Friday, May 22, 2009

பிரிதலை புரிதல் - சிறுகதை

சந்தோஷ் அந்த பள்ளிக்கு ஆறாம் வகுப்பில் சேர்ந்திருந்தான். தந்தையின் பணி மாற்றல்களால் பல பள்ளிகளில் படிக்க நேர்ந்தாலும் பல நண்பர்களை சம்பாதித்ததில் அவனுக்கு மகிழ்ச்சியே. அப்படி தான் அவன் புதிதாக சேர்ந்த அந்த பள்ளியை நினைத்து பலவித கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்திருந்தான்

முதல்நாள் வகுப்பில் இவன் நுழையும் முன்னமே மாணவர்கள் அவர்களின் தோழர்களுக்கு அருகில் இடம் பிடித்து கதை பேச தொடங்கியிருந்தார்கள். சந்தோஷிற்கு முதல் பெஞ்சில் தான் இடம் கிடைத்தது. ஆசிரியர் வந்து அனைவரின் பெயரையும் கேட்டு பின் அவரவரை பற்றி சொல்ல சொன்னார். சந்தோஷ் எல்லோருடய பெயரையும் நோட்புக்கில் குறித்து வைத்து கொண்டான். இன்டெர்வெல்லில் வலிய போய் பேச தொடங்கினான்.


இப்படியாக ஒரே வாரத்தில் எல்லோருடனும் பேசி நண்பன் ஆனான். பள்ளி நேரம் தவிர அருகில் இருக்கும் மைதானத்தில் விளையாடியும் எல்லா மாணவர்களுக்கும்மிக நெருக்கமானான். வகுப்பில் பெண்கள் மாணவர்களிடம் அதிகம் பேசுவதை தவிர்த்து கொண்டிருந்ததும் இவன் வந்த பிறகு மாறியது. காலாண்டு தேர்வு நெருங்கி கொண்டிருந்த்தது. விளையாட்டுகளுக்கு ஒய்வு கொடுத்து விட்டு அனைவரும் படிப்பதில் தீவிரமாயினர். சந்தோஷ் முதல் முறையாக அவன் வகுப்பு மாணவர்களுக்கு குரூப் ஸ்டடியை பழக்கினான். பெரும்பாலான நேரங்களில் சந்தோஷின் வீட்டிலேயே அது நிகழ்ந்தது. அப்போது அவனின் தாயார் தரும் பலகாரங்களும், பழரசமும் மேலும் பல மாணவர்களை குரூப் ஸ்டடிக்கு ஈர்த்தது.

தேர்வு தொடங்கியது.தேர்வில் இவனிடம் பென்சில் கடன் கேட நண்பனை காபி அடித்தானென ஆசிரியர் அடிக்க போக இவன் அதை தெளிவு படுத்தி அவனை விடுவிக்க பிரயத்தனபட்டது அனைவருக்கும் பிடித்திருந்தது. விடுமுறையின் எண்ணங்கள் தேர்வுகளை வேகமாக துரத்தியது. சந்தோஷ் தன் சொந்த ஊருக்கு ஒரு வாரம் போய் வருவதாக கூறி கிளம்பினான். மற்றவர்கள் ஒரு வார விடுமுறையில் எங்கே வெளியூர் செல்வது என்று உள்ளூரிலிலேயே விளையாடி பொழுதை கழிக்க தீர்மானித்தனர்.

விடுமுறை முடிந்து மறுபடியும் பள்ளிக்கூடம் திறந்த போது எல்லோர் மனதிலும் மற்றவர் விடுமுறையை கழித்த விதம் பற்றி கேட்கும் ஆர்வம் தளும்பியிருந்தது. குறிப்பாக வெளியூர் சென்ற சந்தோஷின் கதைகளை கேட்பதில் குறியாய் இருந்தார்கள். சந்தோஷ் கொஞ்சம் தாமதமாக தான் வந்தான். இம்முறை வலிய வந்து பேசியவர்களிடம் கூட அவன் பேசவில்லை. நண்பர்களின் ஆர்வம் இப்போது குழப்பமாக மாறியிருந்தது. அதற்குள் வகுப்பாசிரியர் வந்து பாடத்தை துவங்கியதால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் பாடத்தில் லயிக்க தொடங்கினர். மதிய உணவு இடைவேளையின் போது சந்தோஷ் நெருங்கி வந்தவர்களிடம் எரிந்து விழுந்தது எல்லோரின் குழப்பத்தையும் வெறுப்பாக மாற்றிகொண்டிருந்தது. காரணமில்லாமல் சண்டை போடும் அளவுக்கு என்ன நடந்தது. குரூப்பாக சென்று அவனிடம் கேட்க சென்றவர்களுக்கு சந்தோஷின் நடவடிக்கைகள் வியப்பு கலந்த ஆத்திரத்தை வரவைத்தன. என்ன தான் பிரச்சனை என அவனிடம் கேட்க வகுப்பில் ஒரு பெண்ணை தேர்வு செய்து கேட்டு வா என அனுப்பினர். அடி வாங்காத குறையாக அழுது கொண்டே திரும்ப வந்தாள் அவள்.

சந்தோஷின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் இவன் ஏன் இந்த பள்ளிக்கு வந்தான் என அந்த வகுப்பு முழுவதும் மனதுக்குள் கேள்வி கேட்டு கொண்டிருந்தது. அரையாண்டு தேர்வு வந்து கொண்டிருந்த நேரத்தில் சந்தோஷ் மொட்டை தலையோடு வந்தான். என்னடா மொட்டை என நக்கல் செய்தவனுக்கு கன்னத்தில் விழுந்தது. குரூப் ஸ்டடி செய்த கூட்டம் இப்போது சந்தோஷை எதிர்பார்க்காமல் வேறொர் இடத்தில் படித்தனர்.


தேர்வு நேரத்தில் சந்தோஷ் தன் அருகில் யாரவது அசைந்தால் கூட ஆசிரியரை கூப்பிட்டு இவன் காபி அடிக்கிறான் என கூறினான். ஆரம்பத்தில் இவன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அவன் கைகாட்டியவர்களை அடித்த ஆசிர்யர்கள் தினமும் இவன் அதை செய்யவே அவனை கண்டித்தனர். தேர்வு முடிவதற்குள் அங்கு அநேகமானவர்களின் எதிரியாக மாறிவிட்டிருந்தான் அவன். மறுபடியும் விடுமுறை நாட்கள். இப்போது சற்று நீளமான விடுமுறை. சந்தோஷ் இம்முறை சென்னைக்கு போவதாக செய்தி வந்தது. மற்றவர்கள் அவனை பற்றி அக்கரையின்றி விளையாட்டையும் விடுமுறையையும் எண்ணி இருந்தனர்.

நாட்கள் நகர்ந்து பள்ளிக்கூடம் தொடங்கியது. இம்முறை சந்தோஷ் ஒரு வாரம் ஆகியும் வரவில்லை. பள்ளியை விட்டு சென்றுவிட்டதாக ஆசிரியர் கூற அனைவர் முகத்திலும் ஆச்சர்யம் கலந்த ஒரு மகிழ்ச்சி.

மொட்டை தலை சந்தோஷ் சென்னை கேன்சர் இன்ஸ்டியூடுட்டில் ஒரு நர்ஸிடம் உரையாடிகொண்டிருந்தான்.

"உன் ஃப்ரெண்ட்ஸ்லாம் நீ ஸ்கூலுக்கு வரலனு தேட மாட்டாங்களா"

"தேட மாட்டாங்க.. கண்டிப்பா தேட மட்டாங்க " .

நர்ஸுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. சந்தோஷின் கண்களில் நீர் வடிந்து கொண்டிருந்தது.



0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)