Friday, March 19, 2010

கையளவு ஆசை கடலளவு காதல் - சிறுகதை


ஜன்னலிடுக்கில் என் கண்பார்க்கும் அவள் கண்கள்.

அடுத்த
ஐந்தாவது நிமிடத்தில் காபியுடன் என் முன்னால் வருவாள் என்று தெரிந்தும் திருட்டுதனமாக அவள் பார்த்தது வேடிக்கையாய் இருந்தது. ஆனால் பிடித்திருந்தது. அவளையும் தான். சம்பிரதாய பேச்சுக்கள் துவங்கிய சில நிமிடத்தில் காபியுடன் அவள் வந்தாள். உடன் பேச்சுக்கள் நிறுத்தப்பட்டு அமைதியில் அனைத்து கண்களும் அவள் முகம் நோக்கின. எல்லோர் முகத்திலும் ஒரு மெல்லிய புன்னகை. எல்லோரும் அருகிலிருப்பவர் முகத்தை பார்த்து கண்ணசைவு காட்டினர்.

நான் அவள் முகம் பார்த்தேன். பார்த்தேன். பார்த்து கொண்டே இருந்தேன். கூட்டத்தில் ஒரு தொண்டை கரகரப்பு கேட்கும் வரை. கூட்டத்தில் என் பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவள் பதிலையும் கேட்ட மாதிரி தெரியவில்லை. ஆனால் நிச்சயதார்த்த நாள் குறிப்பு பற்றி பேச துவங்கினர். கல்யாண நாள் குறித்து பேச துவங்கும் போதும் பாழாய் போன அந்த பால்காரன் வந்து எழுப்பிவிட்டான்.

தலையணை அடியில் இருந்த அந்த புகைப்படத்தை ஆயிரமாவது முறையாய் எடுத்து பார்த்து கொண்டேன். வீட்டில் பெண்பார்க்க ஆரம்பித்து இது வரை ஜாதகம் , பொருத்தம் என எல்லாம் தட்டிகழிக்கப்பட்டு வெறுத்து நிறுத்த நினைத்த வேளையில் இத்தனை நாள் நீ காத்துக்கிடந்தது இதற்கு தான் என நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் வந்தது அவள் புகைப்படம். பார்த்த நிமிடமே இவள் தான் என்னவள் என முடிவெடுத்தேன். அதற்கேற்றார்போல் ஜாதகம் எந்த கிரகத்தின் குறுக்கீடும் இல்லாமல் பொருத்தமாக இருந்தது.

பெண்
பார்க்க இன்னும் இரண்டு நாட்களில் போகலாம் என அம்மா நேற்று சொன்ன அந்த நிமிடத்தில் இருந்து அந்த ஒத்திகை தான் மனதில் நிகழ்ந்து கொண்டே இருந்தது. மணி ஏழு.

இன்னும் முழுசாக முப்பத்தாறு மணி நேரம் இருக்கிறது அவளை பார்க்க போக. ஆனால் மனதின் வேகத்திற்கு கடிகாரத்தால் ஈடு கொடுக்க முடியவில்லை. அன்று சாயந்திரமே அவளை பார்க்க முடிவெடுத்தேன். ஆராய்ந்து திட்டமிட்டு எடுத்த முடிவு அல்ல. மனது சொல்லி மூளை எடுத்த முடிவு. எதற்கு பார்க்கவேண்டும் என்ன பேச வேண்டும் யோசிக்க தோன்றவில்லை. ஆனால் பார்க்கவேண்டும். பார்த்தே தீர வேண்டும். எப்படியாவது. பெண் பார்க்க சென்று பிறகு பெண்ணை பிடிக்கவில்லை என சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. இவளை பிடிக்காமல் இருக்க போவதில்லை என தோன்றியது. அதனால் தான் என்னவோ நேரில் பார்க்கும் ஆவல் ஒவ்வொரு நிமிடமும் கூடிக்கொண்டே போனது.

அந்த
அந்தி வேளையில் முகம் தேடிக்கொண்டு அவள் அலுவலகத்திற்கு வெளியெ காத்திருந்தேன். புகைப்படத்தில் பார்த்த முகம் மனதிற்குள் பதிந்திருந்த காரணத்தால் புகைப்படத்தை கொண்டு வரவில்லை.

கண்மணியை கண்மணியால் தேடி கொண்டிருந்த நேரத்தில் கடந்து போன முகங்கள் எல்லாம் அற்பபதரை பார்ப்பது போல போவது என்னை சற்றும் பாதித்திருக்கவில்லை.

திடீரென முகங்கள் குறைந்து போக தொடங்கின.என் கண்ணில். தூரத்தில் அவள். அவளுக்கு மிக அருகில் என் மனது. புகைப்படத்தில் பார்த்ததை விட நேரில் இன்னும் அழகாக தான் இருந்தாள்.

மாலை சூரியன் மீண்டும் மேலெழுந்து அவள் முகம் பார்த்தது
சந்திரன் அவசரமாக வெளிவந்து அவள் முகம் பார்த்து நாணி மறைந்தது
தேனீக்கள் கூட்டம் பூவென நினைத்து அவளை நெருங்கியது
கடவுளென நினைத்து பக்தர்கள் கூட்டம் குவிய துவங்கியது
இத்தனையும் நடந்தது அந்த ஒரு நிமிடத்தில்
நான் என்னுள் உன் நினைவுகளில் தொலைந்திருந்த அந்த ஒரு நிமிடத்தில்
நிதர்சனம் சுட்ட போது நீ என் கண்ணதெரில்
என்னுள்ளும் என்முன்னும் நீ
நீ மட்டும் .


அந்த நொடியில் என்னுள் பல பட்டாம்பூச்சிகளை பறக்கவிடும் அளவிற்கு அழகாய் இருந்தாள். நேராக என்னை நோக்கி வருவது போலிருந்தது. வார்த்தைகளை கூட தயார் படுத்தவில்லை. வியர்வையின் வேகத்திற்கு எண்ணங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இப்போது பேசினால் கேட்கும் தூரத்தில் அவள். நேராக என்னருகில் வந்தாள். பின் என்னை கடந்து போனாள். பின்னர் தான் என் மயங்கி கிடந்த மூளைக்கு புரிந்தது. அவளுக்கு என் வீட்டார் என் புகைப்படம் அனுப்பியிருக்கவில்லை. என் பெயரும் பயோடேட்டாவும் தான் அனுப்பியிருந்தார்கள்.

உள்ளத்தில் எழுந்த அந்த பூரிப்பு. அவளை கண்டவுடன் நொடிப்பொழுதில் என்னுள் நிகழ்ந்த அந்த ஆயிரமாயிரம் மாற்றங்கள். அத்தனையும் வாழ்ந்தால் இவளோடு தான் என அடித்து கூறின.

தாமதிக்க நேரமில்லை. தாமதிக்கவும் தோன்றவில்லை. நேராக அவளிடம் சென்றேன். பெயரை சொல்லி அறிமுகப்படுத்தியவுடன் அவள் கண்கள் அகலமாவதை கண்டேன். கண்டு பிடித்து விட்டாள். என் ஆர்வத்தை கண்டுபிடித்துவிட்டாள். பேசாமல் போய்விடுவாளோ என யோசித்த வேளையில் பேச தொடங்கினாள்.

"நீங்க வருவீங்கனு அம்மா ஒண்ணும் சொல்லலயே"

"நான் வருவேனு எனக்கே காலைல தான் தெரியும்"

"அப்படினா"

"அப்படினா நான் இங்க வந்தது யாருக்கும் தெரியாது"

"ஓ.. எதுக்காக வந்தீங்க"

"பாக்றதுக்காக"

"பாக்றதுக்காகவா"

"ஆமா ரெண்டு நாளா என்ன கனவுல தொந்தரவு செஞ்சிட்டு இருக்க உன்னை நேர்ல பாத்து கேக்க தான்"

"என்ன கேக்கணும்"

"இத்தன நாளா எங்க இருந்தணு"

" .... "

"வரணும்னு தோணுச்சு வந்துட்டேன். ஆனா என்ன பேசுரதுனு தெரியல. சுருக்கமா சொல்லிடுறேன்.எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு.மேற்கொண்டு பேச எங்க வீட்ல சொல்லிட்டேன். உங்க வீட்ல எதுவும் சொன்னாங்களா"

"இல்ல"

"சனிக்கிழமை அன்னிக்கு பொண்ணு பாக்க வரேன்"

"ம் "

"வாய்ப்பு கொடுத்தா டெய்லி உன்ன பாக்க வருவேன்"

புன்னகை மட்டும் பதிலாய் வந்தது. ஆனால் புன்னகை பதிலாய் வந்தது. புரிந்து போனது எனக்கு. வரம் கிடைத்தாயிற்று எனக்கு. அன்று அதற்கு பிறகு ஒரு மணி நேரம் பேசினோம். என்ன பேசுகிறோம் என கவனிக்கவில்லை. ஆனால் பேசுவது சுகமாயிருந்தது. பிடித்திருந்தது. அவளுக்கு என்னை பிடித்திருந்தது. அது எனக்கு பிடித்திருந்தது.

சனிக்கிழமை.

ஜன்னலிடுக்கில் என் கண்பார்க்கும் அவள் கண்கள்.