Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, October 8, 2011

என் சாளரம் - 1

கனவுகள் இலவசம்
என் கனவுகளெல்லாம் அவள் வசம்.

ஒற்றை புன்னகையில் கற்றையாய்
என் உயிரை அள்ளி சென்றவள்.

நித்தம் நித்தம் என் கற்பனையில்
கருவாகி பிறப்பவள்.

தஞ்சமாக என் நெஞ்சில் புகுத்திட
நான் தேடும் பிஞ்சு நெஞ்சவள்.

என்னில் ஊற்றெடுக்கும் ஒவ்வோர்
வார்த்தைக்கும் அர்த்தமானவள்.

அழகுகளை படைக்க பிரம்மன்
படைத்த அளவுகோல் அவள்.

திமிரான அழகுகள் ஏராளம்
இவளோ அழகால் திமிறவைத்தவள்.

வாழ வெறுத்த அனைவருக்கும்
வாழ்க்கை பிடிக்கவைத்தவள்.

ஒரே பார்வையில் இதயத்தில்
ரத்த வறட்சியை உண்டுவிப்பவள்.

அறிவியல் மறந்த பல
ரசாயன மாற்றங்களை உருவிப்பவள்.


களவாட நினைக்கும் நேரம்
களவுகொடுப்பவளுக்கு தெரியாது .
காதலை தவிர.

கற்பனைகள் வறண்டு போகாது
நீ என் கண்முன்னே இருக்கும்வரை.

என்னவளாகாவிடினும்.

Wednesday, November 4, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 6

கண் மூடி விழித்திருந்து
கனவில் உறங்கி போனேன்
கட்டிலில் விழிக்கையில்
என் அருகில் நீ
நித்தமும் உன்னுடன்
நான் விழிக்க என்ன செய்ய
யோசித்த வேளையில்
உறங்கிப்போயிருந்தேன்


----------------------------------------------------------------------------------------



பருவத்து மாற்றங்கள்
முகத்தினில் வெளிப்பட்டு
தழும்பாகி
மறைந்து போனது
மாற்றங்கள் விட்டுசென்ற
ஏக்கங்கள் மறையாமல்
தழும்ப செய்தது.

----------------------------------------------------------------------------------------



தொலைக்க துடிக்கிறேன்
தொலைய மறுக்கிறாய்
தொலைக்க தவிக்கிறேன்
தொலைந்தே போகிறேன்

தொல்லைகளின் எல்லைமீறல்
தொலைகின்றன இரவுகள்
மிச்சமிருக்கும் கனவுகள்
எல்லாம் உன் நினைவுகள்

கண்ணீரின் ஈரங்கள்
காயாத நேரங்கள்
மீட்டெடுத்த சோகங்கள்
கரைத்தன காலங்கள்

Thursday, October 1, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 5

வடக்கே சூரியன்
உதித்த நாளில்
பூமி பிளந்து
விண்ணை நோக்கி
மழை பெய்த வேளை
நட்சத்திரங்கள்
வாசலில் திரண்ட நேரம்
கிணற்று நிலா பிம்பம்
வானில் ஒளிர்ந்த தருணம்
நான் உறங்கி கொண்டிருந்தேன்
கல்லறையில் உன் கண்ணீர் துளி
-------------------------------------------------------------

கண்களை தவிர்த்து
மறுபக்கம் திரும்பி
விலகி போக எத்தனித்து
வழியின்றி நெருங்கி
மனமெங்கும் கிலியோடு
கடக்கும் முன் மட்டும்
தவிர்த்தாலும் தவறாமல்
கண் பார்க்கும்
வேகம் கூடும்
ஒரு நாள் பார்க்காவிடினும்
கண்கள் தேடும்
பெருமூச்சு தொடரும்
மறுநாள் மறக்காமல்
தரிசனம் தரும்
மாதங்கள் ஆனாலும்
விட்டெறிந்த கல்லுக்கு
பழிவாங்க காத்திருக்கும்
பக்கத்து வீட்டு நாய்

-------------------------------------------------------------

எதிர்பாராத நிமிடத்தில்
எதேச்சையாய் எதிர்ப்பட்டு
மீளும் முன் மீட்டுவிட்டாள்
தவறினாலும் தவறில்லை
தொலைந்தாலும் பிழையில்லை
மண்ணிடம் விண்ணிடம் சாட்சியில்லை
இவ்விடம் அவ்விடம் பிரிவில்லை
எவ்விடம் உறைவிடம் புரியவில்லை
காதலிடம் காதலியிடம் விடையில்லை
இல்லைகள் தொல்லையில்லை
தொல்லைகள் வலிக்கவில்லை
இல்லைகள் தொலைந்தநேரம்
காதலி இல்லவேயில்லை

Wednesday, September 16, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 4

வெயிலில் உழைத்து
குடிக்காமல் சேமித்து
ஆசையாய் படம் பார்த்தேன்
உழைப்பின்றி படமெடுத்து
என் வார உழைப்பை
பிடுங்கி கொண்டார்கள்

---------------------------

வருமென்று எதிர்பார்த்து
தயாராய் புறப்பட்டு
பயந்தபடி சென்ற நேரம்
அது வரவில்லை
சுள்ளென வெயில் சுட
உள்பனியன் கூட போடாமல்
வெள்ளை சட்டை போட்ட நேரம்
எங்கிருந்தோ எட்டி பார்த்து
ஏளனம் செய்தது
என்னை அழுக்காக்க
வந்த அந்த மழை.

------------------------------

எங்கள் தெரு சாலையெல்லாம்
தார்க்கோலம் பூண்டது
அடுத்த வாரம்
மழை நிச்சயம்

---------------------------------

எட்டி பார்க்க
விட்டு சிரித்தாள்
கதறி அழுதாள்
தொட்டு துடைக்க
அழுகை நிறுத்த
மீண்டும் சிரிக்க
கைகள் நீட்டினேன்
எட்டவில்லை
கதறி அழுதேன்
சிரித்தாள்
பிடித்திருந்தது
தொடர்ந்து அழுதேன்
அம்மா உள்ளேசென்றாள்
கூடவே இடுப்பிலிருந்த நானும்

Friday, August 28, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 3



தீராத முத்தங்கள்
-------------------------------
அர்த்தமற்ற சாமத்தில்
அழுகையோடு உறங்கியவனை
இமைக்காமல் பார்த்தவளை
மனதுக்குள் அறிந்தாலும்
கண்மூடி கிடந்தவனை
நெற்றியில் முத்தமிட்டு
வெளியேற நினைக்கையிலே
அழுகையோடு விழித்தான்
அவள் அழகு முகம் பார்க்க
நெற்றி முத்தம் கேட்க
முத்தம் வாங்கி உறங்குமுன்
அழைத்தான் அவளை
மழலை அழைப்பில்
மீண்டுமொரு முத்தம்

இல்லாத நினைவுகள்
-------------------------------------
சிந்திக்காமல் சிரித்த
பார்க்காமல் பழகிய
மண்ணோடு புரண்ட
மயிர் பிடித்தெரிந்த
பிரிவின்றி உண்ட
பிரியாமல் நின்ற
அடிவாங்கி அழுத
கால்முட்டி தேய்ந்த
மழையொடு ஆடிய
வெயிலோடு ஒடிய
தட்டானை பிடித்த
ஓணானை மயக்கிய
பத்துகாசு திருடிய
கண்பார்த்து பேசிய
மண்பார்த்து நடக்காத
பள்ளிக்கூட நாட்களை
நினைத்து திளைத்தேன்
பள்ளிக்கூடம் காணாத
பால்யனை பார்க்கும் வரை

முதல் துளி
-----------------------------------
விடியும் நேரம்
கஞ்சிகலயம் தூக்கி
தலப்பா கட்டி
வேட்டி மடிச்சு
ஏர் பூட்டி
கையில கொம்பெடுத்து
மாடு விரட்டி
வயலுக்கு போக
வானம் பார்த்து
காத்து நிக்கேன்
எப்ப வருமோ
அந்த மொத துளி

Monday, August 24, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 2


பள்ளிக்கூடம் பிடிக்கும்
படிக்க பிடிக்கும்
பக்கத்துக்கு பெஞ்ச் ராமு பிடிக்கும்
எப்போதும் முறைக்கும் சீதா பிடிக்கும்
அடித்தாலும் தமிழ் டீச்சர் ரொம்ப பிடிக்கும்
மைதானம் பிடிக்கும்
விளையாட பிடிக்கும்
பறக்காவெட்டி என ராமு சொன்னாலும்
பள்ளிகூட மதிய உணவு பிடிக்கும்
அதானால் பள்ளிக்கூடம் பிடிக்கும்
படிக்க பிடிக்கும்
......
......

இது கருவேலநிழல் பா. ராஜாராமின் தொடக்கபள்ளி இடுக்கைகாக
எழுதநினைத்து எழுத மறந்த கவிதை.

*******************************************************************************

வாழ்வாங்கு வாழென்று
வாழ்த்தியுனை நான் அனுப்ப
வாழாமல் வாழ்ந்துகொண்டு
வானத்தையே வெறித்து கொண்டு
வார்த்தைகளை வார்த்தெடுக்க
முற்பட்ட நேரத்தில்
வானம் மறைந்து
உன் முகமானது
தோட்டத்து பூக்கள்
பறந்து வந்த கிளி
புற்தரையில் பனித்துளி
எல்லாம் உன்னை
நினைவுப்படுத்த
வார்த்தைகள் ஊற்றெடுத்த
நேரத்தில்
பேனாவும் பேப்பரும்
காணாமல் போயிருக்க
அதை தேடி போராடும் நேரம்
பக்கத்துக்கு பைத்தியம்
போடா லூசு என
என் கால்சங்கலியை நினைவுபடுத்தியது

*******************************************************************************

மறக்க முடியாததை
மறைக்க முடியாது
மறைக்க முடியாததை
மறுக்க முடியாது

மறக்க நினைத்தாலும்
மறுக்க முடியாது
மறைக்க நினைத்தாலும்
மறக்க முடியாது

மறக்க முடியாத
மறுப்புகள் ஏராளம்
மறைக்க முடியாத
மறுப்புகள் ஏராளம்
மறுப்புகள் தந்த
மரணங்கள் ஏராளம்

மறக்காமல் என்னை
மறைக்காமல் காதலை
மறுக்காமல் ஏற்றுகொள்

Monday, August 3, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 1

தட்டு நிறைய காதலை வைத்து
நீ எடுக்க காத்திருக்கும்
நானும் பிச்சைக்காரன்

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

என்னவளின் கை பட்டு
வெட்கத்தில் சிவந்தது மருதாணி.

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

மலர்களின் கர்வம்
உன் கூந்தலேறியபின்
உச்சமடைகிறது

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

கடற்கரைக்கு சென்று
வானம் பார்த்து
கப்பல் பார்த்து
மக்கள் பார்த்து
நிலவு பார்த்து
மணல் நோண்டி
சிப்பிகள் தேடி
கால்கடுக்க காத்திருந்து
வானம் கறுத்து
மக்கள் கரைந்து
கப்பல் மறைந்து
நிலவை சாட்சியாக்கி
கடலுக்குள் ஓடினான்
காதலுக்குள் ஓடமுடியாததால் ...

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

நிலவின் காதலை மறுத்து
அது தேய்வதை நகைக்கிறாய்
அதாவது துக்கத்தை மறந்து வளர்ந்துவிடும்
நான் தூக்கத்தை மறந்து
தேய்ந்து கொண்டே இருக்கின்றேன்
உன் நினைவில் ..

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

கவிதைகளின் உற்பத்திக்கூடமே
காதலின் பிணக்கூடமே
பிரம்மன் செய்த சிறந்த தவறே
காலனிடம் சொல்லியிருக்கிறேன்
உன்னை கூட்டி செல்ல சொல்லி
நரகத்தில் காதல் பற்றாக்குறையாம்
சித்திரவதைகளின் கருவறையே
நீ சென்று விடு
இனிவரும் காதல்களும்
கவிதைகளுமாவது பயனுள்ளதாக இருக்கும்

--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*

Saturday, August 1, 2009

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

இன்பங்கள் மறந்த நேரங்களில்
துன்பங்கள் முளைத்த காலங்களில்
காதல் கனிந்து மறையும் தருணங்களில்

வார்த்தைகள் தொலைந்த நேரங்களில்
வாக்கியம் தேடிய காலங்களில்
மொழியை மறந்த தருணங்களில்

மகிழ்ச்சியில் திளைத்த நேரங்களில்
நெகிழ்ச்சியில் உறைந்த காலங்களில்
முயற்சியை கைவிடா தருணங்களில்

தேர்வுகள் தொடங்கிய நேரங்களில்
தேர்வுகள் முடிந்த காலங்களில்
தேர்வையே மறந்த தருணங்களில்

உயிர்கள் பிரிந்த நேரங்களில்
உறவுகள் துண்டிக்கப்பட்ட காலங்களில்
உணர்வுகள் மறுக்கப்பட்ட தருணங்களில்

முட்டு கொடுத்து
உடனிருந்த
உடனிருக்கும்
உடனிருக்கபோகும்
எல்லாருக்கும்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Wednesday, May 27, 2009

எம்மனசு புரியலையா - கவிதை

எஞ்சோகம் கேக்குதாடி - யின் தொடர்ச்சி

தென்னங்கீத்து கட்டி வச்சு
குளிப்பாட்டி நான் இருக்க
நீ இடுக்கு வழி பாத்தபடி
என் மனசுக்குள்ள நுழஞ்சியே

புத்தம் புது சீலையிலே
தண்ணி கொண்டு போகயிலே
குறுக்காலே நீ மறிக்க
கொடமெல்லாம் உருண்டோடும்
மனசெல்லாம் தடம் மாறும்

மொத்தமா வேணுமுன்னு
நீ கேட்ட நேரமெல்லாம்
முத்தத்தோட நான் போனேன்
இப்ப மொத்தமா வந்திருக்கேன்
எடுத்துக்கன்னு நான் சொல்ல
எடுத்துக்கிற நீ இல்ல

நடக்காத கல்யாணத்துக்கு
நூறு தேதி குறிச்சோமே
பொறக்காத பிள்ளைக்கு
பேரு நூறு வச்சோமே
திருவிழா கூட்டத்திலே
மாமா நீ என் பக்கத்திலே
புள்ளையோடு போவோமுன்னு
கனவெல்லாம் கண்டோமே
வெறும் கனவாக போச்சுதே

மனசார உன்ன நெனச்சு
வேறொருத்தன் கை பிடிச்சு
காணாம போவேன்னு
காலனோட போயிட்டியா

கட்டான காவல் ஒடச்சு
காட்டுவழி ஓடிவந்தேன்
கனவோட ஓடிவந்தேன்
இப்ப கனவெல்லாம் மண்ணாச்சே
நெனப்பெல்லாம் வீணாச்சே
என் மனசு புரியாம
தப்புன்னு தெரியாம
சடுதியிலே செத்துட்டியே

அடங்காத ஆசையோட
அழியாத காதலோட
மண்ணுக்குள்ளே கெடக்கியே
இந்த பொண்ணுகுள்ளே நீயிருக்க
இந்த பொண்ணுக்கினி யாரிருக்கா

வத்தாத காதலோட
வக்கனயா வாழ்வோமுன்னு
கதை பேசி சிரிச்ச மச்சான்
ஆவியா நீ வந்து
பாவி என்ன தேடாத
உன் பக்கத்துக்கு குழியிலே தான்
பொணமாக கெடப்பேன் நான் .

Thursday, May 14, 2009

எஞ்சோகம் கேக்குதாடி

நித்தம் நித்தம் நாம் படிச்ச
புத்தம்புது ராகமெல்லாம்
சத்தம் கித்தம் போடாம
சடுதியில சாகுதடி

மிச்சம் கிச்சம் இல்லாம
நாம் கொடுத்த முத்தமெல்லாம்
எச்சி கூட காயாம
கன்னத்துல கரையுதடி

நேத்து வச்ச மீன் கொழம்பும்
பதுக்கி வச்ச பழயசோறும்
நீ கொண்டு வருகயிலே
உன பாக்கயிலே பசி தீரும்
நீ ஊட்டயிலே ருசி மாறும்

மோட்டுவளை நீ குத்த
மறுபடியும் நான் முந்த
வேணா வேணான்னு
நீ சொன்ன கதையெல்லாம்
அந்த கருவைக்கு தெரியுமடி

கம்மாகரையிலே
நீ குளிக்கும் அழகெல்லாம்
கண்குளிர நான் பாக்க
கல்லெல்லாம் போதையானு
அத மறந்து உன பிடிக்க
கம்மாகரை காமகரையானதெல்லாம்
சடுதியிலே மறந்துடுச்சா


பத்திரமா நா வரஞ்ச
சித்திரமா நீ இருந்த
கடல் முழுங்கி துப்பும் சூரியனா நீ தெரிஞ்ச
கடன்கார பாவி என்ன கவிதையெல்லாம் எழுத வச்ச
இப்ப கவிதையெல்லாம் நெறய இருக்கு
பாவிமக நீ இல்லயே

சந்தையிலே அப்பனோட
நீ வந்த நேரமெல்லாம்
வேசம் போட்டு வளவிஎல்லாம்
தொட்டு தொட்டு போட்டு விட்ட
அந்த சுகம் தேடுதடி
மனசு கெடந்து நோகுதடி

வண்டிக்கார முருகேசன்
கருவயிலே நம பாத்து
சவுக்கால என மாத்தி
பிரிச்சி உன்னை இழுக்கையிலே
மண்டையிலே அடிச்ச அடி
நினைவு தப்பி போச்சுதடி
உன் நெனைப்பு மட்டும் மாறலடி

மழை பெஞ்சி நான் முழிக்க
கண்ணுமூடி ஓடினதெல்லாம்
உன் வீட்டு சந்தியிலே
திண்ணையிலே ஊர்கூடி
என ஒதுக்கிவச்ச சேதியெல்லாம்
தெரியாம போச்சுதாடி

காத்துவாக்குல வந்த கல்யாண சங்கதிய
அழுது சிருச்சு கொழம்பி தவிச்சேன் எங்கதிய
சத்தியமா உனக்கு மட்டும் தான்னு
நீ செஞ்ச சத்தியமெல்லாம்
நம்பி தொலச்ச வெள்ளந்தி என்ன
கழுத்தறுத்து கழுத்துதாலி வாங்கப்போக
மனசுனக்கு வந்துசசாடி

நீ சொல்லி நான் விட்ட சாராயம்
வெசம் கலந்து அத குடிச்சு
நா வெட்டுன குழியில போய் விழுந்து
காத்து வந்து மணல் மூடி
சவமாக கெடக்குதேன் நா
நீ கட்டுனவன் கைபிடிச்சு
சந்தோஷமா வாழ்ந்துக்கோடி ....

Wednesday, April 29, 2009

உவமானங்களின் தோல்வி

வானத்தை
மேகத்தை
பூக்களை
மொட்டுகளை
கடலை
அலையை
இரவை
நிலவை
நட்சத்திரத்தை
ஆதவனை
தாமரையை
மலையை
மழையை
கடவுளை
வானவில்லை
அதிகாலையை
அந்திமாலையை
பனித்துளியை
பட்டாம்பூச்சியை
தேனை
மானை
மீனை
மெல்லினத்தை
வல்லினத்தை
அமுதை
அமிர்தை

விட்டுவிடுங்கள் உங்கள் கவிதைகளிலிருந்து
அவை தோற்று துவண்டிருக்கின்றன
என்னவளிடம்

Tuesday, April 21, 2009

இன்று கற்பனை விடுமுறை

நீ இல்லாத காட்சிகளை என் கண்கள்
இமைகளோடு போராடி
விருப்பமின்றி பார்க்கிறது

கூடு விட்டு கூடு பாயத்துடிக்கும் என் இதயம்
காதல் மந்திரங்களை நீ மறந்ததால்
என் கூட்டுக்குள் விருப்பமின்றி துடிக்கிறது

உன் வாசம் தேடும் என் சுவாசம்
தோல்வியான தேடல்களுக்கு பின்
நீ இல்லாத காற்றை விருப்பமின்றி அனுமதிக்கிறது

உன் குரலின் ஓசையை தேடும் என் செவி
மௌனத்தின் சப்தத்திலும் உன்னை தேடி
நீ இல்லாத ஒலிகளை விருப்பமின்றி உள்வாங்குகிறது

காதலின் மறுப்பையே தாங்கிய என் மனம்
உன்னை காணாத சோகத்தை தாங்க முடியாமல்
இன்று விடுமுறை கேட்கிறது

நீ இல்லாத நாளை கவிதை எழுதியாவது
மறப்போம் என்று எழுத எத்தனித்து
அறியக்கண்டேன் நீ இல்லாததால்
இன்று கற்பனை விடுமுறை



Friday, March 20, 2009

குறுங்கவிதை - காதல்

எதிர்பாராமல் எதிரினில் வந்தாய்
என் எதிர்காலம் எதிர்படாமல் போனது
நிகழ் காலம் நிகழாமல் போனது
உன் கண்களை நான் கடந்த காலம்
மட்டுமே நினைவில்.

------------------------------------------------------------------------

ஓர விழி பார்வையால் என்னை பார்த்தாய்
உன்னை பிடிக்கும் என்றேன்
மௌனம் உதிர்த்தாய்

என்னை கடக்கும் போது உன் உதட்டுபுன்னகை
மீண்டும் உன்னை பிடிக்கும் என்றேன்
மௌனம் உதிர்த்தாய்

நீ நடக்கும் போது, கடக்கும் போதும்
என் கண்கள் உன்னில்

நீயும் அப்படிதான்
மறுக்காமல் மனதை கேட்டுப்பார்

உன்னை பிடிக்கும் என ஓராயிரம் தடவை மனம் சொன்னாலும்
நான் மௌனம் பழகிவிட்டேன்

நீ பேச பழகி கொள்.
காத்திருக்கிறது என் ஊமை காதல்.

Tuesday, March 3, 2009

காதலி துதி

அழகு தேவதை உன்னை பாட
வார்த்தை இன்றி நானும் வாட
உன் முத்துச்சிரிப்பினில் மின்னல் தெறிக்க
ஒவ்வொரு முறையும் என் இதயம் மறிக்க
உன் பவள உதடுகள் சொற்கள் உதிர்க்க
அதை அள்ளி திருட என் உள்ளம் துடிக்க
இச்சை தீர கட்டி தழுவ
கச்சை கட்டி அலையும் மனது

பிரம்மன் செய்த அழகு சிலை நீ
ரவிவர்மன் வரைந்த அற்புத கலை நீ
உன் நிழலை கேட்டுப்பார் சொல்லும்
சத்தம் இல்லாமல் ஒரு முத்தம்
நான் தந்து செல்வதை நித்தம்
சொர்க்கம் அது பக்கம் தான்
அது உன்னிடத்தில் மட்டும் தான்



உன்னை வழிபடும் கூட்டம் அறிந்தான்
கடவுள் கூட வெட்கி குனிந்தான்
பூவுக்கே பூக்கள் தூவும்
அந்த சாலையோர மஞ்சள் மரம்
மீன்களெல்லாம் தரைக்கு வந்து சாகும்
உன் கண்களை காண ஏங்கும்
பூமிக்கு தவறி வந்த மங்கை
நீ நிச்சயம் தேவலோக ரம்பை

நட்சத்திர பூக்கள் தவிக்கிறது
உன் கூந்தலை அடைய துடிக்கிறது
உன்னை பாடாத கவிஞர்கள்
அவர் கவிகளுக்குள் வீணர்கள்
உன் அழகை பாட ஏங்கும் நெஞ்சம்
தமிழிலில் சொற்களுக்கோ பஞ்சம்
நீ கோவிலுக்கு செல்வதில்லை
கடவுள் கடவுளை வணங்குவதில்லை

Friday, February 20, 2009

ஒரு ஆன்மாவின் ஓலம்

இந்த பூமியில் பிறந்து நொடி நான் அழுதேன்

நீ பால் கொடுத்தாய்

பின் நான் அழவும் இல்லை
எழவும் இல்லை

தாய்பால் தானே கேட்டேன்

ஏனம்மா கள்ளி பால் கொடுத்தாய்..

Thursday, February 19, 2009

உனக்காக நான் ....

உன் கடைக்கண் பார்வையில்
நான் காற்றில் பறக்கிறேன்

உன் மூச்சுகாற்றில்
நான் மூர்ச்சையாகிறேன்

உன் பாதச்சுவடில்
என் கால்கள் பதிக்கிறேன்

உன் வியர்வை துளிகளில்
நான் அமிர்தம் காண்கிறேன்

உன் கஞ்ச சிரிப்பினில்
என் உலகை மறக்கிறேன்

உன் உதட்டு சொற்களில்
நான் மொழிகள் கற்கிறேன்

உன் கூந்தல் வாசத்தில்
என் சுவாசம் தொலைக்கிறேன்

உன் கொலுசின் ஓசையில்
நான் இசையை உணர்கிறேன்

உன் கன்னக்குழியில்
நான் விழுந்து எழுகிறேன்

உன் கருவிழிகளில்
என் விடியலை மறக்கிறேன்

உன் மெல்லிடையில்
என் சிந்தனைகளை தொலைக்கிறேன்

உன் பெயரை கொண்டு
நான் கவிதைகள் எழுதுகிறேன்

உன்னை தொடர்ந்து
என் நிழலை அனுப்புகிறேன்

நான் தொடர
உன் காதலை அனுப்பிவை !!

Tuesday, February 10, 2009

என்னில் நீ..

என் வானில் நீ மழை

என் கவிதையில் நீ பிழை

என் தூக்கதில் நீ கனவு

என் ஏக்கத்தில் நீ நிலவு

என் காலையில் நீ சூரியன்

என் மாலையில் நீ சந்திரன்

என் துக்கத்தில் நீ கண்ணீர்

என் தாகத்தில் நீ தண்ணீர்

என் காதலில் நீ காதலி

என் சோகத்தில் நீ உயிர்வலி

என் வெற்றியில் நீ சிரிப்பு

என் தோல்வியில் நீ வெறுப்பு

என் குளிரில் நீ போர்வை

என் வெயிலில் நீ வியர்வை

என் யாசகத்தில் நீ சில்லரை

என் மரணத்தில் நீ கல்லறை

Monday, February 9, 2009

என்ன பயன்..?

அழகான உன்னை காணாவிடில்
என் கண்களால் என்ன பயன்

உன் சுவாசம் நுகர முடியாவிடில்
என் மூக்கால் என்ன பயன்

உன் பெயரை உசசரிக்க முடியாவிடில்
என் உதடுகளால் என்ன பயன்

நீ நடந்த பாதையில் நடக்காகவிடில்
என் கால்களால் என்ன பயன்

கனவில் உன்னை காணாவிடில்
என் இரவால் என்ன பயன்

உன் இதயம் சுமக்க முடியாவிடில்
என் உயிரால் என்ன பயன்

உன்னை காதலிக்க முடியாவிடில்
என் பிறவியால் என்ன பயன்

உன்னை அடைய முடியாவிடில்
என் ஆண்மையால் என்ன பயன்

மலரும் காதலை மனதிர்குள்ளே மூடிவிட்டால்
என் காதலால் என்ன பயன்

சொல்கின்ற காதல் மறுக்கப்பட்டால்
என் கவிதையாவது எனக்கு பயன்

ஆராதிக்கப்படாத உன் அழகால் என்ன பயன்...?

Wednesday, January 28, 2009

நூறாவது முறையாய்....

நான் விழித்ததும் நீ காபிகொண்டு வரும்போது உன்னை இருக்க கட்டி கொண்டு அந்த சப்தமில்லாத முத்தம் உன் சிணுங்கல்

தலை துவட்ட நான் துண்டு கேட்கும் போது
மறுபடியும் நாம் குளித்த நாட்கள்

பணிக்கு செல்ல மனமில்லாமல் நிற்கும் எனக்கு நீ முத்தம் தந்து வழி அனுப்பும் அந்த நேரம்

மனம் வீட்டிலும் உடல் பணியிலும் மாலைக்காக நான் ஏங்கும் அந்த பணியிட நாட்கள்

இத்தனை அழகா என நான் தினமும் வியக்க என்னை வரவேற்கும் உன் புன்சிரிப்பு

உன் முகம் என்ன மாயகண்ணாடியா?
பார்த்தவுடன் என் கவலைகள் மறைந்து போகின்றன.

நம் ஊடலுக்கு சான்றாக நம் குட்டி தேவதை
ஆம்... உன்னை விட அழகாய்!!

நான் உனக்காகவும் நீ எனக்காகவும் விட்டு கொடுத்து வாழ்ந்த அந்த வாழ்க்கை..

ஒவ்வொரு நாட்களும் தேன்.

சூரிய ஒளி கண்ணில் பட விழித்தேன்.

இந்த கனவு நினைவாக இன்றாவது காதலை சொல்லி விட வேண்டும்..

தைரியமின்றி சபதமெடுத்தேன். நூறாவது முறையாய்....

Friday, January 23, 2009

முக்தி

தோட்டத்து ரோஜாக்கள் உன்னை
புன்னகைத்து வரவேற்கின்றன
உன் கூந்தலில் முக்தியடைய..

சாலை மரங்களெல்லாம்
பூக்களை உதிற்கின்றன
உன் காலடியில் முக்தியடைய..

வண்டுகள் தேன் குடிக்க
உன்னை நோக்கி படையெடுக்கின்றன
உன் உதடுகளில் முக்தியடைய...

பல இதயங்கள்
காதலுக்காக காத்துக்கிடகின்றன
உன் பதிலில் முக்தியடைய...

இதுவரை பிறக்காத என் வார்த்தைகளின் ஒரு பகுதி
நீ படிக்காத இந்த கவிதையில்
முக்தியடைகின்றன....