
கணேஷ் அந்த நிலையில் இருந்து வெளிவர சற்று நேரம் ஆனது. நடந்ததை மனதிற்குள் எத்தனை முறை ஒட்டி பார்த்தாலும் குழப்பங்கள் மட்டுமே விடையாய் கிடைத்தது.
நேரம் பத்தை தொட்டு கொண்டிருந்தது.
அறையில் சாவித்திரி அமைதியாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
ஜன்னல்களில் புகுந்து மெல்லிய காற்று அறையை நிரப்பி கொண்டிருந்தது. நிசப்தமான இரவில் அந்த காற்றும் ஒரு வித கிலியை உண்டு பண்ணி கொண்டிருந்தது.
அமைதியான வேளையில் திடீரென்று நாய்கள் குரைக்க துவங்கின. சாவித்திரி லேசாக அசைய துவங்கிய நேரம் கணேஷ் சட்டென சென்று ஜன்னல்களை அடைத்தார்.
வாசலுக்கு சென்று என்னவென பார்க்க வெளியே வந்த நிமிடம் நாய்களின் சப்ப்தங்கள் இல்லை. தெருவில் எட்டி பார்த்தல் அங்கு நாய்கள் இல்லை.
அமானுஷ்யத்தை கணேஷ் நம்பியதில்லை. ஆனால் அதன் வாதங்கள் கடந்த நான்கு மணி நேரமாக நடக்கும் நிகழ்வுகளை நினைவூட்டிக்கொண்டிருந்தன.
வழக்கத்திற்கு மாறாக தெரு மயான அமைதி பூண்டிருந்தது. கணேஷ் உள்ளே திரும்பி கதவை தாழிட்ட நேரம் தெருவில் ஆட்டோ ஒன்று அத்தனை அமைதியையும் குலைத்து கொண்டு சீறிசென்றது.
கணேஷிற்கு அனைத்தும் விசித்திரமாய் பட்டது. யோசித்து கொண்டிருந்த வேளையில் சாவித்திரியின் அறையில் அலறல். விருட்டென ஓடிய கணேஷ் சாவித்திரியின் கோலத்தை பார்த்து நிலைகுலைந்து போனார்.
கட்டிலின் மேல் தலைவிரி கோலமாய் ஏதோ மந்திரத்தை உச்சரித்து கொண்டிருந்தாள் அவள்.
கண்களில் கோபம் தாண்டவமாடியது. கண் மணிகள் மீண்டும் இடது வலது என கடிகார பெண்டுலம் போல ஆடிகொண்டிருந்தன.
ஜன்னலின் வழியே காற்று நுழைந்து அந்த அறையை இடைவெளி இல்லாமல் மீண்டும் நிரப்பிகொண்டிருந்தது.
சாவித்திரியின் சப்தம் குறைந்து கொண்டிருந்தது. கணேஷ் அவள் அருகில் அமர முதல் முறையாக பயந்தார். சற்று நேரம் அவளையே உற்று நோக்கி கொண்டிருந்தார். சாவித்திரி சத்தியமாக தன சுய உணர்வில் இல்லை என புரிந்தது. அவளை தொட எத்தனித்த வேளையில் அவள் மந்திரம் நின்றது. படுக்கையில் பொத்தென விழுந்தாள்.
கணேஷ் அவளை தட்டி எழுப்பிகொண்டிருகும் பொது அறை மீண்டும் நிசப்தமானது. ஜன்னல்கள் மெதுவாக மூடி கொண்டன. அறையில் இருந்து எதுவோ ஜன்னலின் வெளியில் சென்ற ஒரு உணர்வு கணேஷை ஆட்கொண்டது.
சிந்தனையில் இருந்த கணேஷை ஏதோ உலுக்கியது. ஒரு நிமிடம் தன்னை சுற்றி நடப்பதை மறந்து இது வரை நம்பாததை எல்லாம் யோசித்து கொண்டிருந்த வேளையில் அந்த உலுக்கல் அவரை அலற செய்ததது.
"என்னங்க, என்னங்க நான் தான். ஏன் இப்படி பேய் அடிச்சா மாதிரி இருக்கீங்க" சாவித்திரி தெளிவாக பேசிகொண்டிருந்தாள் .
உலுக்கியது யார் என்று தெரிந்து நிம்மதி பெருமூச்சு விட்ட கணேஷின் மனதின் கேள்விகள் ஒலியாக வெளிப்பட்டன.
"இப்ப என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியுமா சாவித்திரி ?"
"இல்லங்க . லேசா தலைவலிக்குது .. அப்புறம் கனவு மாதிரி ஒண்ணு வந்துச்சு . அது முடிஞ்சா உடனே எழுந்திருச்சிட்டேன் "
"கனவா . சொல்லு சொல்லு . என்ன வந்துச்சு . சீக்கிரம் சொல்லு"
"ஏங்க இப்படி பதட்டப்படுறீங்க? ஏதோ நிஜத்துல நடக்கிறது கனவுல வர மாதிரி கேக்குறீங்க"
"சும்மா ஒரு ஆர்வம் தாமா . சொல்லு"
"அந்த பொண்ணு உடம்ப புதைச்ச இடத்துல போலீஸ் இருக்காங்க. அவ உடம்ப தோண்டி எடுக்குறாங்க"
"என்னது போலிஸா? "
"ஆமாங்க.. அவ பாக்கெட்ல ஒரு லெட்டர் கூட இருந்துச்சு"
"இரு.. இரு.. லெட்டரா.." கணேஷிற்கு போலீஸ் இருக்கும் பயம் போகும் முன் லெட்டர் என சாவித்திரி சொன்னது இன்னும் பயமுறுத்தியது.
"ஆமாங்க .."
"லெட்டர்ல என்னமா இருக்கு.. "
"அது தெரிலேங்க.."
"வேற எதாவது பாத்தியா"
"ம்ம்.. அந்த லெட்டெர ஒருத்தர் கைல வச்சுருக்கார். அவர் கைகடிகாரத்துல மணி ரெண்டுன்னு இருக்கு"
"என்ன வாட்சனு தெரியுதா"
"ஆமா டைட்டன்னு போட்ருக்கு"
"சரி விடு இத இத்தோட விட்ருவோம். நீ தூங்கு. ஆபீஸ்ல இருந்து போன் வந்துச்சு. ஏதோ சரக்கு ஏத்திட்டு போன லாரிய போலீஸ் பிடிசிருக்காங்கலாம். நான் போய் பாத்துட்டு வரேன் "
"ஏங்க சீக்கிரம் வந்துருங்க "
"கண்டிப்பாமா "
கணேஷ் அவசரமாக கடிகாரத்தை பார்த்தார்.
நேரம் பதினொன்றை நெருங்கி கொண்டிருந்தது. செல்போன் எண்கள் அவசரமாய் அழுத்தபட்டன.
"டேய்.. எங்கடா இருக்கீங்க"
"பாஸ் . பாண்டிச்சேரி அவுட்டர்ல ரூம்ல இருக்கோம். காலைல கண்டிப்பா வெளியூர் போய்டுவோம்"
"அது இல்லைடா . அந்த பொணத்த புதைச்ச எடத்துக்கு உடனே வாங்க. நானும் வந்துட்டு இருக்கேன்"
"பாஸ் . எதாவது பிரச்சனையா"
"வந்து சொல்றேன். சீக்கிரம் வாங்க"
கணேஷின் கார் கிழக்கு கடற்கரை சாலையில் சீறி பாய்ந்து கொண்டிருந்தது.
பாண்டிச்சேரி காவல் நிலையம்.
"ஏன்பா யாரோ ஒரு குரூப் கார்ல ஏதோ கொண்டு வந்து போட்டுட்டு போனதா போன் கால் வந்துசே, யாராவது போனீங்களா " ஹெட் கான்ஸ்டபல் கண்ணையன் கேள்விக்கு பதில் கூறாமல் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
வாசலில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீப் வேகமாக வந்து நின்றது. அலாரம் வைத்தது போல் அனைவரும் எழுந்தனர். பார்ப்பவரை எல்லாம் பயம்முறுத்தும் தோற்றம். பணியில் நேர்மை. நண்பர்கள் குறைவு. எதிரிகள் ஏராளம். இதுதான் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறனின் சுய குறிப்பு.
"என்னயா எதாவது கேஸ் வந்துச்சா? "
"சார் ஒரு போன் வந்துச்சு" கண்ணையன் எல்லாவற்றையம் சொல்லி முடிக்க இளமாறனின் கண்ணில் கோபம் பீறிட்டது.
"போன் வந்து இவளோ நேரம் ஆச்சு இன்னும் யாரும் போகலையா. முதல்ல வண்டி எடுங்க"
ஜீப் புழுதியை கிளப்பி கொண்டு புறப்பட்டது.
"சார் வாட்ச் புதுசா சார்" ஜீப்பின் உள்ளிருந்த அமைதியை கண்ணையனின் குரல் விரட்டியது.
"ஆமா இன்னைக்கு தான் வாங்குனேன். நல்லாருக்கா? "
"டைட்டன் வாட்ச். ஆனா டைம் கரெக்டா இல்லையே சார். ஒரு மணி நேரம் பாஸ்டா இருக்கே"
"நான் தான் அப்படி செட் பண்ணி வச்சுருக்கேன். ஸ்டேஷனுக்கு நேரத்துக்கு வர தேவைப்படும்ல அதான்"
மூன்று வாகனங்களும் ஒரே இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தன.
நேரம். நடுநிசி கடந்து அரை மணிகள்.
(திகில் தொடரும் ..)