Wednesday, July 18, 2012

விளையாக் கனவுகள்



சேவல்கள் ஒவ்வொன்றாக விழித்துக் கூவத் துவங்கிய நேரம்.

கதிரவன் கண்துடைத்து மலைகளின் மேல் எட்டிபார்க்க எத்தனிக்கும் அதிகாலை.

இயற்கையன்னையின் ஓரவஞ்சனையான அந்த கிராமத்து மண்வாசம் காற்றில் பரவிக்கொண்டிருந்தது.

அதிகாலை காற்றுக்கு அதனை மரங்களும் சோம்பல் நடனமாடிக்கொண்டிருந்தன.

பனை மரங்களில் சறுக்குவிளையாட்டுகள் நடந்து கொண்டிருந்தன. அதன் விளைவாக பதநீரும் கல்லும் தயாராகிகொண்டிருந்தன.

வாசலில் நீர் தெளிக்கும் சத்தங்கள். துடைப்பங்கள் ராகமாக ஒன்று கூடி கச்சேரி நடத்திக்கொண்டு வாசல்களை தூய்மைப்படுத்தி கொண்டிருந்தன.

இருள் வேண்டாவெறுப்பாக விலக துவங்கியிருந்தது.

கழுத்தில் மணியோடு மாடுகள் தொழிலுக்கு தயாராகி கொண்டிருந்தன. மணியின் சத்தங்கள் கேட்பதற்காகவே மாடுகள் குதித்து செல்வது போலிருந்தது. வாசலில் தெளிக்கப்பட்டிருக்கும் தன் சாணத்தை மிதிக்காமல் விலகி வயலுக்கு விரட்டப்பட்டு கொண்டிருந்தன.

ஊரணிக்கு பெண்கள் குடங்களோடு அணிவகுக்க துவங்கியிருந்தார்கள்.

களங்கமற்ற நெஞ்சங்கள் கள்ளமற்ற சிரிப்புகளோடு கலங்கலான தண்ணீரிலும் குடங்களை இருமுறை நீரின் மேலாக மூழ்க விட்டு எடுத்து தெளிந்த நீரை எடுத்து சென்றனர். நீரின் தூய்மை அங்கு மனதின் தூய்மையை பொறுத்திருந்தது. குடங்களை நிரப்பிக்கொண்டு மீண்டும் அணியாக திரும்ப துவங்கியிருந்தார்கள். அமைதியான அந்த நேரத்தில் அவர்கள் பேசும் ரகசியங்கள் அரைகுறையாக ஒவ்வொரு வீட்டைக்கடக்கும் போதும் ஒவ்வொரு வீட்டின் திண்ணையில் உறங்கிகொண்டிருப்பவருக்கும் ஒவ்வொன்றாக கேட்டது.
ஆனாலும் கவனிக்க தோன்றாத அந்த சாமத்தில் அவை வீணாகவே போயின.

ஒவ்வொருவராக அவரவர் வீட்டுக்கு திரும்பி குடத்தை இறக்கி பின் அன்றைய கலை கடமையாக இரவில் ஊற வாய்த்த சோற்றை எடுத்து நீராகாரம் செய்ய துவங்கினர்.

இத்தனையும் ஒரு சேர பார்க்கும், கேட்கும், நுகரும் அதனை பேருக்கும் அந்த விடியல் மகிழ்ச்சியாகத் தான் இருக்கும்.


மாறனும் அப்படி தான் விடியலை ருசித்தபடி உறங்கிக் கொண்டிருந்தான். அந்த கிராமத்து பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான் . அடிப்படை வசதிகள் குறைவாக இருக்கும் அந்த பள்ளியில் நிரந்தரமாக எந்த வாத்தியாரும் இருந்ததில்லை. அதை பற்றியும் கல்வி பற்றியும் அங்கு யாரும் கவலைப்படவில்லை. கல்வியின் முக்கியத்துவத்தை மக்கள் உணராத அல்லது உணர்த்தப்படுத்தப்படாத காரணத்தால் இந்த நிலை. அதை உணர்ந்தவர்களும் வானம் பார்த்த பூமியை வானம் பொய்த்து விடுவதால் கண்டு கொள்வதில்லை.

ஆனாலும் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப யாரும் தவறவில்லை. காரணம் சத்துணவு திட்டம். அதனால் மதிய நேரத்தில் அங்கு அணைத்து மாணவர்களும் வந்துவிடுவார்கள். மற்ற பொழுதுகள் வேப்ப மரங்களிலோ, புளிய மரங்களிலோ, கண்மாய்களிலோ கழிக்கப்பட்டு கொண்டிருந்தன .

மாறனின் தந்தை கதிரேசன் விவசாயத்தை ஆதாரமாக கொண்டு வாழ்வை நடத்திக் கொண்டிருந்தார். அந்த கிராமத்தில் இருந்த ஒவ்வொரு குடும்பத்தையும் போல. மாறனை நன்றாக படிக்க வைக்கவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் நினைத்து போராடும் அவரின் எண்ணங்களுக்கு இயற்கை ஒத்துழைக்காததால் அதை செயலாக மாற்றமுடியாமல் தவித்து கொண்டிருந்தார். வயலை குத்தகைக்கு விட்டுவிட்டு டவுனுக்கு கட்டிட வேலைக்கு போகலாமென நீண்ட நாள் எண்ணம். ஆனால் பிறந்து கால் பதித்த மண்ணை மற்றவரிடம் குத்தகைக்கு விட மனது இடம் கொடுக்கவில்லை.

மாறனுக்கு இந்த உள்ள போராட்டத்தை புரிந்துகொள்ளும் வயது இல்லை. தவிர வகுப்புகள் தாண்டி கொண்டிருந்தாலும் கல்வியில் முன்னேற்றம் இல்லாத பக்குவங்கள் அவனுக்கு புரிய நியாமில்லை. காரணம் அந்த கிராமத்தின் அணைத்து பிள்ளைகளுமே அந்த பள்ளியில் தான் படித்துக்கொண்டிருந்தார்கள்.

தன் மகனும் தனக்கு பின்னே இதே வயலை நம்பி பிழைக்காமல் ஒரு அரசாங்க உத்தியோகத்தில் சேர வேண்டுமென்ற நியாமான ஆசைகளோடு தன் நாட்கள் கழிந்துக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தார் கதிரேசன். எப்படியாவது தன் மகனை அருகிலிருக்கும் டவுனில் தனியார் பள்ளியில் சேர்த்து விடவேண்டுமென்று எண்ணி கொண்டேயிருந்தார். ஒவ்வொரு முறையும் அடுத்த வருடம் சேர்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் வருடங்களில் இருந்த முன்னேற்றம் செயல்பாட்டில் இல்லை.

மாறன் பள்ளிக்கு செல்லுமுன் தினமும் கதிரேசனுக்கு கஞ்சிகலயத்தை கொண்டு செல்வது வழக்கம்.

"அப்பா, இந்தப்பா பிடி. அம்மா நீராகாரத்த குடிச்சிட்டு அப்புறம் வேல பாக்க சொன்னுச்சு. மதியம் சமைச்சு அதே கொண்டு வருதாம் "

"சரிப்பா ராசா. பள்ளிக்கூடம் எல்லாம் நல்ல படிக்கிறியா" கதிரேசன் மனதிற்குள் மகனின் ஆசைகளை சூதானமாக கேள்வி கேட்டு தெரிந்துக்கொள்ள நினைத்தார்.

"படிக்கறேன் பா. ஆனா வாத்தியார் தான் அடிக்கடி மட்டம் போட்டுடறார்"

"டவுன்ல இருக்க ஸ்கூல்ல சேத்துவிடவா பா" . அவன் சரி என
சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் உடனே தொற்றிக்கொண்டது.

"வேண்டாம்பா. இங்கனயே படிக்கறேன். இங்க மத்தியானம் சோறு
போடுவாங்க. அங்க அதுகூட போட மாட்டாங்களாமே" . யதார்த்தமான அந்த பதில் கதிரேசனை உலுக்கிபோட்டது.

எண்ணங்களின் வறுமையை போக்கினால் வாழ்வு நகராது. வாழ்வில் வறுமையை போக்கினால் தான் எண்ணங்கள் செயல்படும். வறுமையில் கல்வி பெருகாது. வயிறு பசித்திருக்கும் போது உணவு தான் பெரிதாய் தெரியும் கல்வி அல்ல. அத்தியாவசிய தேவையான மூன்று வேளை அல்ல ஒரு வேளையாவது நல்ல உணவு இருந்தால் தான் கல்வி கவனிக்கப்படும். இளமையில் வறுமையே கல்வியை எட்டாக்கனியாக்கி விட்டுகொண்டிருக்கிறது. மதிய உணவு திட்டத்தால் கல்வி பெருகியதோ இல்லையோ மக்கள் மனங்கள் நிறைந்திருகிறது. நிதர்சனங்கள் கதிரேசனுக்கு விளங்கிக்கொண்டிருந்தது.


"அது சரிதான்பா. எங்க படிச்சா என்ன நம்ம படிக்கிறத பொறுத்து தான் முன்னேற முடியும்" . கதிரேசனின் யதார்த்தமற்ற பதிலை மாறன் கவனிக்காமல் பள்ளிக்கு விரைந்துக்கொண்டிருந்தான்.