Sunday, February 13, 2011

விடிவில்லா இரவு - சிறுகதை

அர்த்தமற்ற இரவின் அர்த்தஜாம நேரத்தில் கன்னத்தில் ஜில்லென்று மோதிய அந்த ஒற்றை காற்று மனதின் தெளிவுகளை நீக்கியது . மீண்டும் அந்த ஒற்றை காற்றிற்காக காத்திருந்து தோற்ற போது தான் அந்த நிகழ்வின் முக்கியத்துவம் உரைக்க ஆரம்பித்தது .

மே மாத இரவின் மெல்லிய வியர்வை துளிகள் நெற்றியில் பூத்திருந்த நேரத்தில் அந்த ஒற்றை காற்று இதமாக இருந்ததே தவிர கிலியை உண்டு பண்ணவில்லை. ஆனால் இப்பொது உடலின் இதமான பாகங்கள் எல்லாம் வியர்வையில் குளித்து கொண்டிருந்தன.

இத்தனை நாளில் தனிமை வருத்தியதே தவிர பயமுறுத்தவில்லை. இன்றைய இப்போதைய தனிமை அப்படியல்ல. முகம் தெரியாத ஒருவரை கூட நொடிபொழுதில் நண்பனாக ஆக்கிக்கொள்ள துடிக்கும் தனிமை. இல்லை.பயம்.

கண்கள் அங்கும் இங்கும் இருளில் இருட்டை துழாவியது .

தூரத்தில் கண்ணுக்கு தென்படாத ஐஸ் வண்டியின் மணிசத்தம் கேட்டது. சற்று நேரத்திற்கெல்லாம் நான்கைந்து நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. ஆனால் அதுவும் கண்ணுக்கு தென்படவில்லை.

இது யாரோ வேண்டுமென்று காட்டும் விளையாட்டோ என்றும் தோன்றியது. ஆனால் இந்த விபரீத விளையாட்டுகளை நிகழ்த்தும் அளவிற்கு இன்னும் நண்பர்கள் சேரவில்லை. எதிரிகளும் தான் .

திடீரென்று ஒரு ஆட்டோ வரும் சத்தம் கேட்டது .

ஆட்டோவும் கண்ணுக்கு தெரிந்தது. கை நீட்டும் முன் அது நின்றது . போகும் வழியில் இறக்கி விடுவேன் என அவன் கூறியதை மறுக்கும் நிலையில் நான் இல்லாததால் மறுக்காமல் அமர்ந்தேன்.

ஆட்டோ இன்னொரு இருட்டு சந்தில் நின்றது. இறங்குமாறு கண்ஜாடை காட்டினான். பணம் கைமாறியது. முகம் பதியவில்லை. இறங்கி எந்த இடம் என யோசித்த வேளையில் ஆட்டோ போனதே தெரியவில்லை. சப்தமும் வந்ததாக தெரியவில்லை.

அத்தனை இருளிலும் அவன் இறக்கி விட்ட இடம் என்னவென்று மட்டும் திடீரென புரிந்தது.காரணம் புரியவைத்தது காட்சி அல்ல. வாசனை. நாற்றமேன்றே சொல்லலாம். ஆம். பிணங்களின் நாற்றம். எரிந்து முடிக்கும் நிலையில் இருக்கும் பிணம் போலும். வாசனை குறைந்து கொண்டே வந்தது .

இப்போது பயம் இல்லை. ஒரு விதமான சந்தோஷம் இருந்தது. காரணம். நான் இறங்கியது சுடுகாடு. சுடுகாட்டில் சந்தோஷத்திற்கு காரணம். வெட்டியான் நிச்சயம் அங்கு இருக்க வேண்டும். எரிந்து போன உடலில் சாம்பலையும் மிச்சமான எலும்புகளையும் எடுக்க அவன் நிச்சயம் காத்திருக்க வேண்டும்.

அந்த காம்பவுண்ட் சுவரை ஒட்டியே ஓடினேன். கதவு திறந்திருந்தது. இங்கு திருட பொக்கிஷமா இருக்கிறது கதவை பூட்டுவதற்கு.

எதிர்பார்த்தபடி வெட்டியான் இருந்தான். நல்ல போதையில். அவனருகில் சென்று நின்றேன். அவன் பேசும் நிலையில் இல்லை. போதை தலைக்கேறி சரிந்திருந்தான். உலுக்கி பார்த்தும் பயனில்லை. வெளியில் தனிமையில் செல்ல மனம் ஒத்துழைக்கவில்லை. இவனுடன் இருந்து காலையில் செல்லலாம் என முடிவெடுத்தேன்.

மீண்டும் சில்லென கன்னத்தில் ஒரு காற்று அடித்தது. பயம் தொற்ற துவங்கி தோற்றது. அருகில் துணைக்கு இவன் இருப்பதால்.

அசந்த நேரத்தில் தூங்கியிருப்பேன் போலும். சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் கன்னத்தில் ஒரு ஒற்றை காற்று. ஆனால் இப்போது அதில் ஜில் இல்லை. ஆனால் கண் திறந்து பார்க்க தோன்றவில்லை. முடியவில்லை என்றும் சொல்லலாம்.

விடிந்தது. காற்று அளவுக்கு மீறி ஜில்லென வீசிக்கொண்டிருந்தது.

வெட்டியான் என் சாம்பலையும் எலும்புகளையும் அள்ளி கொண்டிருந்தான்.

பயம் காற்றில் இல்லை மனதில் தான். தாமதமாக புரிந்தது.