Saturday, October 8, 2011

என் சாளரம் - 1

கனவுகள் இலவசம்
என் கனவுகளெல்லாம் அவள் வசம்.

ஒற்றை புன்னகையில் கற்றையாய்
என் உயிரை அள்ளி சென்றவள்.

நித்தம் நித்தம் என் கற்பனையில்
கருவாகி பிறப்பவள்.

தஞ்சமாக என் நெஞ்சில் புகுத்திட
நான் தேடும் பிஞ்சு நெஞ்சவள்.

என்னில் ஊற்றெடுக்கும் ஒவ்வோர்
வார்த்தைக்கும் அர்த்தமானவள்.

அழகுகளை படைக்க பிரம்மன்
படைத்த அளவுகோல் அவள்.

திமிரான அழகுகள் ஏராளம்
இவளோ அழகால் திமிறவைத்தவள்.

வாழ வெறுத்த அனைவருக்கும்
வாழ்க்கை பிடிக்கவைத்தவள்.

ஒரே பார்வையில் இதயத்தில்
ரத்த வறட்சியை உண்டுவிப்பவள்.

அறிவியல் மறந்த பல
ரசாயன மாற்றங்களை உருவிப்பவள்.


களவாட நினைக்கும் நேரம்
களவுகொடுப்பவளுக்கு தெரியாது .
காதலை தவிர.

கற்பனைகள் வறண்டு போகாது
நீ என் கண்முன்னே இருக்கும்வரை.

என்னவளாகாவிடினும்.

Sunday, February 13, 2011

விடிவில்லா இரவு - சிறுகதை

அர்த்தமற்ற இரவின் அர்த்தஜாம நேரத்தில் கன்னத்தில் ஜில்லென்று மோதிய அந்த ஒற்றை காற்று மனதின் தெளிவுகளை நீக்கியது . மீண்டும் அந்த ஒற்றை காற்றிற்காக காத்திருந்து தோற்ற போது தான் அந்த நிகழ்வின் முக்கியத்துவம் உரைக்க ஆரம்பித்தது .

மே மாத இரவின் மெல்லிய வியர்வை துளிகள் நெற்றியில் பூத்திருந்த நேரத்தில் அந்த ஒற்றை காற்று இதமாக இருந்ததே தவிர கிலியை உண்டு பண்ணவில்லை. ஆனால் இப்பொது உடலின் இதமான பாகங்கள் எல்லாம் வியர்வையில் குளித்து கொண்டிருந்தன.

இத்தனை நாளில் தனிமை வருத்தியதே தவிர பயமுறுத்தவில்லை. இன்றைய இப்போதைய தனிமை அப்படியல்ல. முகம் தெரியாத ஒருவரை கூட நொடிபொழுதில் நண்பனாக ஆக்கிக்கொள்ள துடிக்கும் தனிமை. இல்லை.பயம்.

கண்கள் அங்கும் இங்கும் இருளில் இருட்டை துழாவியது .

தூரத்தில் கண்ணுக்கு தென்படாத ஐஸ் வண்டியின் மணிசத்தம் கேட்டது. சற்று நேரத்திற்கெல்லாம் நான்கைந்து நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. ஆனால் அதுவும் கண்ணுக்கு தென்படவில்லை.

இது யாரோ வேண்டுமென்று காட்டும் விளையாட்டோ என்றும் தோன்றியது. ஆனால் இந்த விபரீத விளையாட்டுகளை நிகழ்த்தும் அளவிற்கு இன்னும் நண்பர்கள் சேரவில்லை. எதிரிகளும் தான் .

திடீரென்று ஒரு ஆட்டோ வரும் சத்தம் கேட்டது .

ஆட்டோவும் கண்ணுக்கு தெரிந்தது. கை நீட்டும் முன் அது நின்றது . போகும் வழியில் இறக்கி விடுவேன் என அவன் கூறியதை மறுக்கும் நிலையில் நான் இல்லாததால் மறுக்காமல் அமர்ந்தேன்.

ஆட்டோ இன்னொரு இருட்டு சந்தில் நின்றது. இறங்குமாறு கண்ஜாடை காட்டினான். பணம் கைமாறியது. முகம் பதியவில்லை. இறங்கி எந்த இடம் என யோசித்த வேளையில் ஆட்டோ போனதே தெரியவில்லை. சப்தமும் வந்ததாக தெரியவில்லை.

அத்தனை இருளிலும் அவன் இறக்கி விட்ட இடம் என்னவென்று மட்டும் திடீரென புரிந்தது.காரணம் புரியவைத்தது காட்சி அல்ல. வாசனை. நாற்றமேன்றே சொல்லலாம். ஆம். பிணங்களின் நாற்றம். எரிந்து முடிக்கும் நிலையில் இருக்கும் பிணம் போலும். வாசனை குறைந்து கொண்டே வந்தது .

இப்போது பயம் இல்லை. ஒரு விதமான சந்தோஷம் இருந்தது. காரணம். நான் இறங்கியது சுடுகாடு. சுடுகாட்டில் சந்தோஷத்திற்கு காரணம். வெட்டியான் நிச்சயம் அங்கு இருக்க வேண்டும். எரிந்து போன உடலில் சாம்பலையும் மிச்சமான எலும்புகளையும் எடுக்க அவன் நிச்சயம் காத்திருக்க வேண்டும்.

அந்த காம்பவுண்ட் சுவரை ஒட்டியே ஓடினேன். கதவு திறந்திருந்தது. இங்கு திருட பொக்கிஷமா இருக்கிறது கதவை பூட்டுவதற்கு.

எதிர்பார்த்தபடி வெட்டியான் இருந்தான். நல்ல போதையில். அவனருகில் சென்று நின்றேன். அவன் பேசும் நிலையில் இல்லை. போதை தலைக்கேறி சரிந்திருந்தான். உலுக்கி பார்த்தும் பயனில்லை. வெளியில் தனிமையில் செல்ல மனம் ஒத்துழைக்கவில்லை. இவனுடன் இருந்து காலையில் செல்லலாம் என முடிவெடுத்தேன்.

மீண்டும் சில்லென கன்னத்தில் ஒரு காற்று அடித்தது. பயம் தொற்ற துவங்கி தோற்றது. அருகில் துணைக்கு இவன் இருப்பதால்.

அசந்த நேரத்தில் தூங்கியிருப்பேன் போலும். சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் கன்னத்தில் ஒரு ஒற்றை காற்று. ஆனால் இப்போது அதில் ஜில் இல்லை. ஆனால் கண் திறந்து பார்க்க தோன்றவில்லை. முடியவில்லை என்றும் சொல்லலாம்.

விடிந்தது. காற்று அளவுக்கு மீறி ஜில்லென வீசிக்கொண்டிருந்தது.

வெட்டியான் என் சாம்பலையும் எலும்புகளையும் அள்ளி கொண்டிருந்தான்.

பயம் காற்றில் இல்லை மனதில் தான். தாமதமாக புரிந்தது.

Saturday, October 16, 2010

இரப்பு - சிறுகதை


தினமும் கடந்து போகும் அந்த சாலையில் அன்று மட்டும் புதிதாக ஒரு பிச்சைகாரர் முளைத்திருந்தார். அங்கிருந்த பிச்சைகாரர்களில் பத்தோடு பதினொன்றாக இருந்தாலும் அவர்களை விட இவர் சற்றே மாறுபட்டிருந்தார். கண்களில் இந்த நிலைக்கு தான் வந்துவிட்டோமே என்ற வருத்தம் நிறைந்து இருந்தது. ஆனாலும் அங்கிருந்த மற்ற பிச்சைகாரர்களின் செயல்களை நேரிடையாக பார்த்ததால் இவரின் மேல் உடனடியாக பரிதாபம் வந்துவிடவில்லை.


மற்ற பிச்சைகாரர்களை பற்றி முதலில் பாப்போம். அந்த சாலையில் வழியே நான் அடிக்கடி போவதுண்டு. அப்படி ஒரு நாள் அந்த வழியே போகும் போது தான் முதல் முறை அதை கண்டேன். அருகில் இருந்த ஒரு சந்தில் கஞ்சா புகைத்து கொண்டிருந்தனர் அதில் சிலர். மற்றொரு நாளை காலையில் டாஸ்மாக் திறக்க அங்கு காத்திருந்தனர். பசிக்கு பிச்சை எடுப்பதே தவறென நினைப்பவன் நான். இதில் தன் சுகத்திற்காக பிச்சை எடுக்கும் இந்த இழிவு மனிதர்களை பார்த்த மாத்திரத்தில் முடிவெடுத்தேன் இனி எக்காரணம் கொண்டும் யாருக்கும் பிச்சை போட கூடாதென.


அந்த அந்த புதியவரை கண்ட போது அவர் என்னை நோக்கி கை ஏந்தி பிச்சை கேட்டார். ஆயிரம் பேர் அவரை கடந்து சென்று கொண்டிருந்தாலும் அவர் நான் பார்க்கையில் முதல் முறையாய் என்னிடம் தான் கை ஏந்தினார். நான் அவரை பார்த்ததை அவர் நான் உதவ போகிறேன் என்று புரிந்திருக்க வேண்டும். ஆனால் மற்றவர்களை போல் நானும் முகத்தை மறுபக்கம் பார்த்து கொண்டு கடந்த போது அவர் முகம் சுருங்கியிருக்க வேண்டும்.


அன்றைய அலுவலக பொழுது மிக மெதுவாக நகர நினைவெல்லாம் அந்த பிச்சைகாரர் மேல் தான் இருந்தது. வெளியூரில் இருந்து வந்து பணமில்லாமல் பிச்சை எடுக்க துணிந்திருப்பாரோ இல்லை பிள்ளைகள் ஒதுக்கி வைத்து வேறு வழி இல்லாமல் வந்திருப்பாரோ. ச்சே ஒரு ரெண்டு ருபாய் கொடுத்திருக்கலாமோ? இப்படி மனவருத்தம் ஏற்பட்டிருக்காதே. மற்ற பிச்சைகாரர்கள் ஏதோ தொழில் செய்வதை போல அங்கு அமர்ந்திருக்க இவர் மட்டும் உடல் கூசி கூனி அமர்ந்திருந்தது மனதை பிசைந்தது. மற்றவர்களின் குரலில் இருந்த சோகம் முகத்தில் இல்லை. இவரிடமோ முகத்தில் இருந்த சோகம் குரலில் இல்லை.

சாயந்திரம் கண்டிப்பாக அவரிடம் ஒரு பத்து ருபாய் குடுக்க வேண்டும். முடிவு எடுத்ததே மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

அந்த ஆறுதல் நாளை வேகமாக ஓடியது. என்றுமில்லாத ஒரு விதமான புதிய மனநிலையில் இருந்தேன். அது வருத்தமா இல்ல சந்தோஷமா என்று சொல்ல தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக உதவிக்காக ஏங்கும் ஒரு பிச்சைகாரனின் தட்டில் விழும் பத்து ரூபாய்க்கு அவன் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியில்லை. அதற்கு ஈடான ஒரு உணர்வு கையில் பணமிருக்கும் போது தோன்றது போலும்.

அவசரமாக அந்த பிச்சைகாரர்களை கடந்த அந்த பெரியவரை நெருங்கும் போது அவர் உறங்கி கொண்டிருந்தார். நின்று எழுப்பி காசு போட தோன்றவில்லை. அங்கு நடந்து பொய் கொண்டிருக்கும் அனைவரும் நான் அவரை எழுப்பி காசு கொடுப்பதை பார்ப்பார்கள் என தோன்றியது. அந்த பத்து பிச்சைகாரர்களை விட்டு அவருக்கு மட்டும் தேடி பிடித்து பிச்சை போடுவதை மற்ற பிச்சைகாரர்கள் எப்படி எடுத்து கொள்வார்கள். மன குழப்பத்தோடு நிற்காமலே சிந்தித்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். காலையில் கண்டிப்பாக அவருக்கு காசு போட வேண்டும். உறங்கி கொண்டிருந்தாலும் எழுப்பியாவது போட வேண்டும். முடிவெடுத்தேன்.

இரவு அன்று மட்டும் கழிவேணா என முரண்டு பிடித்தது. எப்போது உறங்கினேன் என தெரியாது ஆனால் விடிந்த உடன் மறக்க வாய்ப்பில்லாமல் முதலில் தோன்றியது அவருக்கு போட வேண்டிய அந்த பத்து ரூபாய் தான். மெதுவாக சாலையை அடைந்தேன். பத்து ருபாய் தாளை மேல் பையில் எடுத்து வைத்தேன். நிச்சயம் அவர் நான் பத்து ருபாய் கொடுத்தவுடன் வாழ்த்துவார். இன்றைய நாள் ஒரு நல்ல காரியத்துடன் துவங்க போகிறது. மனது பெருமிதப்பட்டது.

ஆனால். காணவில்லை. அந்த பெரியவரை காணவில்லை. அவசரமாக பக்கத்தில் இருந்த பிச்சைகாரரை விசாரித்தேன். அவரின் பதில் அத்தனை சப்தத்தையும் மௌனமாகியது அத்தனை கூட்டத்திலும் என்னை தனிமையாக்கியது .

"அவரா தம்பி. நேத்து முழுக்க இங்க இருந்தாரு. கெஞ்சி கேட்டாலே பிச்சை கெடைக்க மாட்டேங்குது. அவரு கேக்றதுக்கு யோசிச்சிட்டு இருந்தா எங்க பிச்சை விழும். பசியோடவே படுத்தாரு. நாங்க குடுத்தாலும் வாங்கிக்காம அழுதிட்டே கெடந்தாரு. அப்புறம் ரவைக்கு உசிரு போய்டுச்சு. போலீஸ் வந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய்ட்டாங்க. கொஞ்சம் சாப்பிடிருந்தா உசிராவது தங்கியிருக்கும் "

Sunday, September 5, 2010

கண் மணியே பேசு - 7 ( நிறைவு பகுதி)

"என்னது சாவித்திரியா? "

"யெஸ் மிஸ்டர் கணேஷ். அன்னைக்கு உங்க கூட பாத்தேனே அந்த ஆளுங்க கிட்ட விசாரிச்சதுல எல்லா உண்மையும் தெரிய வந்துச்சு "

"வாட் நான்சென்ஸ் மிஸ்டர் இளமாறன்"

"நடந்தத நான் சொல்றேன். நிர்மலாவ மயக்க நீங்க கொண்டு போன கர்சீப்ல க்ளோரோபார்ம்கு பதிலா விஷத்த கலந்தது, அப்புறம் பிணத்த பாண்டிசேரி கொண்டு போனது எல்லாம் உங்க மனைவி சாவித்திரியோட வேலை "

"வாட். என் சாவித்திரியா "

"யெஸ். அரெஸ்ட் பண்ணி விசாரிக்க இப்ப இருக்க சாட்சியங்கள் போதுமானதாக இருக்கு ஆனா இன்னும் நிர்மலாவோட பிணத்த கண்டுபிடிக்க முடில. அது இருந்த இடத்துல இருந்து நம்ம அங்க வரதுக்கு கொஞ்சம் முன்னாடி யாரோ தோண்டி எடுத்துட்டு போயிருக்காங்க "

சாவித்திரி அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பொங்கினாள்.

"ஏங்க நான் அப்பாவி . இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நீங்க சொல்ற அடியாட்கள நான் பாத்தது கூட கெடையாது. ஏங்க நீங்க சொல்லுங்க" கணேஷை ஏறிட்டாள் சாவித்திரி. கணேஷ் அவளை நம்புவதாக தெரியவில்லை .

இளமாறன் தொடர்ந்தார். "மேடம் உங்களுக்கு எதிரா எல்லா விட்னசும் ஸ்ட்ராங்கா இருக்கு. நீங்க விசாரணைக்கு ஒத்துழைச்சு தான் ஆகணும் "

அதற்கு மேல் முரண்டு பிடிக்க சாவித்திரி விரும்பவில்லை. "நான் வரேன் ஆனா என் வக்கீலும் என்னோட வருவார்"

வரலாம் என தலையசைத்த இளமாறனை இருவரும் பின் தொடர்ந்து சென்றனர்.

கணேஷ் நடந்தவைகளில் இருந்து விலகி சுதாரிக்கும் முன் செல்போன் ஒலித்தது .

"மிஸ்டர் கணேஷ் நாங்க அந்த பிணத்த அப்புறபடுத்திட்டோம். மேற்கொண்டு பேச வேண்டியது பேசலாமா"

"பிணத்த என்ன பண்ணீங்க? "

"ஒரு டுப்ளிகேட் டெத் சர்டிபிகேட் ரெடி பண்ணி ஊருக்கு வெளிய இருக்க ஒரு எலெக்ட்ரிக் சுடுகாட்ல எரிச்சிடோம். கண்டு பிடிக்க வாய்ப்பே இல்ல"

"பென்டாஸ்டிக் "

"நாங்க இப்ப உங்கள சந்திக்கணுமே "

"மேற்கொண்டு என்ன பேசணும்"

"உங்களுக்கு தெரியாது. உங்க மனைவி எங்க கிட்ட பேசிருக்காங்க. உங்கள பாலோ பண்ணி உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம இருந்தா பத்து லட்சம் தரதா சொன்னாங்க "

"வாட் "

"ஆமா. நீங்க எதோ பிரச்சனைல மாட்டிருக்கதா அவுங்களுக்கு தோணுச்சு. நாங்க உங்களுக்கு தெரியாம உங்கள பின் தொடர்ந்த போது தான் எல்லாம் தெரிஞ்சது"

கணேஷிற்கு தலை சுற்றியது. சாவித்திரி எத்தனை நல்லவளாக இருந்திருக்கிறாள். சாவித்திரியின் நினைவுகள் கணேஷை மேலும் சோகமாக்கி சில மணிகளை உள் வாங்கியது .

"ஏங்க! ஏங்க! . " சாவித்திரியின் குரல் கனவுகளில் ரீங்காரமிட்டு கொண்டே நிஜத்திலும் ஒலித்தது.

ஆயிரம் மின்மினி பூச்சிகள் ஒருசேர கும்மிரிட்டில் வெளிவந்தது போன்ற பிரகாசம் கலந்த ஆச்சர்யம் கணேஷின் முகத்தில் .

"ஏம்மா வந்திட்டியா .. நான் பயந்தே போய்ட்டேன்"

"ஒண்ணும் பிரச்சன இல்லைங்க . அந்த அடியாளுங்க யாரோ ஒரு பொண்ணு என் பேர சொல்லி பேசுனதா சொல்லிருகாங்க. இந்த இளமாறன் என்ன விசாரிச்சு கேள்வி கேட்ட உண்மை தெரிஞ்சிடும்னு
நினைச்சாரு . நல்ல வேல வக்கீல் ராமநாதன் இருந்தது நால பிரச்சன இல்லாம முடிஞ்சது "

"அப்ப அந்த அடியாளுங்க "

"இனி அவுங்க என்ன சொன்னாலும் எடுபடாது. பிணம் கெடைக்ற வரைக்கும் அவனுங்க கொலை பண்ணத ஒத்துக்க போறது இல்ல. பிணமும் கிடைக்க போறது இல்ல" சாவித்திரி சிரித்தாள்.

"அப்ப வக்கீல் வந்தது, நீ பேய் வந்த மாதிரி கிடந்தது எல்லாம் "

"மன்னிக்கணும் கணேஷ் . நடந்தது எல்லாம் உங்க நல்லதுக்கு தான். உங்க செல்போன் உரையாடல்களை நான் ஒட்டுகேட்டேன். நீங்க பெரிய பிரச்சனைல மாட்ட போறத உணர்ந்தேன். அதோட விளைவு தான் அந்த பேய் நாடகமும் சரியான நேரத்துல வக்கீல் வந்ததற்கான காரணமும்"

"சத்தியமா எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் என் பொண்டாட்டி" கணேஷ் மனமார்ந்து கூறினான்.

எரியூட்டப்பட்ட நிர்மலாவுடன் சேர்த்து இரண்டு உயிர்களுக்கும் கணேஷும் சாவித்திரியும் இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

அந்த வீட்டின் ஏதோ ஒரு மூலையில் க்ளோரோபார்ம் பாட்டிலில் விஷமும் , கணேஷின் கல்லூரியின் பல குரல்களில் பேசி வென்ற சான்றிதழ்களும் அமைதியாய் இருந்தன.

(முற்றும்)

கதையின் முடிவின் குழப்பங்களுக்கு விடை:

சாவித்திரியின் பார்வையில்
---------------------------------------------------------------
கணேஷ் நிர்மலா தொடர்பு மறைமுகமாக கதையில் உள்ளது. சாவித்திரி அதை அறிந்து நிர்மலாவை கணேஷ் மூலமாகவே கொலை செய்து அவரை அவளிடம் இருந்து பிரித்தாள். கணேஷிற்கு தன் மீது மனபூர்வமான நம்பிக்கை வர வேண்டுமென்று அந்த கொலை பழியில் இருந்து அவரை விடுவிக்க முயற்சி எடுத்தாள். அது அவரே உணர்ந்து தன்னிடம் திரும்பி வருமாறு செய்தாள்

கணேஷின் பார்வையில்
------------------------------------------
கணேஷ் தன் அடியாட்களுக்கு பெண் குரலில் பேசி அது சாவித்திரி தான் என்ற சந்தேகத்தை அவர்களுக்கும், பின் போலீசிற்கும் ஏற்பட செய்தார். தான் இதில் இருந்து தப்பிக்க சாவித்திரியை காட்டிகுடுக்க தயங்காத கணேஷ் , சாவித்திரியின் தேர்ந்த திட்டத்தால் தன் திட்டம் தோற்று சாவித்திரியிடம் தஞ்சமடைந்தார்.

பி. கு : கதையில் பல விஷயங்களை நேரடியாக சொல்லாமல் விட்டதால் சற்று குழப்பமாகிவிட்டது. மன்னிக்கவும். படிப்பவர்களும் எழுதுபவர்களும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை என்ற என் தவறை இந்த கதை உணர்த்தியது. அடுத்த கதைகளில் தவறுகளை தவிர்க்க முயல்கிறேன். நன்றி.