Saturday, June 13, 2009

தேடுதல் வேட்டை - சிறுகதை

வீட்டில் ராகவன் நுழைந்து கதவை தாழிடும் போது மின்விசிறி ஓடிகொண்டிருந்தது டிவி அளவுக்கதிகமாக அலறி கொண்டிருந்தது. பால் தீயும் வாசனையை உணர முடிந்தது. ஸ்டவையும் டிவியையும் அணைத்த ராகவனுக்கு எல்லாம் புதிதாக பட்டது.

வீடு முழுவதும் தேடினான் ரேவதியை காணவில்லை. கதவை திறந்து போட்டுவிட்டு எங்கே போனாள். ஒருவேளை மாடியில் துணி எடுத்து கொண்டிருப்பாளோ?.

விறுவிறுவென வீட்டுக்குள் இருக்கும் படியில் ஏறும்போது மாடி கதவு தாழிடப்பட்டிருந்தது. எதற்கும் இருக்கட்டும் என திறந்து பார்த்தான். காரிருள் அவனை லேசாக அச்சுறுத்தியது.

கதவை சாத்திவிட்டு கீழிறங்கியபோது வீட்டின் படுக்கையறையில் சத்தம் கேட்டது. கோபம் தலைக்கேறியது. எங்கே இருந்தாள் இவ்வளவு நேரம்?

ரத்தம் கொதிக்க படுக்கையறைக்கு சென்றவன் ரத்தத்தில் கால்பட்டவுடன் திடுக்கிட்டான். குனிந்து பார்த்த போது தான் கவனித்தான் ரேவதி தலையில் ரத்துடன் கட்டிலின் கீழே கிடந்தாள். மயக்கத்தில் இருந்து மீண்டு மீண்டும் மயகதுக்குள் செல்லும் முன் ஏதோ முணுமுணுத்தாள்.

"ஏங்க அவன் இன்னும் இங்கே தான் இருக்கான் .. உடனே போலீஸ்கு போன் பண்ணுங்க "

"யாருமா யாரு உள்ள இருக்கா" . அவளிடம் பதில் இல்லை மீண்டும் மயங்கிவிட்டாள்.

ராகவனால் நடந்ததை யூகிக்க முடிந்தது. பீரோ திறந்திருப்பதும் ரேவதியின் வளையல்கள் நகைகள் காணமல் போயிருப்பதும் நிச்சயம் இது திர்ருட்டு தான் என ஊர்ஜிதபடுத்தியது . ஆனால் திருடன் இன்னும் உள்ளே தான் இருக்கிறான். படியிறங்கும் போது கேட்ட பீரோ சத்தம் அவனுடையது தான். ராகவன் இங்கே வருவதற்குள் எங்கேயோ பதுங்கியிருக்கிறான்.

பெட்ரூமில் இருந்த ரத்தம் தோய்ந்த கட்டையை எடுத்து கொண்டு ராகவன் வேட்டைக்கு தயாரானான். ஹாலுக்கு வந்து காதுகளை கூர்மையாக்கி கொண்டு நோட்டமிட்டான். அந்த அமைதியில் குண்டூசி விழுந்தாலும் குண்டு விழுந்த சப்தமாய் ராகவனுக்கு கேட்கும்.

ஒவ்வொரு அறையாக தேடி பின் அதை தாழிட வேண்டுமென தீர்மானித்து மெதுவாக ஸ்டோர் ரூம் பக்கம் சென்றான். தட்டுமுட்டு சாமான்களுடன் யாரோ பதுங்கியிருப்பது போல் தெரிந்தது. கட்டையை உயர்த்தி முழு பலத்துடன் அடித்த போது நங் என்ற சத்தத்துடன் ஏதோ உடைந்தது போல் இருந்தது. உடைந்த தேங்காய்களை பார்த்த பின்பு தான் மூட்டையை அங்கே வைத்தது ராகவன் நினைவுக்கு வந்தது. ஸ்டோர் ரூம் செக் பண்ணியாகிவிட்டது. தாழிட்டான்.

மீதமிருப்பது பூஜை ரூம், பெட்ரூம், கிச்சன் .

முதலில் பூஜை ரூமிற்கு சென்றான். சின்ன அறை தான் இருந்தாலும் ஆள் பதுங்கும் அளவிற்கு இடமிருக்கிறது. வெளியில் இருந்த லைட்டை போட்டு உள்ளே இருந்த போட்டோக்களை வெளியிலிருந்தே நோட்டமிட்டான். எந்த கன்னடியிலும் உள்ளே ஆள் இருப்பதாக பிரதிபலிப்பு இல்லை. தைரியமாக உள்ளே சென்று ஒரு நோட்டமிட்டான். தரையில் ரேவதியின் ஒற்றை கம்மலும் சில ருபாய் ணூட்டுகளும் கிடந்தது. அந்த அறையை தாழிட்டான்.

மீண்டும் பெட்ரூமிற்கு சென்றான். ரேவதி மயக்கம் தெளிந்து மீண்டும் முனகினாள். அவளை இழுத்து கட்டில் மேல் கிடத்தி அருகில் இருந்த துண்டை அடிபட்ட இடத்தில இழுத்து கட்டினான். ரத்தம் அதிகம் வீணாகவில்லை. கசிவும் இப்போது நின்றிருந்தது.

"இரும்மா இன்னும் ஒரே ஒரு ரூம் தான். அவன பிடிச்சு அடிச்சு போலீஸ் கிட்ட ஒப்படைக்கிறேன் "

"ஏங்க இருங்க எதுக்கும் போலீஸ் கிட்ட முதல போன் பண்ணி சொல்லிடுங்க "

"சரி இரு வரேன் "

நிச்சயம் கிச்சனில் தான் அவன் இருக்க வேண்டும். தைரியமாக உள்ளே போய் பிடித்து விடலாம் என ராகவன் எண்ணி கொண்டிருந்த வேலையில் மனதிற்குள் எச்சரிக்கை மணி அடித்தது.

கிச்சனில் கத்தி, அரிவாள்மனை என ஏகப்பட்ட ஆயுதங்கள் இருக்கின்றன. அவன் எதையாவது எடுத்து தாக்கினால் என்ன செய்வது. ராகவன் போலீசுக்கு சொல்வதே நல்லது என தீர்மானித்தான்.

மெதுவாக தொலைபேசியிடம் நடந்தான் .

பின்னால் கால்தடம் கேட்டது .

விரைந்து ஓடினான்.

கால்தடம் நெருங்கியது.

தொலைபேசியை எடுத்தான்.

தோளில் மூச்சு காற்று பட்டது .

ராகவன் போலீசுடன் பேசி கொண்டிருந்தான் .

தோளின் பின்னே குரல் கேட்டது .

"என்னங்க என்னங்க நான் காட்டுத்தனமா கத்திட்டுருக்கேன் இப்படி ஒரேயடியா புக்ல மூழ்கிட்டீங்களே .நேரமாச்சு தூங்க வாங்க அந்த ராஜேஷ்குமார் நாவல்ல அப்படி என்ன இருக்குதோ தெரில".



Wednesday, May 27, 2009

எம்மனசு புரியலையா - கவிதை

எஞ்சோகம் கேக்குதாடி - யின் தொடர்ச்சி

தென்னங்கீத்து கட்டி வச்சு
குளிப்பாட்டி நான் இருக்க
நீ இடுக்கு வழி பாத்தபடி
என் மனசுக்குள்ள நுழஞ்சியே

புத்தம் புது சீலையிலே
தண்ணி கொண்டு போகயிலே
குறுக்காலே நீ மறிக்க
கொடமெல்லாம் உருண்டோடும்
மனசெல்லாம் தடம் மாறும்

மொத்தமா வேணுமுன்னு
நீ கேட்ட நேரமெல்லாம்
முத்தத்தோட நான் போனேன்
இப்ப மொத்தமா வந்திருக்கேன்
எடுத்துக்கன்னு நான் சொல்ல
எடுத்துக்கிற நீ இல்ல

நடக்காத கல்யாணத்துக்கு
நூறு தேதி குறிச்சோமே
பொறக்காத பிள்ளைக்கு
பேரு நூறு வச்சோமே
திருவிழா கூட்டத்திலே
மாமா நீ என் பக்கத்திலே
புள்ளையோடு போவோமுன்னு
கனவெல்லாம் கண்டோமே
வெறும் கனவாக போச்சுதே

மனசார உன்ன நெனச்சு
வேறொருத்தன் கை பிடிச்சு
காணாம போவேன்னு
காலனோட போயிட்டியா

கட்டான காவல் ஒடச்சு
காட்டுவழி ஓடிவந்தேன்
கனவோட ஓடிவந்தேன்
இப்ப கனவெல்லாம் மண்ணாச்சே
நெனப்பெல்லாம் வீணாச்சே
என் மனசு புரியாம
தப்புன்னு தெரியாம
சடுதியிலே செத்துட்டியே

அடங்காத ஆசையோட
அழியாத காதலோட
மண்ணுக்குள்ளே கெடக்கியே
இந்த பொண்ணுகுள்ளே நீயிருக்க
இந்த பொண்ணுக்கினி யாரிருக்கா

வத்தாத காதலோட
வக்கனயா வாழ்வோமுன்னு
கதை பேசி சிரிச்ச மச்சான்
ஆவியா நீ வந்து
பாவி என்ன தேடாத
உன் பக்கத்துக்கு குழியிலே தான்
பொணமாக கெடப்பேன் நான் .

Friday, May 22, 2009

பிரிதலை புரிதல் - சிறுகதை

சந்தோஷ் அந்த பள்ளிக்கு ஆறாம் வகுப்பில் சேர்ந்திருந்தான். தந்தையின் பணி மாற்றல்களால் பல பள்ளிகளில் படிக்க நேர்ந்தாலும் பல நண்பர்களை சம்பாதித்ததில் அவனுக்கு மகிழ்ச்சியே. அப்படி தான் அவன் புதிதாக சேர்ந்த அந்த பள்ளியை நினைத்து பலவித கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்திருந்தான்

முதல்நாள் வகுப்பில் இவன் நுழையும் முன்னமே மாணவர்கள் அவர்களின் தோழர்களுக்கு அருகில் இடம் பிடித்து கதை பேச தொடங்கியிருந்தார்கள். சந்தோஷிற்கு முதல் பெஞ்சில் தான் இடம் கிடைத்தது. ஆசிரியர் வந்து அனைவரின் பெயரையும் கேட்டு பின் அவரவரை பற்றி சொல்ல சொன்னார். சந்தோஷ் எல்லோருடய பெயரையும் நோட்புக்கில் குறித்து வைத்து கொண்டான். இன்டெர்வெல்லில் வலிய போய் பேச தொடங்கினான்.


இப்படியாக ஒரே வாரத்தில் எல்லோருடனும் பேசி நண்பன் ஆனான். பள்ளி நேரம் தவிர அருகில் இருக்கும் மைதானத்தில் விளையாடியும் எல்லா மாணவர்களுக்கும்மிக நெருக்கமானான். வகுப்பில் பெண்கள் மாணவர்களிடம் அதிகம் பேசுவதை தவிர்த்து கொண்டிருந்ததும் இவன் வந்த பிறகு மாறியது. காலாண்டு தேர்வு நெருங்கி கொண்டிருந்த்தது. விளையாட்டுகளுக்கு ஒய்வு கொடுத்து விட்டு அனைவரும் படிப்பதில் தீவிரமாயினர். சந்தோஷ் முதல் முறையாக அவன் வகுப்பு மாணவர்களுக்கு குரூப் ஸ்டடியை பழக்கினான். பெரும்பாலான நேரங்களில் சந்தோஷின் வீட்டிலேயே அது நிகழ்ந்தது. அப்போது அவனின் தாயார் தரும் பலகாரங்களும், பழரசமும் மேலும் பல மாணவர்களை குரூப் ஸ்டடிக்கு ஈர்த்தது.

தேர்வு தொடங்கியது.தேர்வில் இவனிடம் பென்சில் கடன் கேட நண்பனை காபி அடித்தானென ஆசிரியர் அடிக்க போக இவன் அதை தெளிவு படுத்தி அவனை விடுவிக்க பிரயத்தனபட்டது அனைவருக்கும் பிடித்திருந்தது. விடுமுறையின் எண்ணங்கள் தேர்வுகளை வேகமாக துரத்தியது. சந்தோஷ் தன் சொந்த ஊருக்கு ஒரு வாரம் போய் வருவதாக கூறி கிளம்பினான். மற்றவர்கள் ஒரு வார விடுமுறையில் எங்கே வெளியூர் செல்வது என்று உள்ளூரிலிலேயே விளையாடி பொழுதை கழிக்க தீர்மானித்தனர்.

விடுமுறை முடிந்து மறுபடியும் பள்ளிக்கூடம் திறந்த போது எல்லோர் மனதிலும் மற்றவர் விடுமுறையை கழித்த விதம் பற்றி கேட்கும் ஆர்வம் தளும்பியிருந்தது. குறிப்பாக வெளியூர் சென்ற சந்தோஷின் கதைகளை கேட்பதில் குறியாய் இருந்தார்கள். சந்தோஷ் கொஞ்சம் தாமதமாக தான் வந்தான். இம்முறை வலிய வந்து பேசியவர்களிடம் கூட அவன் பேசவில்லை. நண்பர்களின் ஆர்வம் இப்போது குழப்பமாக மாறியிருந்தது. அதற்குள் வகுப்பாசிரியர் வந்து பாடத்தை துவங்கியதால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் பாடத்தில் லயிக்க தொடங்கினர். மதிய உணவு இடைவேளையின் போது சந்தோஷ் நெருங்கி வந்தவர்களிடம் எரிந்து விழுந்தது எல்லோரின் குழப்பத்தையும் வெறுப்பாக மாற்றிகொண்டிருந்தது. காரணமில்லாமல் சண்டை போடும் அளவுக்கு என்ன நடந்தது. குரூப்பாக சென்று அவனிடம் கேட்க சென்றவர்களுக்கு சந்தோஷின் நடவடிக்கைகள் வியப்பு கலந்த ஆத்திரத்தை வரவைத்தன. என்ன தான் பிரச்சனை என அவனிடம் கேட்க வகுப்பில் ஒரு பெண்ணை தேர்வு செய்து கேட்டு வா என அனுப்பினர். அடி வாங்காத குறையாக அழுது கொண்டே திரும்ப வந்தாள் அவள்.

சந்தோஷின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் இவன் ஏன் இந்த பள்ளிக்கு வந்தான் என அந்த வகுப்பு முழுவதும் மனதுக்குள் கேள்வி கேட்டு கொண்டிருந்தது. அரையாண்டு தேர்வு வந்து கொண்டிருந்த நேரத்தில் சந்தோஷ் மொட்டை தலையோடு வந்தான். என்னடா மொட்டை என நக்கல் செய்தவனுக்கு கன்னத்தில் விழுந்தது. குரூப் ஸ்டடி செய்த கூட்டம் இப்போது சந்தோஷை எதிர்பார்க்காமல் வேறொர் இடத்தில் படித்தனர்.


தேர்வு நேரத்தில் சந்தோஷ் தன் அருகில் யாரவது அசைந்தால் கூட ஆசிரியரை கூப்பிட்டு இவன் காபி அடிக்கிறான் என கூறினான். ஆரம்பத்தில் இவன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அவன் கைகாட்டியவர்களை அடித்த ஆசிர்யர்கள் தினமும் இவன் அதை செய்யவே அவனை கண்டித்தனர். தேர்வு முடிவதற்குள் அங்கு அநேகமானவர்களின் எதிரியாக மாறிவிட்டிருந்தான் அவன். மறுபடியும் விடுமுறை நாட்கள். இப்போது சற்று நீளமான விடுமுறை. சந்தோஷ் இம்முறை சென்னைக்கு போவதாக செய்தி வந்தது. மற்றவர்கள் அவனை பற்றி அக்கரையின்றி விளையாட்டையும் விடுமுறையையும் எண்ணி இருந்தனர்.

நாட்கள் நகர்ந்து பள்ளிக்கூடம் தொடங்கியது. இம்முறை சந்தோஷ் ஒரு வாரம் ஆகியும் வரவில்லை. பள்ளியை விட்டு சென்றுவிட்டதாக ஆசிரியர் கூற அனைவர் முகத்திலும் ஆச்சர்யம் கலந்த ஒரு மகிழ்ச்சி.

மொட்டை தலை சந்தோஷ் சென்னை கேன்சர் இன்ஸ்டியூடுட்டில் ஒரு நர்ஸிடம் உரையாடிகொண்டிருந்தான்.

"உன் ஃப்ரெண்ட்ஸ்லாம் நீ ஸ்கூலுக்கு வரலனு தேட மாட்டாங்களா"

"தேட மாட்டாங்க.. கண்டிப்பா தேட மட்டாங்க " .

நர்ஸுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. சந்தோஷின் கண்களில் நீர் வடிந்து கொண்டிருந்தது.



Thursday, May 14, 2009

எஞ்சோகம் கேக்குதாடி

நித்தம் நித்தம் நாம் படிச்ச
புத்தம்புது ராகமெல்லாம்
சத்தம் கித்தம் போடாம
சடுதியில சாகுதடி

மிச்சம் கிச்சம் இல்லாம
நாம் கொடுத்த முத்தமெல்லாம்
எச்சி கூட காயாம
கன்னத்துல கரையுதடி

நேத்து வச்ச மீன் கொழம்பும்
பதுக்கி வச்ச பழயசோறும்
நீ கொண்டு வருகயிலே
உன பாக்கயிலே பசி தீரும்
நீ ஊட்டயிலே ருசி மாறும்

மோட்டுவளை நீ குத்த
மறுபடியும் நான் முந்த
வேணா வேணான்னு
நீ சொன்ன கதையெல்லாம்
அந்த கருவைக்கு தெரியுமடி

கம்மாகரையிலே
நீ குளிக்கும் அழகெல்லாம்
கண்குளிர நான் பாக்க
கல்லெல்லாம் போதையானு
அத மறந்து உன பிடிக்க
கம்மாகரை காமகரையானதெல்லாம்
சடுதியிலே மறந்துடுச்சா


பத்திரமா நா வரஞ்ச
சித்திரமா நீ இருந்த
கடல் முழுங்கி துப்பும் சூரியனா நீ தெரிஞ்ச
கடன்கார பாவி என்ன கவிதையெல்லாம் எழுத வச்ச
இப்ப கவிதையெல்லாம் நெறய இருக்கு
பாவிமக நீ இல்லயே

சந்தையிலே அப்பனோட
நீ வந்த நேரமெல்லாம்
வேசம் போட்டு வளவிஎல்லாம்
தொட்டு தொட்டு போட்டு விட்ட
அந்த சுகம் தேடுதடி
மனசு கெடந்து நோகுதடி

வண்டிக்கார முருகேசன்
கருவயிலே நம பாத்து
சவுக்கால என மாத்தி
பிரிச்சி உன்னை இழுக்கையிலே
மண்டையிலே அடிச்ச அடி
நினைவு தப்பி போச்சுதடி
உன் நெனைப்பு மட்டும் மாறலடி

மழை பெஞ்சி நான் முழிக்க
கண்ணுமூடி ஓடினதெல்லாம்
உன் வீட்டு சந்தியிலே
திண்ணையிலே ஊர்கூடி
என ஒதுக்கிவச்ச சேதியெல்லாம்
தெரியாம போச்சுதாடி

காத்துவாக்குல வந்த கல்யாண சங்கதிய
அழுது சிருச்சு கொழம்பி தவிச்சேன் எங்கதிய
சத்தியமா உனக்கு மட்டும் தான்னு
நீ செஞ்ச சத்தியமெல்லாம்
நம்பி தொலச்ச வெள்ளந்தி என்ன
கழுத்தறுத்து கழுத்துதாலி வாங்கப்போக
மனசுனக்கு வந்துசசாடி

நீ சொல்லி நான் விட்ட சாராயம்
வெசம் கலந்து அத குடிச்சு
நா வெட்டுன குழியில போய் விழுந்து
காத்து வந்து மணல் மூடி
சவமாக கெடக்குதேன் நா
நீ கட்டுனவன் கைபிடிச்சு
சந்தோஷமா வாழ்ந்துக்கோடி ....