Saturday, October 16, 2010

இரப்பு - சிறுகதை


தினமும் கடந்து போகும் அந்த சாலையில் அன்று மட்டும் புதிதாக ஒரு பிச்சைகாரர் முளைத்திருந்தார். அங்கிருந்த பிச்சைகாரர்களில் பத்தோடு பதினொன்றாக இருந்தாலும் அவர்களை விட இவர் சற்றே மாறுபட்டிருந்தார். கண்களில் இந்த நிலைக்கு தான் வந்துவிட்டோமே என்ற வருத்தம் நிறைந்து இருந்தது. ஆனாலும் அங்கிருந்த மற்ற பிச்சைகாரர்களின் செயல்களை நேரிடையாக பார்த்ததால் இவரின் மேல் உடனடியாக பரிதாபம் வந்துவிடவில்லை.


மற்ற பிச்சைகாரர்களை பற்றி முதலில் பாப்போம். அந்த சாலையில் வழியே நான் அடிக்கடி போவதுண்டு. அப்படி ஒரு நாள் அந்த வழியே போகும் போது தான் முதல் முறை அதை கண்டேன். அருகில் இருந்த ஒரு சந்தில் கஞ்சா புகைத்து கொண்டிருந்தனர் அதில் சிலர். மற்றொரு நாளை காலையில் டாஸ்மாக் திறக்க அங்கு காத்திருந்தனர். பசிக்கு பிச்சை எடுப்பதே தவறென நினைப்பவன் நான். இதில் தன் சுகத்திற்காக பிச்சை எடுக்கும் இந்த இழிவு மனிதர்களை பார்த்த மாத்திரத்தில் முடிவெடுத்தேன் இனி எக்காரணம் கொண்டும் யாருக்கும் பிச்சை போட கூடாதென.


அந்த அந்த புதியவரை கண்ட போது அவர் என்னை நோக்கி கை ஏந்தி பிச்சை கேட்டார். ஆயிரம் பேர் அவரை கடந்து சென்று கொண்டிருந்தாலும் அவர் நான் பார்க்கையில் முதல் முறையாய் என்னிடம் தான் கை ஏந்தினார். நான் அவரை பார்த்ததை அவர் நான் உதவ போகிறேன் என்று புரிந்திருக்க வேண்டும். ஆனால் மற்றவர்களை போல் நானும் முகத்தை மறுபக்கம் பார்த்து கொண்டு கடந்த போது அவர் முகம் சுருங்கியிருக்க வேண்டும்.


அன்றைய அலுவலக பொழுது மிக மெதுவாக நகர நினைவெல்லாம் அந்த பிச்சைகாரர் மேல் தான் இருந்தது. வெளியூரில் இருந்து வந்து பணமில்லாமல் பிச்சை எடுக்க துணிந்திருப்பாரோ இல்லை பிள்ளைகள் ஒதுக்கி வைத்து வேறு வழி இல்லாமல் வந்திருப்பாரோ. ச்சே ஒரு ரெண்டு ருபாய் கொடுத்திருக்கலாமோ? இப்படி மனவருத்தம் ஏற்பட்டிருக்காதே. மற்ற பிச்சைகாரர்கள் ஏதோ தொழில் செய்வதை போல அங்கு அமர்ந்திருக்க இவர் மட்டும் உடல் கூசி கூனி அமர்ந்திருந்தது மனதை பிசைந்தது. மற்றவர்களின் குரலில் இருந்த சோகம் முகத்தில் இல்லை. இவரிடமோ முகத்தில் இருந்த சோகம் குரலில் இல்லை.

சாயந்திரம் கண்டிப்பாக அவரிடம் ஒரு பத்து ருபாய் குடுக்க வேண்டும். முடிவு எடுத்ததே மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

அந்த ஆறுதல் நாளை வேகமாக ஓடியது. என்றுமில்லாத ஒரு விதமான புதிய மனநிலையில் இருந்தேன். அது வருத்தமா இல்ல சந்தோஷமா என்று சொல்ல தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக உதவிக்காக ஏங்கும் ஒரு பிச்சைகாரனின் தட்டில் விழும் பத்து ரூபாய்க்கு அவன் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியில்லை. அதற்கு ஈடான ஒரு உணர்வு கையில் பணமிருக்கும் போது தோன்றது போலும்.

அவசரமாக அந்த பிச்சைகாரர்களை கடந்த அந்த பெரியவரை நெருங்கும் போது அவர் உறங்கி கொண்டிருந்தார். நின்று எழுப்பி காசு போட தோன்றவில்லை. அங்கு நடந்து பொய் கொண்டிருக்கும் அனைவரும் நான் அவரை எழுப்பி காசு கொடுப்பதை பார்ப்பார்கள் என தோன்றியது. அந்த பத்து பிச்சைகாரர்களை விட்டு அவருக்கு மட்டும் தேடி பிடித்து பிச்சை போடுவதை மற்ற பிச்சைகாரர்கள் எப்படி எடுத்து கொள்வார்கள். மன குழப்பத்தோடு நிற்காமலே சிந்தித்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். காலையில் கண்டிப்பாக அவருக்கு காசு போட வேண்டும். உறங்கி கொண்டிருந்தாலும் எழுப்பியாவது போட வேண்டும். முடிவெடுத்தேன்.

இரவு அன்று மட்டும் கழிவேணா என முரண்டு பிடித்தது. எப்போது உறங்கினேன் என தெரியாது ஆனால் விடிந்த உடன் மறக்க வாய்ப்பில்லாமல் முதலில் தோன்றியது அவருக்கு போட வேண்டிய அந்த பத்து ரூபாய் தான். மெதுவாக சாலையை அடைந்தேன். பத்து ருபாய் தாளை மேல் பையில் எடுத்து வைத்தேன். நிச்சயம் அவர் நான் பத்து ருபாய் கொடுத்தவுடன் வாழ்த்துவார். இன்றைய நாள் ஒரு நல்ல காரியத்துடன் துவங்க போகிறது. மனது பெருமிதப்பட்டது.

ஆனால். காணவில்லை. அந்த பெரியவரை காணவில்லை. அவசரமாக பக்கத்தில் இருந்த பிச்சைகாரரை விசாரித்தேன். அவரின் பதில் அத்தனை சப்தத்தையும் மௌனமாகியது அத்தனை கூட்டத்திலும் என்னை தனிமையாக்கியது .

"அவரா தம்பி. நேத்து முழுக்க இங்க இருந்தாரு. கெஞ்சி கேட்டாலே பிச்சை கெடைக்க மாட்டேங்குது. அவரு கேக்றதுக்கு யோசிச்சிட்டு இருந்தா எங்க பிச்சை விழும். பசியோடவே படுத்தாரு. நாங்க குடுத்தாலும் வாங்கிக்காம அழுதிட்டே கெடந்தாரு. அப்புறம் ரவைக்கு உசிரு போய்டுச்சு. போலீஸ் வந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய்ட்டாங்க. கொஞ்சம் சாப்பிடிருந்தா உசிராவது தங்கியிருக்கும் "