Friday, August 28, 2009
சொல்ல மறந்த கவிதைகள் - 3
தீராத முத்தங்கள்
-------------------------------
அர்த்தமற்ற சாமத்தில்
அழுகையோடு உறங்கியவனை
இமைக்காமல் பார்த்தவளை
மனதுக்குள் அறிந்தாலும்
கண்மூடி கிடந்தவனை
நெற்றியில் முத்தமிட்டு
வெளியேற நினைக்கையிலே
அழுகையோடு விழித்தான்
அவள் அழகு முகம் பார்க்க
நெற்றி முத்தம் கேட்க
முத்தம் வாங்கி உறங்குமுன்
அழைத்தான் அவளை
மழலை அழைப்பில்
மீண்டுமொரு முத்தம்
இல்லாத நினைவுகள்
-------------------------------------
சிந்திக்காமல் சிரித்த
பார்க்காமல் பழகிய
மண்ணோடு புரண்ட
மயிர் பிடித்தெரிந்த
பிரிவின்றி உண்ட
பிரியாமல் நின்ற
அடிவாங்கி அழுத
கால்முட்டி தேய்ந்த
மழையொடு ஆடிய
வெயிலோடு ஒடிய
தட்டானை பிடித்த
ஓணானை மயக்கிய
பத்துகாசு திருடிய
கண்பார்த்து பேசிய
மண்பார்த்து நடக்காத
பள்ளிக்கூட நாட்களை
நினைத்து திளைத்தேன்
பள்ளிக்கூடம் காணாத
பால்யனை பார்க்கும் வரை
முதல் துளி
-----------------------------------
விடியும் நேரம்
கஞ்சிகலயம் தூக்கி
தலப்பா கட்டி
வேட்டி மடிச்சு
ஏர் பூட்டி
கையில கொம்பெடுத்து
மாடு விரட்டி
வயலுக்கு போக
வானம் பார்த்து
காத்து நிக்கேன்
எப்ப வருமோ
அந்த மொத துளி
Monday, August 24, 2009
சொல்ல மறந்த கவிதைகள் - 2
பள்ளிக்கூடம் பிடிக்கும்
படிக்க பிடிக்கும்
பக்கத்துக்கு பெஞ்ச் ராமு பிடிக்கும்
எப்போதும் முறைக்கும் சீதா பிடிக்கும்
அடித்தாலும் தமிழ் டீச்சர் ரொம்ப பிடிக்கும்
மைதானம் பிடிக்கும்
விளையாட பிடிக்கும்
பறக்காவெட்டி என ராமு சொன்னாலும்
பள்ளிகூட மதிய உணவு பிடிக்கும்
அதானால் பள்ளிக்கூடம் பிடிக்கும்
படிக்க பிடிக்கும்
......
......
இது கருவேலநிழல் பா. ராஜாராமின் தொடக்கபள்ளி இடுக்கைகாக
எழுதநினைத்து எழுத மறந்த கவிதை.
*******************************************************************************
வாழ்வாங்கு வாழென்று
வாழ்த்தியுனை நான் அனுப்ப
வாழாமல் வாழ்ந்துகொண்டு
வானத்தையே வெறித்து கொண்டு
வார்த்தைகளை வார்த்தெடுக்க
முற்பட்ட நேரத்தில்
வானம் மறைந்து
உன் முகமானது
தோட்டத்து பூக்கள்
பறந்து வந்த கிளி
புற்தரையில் பனித்துளி
எல்லாம் உன்னை
நினைவுப்படுத்த
வார்த்தைகள் ஊற்றெடுத்த
நேரத்தில்
பேனாவும் பேப்பரும்
காணாமல் போயிருக்க
அதை தேடி போராடும் நேரம்
பக்கத்துக்கு பைத்தியம்
போடா லூசு என
என் கால்சங்கலியை நினைவுபடுத்தியது
*******************************************************************************
மறக்க முடியாததை
மறைக்க முடியாது
மறைக்க முடியாததை
மறுக்க முடியாது
மறக்க நினைத்தாலும்
மறுக்க முடியாது
மறைக்க நினைத்தாலும்
மறக்க முடியாது
மறக்க முடியாத
மறுப்புகள் ஏராளம்
மறைக்க முடியாத
மறுப்புகள் ஏராளம்
மறுப்புகள் தந்த
மரணங்கள் ஏராளம்
மறக்காமல் என்னை
மறைக்காமல் காதலை
மறுக்காமல் ஏற்றுகொள்
Wednesday, August 19, 2009
உனக்கு மட்டும் ரகசியம் - 4

"பாஸ் இந்த துப்பாக்கி அந்த மூலையிலே உங்க பீரோக்கு பதுக்கி கீழ இருந்துச்சு"
"ராம் பெரிய சிக்கல்ல மாட்டிருக்கோம். இளமாறன கொலை பண்ணிட்டாங்க கேஸ நம்ம பக்கம் திருப்பி விட்டுட்டாங்க. இப்ப இந்த துப்பாக்கி அவங்க கைல சிக்கினா அவளோ தான். சுரேஷ் இத நீ வேற எங்கயாவது வச்சுக்க நான் அப்புறமா வாங்கிக்கிறேன் "
சுரேஷ் தலையசைத்து கவரில் மறைக்கப்பட்ட அந்த துப்பாக்கியை வாங்கி கொண்டு ஓடினான். சங்கர் அடுத்த நடவடிக்கைகளை ராமுக்கு தெரிவிக்க துவங்கினான் .
"ராம் போலீஸ் வந்தா நான் சமாளிச்சுகிறேன். நீ சாந்தாராம் வீட்டுக்கு பக்கத்துலையே சுத்திட்டிறு எதாவது சந்தேகப்படற மாதிரி நடந்தா ஒடனே எனக்கு கால் பண்ணு"
"பாஸ் என்னையும் சந்தேகத்துல விசாரிப்பாங்களா"
"நிச்சயமா விசாரிப்பாங்க அத நான் சமாளிச்சுக்கிறேன். நமக்கு அநேகமா இன்னும் 24 மணி நேரம் தான் டைம் இருக்கு. கொலைகாரன் நம்மல சிக்க வச்சிட்டு எஸ்கேப் ஆக பாக்கறான். அநேகமா எல்லா கொலையும் அவன் தான் செஞ்சிருக்கணும். அதுனால மிச்சம் இருக்கிறது சாந்தாராமும் துக்காராமும் தான். அதுனால அடுத்த அட்டாக் அங்க தான். நீ அங்க போய்டு நான் இவுங்க வந்தப்புறம் வரேன்"
"உங்கள அரஸ்ட் பண்ணிட்டா "
"மாட்டாங்கனு நெனைக்கிறேன். இந்த துப்பாக்கி பத்தி அவுங்களுக்கு தெரிஞ்சிருக்கும் அதுனால அத வச்சு அரஸ்ட் பண்ணலாம்னு வருவாங்க. அது இல்லாததால இப்போதைக்கு அரஸ்ட் பண்ண மாட்டாங்க. விசாரிக்க ஸ்டேசன் வேணா கூட்டிட்டு போவாங்க. நான் நம்ம வக்கீல் கிட்ட பேசி வந்திருவேன். நீ கெளம்பு.. தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் நமக்கு தான் ஆபத்து "
ராம் ஆம்னியை விரட்டி வாகன நெரிசலில் கலந்தான். முகம் பதட்டத்தை காட்டி கொண்டிருந்தது.
அதே நேரம் போலீஸ் சங்கரின் ஆபீசை எட்டியிருந்தது .
"இல்ல சார் நார்மலா தான் இருந்தாரு "
"எதாவது பிரச்சனை, மனவருத்தம் எதையாவது உங்க கிட்ட சொன்னாரா "
"அந்த மாதிரி எல்லாம் சொல்லல "
"ஓகே நாங்க கிளம்புறோம். மறுபடியும் உங்க கிட்ட பேச வேண்டி இருந்தாலும் இருக்கும் "
வீட்டை அளசிபோடுவார்கள் என நினைத்திருந்த சங்கருக்கு இந்த மிகச்சாதரண விசாரணை வியப்பை ஏற்படுத்தியது. திடீரென்று ஏதோ தோன்ற
"சார் ஒரு நிமிஷம். இளமாறன் எப்படி கொலை செய்யபட்டாருனு
"கொலை இல்ல. தற்கொலை. ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டு துப்பாக்கியால சுட்டுட்டு செத்துட்டாரு. பாடி போஸ்ட்மார்டம் போயிருக்கு , துப்பாக்கி பாரன்சிக் லேப்க்கு அனுப்பிருக்கோம் "
முகத்தில் பெரிதாக தோன்றவிருந்த ஆச்சர்யத்தை கட்டுப்படுத்தி கொண்டான் சங்கர் .
"அப்ப அந்த ரெட்டை கொலை கேஸ் என்ன ஆகா போகுது சார் "
" தான் தான் அந்த 8 பேரையும் கொன்னேன்னு லெட்டெர்ல எழுதிருக்காரு அதுனால அந்த கேஸும் இளமாறனோட புதைக்கப்படும்" மிக சாதாரணமாக கூறிவிட்டு ஜீப்பை புழுதி பறக்க கிளப்பி கொண்டு பறந்தனர்.
தான் கேட்ட விஷயங்களை ஒரு துளி கூட நம்ப முடியாமல் சங்கர் திகைத்திருந்தான் . ஆனால் போலீஸுக்கு தங்கள் மேல் கவனம் இல்லை என்பது மட்டும் உறுதியாயிற்று .
அதே நேரம் கிரீன்வேஸ் சாலையில் சாந்தாராமின் பங்களா அருகே ராம் இன்னும் சங்கருக்காக காத்துகொண்டிருந்தான். நடக்கவிருக்கும் பயங்கரங்களை அறியாமல்.
(தொடரும்)
Sunday, August 16, 2009
உனக்கு மட்டும் ரகசியம் - 3

பதிவான உரையாடல் கேசட்டுடன் ராமும் சங்கரும் அந்த ஆம்னியில் ஆபீசை அடையும் போது இரவு 9 மணி ஆயிருந்தது.
Monday, August 3, 2009
சொல்ல மறந்த கவிதைகள் - 1
நீ எடுக்க காத்திருக்கும்
நானும் பிச்சைக்காரன்
--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*
என்னவளின் கை பட்டு
வெட்கத்தில் சிவந்தது மருதாணி.
--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*
மலர்களின் கர்வம்
உன் கூந்தலேறியபின்
உச்சமடைகிறது
--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*
கடற்கரைக்கு சென்று
வானம் பார்த்து
கப்பல் பார்த்து
மக்கள் பார்த்து
நிலவு பார்த்து
மணல் நோண்டி
சிப்பிகள் தேடி
கால்கடுக்க காத்திருந்து
வானம் கறுத்து
மக்கள் கரைந்து
கப்பல் மறைந்து
நிலவை சாட்சியாக்கி
கடலுக்குள் ஓடினான்
காதலுக்குள் ஓடமுடியாததால் ...
--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*
நிலவின் காதலை மறுத்து
அது தேய்வதை நகைக்கிறாய்
அதாவது துக்கத்தை மறந்து வளர்ந்துவிடும்
நான் தூக்கத்தை மறந்து
தேய்ந்து கொண்டே இருக்கின்றேன்
உன் நினைவில் ..
--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*
கவிதைகளின் உற்பத்திக்கூடமே
காதலின் பிணக்கூடமே
பிரம்மன் செய்த சிறந்த தவறே
காலனிடம் சொல்லியிருக்கிறேன்
உன்னை கூட்டி செல்ல சொல்லி
நரகத்தில் காதல் பற்றாக்குறையாம்
சித்திரவதைகளின் கருவறையே
நீ சென்று விடு
இனிவரும் காதல்களும்
கவிதைகளுமாவது பயனுள்ளதாக இருக்கும்
--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*