிச்சை விழும். பசியோடவே படுத்தாரு. நாங்க குடுத்தாலும் வாங்கிக்காம அழுதிட்டே கெடந்தாரு. அப்புறம் ரவைக்கு உசிரு போய்டுச்சு. போலீஸ் வந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய்ட்டாங்க. கொஞ்சம் சாப்பிடிருந்தா உசிராவது தங்கியிருக்கும் "

Sunday, September 5, 2010

கண் மணியே பேசு - 7 ( நிறைவு பகுதி)

"என்னது சாவித்திரியா? "

"யெஸ் மிஸ்டர் கணேஷ். அன்னைக்கு உங்க கூட பாத்தேனே அந்த ஆளுங்க கிட்ட விசாரிச்சதுல எல்லா உண்மையும் தெரிய வந்துச்சு "

"வாட் நான்சென்ஸ் மிஸ்டர் இளமாறன்"

"நடந்தத நான் சொல்றேன். நிர்மலாவ மயக்க நீங்க கொண்டு போன கர்சீப்ல க்ளோரோபார்ம்கு பதிலா விஷத்த கலந்தது, அப்புறம் பிணத்த பாண்டிசேரி கொண்டு போனது எல்லாம் உங்க மனைவி சாவித்திரியோட வேலை "

"வாட். என் சாவித்திரியா "

"யெஸ். அரெஸ்ட் பண்ணி விசாரிக்க இப்ப இருக்க சாட்சியங்கள் போதுமானதாக இருக்கு ஆனா இன்னும் நிர்மலாவோட பிணத்த கண்டுபிடிக்க முடில. அது இருந்த இடத்துல இருந்து நம்ம அங்க வரதுக்கு கொஞ்சம் முன்னாடி யாரோ தோண்டி எடுத்துட்டு போயிருக்காங்க "

சாவித்திரி அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பொங்கினாள்.

"ஏங்க நான் அப்பாவி . இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நீங்க சொல்ற அடியாட்கள நான் பாத்தது கூட கெடையாது. ஏங்க நீங்க சொல்லுங்க" கணேஷை ஏறிட்டாள் சாவித்திரி. கணேஷ் அவளை நம்புவதாக தெரியவில்லை .

இளமாறன் தொடர்ந்தார். "மேடம் உங்களுக்கு எதிரா எல்லா விட்னசும் ஸ்ட்ராங்கா இருக்கு. நீங்க விசாரணைக்கு ஒத்துழைச்சு தான் ஆகணும் "

அதற்கு மேல் முரண்டு பிடிக்க சாவித்திரி விரும்பவில்லை. "நான் வரேன் ஆனா என் வக்கீலும் என்னோட வருவார்"

வரலாம் என தலையசைத்த இளமாறனை இருவரும் பின் தொடர்ந்து சென்றனர்.

கணேஷ் நடந்தவைகளில் இருந்து விலகி சுதாரிக்கும் முன் செல்போன் ஒலித்தது .

"மிஸ்டர் கணேஷ் நாங்க அந்த பிணத்த அப்புறபடுத்திட்டோம். மேற்கொண்டு பேச வேண்டியது பேசலாமா"

"பிணத்த என்ன பண்ணீங்க? "

"ஒரு டுப்ளிகேட் டெத் சர்டிபிகேட் ரெடி பண்ணி ஊருக்கு வெளிய இருக்க ஒரு எலெக்ட்ரிக் சுடுகாட்ல எரிச்சிடோம். கண்டு பிடிக்க வாய்ப்பே இல்ல"

"பென்டாஸ்டிக் "

"நாங்க இப்ப உங்கள சந்திக்கணுமே "

"மேற்கொண்டு என்ன பேசணும்"

"உங்களுக்கு தெரியாது. உங்க மனைவி எங்க கிட்ட பேசிருக்காங்க. உங்கள பாலோ பண்ணி உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம இருந்தா பத்து லட்சம் தரதா சொன்னாங்க "

"வாட் "

"ஆமா. நீங்க எதோ பிரச்சனைல மாட்டிருக்கதா அவுங்களுக்கு தோணுச்சு. நாங்க உங்களுக்கு தெரியாம உங்கள பின் தொடர்ந்த போது தான் எல்லாம் தெரிஞ்சது"

கணேஷிற்கு தலை சுற்றியது. சாவித்திரி எத்தனை நல்லவளாக இருந்திருக்கிறாள். சாவித்திரியின் நினைவுகள் கணேஷை மேலும் சோகமாக்கி சில மணிகளை உள் வாங்கியது .

"ஏங்க! ஏங்க! . " சாவித்திரியின் குரல் கனவுகளில் ரீங்காரமிட்டு கொண்டே நிஜத்திலும் ஒலித்தது.

ஆயிரம் மின்மினி பூச்சிகள் ஒருசேர கும்மிரிட்டில் வெளிவந்தது போன்ற பிரகாசம் கலந்த ஆச்சர்யம் கணேஷின் முகத்தில் .

"ஏம்மா வந்திட்டியா .. நான் பயந்தே போய்ட்டேன்"

"ஒண்ணும் பிரச்சன இல்லைங்க . அந்த அடியாளுங்க யாரோ ஒரு பொண்ணு என் பேர சொல்லி பேசுனதா சொல்லிருகாங்க. இந்த இளமாறன் என்ன விசாரிச்சு கேள்வி கேட்ட உண்மை தெரிஞ்சிடும்னு
நினைச்சாரு . நல்ல வேல வக்கீல் ராமநாதன் இருந்தது நால பிரச்சன இல்லாம முடிஞ்சது "

"அப்ப அந்த அடியாளுங்க "

"இனி அவுங்க என்ன சொன்னாலும் எடுபடாது. பிணம் கெடைக்ற வரைக்கும் அவனுங்க கொலை பண்ணத ஒத்துக்க போறது இல்ல. பிணமும் கிடைக்க போறது இல்ல" சாவித்திரி சிரித்தாள்.

"அப்ப வக்கீல் வந்தது, நீ பேய் வந்த மாதிரி கிடந்தது எல்லாம் "

"மன்னிக்கணும் கணேஷ் . நடந்தது எல்லாம் உங்க நல்லதுக்கு தான். உங்க செல்போன் உரையாடல்களை நான் ஒட்டுகேட்டேன். நீங்க பெரிய பிரச்சனைல மாட்ட போறத உணர்ந்தேன். அதோட விளைவு தான் அந்த பேய் நாடகமும் சரியான நேரத்துல வக்கீல் வந்ததற்கான காரணமும்"

"சத்தியமா எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் என் பொண்டாட்டி" கணேஷ் மனமார்ந்து கூறினான்.

எரியூட்டப்பட்ட நிர்மலாவுடன் சேர்த்து இரண்டு உயிர்களுக்கும் கணேஷும் சாவித்திரியும் இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

அந்த வீட்டின் ஏதோ ஒரு மூலையில் க்ளோரோபார்ம் பாட்டிலில் விஷமும் , கணேஷின் கல்லூரியின் பல குரல்களில் பேசி வென்ற சான்றிதழ்களும் அமைதியாய் இருந்தன.

(முற்றும்)

கதையின் முடிவின் குழப்பங்களுக்கு விடை:

சாவித்திரியின் பார்வையில்
---------------------------------------------------------------
கணேஷ் நிர்மலா தொடர்பு மறைமுகமாக கதையில் உள்ளது. சாவித்திரி அதை அறிந்து நிர்மலாவை கணேஷ் மூலமாகவே கொலை செய்து அவரை அவளிடம் இருந்து பிரித்தாள். கணேஷிற்கு தன் மீது மனபூர்வமான நம்பிக்கை வர வேண்டுமென்று அந்த கொலை பழியில் இருந்து அவரை விடுவிக்க முயற்சி எடுத்தாள். அது அவரே உணர்ந்து தன்னிடம் திரும்பி வருமாறு செய்தாள்

கணேஷின் பார்வையில்
------------------------------------------
கணேஷ் தன் அடியாட்களுக்கு பெண் குரலில் பேசி அது சாவித்திரி தான் என்ற சந்தேகத்தை அவர்களுக்கும், பின் போலீசிற்கும் ஏற்பட செய்தார். தான் இதில் இருந்து தப்பிக்க சாவித்திரியை காட்டிகுடுக்க தயங்காத கணேஷ் , சாவித்திரியின் தேர்ந்த திட்டத்தால் தன் திட்டம் தோற்று சாவித்திரியிடம் தஞ்சமடைந்தார்.

பி. கு : கதையில் பல விஷயங்களை நேரடியாக சொல்லாமல் விட்டதால் சற்று குழப்பமாகிவிட்டது. மன்னிக்கவும். படிப்பவர்களும் எழுதுபவர்களும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை என்ற என் தவறை இந்த கதை உணர்த்தியது. அடுத்த கதைகளில் தவறுகளை தவிர்க்க முயல்கிறேன். நன்றி.

Saturday, August 28, 2010

கண் மணியே பேசு - 6


சாவித்திரி ஒரு வித குழப்பத்துடன் காத்திருந்தாள் .

ஆனால் அந்த குழப்பத்தில் ஒரு தெளிவு இருந்தது .

கணேஷை எதிர்பார்த்து காத்துக்கொண்டே இருந்தாள். அவளின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் கணேஷ் வந்து சேர்ந்தார்.

"என்னங்க ரொம்ப சோர்வா இருக்கீங்க. எதாவது பிரச்சனையா? "

"இல்ல அந்த சரக்கு கொண்டு போன லாரி சம்பந்தமா தான் பேசிட்டு இருந்தேன் "

"ஆமா மறந்துட்டேன். அந்த பிரச்சனை எல்லாம் சுமுகமா முடிஞ்சுதா ? "

"அது எல்லாம் ஓவர். ஆமா அந்த தலைசுத்தி கண் மணி உருட்டி மறுபடி கனவு எதாவது வந்துச்சா "

"இல்லங்க. அதுக்கப்புறம் எதுவும் வரல"

"நல்லது. சரி நீ சாப்பிட எதாவது எடுத்து வைம்மா "

"நீங்க டைனிங் டேபிளுக்கு வாங்க. நான் எல்லாத்தையும் எடுத்து ரெடியா தான் வச்சுருக்கேன்"

கணேஷ் முகம் கழுவி டைனிங் டேபிள் வந்தபோது உணவுடன் சொத்து பத்திரங்கள் அவரை வரவேற்றன .

"சாவித்திரி.. இது என்ன பத்திரம் எல்லாம் இங்க இருக்கு "

"என்னங்க மறந்துட்டீங்களா.. நீங்க தான இத எல்லாம் எடுத்து வைக்க சொன்னீங்க நான் எதுக்குனு கேட்டாலும்
நீங்க சரியா பதில் சொல்லல"

"வாட். நான் ரெடி பண்ண சொன்னேனா? "

"ஆமாங்க. வக்கீல் ராமநாதன கூட வர சொன்னீங்களே "

"என்னம்மா குழப்புற "

குழம்பிய நிலையில் ராமநாதனை தொடர்பு கொண்ட போது அங்கு தான் வந்து கொண்டிருப்பதாக கூறி துண்டித்தார். துண்டித்து கணேஷின் நிலையை மேலும் குழப்பமாக்கினார்.

கணேஷுக்கு இது துளி கூட விளங்கவில்லை. சொத்து சம்பந்தமாக கடந்த இரண்டு நாட்களில் பேசியதாக நினைவில்லை. ஆனால் அன்று காலை அலுவலகத்தின் ரகசிய அறையில் நடந்தது மட்டும் உண்மை என புரிந்தது . அவர்களை மீண்டும் சந்தித்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று தெரிந்தது.

"மிஸ்டர் கணேஷ் நிர்மலா செத்தது உங்க விஷத்துனால தான்னு எங்களுக்கு தெரியும் "

"சத்தியமா நான் க்ளோரோபார்ம் தான் குடுத்தேன். அவ அதுல சாக சான்ஸ் இல்ல"

"நீங்க யூஸ் பண்ணது க்ளோரோபார்ம் பாட்டில் தான். ஆனா அதுக்குள்ள இருந்தது க்ளோரோபார்ம்னு உங்களுக்கு நிச்சயமா தெரியுமா"

"அது .. வந்து.. "

"மிஸ்டர் கணேஷ் நீங்க ஒண்ணு புரிஞ்சுகோங்க. நீங்க எங்கள கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்ல. உண்மையா சொல்ல போனா உங்கள பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்த தான் இங்க வந்தோம்"

"என்ன ஆபத்து . அப்புறம் என்னை காப்பாத்துறதுல உங்களுக்கு என்ன லாபம்"

"லாபம் இருக்கு, ஆனா அது என்ன. நாங்க யாருன்னு கேக்காதீங்க. இந்த நேரத்துல அத நீங்க தெரிஞ்சுகறது உங்களுக்கும் நல்லது இல்ல எங்களுக்கும் நல்லது இல்ல"

"சரி. எனக்கு தெரிஞ்சதெல்லாம் இது தான். நிர்மலாவ மிரட்டி இன்னும் எங்களுக்கு எதிரா எதாவது ஆதாரம் இருந்தா வாங்க தான் வர சொன்னேன் . ஆனா விஷயம் கை மீறி போய்டுச்சு "

"இல்ல கணேஷ்.. கை மீறி போல. கை மீறி போக வைக்கப்பட்டிருக்கு. உங்களுக்கு எதிரா ஒரு கூட்டம் செயல்பட்டுட்டு இருக்கு. அத பத்தி நாங்க விலாவரியா அப்புறம் சொல்றேன். நீங்க ஒடனே வீட்டுக்கு போங்க"

"ஏன் .. எதுக்கு . அப்ப இந்த பிணம் "

"அத நாங்க பாத்துக்றோம். உங்கள காப்பாத்த பாண்டிச்சேரில இருந்து இத கொண்டு வந்தோம் , இங்க இருந்து அப்புறபடுத்துறதா கஷ்டம். நீங்க உடனே வீட்டுக்கு போங்க. அங்க நடக்க போற விஷயங்கள் உங்களுக்கு கொஞ்சம் தெளிவ ஏற்படுத்தும் "

அவர்கள் கூறியது கணேஷ் மனதில் ஓடி கொண்டிருந்தது. அந்த காலிங் பெல் ஓசை அந்நினைவை கலைக்கும் வரை.

"என்னங்க வக்கீல் வந்துட்டாரு போல"

"சரி இரு நான் போய் பாக்றேன் "

கதவை திறந்த கணேஷ் இளமாறனை கண்டு திகைத்தார் .

"இது யாரு? அதோ கேட் பக்கத்துல வக்கீல் வந்துட்டார் பாருங்க" இளமாறனை கண்டு திகைத்த சாவித்திரி வக்கீல் ராமநாதனை கண்டதும் சாந்தமடைந்தாள் .

"ஹலோ.. மிஸ்டர் கணேஷ். எப்படி இருக்கீங்க.. போலீஸ் இங்க என்ன பண்றாங்க" இரு கேள்விகளை கேட்டு கணேஷை பார்த்த ராமநாதனை சாவித்திரி வரவேற்று உள்ளே கொண்டு போனாள் .

கணேஷ் ஏற்கனவே இருந்த குழப்பத்தில் ராமநாதன் சாவித்திரியிடம் ஒரு வித அன்னியோன்யம் இருப்பதை கவனிக்கவில்லை.

இளமாறன் நடந்தவைகளை உள்வாங்கி கொண்டு தன் கம்பீர குரலில் வந்த வேலையை பார்க்க துவங்கினார்.

"யு ஆர் அண்டர் அரெஸ்ட்" கர்ஜித்தார்.

"சார்.. நான் என்ன பண்ணேன்" கணேஷ் முகத்தில் அப்பாவித்தனத்தை காட்டிகொண்டிருந்தார் .

"உங்கள இல்ல மிஸ்டர் கணேஷ். அவங்கள " இளமாறனனின் பார்வை கணேஷை கடந்து சென்றது.

(திகில் தொடரும்)

Saturday, August 21, 2010

கண் மணியே பேசு - 5


கணேஷை வரவேற்க அந்த ரகசிய அறைக்குள் பிணத்துடன் காத்திருந்தனர் அந்த நான்கு கண்களுக்கு சொந்தகாரர்கள்.

"என்ன மிஸ்டர் கணேஷ் எங்கள இங்க எதிர்பார்கலல?"

"நீங்க..நீங்க... யாரு? நான் இதுக்கு முன்னாடி பாத்ததே இல்லையே "

"பயப்படாதீங்க கணேஷ். நாங்க உங்களுக்கு வேண்டியவங்க தான்"

"வேண்டியவங்களா? "

"பின்ன. போலீஸ் கிட்ட நீங்க கொலை செஞ்ச நிர்மலாவோட பிணம் சிக்காம இருக்க நாங்க தோண்டி எடுத்துட்டு வந்து உங்கள காப்பாத்துணோமே. அப்ப நாங்க உங்களுக்கு வேண்டியவங்க தான? "

"நிர்மலாவ நான் கொலை பண்ணேனா?"

"போதும் மிஸ்டர் கணேஷ். நிர்மலாவ மயக்குறதுக்கு யூஸ் பண்ண க்ளோரோபார்ம்ல விஷம் கலந்து அவள நீங்க கொலை பண்ணது எங்களுக்கு தெரியும்"

"வாட் நான்சென்ஸ்"

"நீங்க அந்த பழிய உங்க ஆட்கள் மேல போட முயற்சி செஞ்சது கூட எங்களுக்கு தெரியும் "

"நீங்க நல்லா கற்பனை பண்றீங்கன்னு நினைக்றேன். உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். உங்களுக்கு இப்ப என்ன வேணும் "

"மிஸ்டர் கணேஷ் எங்களுக்கு என்ன வேணும்னு நாங்க அப்புறம் சொல்றோம். ஆனா நீங்க தப்பு செய்யலன்னு மட்டும் சொல்லாதீங்க. நிர்மலா பிணத்த போலீஸ் பிடிச்சு போஸ்ட் மார்டம் செஞ்சா எல்லாம் தெரிஞ்சிடும்"

"தாராளமா செய்ங்க. நிர்மலா மூச்சு திணறி செத்தானு தான் வரும் "

"கணேஷ், உங்களுக்கு இன்னும் பல விஷயங்கள் புரியலன்னு நினைக்றேன்"

---------------------------

பாண்டிச்சேரி .

"சார், அவங்கள அப்பவே பிடிச்சிருக்கலாமே ஏன் விட்டுட்டு இப்ப அந்த பசங்கள பிடிக்க போறோம் "

"எல்லாம் ஒரு காரணமா தான் கண்ணையன். அங்கேயே அவங்கள பிடிச்சிருந்தா நமக்கு அவங்க அங்க வந்ததுக்கான உண்மையான கரணம் தெரியாம போயிருக்கும்" இளமாறன் பதிலில் ஒரு திட்டம் உருவாகியிருந்தது தெரிந்தது.

"அப்ப அவங்க வந்தது அவங்க சொன்ன காரணத்துக்காக இல்லையா? "

"நிச்சயமா இல்ல. அந்த டெலிபோன்ல வந்த தகவல் படி எதோ புதைக்க தான் தோண்டிருக்காங்க. ஆனா இவுங்க சொன்ன சுண்டக்கஞ்சி கதை நம்பும்படியா இல்லை"

"அப்ப அவரோட ஆட்கள புடிச்சு உண்மைய விசாரிச்சிடலாமா? "

"அது ரொம்ப ஈஸி இல்ல. இத லத்தியால செய்றத விட புத்தியால செஞ்சா தான் உண்மை தெரியும் "

"சார்! சார்!. அவனுங்க வண்டி அங்க நிக்குது பாருங்க"

"கண்ணையன், நீங்க போய் அவனுங்கள கூட்டிட்டு வாங்க. நான் இங்க நிக்றேன் "

"சரி சார்"

அந்த கும்பல் போலிசை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. சாமர்த்தியமாக ஒரு பெரும் சிக்கலில் இருந்து நழுவியதாக நினைத்து கொண்டிருந்தார்கள். அந்த நினைப்பில் மூழ்கி இருந்தவர்களை கண்ணையனின் குரல் சற்றே பயமுறுத்தியது.

"டேய் . எல்லாரும் வெளிய வாங்க. சப்-இன்ஸ்பெக்டர் சார் கூப்டுறாரு"

"ஏன்? எதுக்கு? .. நாங்க என்ன செஞ்சோம்"

"பதில் சொன்னா தான் வருவீங்களா. வாங்கடா" கண்ணையனின் உருட்டலில் சப்தம் மொத்தமாக அடங்கியது.

"சார், எதுக்கு சார் எங்கள கூப்டீங்க" கும்பலின் தலைவன் பாண்டி தான் முதலில் பேசினான்.

"எதுக்கா.. தெரியாத மாதிரி கேக்றீங்க. ஒரு பொண்ண புதைச்சிட்டு அப்புறம் ஏதும் தெரியாத மாதிரி என் கிட்டே கதை சொல்லிட்டு போனீங்க" இளமாறன் போட்டு வாங்க முயன்றார்.

"என்ன சார் சொல்றீங்க. நாங்க புதைச்சோமா? . நீங்க அங்க தான் செக் பண்ணீங்களே சார். பிணம் ஏதும் கிடைக்கலையே "

"சமாளிக்கிறதா நெனச்சுட்டு பொய் சொல்லிட்டே போகாத. மாட்னா அப்புறம் வெளிய வர முடியாத அளவுக்கு ஆய்டும்"

"சார் சும்மா மிரட்டாதீங்க. நீங்க என்ன கேட்டாலும் இது தான் என் பதில்"

"நிச்சயமா?"

"நிச்சயமா சார்"

"எங்க ஆளுங்க கணேஷ பிணத்தோட புடிச்சிருகாங்கனு சொன்னா கூடவா "

இளமாறனின் சற்றும் எதிர்பாராத அந்த பதிலில் அனைவருமே திகைத்தனர்.

கண்ணையன் ஆச்சர்யத்தில். மற்றவர்கள் அதிர்ச்சியில்.

அடுத்து வரும் வார்த்தைகள் தங்கள் வாழ்கையையே தீர்மானிக்கும் என பாண்டிக்கு புரிந்தது.

(திகில் தொடரும்)

Saturday, August 14, 2010

கண் மணியே பேசு - 4


கணேஷின் கார் வீட்டை சென்றடைந்த நேரம் நிர்மலாவின் பிணம் அவர் அலுவலகத்தில் இறக்கப்பட்டு கொண்டிருந்தது.

சாவித்திரி சலனமில்லாமல் உறங்கிகொண்டிருந்தாள் .

கணேஷுக்கு இரவு விடியாமல் நீண்டு கொண்டே போவது போன்ற உணர்வு ஏற்படிருந்தது. யோசித்து கொண்டே உறங்கிபோனார்.

காலையில் சாவித்திரி குளித்து முடித்து காபியுடன் வந்து அவரை எழுப்புகையில் இரவு நடந்தது எல்லாம் மனதிற்குள் தோன்றவில்லை.

சாவித்திரியின் கண்கள் ஆனால் ஏதோ பதிலை எதிர்பார்த்து கொண்டிருந்தது கணேஷிற்கு புரிந்தது .

"போலீஸ்கு காசு குடுத்து லாரிய ரிலீஸ் பண்ணிடேம்மா "

சாவித்திரி திருப்தி அடையவில்லை. "அத பத்தி சொல்ல வரலங்க. நேத்து நீங்க போனப்புறம் மறுபடியும் அந்த பொண்ணு பத்தின கனவு வந்துச்சு "

காபி எழுப்பி விடாத உணர்வுகளை சாவித்திரி எழுப்பிவிட்டாள்.

"கனவுல என்னமா வந்துச்சு. அந்த பொண்ணு பிணத்த தோண்டி எடுத்தாச்சா "

"அது தான் நான் முன்னாடியே சொன்னேனே. போலீஸ் பிணத்த தோண்டி எடுத்துட்டாங்க"

"போலீசா?" கணேஷ் இரவு நடந்ததை நினைத்து பார்த்து குழம்பினார்.

"ஆமாங்க போலீஸ் தான் . இப்ப பிணத்த எதோ ஒரு பாக்டரிக்கு கொண்டு போனாங்க"

"பாக்டரியா? பேரு எதாவது தெரிஞ்சுதா? "

"இல்லங்க. பாத்தா நம்ம பாக்டரி மாதிரி தெரிஞ்சுது "

"என்னது நம்ம பாக்டரியா ?"

"இல்லங்க .. இருக்காது .. எனக்கு தான் நம்ம பாக்டரி நல்லா தெரியுமே.. பாக்க அப்படி இருந்துச்சு ஆனா அந்த இடம் நான் இது வரைக்கும் பாத்ததே இல்ல "


"சரி சரி. விடு. நமக்கென்ன. நம்ம கவலைப்பட வேண்டிய விஷயமா என்ன" கணேஷின் பதிலில் கவலை இருந்தது.

"ஆமாங்க. நீங்க சொல்றதும் சரி தான்" சாவித்திரி ஒரு வினோத புன்னகையுடன் விஷயத்தை முடித்தாள்.

கணேஷின் பாக்டரியின் எல்லா இடத்தையும் சாவித்திரிக்கு காட்டியதில்லை. ரகசியமான அந்த ஒரு பகுதியை சாதரணமாய் யாரும் கவனித்திட முடியாது. சாவித்திரியும் கவனித்ததில்லை அவரிடம் அதை பற்றி கேட்டதும் இல்லை. ஆனால் அவள் கனவில் பார்த்ததாக கூறியது அந்த ரகசிய பகுதியை போல இருந்தது. அவசரமாக அங்கு கிளம்பினார்.

சாவித்திரி அவரை தடுக்கவில்லை. அந்த வினோத புன்னகையும் அவளை விட்டு விலகியிருக்க வில்லை. கணேஷ் சென்று வெகு நேரம் ஆகியும் புன்னகை மாறவில்லை.



கணேஷ் அலுவலகத்துக்கு சென்று அருகில் இருக்கும் பாக்டரிகுள் நுழைந்தார் . நேராக அந்த ரகசிய அறைக்குள் சென்றார். அறை என்பதை விட அது பரந்து கிடக்கும் பூமி என்றே சொல்லலாம். எப்படியும் நான்கு அல்லது ஐந்து கிரௌண்ட் பரப்பு இருக்கும். மண்தரை. ஆங்காங்கே மண் குவியல்கள் . வெளியில் இருந்து பார்த்தால் வெறும் சுவர் போல தான் தெரியும் ஆனால் அந்த சுவருக்கு அந்த பக்கம் செல்ல படிகட்டுடன் கூடிய ஒரு ரகசிய வழி இருபது கணேஷுக்கு மட்டும் தான் தெரியும். அல்லது அவருக்கு மட்டும் தான் தெரியும் என்பது கணேஷின் அனுமானம் .

கணேஷ் படியில் அந்த அறைக்கு செல்ல ஆயத்தமானார்.

அங்கு காத்திருக்கும் பயங்கரங்களை அறியாமல்.

(திகில் தொடரும்)

Sunday, August 1, 2010

கண் மணியே பேசு - 3


கணேஷின் மனதின் ஓட்டத்திற்கு காரும் ஈடு கொடுத்ததால் முதலில் அந்த இடத்திற்கு சென்றார். அவர் சென்ற ஐந்தாவது நிமிடம் அவரது ஆட்களும் வந்தனர்.

நேரம். பன்னிரெண்டே முக்கால் .

அவருக்கு முன்னர் அங்கு வந்து சென்ற நான்கு கண்களையும் அங்கு வரப்போகும் போலீஸ் பற்றியும் கணேஷ் அறிந்திருக்கவில்லை.

"டேய் வாங்க தோண்ட ஆரம்பிப்போம். என் பொண்டாட்டி கணக்கு படி போலீஸ் வர இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல இருக்கு"

"என்ன பாஸ் சொல்றீங்க. போலீஸ் வராங்களா. எங்களுக்கு ஒண்ணுமே புரில"

"அதெல்லாம் அப்புறம் சொல்றேன். முதல்ல தோண்டுவோம் வா"

அனைவரும் தோண்டுவதற்கு ஆயத்தமானார்கள்.

பாதி தோண்டி முடித்த நிலையில் அந்த பெண்ணின் பிணம் இருப்பதற்கான அறிகுறி ஏதும் இல்லை.

"டேய்.. இடம் கரெக்ட் தான? "

"நிச்சயமா இதே இடம் தான் பாஸ். ஆனா அதுக்குள்ள பொணம் எங்க போயிருக்கும்னு தான் புரில"

"பிரச்சனை பெருசா ஆய்ட்டே இருக்கு டா "

"பாஸ் . பாஸ் . போலீஸ் வண்டி வருது" நொடியில் அனைவரையும் கிலி ஆட்கொண்டது.

கணேஷ் உறைந்திருந்தார்.

"இந்த நேரத்துல ..இங்க எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க" இளமாறன் மிரட்டலில் அனைவரும் அதிர்ந்தனர்.

"அது வந்து சார். வண்டி ரிப்பேர் ஆய்டுச்சு அதான் நிறுத்தி பாத்துட்டு இருக்கோம்" கணேஷ் சமாளிக்க முற்பட்டார்.

"அங்க என்ன பள்ளம் நோண்டுன மாதிரி இருக்கு" இளமாறன் தொடர்ந்தார்.

"அது ..... அது...." கணேஷ் திணறினார்.

"கான்ஸ்டபல் நீங்க அங்க போய் செக் பண்ணி பாருங்க"

"சார் என் பேரு கணேஷ். நான் மெட்ராஸ்ல பெரிய பிசினஸ் மேன். நீங்க என்ன சந்தேகபடுறது நல்லா இல்ல. நாங்க எல்லாரும் கடலூர் போயிடு இருக்கோம். நடுவுல இந்த பசங்க இங்க சுண்டக்கஞ்சி புதைச்சு வச்சிருகாங்கனு ஆசைப்பட்டு தேடிட்டு இருந்தாங்க அதான் பள்ளம்"

"அப்படியா சரி எல்லாரும் ஸ்டேஷன் வாங்க. அங்க பேசலாம்"

தூரத்தில் கான்ஸ்டபல் குரல் கேட்டது.

"என்ன கண்ணையன் எதாவது கெடச்சுதா "

"பள்ளத்துல ஏதும் இல்ல சார். ஆனா ஒரு பேப்பர் கேட்குது. லெட்டர் மாதிரி இருக்கு. இருட்டுல என்ன எழுதிருக்குனு தெரில"

"சரி இங்க கொண்டு வாங்க கார் லைட் வெளிச்சத்துல படிப்போம்"

கணேஷுக்கு அந்த வேளையிலும் வியர்த்து வழிந்து கொண்டிருந்தது. அவரது ஆட்களுகோ என்ன நடக்கிறது என்று விளங்கவில்லை. ஆனால் கணேஷ் இருக்கும் வரை பிரச்சனை இல்லை என மட்டும் நம்பினார்.

இளமாறன் லெட்டரை வாங்கி காரின் முன் நின்று படிக்கச் தொடங்கினார். கணேஷின் இதயத்துடிப்பு நொடிக்கு மூன்று முறை அடித்துகொண்டிருந்தது.

இளமாறன் கையில் கடிதம். சாவித்திரி சொன்னது போலவே.

"கண்ணையன் கார் ஹெட் லைட்ட ஆன் பண்ணுங்க "

கண்ணையன் உடனே ஆன் செய்ய இளமாறன் கடிதத்தை படிக்க தொடங்கினார்.

"அன்புள்ள காதலி ப்ரீத்திக்கு ... இது எதோ லவ் லெட்டர் மாதிரி இருக்கு".

கணேஷ் நீண்ட நேரம் கழித்து சுவாசிக்க தொடங்கியிருந்தார்.

திடீரென அவர் பார்வை இளமாறனின் கையை கவனித்தது. இளமாறன் கையில் கடிகாரம் இல்லை.

அவர் எண்ணத்தை கேட்டது போலவே கான்ஸ்டபல் கண்ணையன் கேட்டார்.

"சார் கைல வாட்ச் இருந்ததே காணும் "

"நான் தான் ஜீப்லையே கழட்டி வச்சுட்டு வந்தேன். சரி வெறும் லவ் லெட்டர் தான். காத்துல பறந்து வந்திருக்கு. Mr.கணேஷ் உங்க கார்டு குடுத்துட்டு போங்க. நான் வேற எதாவது தேவைன கால் பண்றேன்"

கணேஷ் கார்டை குடுத்து அவரிடம் விட்டு விடைபெற்றார். தற்காலிகமாக.

"டேய் நீங்க பாண்டிச்சேரிலயே இருங்க. மேற்கொண்டு என்ன பண்ணனும்னு நான் சொல்றேன். நான் உடனே வீட்டுக்கு போகணும் இல்லனா என் பொண்டாட்டிக்கு சந்தேகம் வந்துரும்"

"சரி பாஸ்"

கார் சென்னைக்கு விரைந்தது.

பிணம் எங்கே போனது. சாவித்திரி சொன்னது போல லெட்டர் இருந்தது ஆனால் இன்ஸ்பெக்டர் கையில் கடிகாரம் இல்லையே. லெட்டரும் எதோ லவ் லெட்டராக போய் விட்டது. இரண்டு மணிக்கு வர வேண்டிய போலீஸ் ஒரு மணிக்கே ஏன் வந்தது. போலீஸ் ஸ்டேஷன் வர வேண்டும் என முதலில் சொன்ன இளமாறன் பின்னர் விட்டது ஏன். அனைத்தும் புதிராகவே இருந்தது

கணேஷ் யோசித்து கொண்டிருந்த நேரம் இன்னொரு காரில் அந்த நான்கு கண்களின் சொந்தகாரர்கள் பயணித்து கொண்டிருந்தனர்.

இருவரும் போலீஸ் உடையில். கையில் டைட்டன் கடிகாரம் நேரத்தை ஒட்டி கொண்டிருந்தது. பையில் ஒரு கடிதம். வண்டியில் நிர்மலாவின் உடல்.

(திகில் தொடரும்)

Sunday, July 25, 2010

கண் மணியே பேசு - 2


கணேஷ் அந்த நிலையில் இருந்து வெளிவர சற்று நேரம் ஆனது. நடந்ததை மனதிற்குள் எத்தனை முறை ஒட்டி பார்த்தாலும் குழப்பங்கள் மட்டுமே விடையாய் கிடைத்தது.

நேரம் பத்தை தொட்டு கொண்டிருந்தது.

அறையில் சாவித்திரி அமைதியாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

ஜன்னல்களில் புகுந்து மெல்லிய காற்று அறையை நிரப்பி கொண்டிருந்தது. நிசப்தமான இரவில் அந்த காற்றும் ஒரு வித கிலியை உண்டு பண்ணி கொண்டிருந்தது.

அமைதியான வேளையில் திடீரென்று நாய்கள் குரைக்க துவங்கின. சாவித்திரி லேசாக அசைய துவங்கிய நேரம் கணேஷ் சட்டென சென்று ஜன்னல்களை அடைத்தார்.

வாசலுக்கு சென்று என்னவென பார்க்க வெளியே வந்த நிமிடம் நாய்களின் சப்ப்தங்கள் இல்லை. தெருவில் எட்டி பார்த்தல் அங்கு நாய்கள் இல்லை.

அமானுஷ்யத்தை கணேஷ் நம்பியதில்லை. ஆனால் அதன் வாதங்கள் கடந்த நான்கு மணி நேரமாக நடக்கும் நிகழ்வுகளை நினைவூட்டிக்கொண்டிருந்தன.

வழக்கத்திற்கு மாறாக தெரு மயான அமைதி பூண்டிருந்தது. கணேஷ் உள்ளே திரும்பி கதவை தாழிட்ட நேரம் தெருவில் ஆட்டோ ஒன்று அத்தனை அமைதியையும் குலைத்து கொண்டு சீறிசென்றது.

கணேஷிற்கு அனைத்தும் விசித்திரமாய் பட்டது. யோசித்து கொண்டிருந்த வேளையில் சாவித்திரியின் அறையில் அலறல். விருட்டென ஓடிய கணேஷ் சாவித்திரியின் கோலத்தை பார்த்து நிலைகுலைந்து போனார்.

கட்டிலின் மேல் தலைவிரி கோலமாய் ஏதோ மந்திரத்தை உச்சரித்து கொண்டிருந்தாள் அவள்.

கண்களில் கோபம் தாண்டவமாடியது. கண் மணிகள் மீண்டும் இடது வலது என கடிகார பெண்டுலம் போல ஆடிகொண்டிருந்தன.

ஜன்னலின் வழியே காற்று நுழைந்து அந்த அறையை இடைவெளி இல்லாமல் மீண்டும் நிரப்பிகொண்டிருந்தது.

சாவித்திரியின் சப்தம் குறைந்து கொண்டிருந்தது. கணேஷ் அவள் அருகில் அமர முதல் முறையாக பயந்தார். சற்று நேரம் அவளையே உற்று நோக்கி கொண்டிருந்தார். சாவித்திரி சத்தியமாக தன சுய உணர்வில் இல்லை என புரிந்தது. அவளை தொட எத்தனித்த வேளையில் அவள் மந்திரம் நின்றது. படுக்கையில் பொத்தென விழுந்தாள்.

கணேஷ் அவளை தட்டி எழுப்பிகொண்டிருகும் பொது அறை மீண்டும் நிசப்தமானது. ஜன்னல்கள் மெதுவாக மூடி கொண்டன. அறையில் இருந்து எதுவோ ஜன்னலின் வெளியில் சென்ற ஒரு உணர்வு கணேஷை ஆட்கொண்டது.

சிந்தனையில் இருந்த கணேஷை ஏதோ உலுக்கியது. ஒரு நிமிடம் தன்னை சுற்றி நடப்பதை மறந்து இது வரை நம்பாததை எல்லாம் யோசித்து கொண்டிருந்த வேளையில் அந்த உலுக்கல் அவரை அலற செய்ததது.

"என்னங்க, என்னங்க நான் தான். ஏன் இப்படி பேய் அடிச்சா மாதிரி இருக்கீங்க" சாவித்திரி தெளிவாக பேசிகொண்டிருந்தாள் .

உலுக்கியது யார் என்று தெரிந்து நிம்மதி பெருமூச்சு விட்ட கணேஷின் மனதின் கேள்விகள் ஒலியாக வெளிப்பட்டன.

"இப்ப என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியுமா சாவித்திரி ?"

"இல்லங்க . லேசா தலைவலிக்குது .. அப்புறம் கனவு மாதிரி ஒண்ணு வந்துச்சு . அது முடிஞ்சா உடனே எழுந்திருச்சிட்டேன் "

"கனவா . சொல்லு சொல்லு . என்ன வந்துச்சு . சீக்கிரம் சொல்லு"

"ஏங்க இப்படி பதட்டப்படுறீங்க? ஏதோ நிஜத்துல நடக்கிறது கனவுல வர மாதிரி கேக்குறீங்க"

"சும்மா ஒரு ஆர்வம் தாமா . சொல்லு"

"அந்த பொண்ணு உடம்ப புதைச்ச இடத்துல போலீஸ் இருக்காங்க. அவ உடம்ப தோண்டி எடுக்குறாங்க"

"என்னது போலிஸா? "

"ஆமாங்க.. அவ பாக்கெட்ல ஒரு லெட்டர் கூட இருந்துச்சு"

"இரு.. இரு.. லெட்டரா.." கணேஷிற்கு போலீஸ் இருக்கும் பயம் போகும் முன் லெட்டர் என சாவித்திரி சொன்னது இன்னும் பயமுறுத்தியது.

"ஆமாங்க .."

"லெட்டர்ல என்னமா இருக்கு.. "

"அது தெரிலேங்க.."

"வேற எதாவது பாத்தியா"

"ம்ம்.. அந்த லெட்டெர ஒருத்தர் கைல வச்சுருக்கார். அவர் கைகடிகாரத்துல மணி ரெண்டுன்னு இருக்கு"

"என்ன வாட்சனு தெரியுதா"

"ஆமா டைட்டன்னு போட்ருக்கு"

"சரி விடு இத இத்தோட விட்ருவோம். நீ தூங்கு. ஆபீஸ்ல இருந்து போன் வந்துச்சு. ஏதோ சரக்கு ஏத்திட்டு போன லாரிய போலீஸ் பிடிசிருக்காங்கலாம். நான் போய் பாத்துட்டு வரேன் "

"ஏங்க சீக்கிரம் வந்துருங்க "

"கண்டிப்பாமா "

கணேஷ் அவசரமாக கடிகாரத்தை பார்த்தார்.

நேரம் பதினொன்றை நெருங்கி கொண்டிருந்தது. செல்போன் எண்கள் அவசரமாய் அழுத்தபட்டன.

"டேய்.. எங்கடா இருக்கீங்க"

"பாஸ் . பாண்டிச்சேரி அவுட்டர்ல ரூம்ல இருக்கோம். காலைல கண்டிப்பா வெளியூர் போய்டுவோம்"

"அது இல்லைடா . அந்த பொணத்த புதைச்ச எடத்துக்கு உடனே வாங்க. நானும் வந்துட்டு இருக்கேன்"

"பாஸ் . எதாவது பிரச்சனையா"

"வந்து சொல்றேன். சீக்கிரம் வாங்க"

கணேஷின் கார் கிழக்கு கடற்கரை சாலையில் சீறி பாய்ந்து கொண்டிருந்தது.

பாண்டிச்சேரி காவல் நிலையம்.

"ஏன்பா யாரோ ஒரு குரூப் கார்ல ஏதோ கொண்டு வந்து போட்டுட்டு போனதா போன் கால் வந்துசே, யாராவது போனீங்களா " ஹெட் கான்ஸ்டபல் கண்ணையன் கேள்விக்கு பதில் கூறாமல் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

வாசலில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீப் வேகமாக வந்து நின்றது. அலாரம் வைத்தது போல் அனைவரும் எழுந்தனர். பார்ப்பவரை எல்லாம் பயம்முறுத்தும் தோற்றம். பணியில் நேர்மை. நண்பர்கள் குறைவு. எதிரிகள் ஏராளம். இதுதான் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறனின் சுய குறிப்பு.

"என்னயா எதாவது கேஸ் வந்துச்சா? "

"சார் ஒரு போன் வந்துச்சு" கண்ணையன் எல்லாவற்றையம் சொல்லி முடிக்க இளமாறனின் கண்ணில் கோபம் பீறிட்டது.

"போன் வந்து இவளோ நேரம் ஆச்சு இன்னும் யாரும் போகலையா. முதல்ல வண்டி எடுங்க"

ஜீப் புழுதியை கிளப்பி கொண்டு புறப்பட்டது.

"சார் வாட்ச் புதுசா சார்" ஜீப்பின் உள்ளிருந்த அமைதியை கண்ணையனின் குரல் விரட்டியது.

"ஆமா இன்னைக்கு தான் வாங்குனேன். நல்லாருக்கா? "

"டைட்டன் வாட்ச். ஆனா டைம் கரெக்டா இல்லையே சார். ஒரு மணி நேரம் பாஸ்டா இருக்கே"

"நான் தான் அப்படி செட் பண்ணி வச்சுருக்கேன். ஸ்டேஷனுக்கு நேரத்துக்கு வர தேவைப்படும்ல அதான்"

மூன்று வாகனங்களும் ஒரே இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தன.

நேரம். நடுநிசி கடந்து அரை மணிகள்.

(திகில் தொடரும் ..)

Saturday, July 17, 2010

கண் மணியே பேசு - 1


அகலமான அந்த சாலையின் இருபுறமும் வளர்ந்து நிறைந்து கிடந்தன விஸ்தாலமான பங்களாக்கள். பணம் காய்க்கும் மரங்கள் என்று சொல்லிவிடலாம் போல இருந்தன அவை. சைக்கிளில் அந்த ரோட்டில் பயணிப்பவன் ரோட்டை பார்த்து ஓட்டுவது கடினம்.

அத்தனை பங்களாக்களிலும் தனித்து தெரிவது அந்த பிரம்மாண்ட பங்களா. தொழிலதிபர் கணேஷிற்கு சொந்தமானது. ரகம் ரகமாக பத்துக்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்து நின்றன. வாசலில் முரட்டு மீசையுடன் தெருவில் போவோரை எல்லாம் மிரட்டும் தோரணையில் காவல்காரன். உள்ளே கணேஷ் பேப்பர் படித்து கொண்டிருந்தார். அவரின் அன்பு மனைவி சாவித்திரி அளவான புன்னகையுடன் காபி கொண்டு வந்துகொண்டிருந்தாள்.


"ஏம்மா நீயே எல்லா வேலையும் செஞ்சிட்டு இருக்கியே வேலைக்கு ஆள் வச்சுக்கண்ணு சொன்னாலும் கேக்க மாட்டேங்கிற "


"என்னங்க வீட்ல இருக்கிறது நாம ரெண்டு பேரு தான. இதுக்கு எதுக்கு வேலைக்காரங்க "


"என்னமோ இவளோ வசதி இருந்தும் நீ கஷ்டப்படுறத பாக்க முடியாம தான் சொன்னேன்"


"புருஷனுக்கு வேல செய்றது கஷ்டம்னு யாரு சொன்னா"


"ஏதோ நீ சந்தோஷமா இருந்தா போதும் "


"நீங்க என்ன பத்தி கவலைபடாம உங்க உடம்ப பாத்துக்கங்க. நேத்து நைட் முதுகுபிடிப்புன்னு சொன்னீங்களே. இப்ப எப்படி இருக்கு "


"இப்ப கொஞ்சம் பரவால்லம்மா "


"எதுக்கும் சாயந்திரம் டாக்டர் கிட்ட போவோம். எனக்கும் பாக்கணும் . ஒரு வாரமா நைட்ல தலைவலி அதிகமா இருக்கு "


"கண்டிப்பா போவோம் . சரியா ஆறு மணிக்கு ரெடியா இரு "


"சரிங்க" . அழுத்தமான முத்தம் வைத்து கணேஷ் அலுவலகத்துக்கு தயாராக சென்றான்.


அலுவலகத்துக்கு சென்று வழக்கமான குட் மார்னிங்களுக்கு பதில் கூறி அமர்ந்த பத்தாவது நிமிடம் தொலைபேசி அழைத்தது.


"பாஸ் நீங்க சொன்ன மாதிரியே அவள கொண்டு வந்துட்டோம்" கரகர குரலில் மறுமுனை ஒலித்துகொண்டிருந்தது.


"வெரி குட். அங்கேயே வெயிட் பண்ணுங்க இதோ கொஞ்ச நேரத்துல வந்திடுறேன்"


காற்றை கிழித்து அவசரமாக புறப்பட்ட கணேஷின் காரை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தன நான்கு கண்கள். கணேஷ் சத்தியமாய் அதை கவனித்திருக்கவில்லை. அவர் எண்ணம் எல்லாம் அந்த பெண் மேல் தான் இருந்தது. எப்படி இந்த பிரச்சனையை அணுகுவது, விஷயத்தை வெளியே சொல்லியிருப்பாளோ .


அந்த பெண்ணின் பெயர் நிர்மலா. கணேஷின் முன்னாள் செக்ரட்டரி. கணேஷிடம் கருப்பாக வந்த பணம் வெள்ளையாக மாற்றப்பட்டு கொண்டிருந்த அந்த இரண்டு நாட்களுக்குள் வருமானவரி அதிகாரிகளிடம் தகவல் கூறி சன்மானதிற்காக முதலாளியை விற்றவள் என்ற பெயருடன் வெளியேற்றபட்டவள். பெரிய அளவில் கணேஷ் அவளை ஏதும் செய்யவில்லை. தலைப்பு செய்திகளில் தன் பெயர் வருவதை அவர் விரும்பியதில்லை. தொலைத்த பணமும் பெரிதாக இல்லாததால் அவரும் கண்டுகொள்ளவில்லை. நிர்மலா அவரை தொடர்பு கொண்டு மிரட்டும் வரை.

கார் நிர்மலா கட்டி வைத்த இடத்தை சென்றடைந்தது. நிர்மலா மயங்கி கிடந்தாள்.


"டேய் அவள எழுப்புங்கடா " அதிகார தொனியில் கணேஷின் குரல் ஒலித்தது.


"பாஸ் ரொம்ப நேரமா முயற்சி பண்ணோம். எழுந்திருக்கல. செத்துட்டானு நினைக்கிறன் "


"அட பாவிங்களா. விஷயத்த அவ கிட்ட கேக்கணும்னு தான கொண்டு வர சொன்னேன். அதுக்குள்ள கொன்னுட்டீங்களே"


"பாஸ் பாஸ் . நாங்க கொல்லல. கொண்டு வரும் போதே செத்துட்டான்னு நெனைக்றேன். நீங்க குடுத்த அந்த மயக்க மருந்துல கர்ச்சிப்ப நனைச்சு மட்டும் தான் மூக்கில வச்சோம். வேற எதுவும் செய்யல"


"சரி உடம்ப இங்க வச்சுக்க முடியாது. உங்க வண்டில கொண்டு போய் திண்டிவனம் தாண்டி போய் எதாவது எடத்துல புதைச்சிடுங்க. நகை எல்லாம் எடுத்துகோங்க. பொணத்த கனுபிடிச்ச கூட நகைக்காக கொன்ன மாதிரி இருக்கும். எதுக்கும் கொஞ்ச நாளைக்கு வெளியூர் எங்கயாவது போய்டுங்க"


"சரி பாஸ். ஆனா பிரச்சன எதாவது வந்த எங்கள கை விட்ராதீங்க "


"நிச்சயமா மாட்டேன். நம்புங்க" . கணேஷின் உதடு மட்டும் பதில் கூறியது.


அந்த நான்கு கண்கள் அவரை பின்தொடர்ந்து அங்கு நடந்தவைகளை தூரத்தில் இருந்து பார்த்துகொண்டிருந்தன.


கணேஷ் அலுவலகம் வந்து எதுவும் நடக்காதது போல் தன் குளுகுளு அறைக்கு சென்றார். ஒரு கொலை நடந்ததற்கான அறிகுறி அவரிடம் இல்லை.


சாயந்திரம் வீட்டுக்கு சென்று மனைவியுடன் டாக்டரை பார்த்து ஆசுவாசமாய் சோபாவில் அமர்ந்தார். உடை மாற்றி காபி கொண்டு வர சாவித்திரி கிளம்பினாள். சற்று நேரத்திற்கெல்லாம் வீல் என்ற அலறல் சத்தம் அத வீட்டை உலுக்கியது.


உடை மாற்ற சென்ற மனைவியின் அலறல் கேட்டு திடுக்கிட்டு எழுந்து போன கணேஷ் அங்கு கண்ட காட்சி அவரின் தொண்டை குழியை வற்ற செய்தது. தரையில் அசைவில்லாமல் கிடந்த சாவித்ரியின் கண்கள் திறந்திருந்தன கண் மணிகள் அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தன. தண்ணீர் கொண்டு வந்து தெளிக்க முற்படும் பொது சாவித்திரி கட்டிலில் அமர்ந்திருந்தாள்.


"ஏம்மா என்னமா ஆச்சு "


"தெரியலீங்க. இத்தனை நாள் வர தலைவலின்னு நெனச்சேன். ஆனா தலைக்குள்ள என்னென்னமோ ஒடுச்சுங்க.ஒண்ணுமே புரில "


"என்னம்மா சொல்ற"


"ஆமாங்க. யாரோ நாலு பேரு வண்டில ஒரு பொண்ண கூட்டிட்டு போய்ட்டு இருகாங்க. பொண்ணு அசைவில்லாம கெடக்குறா. வண்டி பாண்டிச்சேரினு ஒரு போர்டு தாண்டி போய் நிக்குது. அப்புறம் அவள கீழ எறக்கி ஒரு எடத்துல மண்ணு தோண்டி புதைக்றாங்க. புதைச்சிட்டு போன அஞ்சாவது நிமிஷத்துல அந்த பொண்ணு முழிப்பு வந்து அங்கேயே மூச்சு தெணறி சாவுறா. "


"இது மயக்கத்துல இருக்கும் போது நீயே எதோ நெனச்ச மாதிரி இருக்கு . ரெஸ்ட் எடு சரியாய்டும் "


"இல்லைங்க எனக்கு பயமா இருக்கு"


"காலைல பேசிக்கலாம் நீ ரெஸ்ட் எடும்மா" . சொல்லி முடிக்க கணேஷ் முழுவதுமாக வேர்த்திருந்தார். அவசரமாக செல்போனை தேடினார்.


"பாஸ் சொல்லுங்க பாஸ் .. வேல முடிஞ்சிடுச்சு "


"டேய் எங்க இருக்கீங்க" . கணேஷின் குரலில் கலக்கம் மேலோங்கி இருந்தது.


"திண்டிவனத்துல எடம் சரியா அமையல. எனக்கு தெரிஞ்சு இன்னொரு எடம் இருந்துச்சு. அதான் அங்க போய் புதைச்சிட்டோம் "


"எந்த ஏரியால டா .."


"பாண்டிச்சேரில "


"பா..ண்..டி..ச்..சே..ரி.. லயா " .


கணேஷின் மனதில் திகில் பரவ ஆரம்பித்தது.


(திகில் தொடரும்.. )



Thursday, April 29, 2010

வாக்குமூலம் - சிறுகதை


" இன்ஸ்பெக்டர்! இன்ஸ்பெக்டர்! "

"பதட்டப்படாம சொல்லுங்க. என்ன விஷயம்"

"என் பெயர் சுந்தர். என் மனைவிய ஒருத்தன் கொலை பண்ணிட்டான். இப்ப என்ன கொல்ல துரத்திட்டு வரான். நீங்க தான் என்ன காப்பாத்தணும்"

"பயப்படாதீங்க மிஸ்டர் சுந்தர். அதான் என்கிட்டே வந்துடீங்கல்ல. நடந்தத சொல்லுங்க. நான் ரிப்போர்ட் எழுதிக்கிறேன்"

"அது இன்ஸ்பெக்டர் என் மனைவி பேரு காவ்யா. சாப்டுட்டு ரெண்டு பெரும் தூங்க போனோம். திடீர்னு கதவு தட்டுற சத்தம் கேக்குதுன்னு எந்திருச்சு போனா. ரொம்ப நேரம் ஆகியும் வரல. என்னனு நான் போய் பாத்தா ரத்தவெள்ளத்துல கிடந்தா. நான் பயந்து போய் சுத்திமுத்தி பாத்தேன் அப்ப ஒரு உருவம் கத்தியோட என் பின்னாடி வந்துச்சு. நான் உடனே ஓடி வெளில வந்து நேரா இங்க தான் வரேன்"

"சுந்தர், செத்துப்போனது உங்க மனைவி தான"

"ஆமா இன்ஸ்பெக்டர்"

"உங்க முகத்த பாத்தா நீங்க அழுத மாதிரியே தெரியலையே"

"அது.. அது.. பதட்டத்துல என்ன பண்றதுனே புரியல .. அதுனால .. அதுனால... அழ தோணல "

" கரெக்ட் தான். அந்த ஷாக்ல நீங்க அழல "

"ஆமா இன்ஸ்பெக்டர் அப்படி தான் "

"உங்க டிரஸ் பாத்தா நீங்க ஓடி வந்த மாதிரி தெரிலையே. வேர்வையே இல்ல. உங்க முகமும் வேர்க்கல"

"இன்ஸ்பெக்டர் நீங்க என்ன சந்தேகப்படற மாதிரி தெரியுது. என் ட்ரெஸ்ல ரத்தம் இருந்துச்சு அதுனால நான் இந்த டிரஸ் மாத்திட்டேன்"

"நல்லாருக்கு சுந்தர். இப்ப தான் ஒரு உருவம் கத்தியோட என் பின்னாடி வந்துச்சு. நான் உடனே ஓடி வெளில வந்து நேரா இங்க தான் வரேன்னு சொன்னீங்க. ஆனா இப்ப டிரஸ் மாத்தினேனு சொல்றீங்க. "

"அது.. வந்து.. நான் என் பொண்டாட்டிய கட்டி பிடிச்சு அழுதபோது ரத்தம் என்மேல பட்டுச்சு. எங்க வெளில வரும்போது எல்லாரும் என்ன கொலைகாரனு சொல்லிடுவாங்களோனு மாத்திட்டேன்."

" நீங்க சொல்றது எல்லாமே முன்னுக்கு பின் முரணா இருக்கே சுந்தர். கவனிச்சீங்களா? "

"நீங்க இன்னும் என்ன சந்தேகப்படுறீங்கனு நினைக்கிறேன்" .

"இல்ல சுந்தர். நீங்க சொல்லுங்க "

"நானும் என் மனைவியும் என்னல்லாமோ திட்டம் போட்டுருந்தோம். ஆனா இப்படி ஆய்டுச்சு. ஆனா இன்ஸ்பெக்டர் கொலை பண்ணுனவன் கதவ உடைச்சிட்டு உள்ள வரல. அதுனால கண்டிப்பா தெரிஞ்சவனா தான் இருக்கணும்"

"உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா "

"இருக்கு. நிச்சயமா இருக்கு. காவ்யவோட காலேஜ்ல கூட படிச்ச ஒருத்தன் இருக்கான். அடிக்கடி வீட்டுக்கு வருவான். நான் பிரெண்ட்ஸ் தான அப்படின்னு கண்டுக்காம விட்டுட்டேன். ஆனா மனசுக்குள்ள உறுத்தல் இருந்துட்டே இருந்துச்சு. ஒரு நாள் காவ்யா கிட்ட நேராவே கேட்டுட்டேன். அவ ஒண்ணும் இல்லன்னு சொன்னா. அவன் வரது எனக்கு பிடிக்கலன்னு சொன்னேன்"

"இதுனால வீட்டுல சண்டை எதாவது போட்டீங்களா"

"இல்ல. காவ்யாவே உங்களுக்கு பிடிக்கலனா அவன வர வேணாம்னு சொல்லிடறேனு சொல்லிட்டா. அப்புறம் ஒரு வாரம் அவன் வரல. எனக்கு சந்தோஷமா இருந்துச்சு. ஆனா ஒரு நாள் மத்தியானம் வீட்டுக்கு வந்து பாத்தா அவன் கூட பேசிட்டு இருந்தா. எனக்கு கோபம் வந்துச்சு ஆனா எதுவும் பேசாம நான் உள்ள போகாம வந்துட்டேன். நான் இவளோ சொல்லியும் என்ன மதிக்காம அவன் கூட பேசிட்டு இருந்தான்னு உள்ளுக்குள்ள அடக்க முடியாத கோபம் வந்துச்சு"

"இது என்னைக்கு நடந்துச்சு சுந்தர் "

"இன்னிக்கு தான். என்ன மதிக்காதவ இனி உயிரோட இருக்கா கூடாதுன்னு முடிவு பண்ணுனேன். அதுனால கத்திய எடுத்து குத்தி கொன்னுட்டேன்"

"அப்ப கொலையா நீங்க தான் செஞ்சீங்கனு ஒத்துக்கறீங்களா"

"இல்ல இல்ல. நான் பண்ணல. அவள கொன்னது அவளோட காலேஜ் பிரெண்ட்ணு சொல்லிட்டு வந்தவன் தான்"

"அது தான் நடந்துச்சா இல்ல அப்படி நடந்ததா நான் நம்பணுமா"

"இன்ஸ்பெக்டர்........ எனக்கு ஒரே குழப்பமா இருக்கு இன்ஸ்பெக்டர். கொஞ்சம் தண்ணி கெடைக்குமா"

"இதோ கொண்டு வர சொல்றேன்"

"இன்ஸ்பெக்டர்.. நீங்க ஏன் வெள்ளை கோட் போட்டுருக்கீங்க?" . சுந்தரின் கேள்வியில் பதில் இருந்தது.

Tuesday, April 13, 2010

பள்ளிக்கூட பயணங்கள் - சிறுகதை

"அம்மா சீக்கிரம்மா பள்ளியோடத்துக்கு நேரம் ஆச்சு. அங்க பாரு பக்கத்துக்கு வீட்டு ராமு எனக்காக ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கான். " செல்வத்தின் குரலில் பசியை விட அவசரம் மேலோங்கி இருந்தது.

"இருப்பா ராசா இதோ ரெண்டு நிமிஷம்"

"அம்மா இன்னிக்கு ஒரு நாள் சாப்பிடாம போறேன்மா. ராமு ரொம்ப நேரமா நிக்கிறான்மா . பள்ளியோடதுக்கு வேற நேரமாச்சு"

"இதோ ஆச்சு பாரு. அவனையும் கூப்பிடு ரெண்டு பேரும் சேந்து சாப்டுட்டு கெளம்புங்க"

"ஏலே ராமு வாடா. சாப்டு கெளம்புவோம். அம்புட்டு தூரம் நடக்க தெம்பு வேணும்ல"

பத்து நிமிடத்தில் சாப்பிட்டு விட்டு இருவரும் நடக்க தொடங்கியிருந்தார்கள். தினமும் இருவரும் ஒன்றாக சென்றுகொண்டிருந்தாலும் ஒவ்வொரு நாளும் பேசுவதற்கு புதிதாக ஏதாவது கிடைத்து கொண்டே இருக்கும்.

"டேய் செல்வம் என்னடா கை எல்லாம் காச்சு கெடக்கு"

"பை ரொம்ப கணம்டா. பிடி கைல அறுத்து அறுத்து கை காச்சு போயிடுச்சு"

"நீயும் என்ன மாதிரி முதுகுல மாட்ற பை வச்சுக்கிட்டா வசதியா இருக்கும்ல "

"அது சரி. இவளவையும் அந்த பைல வைக்க முடியுமா"

"சரி விடு.ஒரு பைய எங்கிட்ட குடு நான் செத்த தூரம் தூக்கிட்டு வரேன்"

"பரவால்லடா. நானே தூக்கறேன். அப்புறம் உன் கை காச்சு போன உங்க ஆத்தா என்ன வையும்"

"அதுவும் சரி தான். அப்புறம் கேக்கணும்னு நெனச்சேன். நாளைக்கு என்ன உங்க வீட்ல விசேசமா. உங்க ஆத்தா ரவைக்கு சாப்பிட
வர சொன்னுச்சு "

"அதாடா ராமு. என் அப்பன் செத்து ஒரு வருஷம் ஆச்சாம் அதுக்கு எதோ பலகாரம் எல்லாம் செய்வாங்களாம். அதுக்கு வர சொல்லிருக்கும்"

"அப்படியா. கேட்டதுமே எச்சி ஊருது டா. நீ பள்ளியோடத்துக்கு கொண்டு வருவியே முறுக்கு, அதிரசம் எல்லாம். அது மாதிரி செஞ்சு குடுன்னு என் ஆத்தா கிட்ட கேட்டேன்டா , செஞ்சே தர மாட்டேங்குறாங்க. நீ கொண்டு வர பலகாரம் எல்லாம் அவளவு ருசிடா. தெனமும் அத வீட்ல சாப்ட நீ குடுத்து வச்சுருக்கணும்டா "

"அட போடா. நான் எங்க தெனமும் சாப்டறேன். நீ நாளைக்கு வா எல்லா பலகாரமும் இருக்கும். வயறு முட்ட சாப்டலாம்"

" சரிடா. இதோ பள்ளியோடம் வந்திடுச்சு பாரு. சாயந்திரம் இங்கயே இருடா நான் வந்திர்றேன்"

"சரிடா ராமு. நான் என் வேலைய பாக்றேன். முறுக்கு முறுக்கே! முறுக்கு முறுக்கே! முறுக்கு முறுக்கே"

Wednesday, April 7, 2010

நிலையில்லா நிதர்சனங்கள் - சிறுகதை


மதிய நேரம். ராயப்பேட்டை. மணிகூண்டு. சென்னை வெயில் சுட்டெரித்து கொண்டிருந்தது. இதில் டிராபிக் ஜாம் வேறு. வெயிலில் பேருந்தில் அமர்ந்திருப்பதே எரிச்சல் இதில் ஒரே இடத்தில பதினைந்து நிமிடமாக நிற்பது மகா எரிச்சல். பேருந்தில் ஒரு நோட்டம் விட்டால் கூட்டம்மில்லாத பேருந்தில் இருக்கும் சொற்பமானவர்களும் செல்போனில் ஐக்கியமாயிருந்தார்கள்.

வெளியில் எட்டிப்பார்த்தால் அனைவருமே கிட்டத்தட்ட என் மனநிலையிலேயே இருந்தார்கள். பேருந்துக்கு அருகில் பைக்கில் இருந்தவரிடம் என்ன பிரச்சனை என வினவிய போது தான் தெரிந்தது ஏதோ காலேஜ் பையன் பைக் ஆக்சிடென்ட். பையன் அங்கேயே இறந்துவிட்டான் என்று. மேற்கொண்டு அவரே தொடர்ந்தார்

"இந்த காலத்து பசங்க பைக் எடுத்துகிட்டு வேகமா போறதுல தான் குறியா இருக்காங்க. பொறுப்பா வண்டி ஓட்றத பத்தி எல்லாம் எங்க யோசிக்கிறாங்க. அவுங்க பெத்தவங்கள சொல்லணும். கேட்ட உடனே வண்டி வாங்கி கொடுத்துடறது. அவன் அத ஒழுங்கா ஓட்டுறானா இல்லையானு அப்புறம் கேட்டுக்றதே இல்ல" . அவர் இன்னும் தொடரும் முன் நான் ஆமாம் போட்டு விட்டு இருக்கை மாறி அமர்ந்தேன் .

பேருந்து லேசாக நகர தொடங்கியது. இறந்த உடலின் மேல் துணி போத்தி விட்டிருந்தார்கள். அதை கடந்து பேருந்து கிளம்பும் போது ராமன் கல்லூரியில் சேர்ந்த உடன் வண்டி வாங்க வேண்டுமென்று கேட்டது நினைவுக்கு வந்தது.

ராமன் என் மகன். இப்போது ஈரோட்டில் ஒரு கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துகொண்டு இருக்கிறான். கல்லூரியில் சேர்ந்த உடன் வெளியில் செல்ல ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருக்கிறது என கூறி வண்டி வேண்டுமென்று நின்றான். அவன் கேட்டு இது வரை நான் எதையும் மறுத்ததில்லை அதனால் உடனே வாங்கி கொடுத்துவிட்டேன். அந்த நிமிடத்தில் அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சியில் என் மனது நிறைந்து போனது. ஒரே மகன் கேட்டதை வாங்கி குடுக்க மாட்டேன் என்று சொல்ல எந்த அப்பாவிற்கு தான் மனமிருக்கும்.

மனதில் பைக் ஆக்சிடென்ட் நிழாடிக்கொண்டே இருந்தது. வீட்டுக்கு சென்று முதல் வேலையாக ராமனுக்கு போன் செய்து கவனமாக வண்டி ஓட்ட சொல்ல வேண்டும். முக்கியமாக ஹெல்மெட் இல்லாம ஓட்ட கூடாது என்று சொல்ல வேண்டும். யோசித்து கொண்டிருக்கும் போதே கண்டக்டர் விசில் இறங்க வேண்டிய இடத்தை நினைவூட்டியது.

வீட்டிற்குள் மனைவியை கூப்பிட்டு கொண்டே நுழைந்த போது சோபாவில் இருந்த பைகள் கவனத்தை ஈர்த்தன. அவை ராமனின் பைகள்.

"என்னங்க பைய பாத்துட்டு இருக்கீங்க? " மனதின் ஓட்டத்தை மனைவியின் குரல் நிறுத்தியது.

"ராமன் வந்திருக்கானா? "

"ஆமாங்க வந்திருக்கான். ஏதோ ஹாஸ்டல் பிரச்சனைனு ஒரு வாரம் லீவ் விட்டுட்டாங்களாம்"

"இப்ப எங்க உள்ள தூங்குறானா? "

"இல்ல ஏதோ பிரெண்ட் கூட ராயபேட்டை வரைக்கும் போயிட்டு வரேன்னு போனான். உடனே வரேன்னு சொன்னான் ஆனா இன்னும் காணும் "

எனக்கு வியர்க்க தொடங்கியிருந்தது. கைகள் செல்போனை தேடியது. படபடப்பின் காரணம் அவளிடம் விளக்க திராணியில்லை. கண்முன்னே பார்த்த அந்த போத்தி வைக்க பட்டிருந்த உடல் மனதிற்குள் வலியை உண்டாகியது. குழப்பங்கள் மட்டும் விடைகளாய் வெளிப்பட்டு கொண்டிருந்தது. ஒரே மகன் வேறு. உடலை எங்கு கொண்டு சென்றிருப்பார்கள். பெரும்பாலும் ஜி. எச் தான். அடுத்து என்ன செய்ய வேண்டும். இவளிடம் இதை எப்படி சொல்வது. அவள் இதை தாங்கி கொள்வாளா.

காபியுடன் கண்முன்னே மனைவி வந்தாள். சொல்லி விட வேண்டியது தான் என நினைத்த பொது அவளே பேசினாள்.

"இதோ ராமனே வந்துட்டானே"

திரும்பி கூட பார்க்கவில்லை ஆனால் கண்களில் கண்ணீர் வழிந்தது. பேச வார்த்தை எழவில்லை.

"என்னடா சட்டையில இரத்தம்" மனைவியின் குரலில் இருந்த நடுக்கம் திரும்ப வைத்தது.

"இல்லம்மா . பிரெண்ட் ஒருத்தன் பைக் ஆக்சிடெண்ட்ல செத்துட்டான். நான் போற வரைக்கும் உயிரோட தான் இருந்தான். என் கண் முன்னாடியே உயிரை விட்டுட்டான்" ராமன் பேச முடியாமல் உடைந்தான்.

என் தோள்களில் அவனை தாங்கினேன். இருவரும் அழுது கொண்டிருந்தோம். அவன் சோகத்திலும் நான் சந்தோஷத்திலும்.

Friday, March 19, 2010

கையளவு ஆசை கடலளவு காதல் - சிறுகதை


ஜன்னலிடுக்கில் என் கண்பார்க்கும் அவள் கண்கள்.

அடுத்த
ஐந்தாவது நிமிடத்தில் காபியுடன் என் முன்னால் வருவாள் என்று தெரிந்தும் திருட்டுதனமாக அவள் பார்த்தது வேடிக்கையாய் இருந்தது. ஆனால் பிடித்திருந்தது. அவளையும் தான். சம்பிரதாய பேச்சுக்கள் துவங்கிய சில நிமிடத்தில் காபியுடன் அவள் வந்தாள். உடன் பேச்சுக்கள் நிறுத்தப்பட்டு அமைதியில் அனைத்து கண்களும் அவள் முகம் நோக்கின. எல்லோர் முகத்திலும் ஒரு மெல்லிய புன்னகை. எல்லோரும் அருகிலிருப்பவர் முகத்தை பார்த்து கண்ணசைவு காட்டினர்.

நான் அவள் முகம் பார்த்தேன். பார்த்தேன். பார்த்து கொண்டே இருந்தேன். கூட்டத்தில் ஒரு தொண்டை கரகரப்பு கேட்கும் வரை. கூட்டத்தில் என் பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவள் பதிலையும் கேட்ட மாதிரி தெரியவில்லை. ஆனால் நிச்சயதார்த்த நாள் குறிப்பு பற்றி பேச துவங்கினர். கல்யாண நாள் குறித்து பேச துவங்கும் போதும் பாழாய் போன அந்த பால்காரன் வந்து எழுப்பிவிட்டான்.

தலையணை அடியில் இருந்த அந்த புகைப்படத்தை ஆயிரமாவது முறையாய் எடுத்து பார்த்து கொண்டேன். வீட்டில் பெண்பார்க்க ஆரம்பித்து இது வரை ஜாதகம் , பொருத்தம் என எல்லாம் தட்டிகழிக்கப்பட்டு வெறுத்து நிறுத்த நினைத்த வேளையில் இத்தனை நாள் நீ காத்துக்கிடந்தது இதற்கு தான் என நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் வந்தது அவள் புகைப்படம். பார்த்த நிமிடமே இவள் தான் என்னவள் என முடிவெடுத்தேன். அதற்கேற்றார்போல் ஜாதகம் எந்த கிரகத்தின் குறுக்கீடும் இல்லாமல் பொருத்தமாக இருந்தது.

பெண்
பார்க்க இன்னும் இரண்டு நாட்களில் போகலாம் என அம்மா நேற்று சொன்ன அந்த நிமிடத்தில் இருந்து அந்த ஒத்திகை தான் மனதில் நிகழ்ந்து கொண்டே இருந்தது. மணி ஏழு.

இன்னும் முழுசாக முப்பத்தாறு மணி நேரம் இருக்கிறது அவளை பார்க்க போக. ஆனால் மனதின் வேகத்திற்கு கடிகாரத்தால் ஈடு கொடுக்க முடியவில்லை. அன்று சாயந்திரமே அவளை பார்க்க முடிவெடுத்தேன். ஆராய்ந்து திட்டமிட்டு எடுத்த முடிவு அல்ல. மனது சொல்லி மூளை எடுத்த முடிவு. எதற்கு பார்க்கவேண்டும் என்ன பேச வேண்டும் யோசிக்க தோன்றவில்லை. ஆனால் பார்க்கவேண்டும். பார்த்தே தீர வேண்டும். எப்படியாவது. பெண் பார்க்க சென்று பிறகு பெண்ணை பிடிக்கவில்லை என சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. இவளை பிடிக்காமல் இருக்க போவதில்லை என தோன்றியது. அதனால் தான் என்னவோ நேரில் பார்க்கும் ஆவல் ஒவ்வொரு நிமிடமும் கூடிக்கொண்டே போனது.

அந்த
அந்தி வேளையில் முகம் தேடிக்கொண்டு அவள் அலுவலகத்திற்கு வெளியெ காத்திருந்தேன். புகைப்படத்தில் பார்த்த முகம் மனதிற்குள் பதிந்திருந்த காரணத்தால் புகைப்படத்தை கொண்டு வரவில்லை.

கண்மணியை கண்மணியால் தேடி கொண்டிருந்த நேரத்தில் கடந்து போன முகங்கள் எல்லாம் அற்பபதரை பார்ப்பது போல போவது என்னை சற்றும் பாதித்திருக்கவில்லை.

திடீரென முகங்கள் குறைந்து போக தொடங்கின.என் கண்ணில். தூரத்தில் அவள். அவளுக்கு மிக அருகில் என் மனது. புகைப்படத்தில் பார்த்ததை விட நேரில் இன்னும் அழகாக தான் இருந்தாள்.

மாலை சூரியன் மீண்டும் மேலெழுந்து அவள் முகம் பார்த்தது
சந்திரன் அவசரமாக வெளிவந்து அவள் முகம் பார்த்து நாணி மறைந்தது
தேனீக்கள் கூட்டம் பூவென நினைத்து அவளை நெருங்கியது
கடவுளென நினைத்து பக்தர்கள் கூட்டம் குவிய துவங்கியது
இத்தனையும் நடந்தது அந்த ஒரு நிமிடத்தில்
நான் என்னுள் உன் நினைவுகளில் தொலைந்திருந்த அந்த ஒரு நிமிடத்தில்
நிதர்சனம் சுட்ட போது நீ என் கண்ணதெரில்
என்னுள்ளும் என்முன்னும் நீ
நீ மட்டும் .


அந்த நொடியில் என்னுள் பல பட்டாம்பூச்சிகளை பறக்கவிடும் அளவிற்கு அழகாய் இருந்தாள். நேராக என்னை நோக்கி வருவது போலிருந்தது. வார்த்தைகளை கூட தயார் படுத்தவில்லை. வியர்வையின் வேகத்திற்கு எண்ணங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இப்போது பேசினால் கேட்கும் தூரத்தில் அவள். நேராக என்னருகில் வந்தாள். பின் என்னை கடந்து போனாள். பின்னர் தான் என் மயங்கி கிடந்த மூளைக்கு புரிந்தது. அவளுக்கு என் வீட்டார் என் புகைப்படம் அனுப்பியிருக்கவில்லை. என் பெயரும் பயோடேட்டாவும் தான் அனுப்பியிருந்தார்கள்.

உள்ளத்தில் எழுந்த அந்த பூரிப்பு. அவளை கண்டவுடன் நொடிப்பொழுதில் என்னுள் நிகழ்ந்த அந்த ஆயிரமாயிரம் மாற்றங்கள். அத்தனையும் வாழ்ந்தால் இவளோடு தான் என அடித்து கூறின.

தாமதிக்க நேரமில்லை. தாமதிக்கவும் தோன்றவில்லை. நேராக அவளிடம் சென்றேன். பெயரை சொல்லி அறிமுகப்படுத்தியவுடன் அவள் கண்கள் அகலமாவதை கண்டேன். கண்டு பிடித்து விட்டாள். என் ஆர்வத்தை கண்டுபிடித்துவிட்டாள். பேசாமல் போய்விடுவாளோ என யோசித்த வேளையில் பேச தொடங்கினாள்.

"நீங்க வருவீங்கனு அம்மா ஒண்ணும் சொல்லலயே"

"நான் வருவேனு எனக்கே காலைல தான் தெரியும்"

"அப்படினா"

"அப்படினா நான் இங்க வந்தது யாருக்கும் தெரியாது"

"ஓ.. எதுக்காக வந்தீங்க"

"பாக்றதுக்காக"

"பாக்றதுக்காகவா"

"ஆமா ரெண்டு நாளா என்ன கனவுல தொந்தரவு செஞ்சிட்டு இருக்க உன்னை நேர்ல பாத்து கேக்க தான்"

"என்ன கேக்கணும்"

"இத்தன நாளா எங்க இருந்தணு"

" .... "

"வரணும்னு தோணுச்சு வந்துட்டேன். ஆனா என்ன பேசுரதுனு தெரியல. சுருக்கமா சொல்லிடுறேன்.எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு.மேற்கொண்டு பேச எங்க வீட்ல சொல்லிட்டேன். உங்க வீட்ல எதுவும் சொன்னாங்களா"

"இல்ல"

"சனிக்கிழமை அன்னிக்கு பொண்ணு பாக்க வரேன்"

"ம் "

"வாய்ப்பு கொடுத்தா டெய்லி உன்ன பாக்க வருவேன்"

புன்னகை மட்டும் பதிலாய் வந்தது. ஆனால் புன்னகை பதிலாய் வந்தது. புரிந்து போனது எனக்கு. வரம் கிடைத்தாயிற்று எனக்கு. அன்று அதற்கு பிறகு ஒரு மணி நேரம் பேசினோம். என்ன பேசுகிறோம் என கவனிக்கவில்லை. ஆனால் பேசுவது சுகமாயிருந்தது. பிடித்திருந்தது. அவளுக்கு என்னை பிடித்திருந்தது. அது எனக்கு பிடித்திருந்தது.

சனிக்கிழமை.

ஜன்னலிடுக்கில் என் கண்பார்க்கும் அவள் கண்கள்.

Tuesday, February 23, 2010

மனச்சுவடு - 5

"ஒரு ஹலோ சொல்ல இவளோ நேரமா"

"நீ பேசுறதுக்கு இத்தனை மாசம் நான் வெயிட் பண்ணேன். உன்னால ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ண முடியாதா "

"பழசெல்லாம் இப்ப எதுக்கு. எங்க அண்ணன் கல்யாணம் நீ கண்டிப்பா வந்திடு "

"நீ முதல்ல எதுக்கு என்ன இவளோ நாள் ஒதுக்குன இப்ப ஏன் பேசுற , காரணத சொல்லு"

"நான் ஒதுக்குனேனா? . அப்படின்னு உனக்கு யாரு சொன்னது "

"நான் அனுப்பின மெய்லுக்கு நீ பதில் சொல்லவே இல்ல"

"தெரியாத ஒரு பொண்ணுக்கு மெயில் அனுப்பிட்டு அவ பதில் சொல்லுவான்னு நீ எப்படி நெனைக்கலாம். அதுக்கப்புறம் நீயே வந்து பேசுவேன்னு நான் வெயிட் பண்ணிபாத்தேன். நீ பேசுற மாதிரி தெரில அதான் நானே கல்யாண பத்திரிகை சாக்கா வச்சு பேசுவோம்னு ஆரம்பிச்சேன். இப்பவும் நான் பேசலனா நீ நிச்சயமா பேசிருக்க மாட்ட"

தெளிவாக குழம்பியிருந்தேன்.

"வேற எதுவும் சொல்றதுக்கு இல்லயா? இவளோ தானா? "

"நீ கல்யாணத்துக்கு முதல்ல வரேன்னு சொல்லு. மத்தத அப்புறம் பேசுவோம்."

"ஐ லவ் யூ"

கணினி திரை மௌனத்தை உதிர்த்தது. அவளிடம் பதிலில்லை.

ஒரு குழப்பத்தில் இருந்து இன்னொரு குழப்பத்திற்கு தாவியிருந்தேன்.

"சரி நான் கண்டிப்பா வரேன்"

பேச்சை முடித்த போது நடந்தது கனவா நினைவ என கிள்ளி பார்க்க கூட மறந்திருந்தேன். இதுவரை நடந்தவற்றை மறுமுறை ஒருமுறை மனதில் ஒட்டி பார்த்த போது சில விஷயங்கள் அப்போதிருந்த மனக்குழப்பத்தில் நான் பார்த்திருந்த கோணம் தவறென உணர முடிந்தது. நடப்பவை எல்லாம் எனக்கு எதிரானவையே என்று நான் பார்த்த பார்வை தவறென புரிந்தது. நேரில் பேச முயற்சிக்காமல் என்னையே நான் ஒரு கற்பனை வட்டத்திற்குள் கட்டிபோட்டு கொண்டது தவறென புரிந்தது. இபோதைய நிதர்சனத்தை தவிர மற்றவை எல்லாமே தவறு தான். அந்த தவற்றால் ஒரு சாத்தியமாகக்கூடிய காதலை இழந்திருக்ககூடும் அவள் பேச முற்பட்டிருக்காவிடில்.

"சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது". சத்தியமான வரிகள்.

ஆனால் அவளின் பேச்சில் தெளிவான காதல் இல்லை என்பது உறுதியாக தெரிந்திருந்தது. அதை காதலாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.

இம்முறை கற்பனைக்கு விடுமுறை கொடுத்துவிட்டு நிஜத்தை நிலையானதாக ஆக்க முயற்சித்தேன்.

கல்யாண நாள். இன்றே அவளிடம் காதலை தெரிவித்து விட முடிவு செய்திருந்தேன்.அவள் மறுக்க முடியாதவாறு காதலை சொல்லவேண்டுமென யோசித்த வேளையில் அவள் எதிரினில் வந்தாள்.
அந்த திறந்த வெளியில் நிலவொளியில் அத்தனை கூட்டமும் அந்த நொடியில் காணாமல் போயிருக்க அவள் மட்டும் தேவதையாய் ஜொலித்துக்கொண்டிருந்தாள்.

அவள் கண்கள் எதையோ எதிர்பார்ப்பதை என்னால் உணர முடிந்தது. அந்த பார்வை என்னை மட்டுமே பார்த்துகொண்டிருந்தது. திட்டமிட்ட பேச்சுகள் அந்த கணநொடியில் காணாமற்போக அந்த நொடியில் தோன்றிய வார்த்தைகளின் காரணங்களை ஆராயும் முன் வார்தைகள் விழத்தொடங்கியிருந்தன.

"கூட்டத்துல எல்லாரும் உன்னையே பாக்குறாங்க கவனிச்சியா"

"அப்படியா.. சரி நீ சொல்ல வந்தத சொல்லு"

இதை நான் எதிர்பாத்திருக்க வில்லை அதேநேரம் கூறவேண்டிய விஷயத்தை தாமதபடுத்தும் எண்ணமும் இல்லை.

"உன்ன முதல் முறை பாத்த உடனே நீ தான் எனக்குன்னு முடிவு பண்ணி அதுக்காக பைத்தியம் மாதிரி நான் அலையல, ஆனா அன்னியிலிருந்து என் மனசு முழுக்க நீ தான். நீ மட்டும் தான். இதனால நாள் காத்திருந்தது தப்புன்னு நேத்து நீ பேசும்போது புரிஞ்சிச்சு. ஆனா இத்தனை நாள் காத்திருந்ததுனால என் காதல் இன்னும் ஆழமாயிருக்குனு அப்ப தான் எனக்கு புரிஞ்சிச்சு.அதுனால தான் இன்னிக்கு எப்படியும் இத பத்தி பேசிடறதுன்னு ஒரு முடிவோட இங்க வந்தேன். எனக்கு உன்னை எவளோ பிடிக்கும்னு சொல்ல தெரில. ஆனா இந்த உலகத்துலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது எங்க அம்மா அப்பா . அவுங்கள எவளோ பிடிக்குமோ அதே அளவு உன்ன பிடிக்கும். நீ என் மனைவியா வந்தா அவுங்கள எந்த அளவுக்கு நான் பாசமா பாத்துபனோ அத விட ஒரு படி அதிகமாவே உன்ன பாத்துப்பேன்.. காதல் வநத நிமிஷம் ஏன் வந்துச்சு எதுக்கு வந்துச்சுன்னு அதுகிட்ட யாரும் கேள்வி கேக்க முடியாது , அதே மாதிரி அந்த பொண்ணுக்கு ஏன் நம்ம மேல தோணலன்னு கேட்பதும் முட்டாள்தனம். அதுனால என்னோட காதல நான் சொல்லிட்டேன். அத ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் உன் இஷ்டம். ஒத்துகிட்ட சந்தோஷப்படுவேன். ஒத்துகலனா வருத்த படமாட்டேன். இன்னும் கொஞ்சம் கம்மியா சந்தோஷப்படுவேன். காதல் தோத்தாலும் உன்கிட்ட பேச கெடச்ச இந்த வாய்ப்ப நெனச்சே நாள ஓட்டிடுவேன். நான் முடிச்சுட்டேன். இப்போ நீ பேசு அது பதிலோ கேள்வியோ நான் காத்திருக்கேன் "

நிமிர்ந்து அவள் கண்ணை பார்த்தேன். அதில் காதல் தெரிந்தது.

அவள் உதடுகள் வார்த்தைகளை உரைக்க அசைய துவங்கியது.

(முற்றும்)


கொசுறு கவிதை:

தோற்றுகொண்டே இருக்கின்றேன்
ஒவ்வொரு முறை
உன் கண்பார்க்கும் போதும்
ஒவ்வொரு முறையும்
மீண்டும் எழுகிறேன்.
மீண்டும்
தோற்று கொண்டே இருப்பதற்கு

Saturday, February 13, 2010

மனச்சுவடு - 4

அதன் பிறகு நாட்கள் கழிய மறுக்க நான் நாட்களை கடக்க பழகியிருந்தேன். அவளின் பார்வைகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் கற்பனையில் உருவாக்கவில்லை. அவள் பிறந்ததே என்னை நோகடிக்க மட்டும் தான் என முடிவெடுத்து மீண்டும் அவளை வெறுக்கும், ஒதுக்கும் முயற்சியில் இறங்கியிருந்தேன்.

அவளும் அடிக்கடி விடுப்பில் செல்ல துவங்கயிருந்தாள். கல்யாணத்திற்கு முன் எனக்கு தெரிந்து பெரும்பாலான பெண்கள் புடவை, நகை என ஒரு மெகா ஷாப்பிங் செய்வதற்கு இம்மாதிரி விடுப்பில் செல்வது பழக்கமான ஒன்று தான். அவள் வராத நாட்களில் தைரியமாக அவள் இடத்தை பார்க்க முடிந்தது. அவள் வந்த நாட்கள் நான் பார்க்காத பொது அவள் பார்த்தது தெரிந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் அந்த ரசாயன மாற்றங்கள் நிகழ்வது இல்லை.

அன்று வியாழக்கிழமை. அவள் ஒவ்வொரு மேசையாக சென்று பத்திரிக்கை கொடுத்து கொண்டிருந்தாள். நிச்சயமாக எனக்கு வைக்கமாட்டாள் என தெரியும். இருந்தாலும் ஒருவேளை எனக்கு வைக்க வந்திவிட்டால் என்ன பேசுவது என குழம்பி போயிருந்தேன்.

"அழைப்புக்கு தானே காத்திருந்தேன்
அழைப்பிதழோடு ஏனடி வந்தாய் "

மனதிற்குள் கடைசி முறையை அவளை பற்றிய கற்பனை ஓடியது. எதிர்பார்த்த மாதிரி என் மேஜையை தவிர்த்து மற்றவர்களுக்கெல்லாம் பத்திரிக்கை கொடுத்து முடித்தாள்.

அன்று இரவு கனவுகள் வெறுமை அடைந்திருந்தது. விடியல் உறங்கும் முன்னரே வந்துவிட்டது. ஒரு வழியாக அலுவலகம் சென்றடைந்து கணினியை உயிர்ப்பித்து அன்றாட முதல் கடமையான இமெயிலை செக் செய்து காபிக்கு கிளம்பும் போது சாட்டில் ஒரு புது தகவல் ஓரத்தில் எட்டி பார்த்தது. முதல் முறையாக அவள் என்னிடம் பேசமுற்பட்டாள்.

"ஹாய். உன் மேஜை ட்ராயர்ல கல்யாண பத்திரிக்க வச்சுருக்கேன். நேர்ல குடுக்க ஒரு மாதிரி இருந்துச்சு அதான் காலைல வந்த உடனே உன் டெஸ்க்ல வச்சுட்டேன்"

வார்த்தைகள் விரல் வழியே வெளியேற துடித்து கொண்டிருந்தன. என்ன ஒரு சாடிஸ்டா இருந்தா கல்யாண பத்திரிக்கைய வச்சதுமில்லாம அத சாட்ல வேற வந்து சொல்லுவா. கோபம் கண்களில் ஏறி அது சோகமாக மாறி நீர் வெளியேற துடித்துகொண்டிருந்தது.

"ஹே என்ன பேச்சே காணும் " .

இத்தனை நான் மௌனம் பழகிய உனக்கு ஒரு நிமிட மௌனம் கூட பொறுக்க முடியவில்லையா.

பத்திரிகையை திறந்து மெதுவாக பார்வையை மேய விட்டேன். ஏனோ என்னுள் ரசாயன மாற்றங்கள் மீண்டும் ஏற்பட்டு கொண்டிருந்தன. கல்யாண பெண் பெயரில் அவள் பெயர் இல்லை. பத்திரிகையின் பின்புறம் மணமகனின் சகோதரி இடத்தில அவள் பெயர் இருந்தது.

"ஹலோ" . இது நான்.

(தொடரும்)

Saturday, January 16, 2010

மனச்சுவடு - 3

அவள் ஓரக்கண் பார்வையின் பாதிப்பு விலக ஒரு வாரம் பிடித்தது. அதன் பிறகு அவள் என் கவனத்தை அவள் பக்கம் திருப்ப அடிக்கடி பல முயற்சிகள் எடுத்தது எனக்கு மட்டும் அப்பட்டமாய் தெரிந்தது. ஆனால் இன்னொரு முறை நானே பேச முற்பட்டு மூக்குடைபடும் நிலையில் நான் இல்லை, அவளாகவே பேசட்டும் என்ற பொய் வீராப்பில் காத்திருந்தேன்.

அந்த நாளும் நெருங்கியது. ஆனால் அது நெருங்க ஒரு மாதத்தை விழுங்கியிருந்தது.

கேண்டீனில் ஒரு நாள் காபி எடுக்க நான் சென்ற பொது அவளும் நூல் பிடித்தாற்ப்போல் பின்னால் வந்தாள். அன்று தனிமையில் பேச ஏதுவாக கேண்டீனில் யாரும் இல்லை. மனதிற்குள் திட்டங்கள் வகுக்கபட்டு கொண்டிருந்த வேளையில் குயில் கூவியது. அது எக்ஸ்க்யூஸ் மீ என கூவியது. கட்டை அருகில் இருந்தும் மின்சாரம் பாய்ந்த நிலையில் செய்வதறியாது , சொல்வதறியாது இருந்த நிலையில் மீண்டும் குயில் கூவியது. "கொஞ்சம் தள்ளி நிக்கிறீங்களா நான் காபி எடுக்கணும்" . இப்போது ஒரு விளக்குமாற்று கட்டு தானே வந்து என்னை அடித்து சுயநினைவை மீட்டு தந்தது.

அவள் காபியுடன் ஒரு டேபிளில் அமர்ந்தாள், துணைக்கு செல்போனை எடுத்துக்கொண்டாள். நான் காபியோடு இன்னொரு டேபிளில் அமர்ந்தேன். தனிமையில் அவள் பேசினாள். செல்போனின் மறுமுனையில் யார் என்ற கேள்வி மட்டும் என் மனதில் திரும்பத்திரும்ப ஓடிகொண்டிருந்தது. அன்று தனிமையில் பேச ஏதுவாக கேண்டீனில் யாரும் இல்லை. ஆம் அவள் தனிமையில் யாருடனோ பேச கேண்டீனில் யாரும் இல்லை. தடையாக இருந்த என்னை மட்டும் கண்ணாடியின் பிம்பத்தில் கோபாமாக பார்த்து தெறித்து கொண்டிருந்தாள். நான் விலகுவதாக இல்லை . அவளை விட அவள் உரையாடலின் சாராம்சம் என்னை அங்கே உட்கார வைத்தது. பல விஷயங்களை உணர வைத்தது. அந்த உரையாடலை நான் கேட்க வேண்டும் என்றே அவள் உரக்க பேசி கொண்டிருந்ததும் புரிந்தது.

"டீ நகர் போகணும் . முகூர்த்த பட்டெல்லாம் எடுக்கணும் அப்புறம் நகை வாங்கணும். தாலி செயினும் அன்னைக்கே வாங்கிடலாமா.. அப்புறம் " அவள் பேச பேச என் மூச்சு சீர்கெட்டு மனது கனக்க
தொடங்கியிருந்தது.

அவள் உரையாடல் முடிந்து என்னை கடக்கும் போது அதே ஓரவிழி பார்வை.

இம்முறை எனக்கு புரிந்தது அது ஆசையாக பார்க்கும் பார்வை இல்லை ஒரு மனதை வெற்றிகரமாக நோகடித்த ஒரு சாடிஸ்டிக் பார்வை.

ஒரு நொடியில் மிக அருகிலும் அடுத்த நொடிய நினைக்க முடியாத தூரத்திலும் ஒருவரை நிறுத்தி பார்க்க கண்டிப்பாக காதலில் விழுந்திருக்க வேண்டும். விழுந்து எழுந்து மீண்டும் விழுந்திருக்க வேண்டும்.

(தொடரும்)

Tuesday, January 5, 2010

மனச்சுவடு - 2

நான் பார்ப்பதை அவள் பார்த்ததை சிந்தனையில் விட்டு அகற்ற முடியாமல் பேச முடிவு செய்தேன். அவள் பார்வைக்கு ஆயிரம் அர்த்தங்கள் நானே என் மனதிற்கு கற்பித்தேன் . எல்லா ஆண்களின் எண்ணத்தை போல அனைத்தும் எனக்கு சாதகமாகவே யோசித்தேன்.

எப்படி பேச. என்ன பேச , எங்கு தொடங்க , எங்கு முடிக்க மீண்டும் கேள்விகள் முளைத்தன. ஆனால் பேச வேண்டும் என்ற தீர்மானம் மட்டும் எல்லா கேள்விகளையும் முறியடித்து வென்றது. மிக தவறான வெற்றி இது. சில நேரங்களில் சில முடிவுகள் தோற்பதே நல்லது. தோல்வியை விட நிச்சயம் வெற்றி நமக்கு தான் என்ற எண்ணத்துடன் பங்கேற்காமல் பார்த்து கொண்டிருப்பதும் சுகம் தான்.

பெயரளவில் என்னை யாரென்றே தெரியாத அவளுடன் பெயரை முதலில் தெரியப்படுத்தி அறிமுகம் செய்து கொண்டு பேச முற்பட்டிருக்க வேண்டும். கற்று தெரிந்த பாடம் இது. நிராகரிக்க படுவேன் என்ற எண்ணத்துடன் பேசினேன் , கடிதத்தில்.

வராத பதில் கடிதத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். அது படிக்கப்பட்டு கிழிக்கப்பட்டு இருக்குமோ இல்லை படிக்கபடாமலே கிழிக்கப்பட்டு இருக்குமோ , மேற்கொண்டு அவளிடம் பேச முயற்சிகள் எடுக்கலாமா வேண்டாமா என்ற யோசனையிலே ஒரு மாதம் கழிந்தது. அவளும் அடிக்கடி செல்போனோடு ஒதுங்குவது முட்டுகட்டைகளை அடுக்கி கொண்டே போனது. மறுக்கப்பட்டதை மறக்க நினைத்து இந்த பழம் புளிக்கும் என வட்டாரத்தில் பேச்சுக்கள் எழ வைத்தேன். நாளைடவில் கண் எதிரில் அவள் இருந்தாலும் மறந்தே போனேன்.

மறந்தே போனேன் அந்த நொடி வரை, எல்லா மனமுடிச்சுகளையும் ஒரு நொடியில் அவிழ்த்துபோட்ட அந்த நொடி வரை , அஸ்தனமான சூரியனும் எட்டி பார்க்க எழுந்து வர துடித்த அந்த நொடி வரை, களைந்திருந்த பிச்சைகாரனை தேடி வந்த தர்மம் போன்ற அந்த நொடி வரை, அழுதுதுடிக்கும் குழந்தை மிட்டாய் பார்த்து சிரிக்கும் அந்த நொடி வரை.

பக்கம் சென்ற அவள் ஓரகண்ணால் எனை பார்த்து சிரித்த அந்த நொடி வரை.

(தொடரும்)