Monday, September 14, 2009

உனக்கு மட்டும் ரகசியம் - 5

மதிய நேரம். பசி வயிற்றை கிள்ளிகொண்டிருந்தது . ராம் இந்த இடத்தை விட்டு சிறிது நேரம் விலகி போய் சாப்பிட்டுவரலாம் என சங்கருக்கு போன் செய்தான். சுவிட்ச் ஆப் என்ற தகவலே வந்துகொண்டிருந்தது . வேறு வழியில்லாமல் வண்டியை பூட்டி விட்டு சாப்பிட கிளம்பினான்.

சாந்தாராமின் வீட்டு காவலாளியிடம் சொல்லி விட்டு கிளம்பலாம் என்ற கடைசி நேர யோசனையுடன் அவனிடம் சென்றான்.

"இந்தாப்பா அன்னைக்கு உன்கிட்ட வந்து ஒருத்தர் காசு கொடுத்து இந்த வீட்ல சந்தேகபடுற மாதிரி யாராவது வந்த சொல்ல சொன்னாருல அவரோட அசிஸ்டன்ட் நான். இப்ப சாப்பிட போறேன் அதுக்குள்ள யாராவது வந்தா இந்த நம்பர்க்கு போன் பண்ணு "

"சார் நானும் சாப்பிட போறேன். அய்யா சாப்பிட்டு வெளில கிளம்புவார் அதுக்குள்ள நான் சாப்பிட்டு வரணும் " ராம் வேறு வழியில்லாமல் சங்கரிடம் சமாளித்துக்கொள்ளலாம் என ஹோட்டலுக்கு புறப்பட்டான்.

புறப்பட்ட சில நொடிக்கெல்லாம் அந்த தெருமுனையில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. ஆள் அரவமற்ற அந்த மதிய வேலையில் அவன் இறங்கி நடந்து வருவதை யாரும் கவனித்திருக்க வில்லை. பழக்கப்பட்டது போல் சாந்தாராமின் வீட்டு கேட்டுக்குள் நுழைந்தான். சில நிமிடங்களில் வீட்டை விட்டு வெளியேறி மறைந்தான் .

ராம் அமிர்தம் உண்ட தேவர் போன்ற பெருமிதத்துடன் மீண்டும் வந்து காரில் அமர்ந்தான். எட்டி பார்த்தான் காவலாளியும் திரும்பியிருந்தான் . உண்ட களைப்பில் கண் சொருக ஆரம்பித்த நேரம் கார் சத்தம் கேட்டு விழித்தான். அந்த கார் உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் சாந்தாராமின் கார் வெளிப்பட்டது .

ராம் ஆர்வமாய் காவலாளியிடம் சென்றான். துக்காராம் நீண்ட தூர பயணம் செல்லும் போது சாந்தாராமின் இந்த காரை எடுத்து செல்வது வழக்கம் தான அந்நேரங்களில் அவர் துக்காராமின் காரை பயன்படுத்தி கொள்வார் என்ற தகவல் கிடைத்தது.

சங்கருக்கு மீண்டும் போன் செய்தான். இம்முறை ரிங் அடிததது ஆனால் சங்கர் தொடர்பை துண்டித்தான்.

ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்ற எண்ணம் ராமை அங்கு தொடர்ந்து காத்திருக்க அனுமதிக்கவில்லை. வண்டியை எடுத்து நேராக சங்கரின் ஆபீஸுக்கு சென்றான்.

சங்கர் அங்கு இல்லை. வெளியில் எட்டி பார்த்து சுரேஷிடம் ஒரு காபி சொல்லி சங்கரின் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தான். இந்த கம்ப்யூட்டரை சங்கரை தவிர யாரும் உபயோகித்ததில்லை அப்படி உபயோகிக்கவும் சங்கர் அனுமதித்ததில்லை .

அதியசமாக இன்று கம்ப்யூட்டர் ஷட்டவுன் செய்யப்படாமல் பயன்பாட்டுக்கிடையிலே அப்படியே விடப்பட்டு இருந்தது. அதில் திறந்திருக்க பட்டிருந்த இணையதளங்கள் மற்றும் அதிலிருந்த கோப்புகள் எல்லாம் ஹிப்னாடிசம் தொடர்புடயதாகவே இருந்தன .

திறந்திருந்த சங்கரின் இ-மெயில் பார்த்தவுடன் ராமிற்கு பகீர் என்றது. இளமாறன் கொடுத்த ஹிட்லிஸ்ட் அவரை சந்திப்பதற்கு ஒரு வாரம் முன்னரே சங்கருக்கு வந்திருந்தது.

ராம் முழுவதுமாக வியர்வையில் நனைந்திருந்தான். கிடைத்த தகவல்கள் நடந்து கொண்டிருக்கும் கொலைகளுடன் தொடர்பு படுத்தி பார்த்து தோற்றுகொண்டிருந்தான். அப்போது தான் டைம்பாம் சம்பந்தபட்ட அந்த கோப்பு அவன் கண்ணில் தென்பட்டது. அதை காரில் பொருத்தி இயக்குவது எப்படி என்ற தகவல்களும் இருந்தது.சாந்தாராம் மற்றும் துக்காராமின் கார்கள் மனதில் நிழலாடியது. எவ்வளவு பெரிய குற்றத்திற்கு தான் துணையாக இருந்திருக்கிறோம் என்ற எண்ணம் அவனை கலங்கடித்தது, ஆனாலும் இந்த தகவல்களை வைத்து சங்கர் தான் கொலைகாரன் என முடிவு கட்ட முடியாது. இளமாறனின் கடிதமும் ராமை குழப்பியது.

அவசரமாக எல்லாவற்றையும் தன்னுடய மெயிலுக்கு அனுப்பி விட்டு போலீஸை தொடர்பு கொண்டு இதை விளக்க வேண்டும் என தீர்மானித்தான். ஆனால் போலீஸ் தன்னையும் இதில் இணைத்து மாட்டிவிடுவார்கள் என தோன்றியதும் தற்போது கோப்புகளை இ-மெயில் மட்டும் அனுப்பிவிட்டு பின்னர் யோசிக்கலாம் என முடிவெடுத்தான்.

பாதி வேலை முடிந்த நிலையில் "சார் டீ" என்ற குரல் கேட்டது.

"அப்படி வச்சிட்டு போ" கணினியிடம் கூறினான்.

சங்கர் டீ கிளாஸை வைத்துவிட்டு ராமை நெருங்கினான்.

Friday, August 28, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 3



தீராத முத்தங்கள்
-------------------------------
அர்த்தமற்ற சாமத்தில்
அழுகையோடு உறங்கியவனை
இமைக்காமல் பார்த்தவளை
மனதுக்குள் அறிந்தாலும்
கண்மூடி கிடந்தவனை
நெற்றியில் முத்தமிட்டு
வெளியேற நினைக்கையிலே
அழுகையோடு விழித்தான்
அவள் அழகு முகம் பார்க்க
நெற்றி முத்தம் கேட்க
முத்தம் வாங்கி உறங்குமுன்
அழைத்தான் அவளை
மழலை அழைப்பில்
மீண்டுமொரு முத்தம்

இல்லாத நினைவுகள்
-------------------------------------
சிந்திக்காமல் சிரித்த
பார்க்காமல் பழகிய
மண்ணோடு புரண்ட
மயிர் பிடித்தெரிந்த
பிரிவின்றி உண்ட
பிரியாமல் நின்ற
அடிவாங்கி அழுத
கால்முட்டி தேய்ந்த
மழையொடு ஆடிய
வெயிலோடு ஒடிய
தட்டானை பிடித்த
ஓணானை மயக்கிய
பத்துகாசு திருடிய
கண்பார்த்து பேசிய
மண்பார்த்து நடக்காத
பள்ளிக்கூட நாட்களை
நினைத்து திளைத்தேன்
பள்ளிக்கூடம் காணாத
பால்யனை பார்க்கும் வரை

முதல் துளி
-----------------------------------
விடியும் நேரம்
கஞ்சிகலயம் தூக்கி
தலப்பா கட்டி
வேட்டி மடிச்சு
ஏர் பூட்டி
கையில கொம்பெடுத்து
மாடு விரட்டி
வயலுக்கு போக
வானம் பார்த்து
காத்து நிக்கேன்
எப்ப வருமோ
அந்த மொத துளி

Monday, August 24, 2009

சொல்ல மறந்த கவிதைகள் - 2


பள்ளிக்கூடம் பிடிக்கும்
படிக்க பிடிக்கும்
பக்கத்துக்கு பெஞ்ச் ராமு பிடிக்கும்
எப்போதும் முறைக்கும் சீதா பிடிக்கும்
அடித்தாலும் தமிழ் டீச்சர் ரொம்ப பிடிக்கும்
மைதானம் பிடிக்கும்
விளையாட பிடிக்கும்
பறக்காவெட்டி என ராமு சொன்னாலும்
பள்ளிகூட மதிய உணவு பிடிக்கும்
அதானால் பள்ளிக்கூடம் பிடிக்கும்
படிக்க பிடிக்கும்
......
......

இது கருவேலநிழல் பா. ராஜாராமின் தொடக்கபள்ளி இடுக்கைகாக
எழுதநினைத்து எழுத மறந்த கவிதை.

*******************************************************************************

வாழ்வாங்கு வாழென்று
வாழ்த்தியுனை நான் அனுப்ப
வாழாமல் வாழ்ந்துகொண்டு
வானத்தையே வெறித்து கொண்டு
வார்த்தைகளை வார்த்தெடுக்க
முற்பட்ட நேரத்தில்
வானம் மறைந்து
உன் முகமானது
தோட்டத்து பூக்கள்
பறந்து வந்த கிளி
புற்தரையில் பனித்துளி
எல்லாம் உன்னை
நினைவுப்படுத்த
வார்த்தைகள் ஊற்றெடுத்த
நேரத்தில்
பேனாவும் பேப்பரும்
காணாமல் போயிருக்க
அதை தேடி போராடும் நேரம்
பக்கத்துக்கு பைத்தியம்
போடா லூசு என
என் கால்சங்கலியை நினைவுபடுத்தியது

*******************************************************************************

மறக்க முடியாததை
மறைக்க முடியாது
மறைக்க முடியாததை
மறுக்க முடியாது

மறக்க நினைத்தாலும்
மறுக்க முடியாது
மறைக்க நினைத்தாலும்
மறக்க முடியாது

மறக்க முடியாத
மறுப்புகள் ஏராளம்
மறைக்க முடியாத
மறுப்புகள் ஏராளம்
மறுப்புகள் தந்த
மரணங்கள் ஏராளம்

மறக்காமல் என்னை
மறைக்காமல் காதலை
மறுக்காமல் ஏற்றுகொள்

Wednesday, August 19, 2009

உனக்கு மட்டும் ரகசியம் - 4


ராமின் குரல் சங்கருக்கு தூரத்தில் கேட்டுகொண்டிருந்தது. ராம் சங்கரின் தோளை உலுக்கி சகஜ நிலைக்கு கொண்டு வந்தான். அவன் கையில் ஒரு துப்பாக்கி பளிரிட்டது.

"பாஸ் இந்த துப்பாக்கி அந்த மூலையிலே உங்க பீரோக்கு பதுக்கி கீழ இருந்துச்சு"

"ராம் பெரிய சிக்கல்ல மாட்டிருக்கோம். இளமாறன கொலை பண்ணிட்டாங்க கேஸ நம்ம பக்கம் திருப்பி விட்டுட்டாங்க. இப்ப இந்த துப்பாக்கி அவங்க கைல சிக்கினா அவளோ தான். சுரேஷ் இத நீ வேற எங்கயாவது வச்சுக்க நான் அப்புறமா வாங்கிக்கிறேன் "

சுரேஷ் தலையசைத்து கவரில் மறைக்கப்பட்ட அந்த துப்பாக்கியை வாங்கி கொண்டு ஓடினான். சங்கர் அடுத்த நடவடிக்கைகளை ராமுக்கு தெரிவிக்க துவங்கினான் .

"ராம் போலீஸ் வந்தா நான் சமாளிச்சுகிறேன். நீ சாந்தாராம் வீட்டுக்கு பக்கத்துலையே சுத்திட்டிறு எதாவது சந்தேகப்படற மாதிரி நடந்தா ஒடனே எனக்கு கால் பண்ணு"

"பாஸ் என்னையும் சந்தேகத்துல விசாரிப்பாங்களா"

"நிச்சயமா விசாரிப்பாங்க அத நான் சமாளிச்சுக்கிறேன். நமக்கு அநேகமா இன்னும் 24 மணி நேரம் தான் டைம் இருக்கு. கொலைகாரன் நம்மல சிக்க வச்சிட்டு எஸ்கேப் ஆக பாக்கறான். அநேகமா எல்லா கொலையும் அவன் தான் செஞ்சிருக்கணும். அதுனால மிச்சம் இருக்கிறது சாந்தாராமும் துக்காராமும் தான். அதுனால அடுத்த அட்டாக் அங்க தான். நீ அங்க போய்டு நான் இவுங்க வந்தப்புறம் வரேன்"

"உங்கள அரஸ்ட் பண்ணிட்டா "

"மாட்டாங்கனு நெனைக்கிறேன். இந்த துப்பாக்கி பத்தி அவுங்களுக்கு தெரிஞ்சிருக்கும் அதுனால அத வச்சு அரஸ்ட் பண்ணலாம்னு வருவாங்க. அது இல்லாததால இப்போதைக்கு அரஸ்ட் பண்ண மாட்டாங்க. விசாரிக்க ஸ்டேசன் வேணா கூட்டிட்டு போவாங்க. நான் நம்ம வக்கீல் கிட்ட பேசி வந்திருவேன். நீ கெளம்பு.. தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் நமக்கு தான் ஆபத்து "

ராம் ஆம்னியை விரட்டி வாகன நெரிசலில் கலந்தான். முகம் பதட்டத்தை காட்டி கொண்டிருந்தது.

அதே நேரம் போலீஸ் சங்கரின் ஆபீசை எட்டியிருந்தது .

"சங்கர் நீங்க இளமாறனோட ஆபீசுக்கு ரெண்டு நாள் முன்னாடி வந்தீங்க இல்ல"

"ஆமா சார் வந்தேன். அவர எனக்கு ரொம்ப நாளா தெரியும் சும்மா ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு அது"

"அப்ப அவர் பாக்றதுக்கு டிஸ்டர்புடா தெரிஞ்சாரா"

"இல்ல சார் நார்மலா தான் இருந்தாரு "

"எதாவது பிரச்சனை, மனவருத்தம் எதையாவது உங்க கிட்ட சொன்னாரா "

"அந்த மாதிரி எல்லாம் சொல்லல "

"ஓகே நாங்க கிளம்புறோம். மறுபடியும் உங்க கிட்ட பேச வேண்டி இருந்தாலும் இருக்கும் "

வீட்டை அளசிபோடுவார்கள் என நினைத்திருந்த சங்கருக்கு இந்த மிகச்சாதரண விசாரணை வியப்பை ஏற்படுத்தியது. திடீரென்று ஏதோ தோன்ற
"சார் ஒரு நிமிஷம். இளமாறன் எப்படி கொலை செய்யபட்டாருனு
தெரிஞ்சுதா "

"கொலை இல்ல. தற்கொலை. ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டு துப்பாக்கியால சுட்டுட்டு செத்துட்டாரு. பாடி போஸ்ட்மார்டம் போயிருக்கு , துப்பாக்கி பாரன்சிக் லேப்க்கு அனுப்பிருக்கோம் "

முகத்தில் பெரிதாக தோன்றவிருந்த ஆச்சர்யத்தை கட்டுப்படுத்தி கொண்டான் சங்கர் .

"அப்ப அந்த ரெட்டை கொலை கேஸ் என்ன ஆகா போகுது சார் "

" தான் தான் அந்த 8 பேரையும் கொன்னேன்னு லெட்டெர்ல எழுதிருக்காரு அதுனால அந்த கேஸும் இளமாறனோட புதைக்கப்படும்" மிக சாதாரணமாக கூறிவிட்டு ஜீப்பை புழுதி பறக்க கிளப்பி கொண்டு பறந்தனர்.

தான் கேட்ட விஷயங்களை ஒரு துளி கூட நம்ப முடியாமல் சங்கர் திகைத்திருந்தான் . ஆனால் போலீஸுக்கு தங்கள் மேல் கவனம் இல்லை என்பது மட்டும் உறுதியாயிற்று .

அதே நேரம் கிரீன்வேஸ் சாலையில் சாந்தாராமின் பங்களா அருகே ராம் இன்னும் சங்கருக்காக காத்துகொண்டிருந்தான். நடக்கவிருக்கும் பயங்கரங்களை அறியாமல்.

(தொடரும்)