Wednesday, August 19, 2009

உனக்கு மட்டும் ரகசியம் - 4


ராமின் குரல் சங்கருக்கு தூரத்தில் கேட்டுகொண்டிருந்தது. ராம் சங்கரின் தோளை உலுக்கி சகஜ நிலைக்கு கொண்டு வந்தான். அவன் கையில் ஒரு துப்பாக்கி பளிரிட்டது.

"பாஸ் இந்த துப்பாக்கி அந்த மூலையிலே உங்க பீரோக்கு பதுக்கி கீழ இருந்துச்சு"

"ராம் பெரிய சிக்கல்ல மாட்டிருக்கோம். இளமாறன கொலை பண்ணிட்டாங்க கேஸ நம்ம பக்கம் திருப்பி விட்டுட்டாங்க. இப்ப இந்த துப்பாக்கி அவங்க கைல சிக்கினா அவளோ தான். சுரேஷ் இத நீ வேற எங்கயாவது வச்சுக்க நான் அப்புறமா வாங்கிக்கிறேன் "

சுரேஷ் தலையசைத்து கவரில் மறைக்கப்பட்ட அந்த துப்பாக்கியை வாங்கி கொண்டு ஓடினான். சங்கர் அடுத்த நடவடிக்கைகளை ராமுக்கு தெரிவிக்க துவங்கினான் .

"ராம் போலீஸ் வந்தா நான் சமாளிச்சுகிறேன். நீ சாந்தாராம் வீட்டுக்கு பக்கத்துலையே சுத்திட்டிறு எதாவது சந்தேகப்படற மாதிரி நடந்தா ஒடனே எனக்கு கால் பண்ணு"

"பாஸ் என்னையும் சந்தேகத்துல விசாரிப்பாங்களா"

"நிச்சயமா விசாரிப்பாங்க அத நான் சமாளிச்சுக்கிறேன். நமக்கு அநேகமா இன்னும் 24 மணி நேரம் தான் டைம் இருக்கு. கொலைகாரன் நம்மல சிக்க வச்சிட்டு எஸ்கேப் ஆக பாக்கறான். அநேகமா எல்லா கொலையும் அவன் தான் செஞ்சிருக்கணும். அதுனால மிச்சம் இருக்கிறது சாந்தாராமும் துக்காராமும் தான். அதுனால அடுத்த அட்டாக் அங்க தான். நீ அங்க போய்டு நான் இவுங்க வந்தப்புறம் வரேன்"

"உங்கள அரஸ்ட் பண்ணிட்டா "

"மாட்டாங்கனு நெனைக்கிறேன். இந்த துப்பாக்கி பத்தி அவுங்களுக்கு தெரிஞ்சிருக்கும் அதுனால அத வச்சு அரஸ்ட் பண்ணலாம்னு வருவாங்க. அது இல்லாததால இப்போதைக்கு அரஸ்ட் பண்ண மாட்டாங்க. விசாரிக்க ஸ்டேசன் வேணா கூட்டிட்டு போவாங்க. நான் நம்ம வக்கீல் கிட்ட பேசி வந்திருவேன். நீ கெளம்பு.. தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் நமக்கு தான் ஆபத்து "

ராம் ஆம்னியை விரட்டி வாகன நெரிசலில் கலந்தான். முகம் பதட்டத்தை காட்டி கொண்டிருந்தது.

அதே நேரம் போலீஸ் சங்கரின் ஆபீசை எட்டியிருந்தது .

"சங்கர் நீங்க இளமாறனோட ஆபீசுக்கு ரெண்டு நாள் முன்னாடி வந்தீங்க இல்ல"

"ஆமா சார் வந்தேன். அவர எனக்கு ரொம்ப நாளா தெரியும் சும்மா ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு அது"

"அப்ப அவர் பாக்றதுக்கு டிஸ்டர்புடா தெரிஞ்சாரா"

"இல்ல சார் நார்மலா தான் இருந்தாரு "

"எதாவது பிரச்சனை, மனவருத்தம் எதையாவது உங்க கிட்ட சொன்னாரா "

"அந்த மாதிரி எல்லாம் சொல்லல "

"ஓகே நாங்க கிளம்புறோம். மறுபடியும் உங்க கிட்ட பேச வேண்டி இருந்தாலும் இருக்கும் "

வீட்டை அளசிபோடுவார்கள் என நினைத்திருந்த சங்கருக்கு இந்த மிகச்சாதரண விசாரணை வியப்பை ஏற்படுத்தியது. திடீரென்று ஏதோ தோன்ற
"சார் ஒரு நிமிஷம். இளமாறன் எப்படி கொலை செய்யபட்டாருனு
தெரிஞ்சுதா "

"கொலை இல்ல. தற்கொலை. ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டு துப்பாக்கியால சுட்டுட்டு செத்துட்டாரு. பாடி போஸ்ட்மார்டம் போயிருக்கு , துப்பாக்கி பாரன்சிக் லேப்க்கு அனுப்பிருக்கோம் "

முகத்தில் பெரிதாக தோன்றவிருந்த ஆச்சர்யத்தை கட்டுப்படுத்தி கொண்டான் சங்கர் .

"அப்ப அந்த ரெட்டை கொலை கேஸ் என்ன ஆகா போகுது சார் "

" தான் தான் அந்த 8 பேரையும் கொன்னேன்னு லெட்டெர்ல எழுதிருக்காரு அதுனால அந்த கேஸும் இளமாறனோட புதைக்கப்படும்" மிக சாதாரணமாக கூறிவிட்டு ஜீப்பை புழுதி பறக்க கிளப்பி கொண்டு பறந்தனர்.

தான் கேட்ட விஷயங்களை ஒரு துளி கூட நம்ப முடியாமல் சங்கர் திகைத்திருந்தான் . ஆனால் போலீஸுக்கு தங்கள் மேல் கவனம் இல்லை என்பது மட்டும் உறுதியாயிற்று .

அதே நேரம் கிரீன்வேஸ் சாலையில் சாந்தாராமின் பங்களா அருகே ராம் இன்னும் சங்கருக்காக காத்துகொண்டிருந்தான். நடக்கவிருக்கும் பயங்கரங்களை அறியாமல்.

(தொடரும்)

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)